நில நடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் மழைக்காடுகளின் மொத்த பரப்பளவு 17.8 மில்லியன் சதுர கிலோமீட்டர். இவற்றில் 4.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் உலர்ந்த காடுகளும் அடக்கம். உலகில் உள்ள மழைக்காடுகளில் 50 சதவீதம் தென் அமெரிக்காவிலும் 30 சதவீதம் ஆப்பிரிக்காவிலும் மீதமுள்ளவை தெற்கு ஆசியா உட்பட பல இடங்களில் பரந்தும் காணப்படுகின்றன. பெட்ரோல் டீசல் போன்ற படிம எரிபொருட்களால் வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடில் ஏறத்தாழ ஐந்திலொரு பங்கு இந்த மழைக்காடுகளால் உறிஞ்சி எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.

Rain forestநாடுகளுக்கிடையேயான புவிவெப்பம் தொடர்பான குழுவின் அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 32 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவிடப்படுவதாக தெரிவிக்கிறது. இவற்றில் 15 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்திலேயே தங்கி பூமியை வெப்பமடையச் செய்கிறது. மீதமுள்ள 17 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு எங்கே போகிறது என்பதைக் குறித்த ஆய்வுதான் இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ பாதியளவு கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் கரைந்து போகிறதாம். 4.8 பில்லியன் டன்கள் அளவிலான கார்பன் டை ஆக்சைடை இந்த மழைக்காடுகள் சாப்பிட்டு விடுகின்றன.

ஆப்பிரிக்காவின் கணக்கில் மட்டும் இந்த அளவு 1.2 பில்லியன் டன்களாகும். ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு ஹெக்டேர் காடும் 0.6 டன் கார்பன் டை ஆக்சைடை சாப்பிட்டுவிடுகிறது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளைப் பற்றிய நாற்பது ஆண்டு ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

ஆப்பிரிக்க காடுகள் மட்டுமின்றி, தென் அமெரிக்க, ஆசிய காடுகளிலும் பரந்து கிடக்கும் 2,50,000 மரங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதன்மூலம் இயற்கை நமக்கு மிகப்பெரிய மானியத்தை அளிக்கிறது என்கிறார் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ராயல் சொசைட்டி ஆய்வாளர் டாக்டர் சைமன் லூயிஸ். கோபன் ஹேகனில் இவ்வாண்டு நடைபெற உள்ள புவிவெப்பம் சார்பான பேச்சுவார்த்தைகளில் இந்த ஆய்வுமுடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் உள்ள அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு மரங்களுக்கு உரமாக அமைவதால் மரங்களின் அளவு பெருக்கிறது. மரங்கள் தொடர்ந்து பெருத்துக்கொண்டே போவப்போவதில்லை என்பதும் இந்த மழைக்காடுகளை மட்டுமே தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கக்கூடாது என்பதும் தான் ஆய்வாளர்களின் எச்சரிக்கை. ஒவ்வோர் ஆண்டும் துடைத்தெடுக்கப்படும் 5 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடின் கார்பன் மதிப்பு 13 பில்லியன் பவுண்ட்கள் ஆகும். இந்த ஆய்வுகளின் முக்கியத்தை இந்த தொகையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். வளிமண்டலத்தை மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகள் வனவளத்தை பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கு கொடுக்கவேண்டிய நட்ட ஈட்டுத்தொகையை இந்த ஆய்வுகள் முடிவு செய்கின்றன. மழைக்காடுகளின் மரங்கள் பெருத்துக்கொண்டே போவதால் புவிவெப்ப மண்டல காடுகளின் பல்லுயிர்களுக்கிடையே ஏற்படும் மாற்றங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் காடுகளில் சேமிக்கப்படும் கார்பனின் அளவைக் கண்டறிய லைபீரியாவில் இருந்து தான்சானியா வரையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் 79 அடர்ந்த வனப்பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் இருந்த 70,000 மரங்களின் சுற்றளவுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பதிவு செய்யப்பட்டன. மரங்களின் உயரம், அடர்த்தி ஆகியவற்றைக் கொண்டு இந்த 79 வனப்பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு கார்பன் சேமிக்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டது. ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வளிமண்டலத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 1.2 பில்லியன் டன்கள் கார்பன் டை ஆக்சைடு இந்த வனப்பகுதிகளால் உறிஞ்சி எடுக்கப்படுவது கணக்கிடப்பட்டது.

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It