environment1 350இந்தத் தொடரின் கடந்த இரு பகுதிகளில் நெடுவாசலில் எரிபொருள் உற்பத்தி செய்வதற்கான எதிர்ப்பு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை தக்கவைப்பதற்கான போராட்டம் என்பதையும், அது உலகமயத்தின் குறிப்பாக அமெரிக்க அரசின் எரிபொருள் மற்றும் டாலர் சார்ந்த கொள்கைகளின் தொடர்ச்சி என்பதையும், தற்போது மாறிவரும் உலக அரசியலில் இந்திய ஆளும் வர்க்கம், இந்திய விவசாயிகளை அடகு வைத்து தனக்கான ஆதாயத்தை பெற காத்திருப்பதையும், எரிபொருளின் அடிப்படை அறிவியல் குறித்தும் விரிவாக கண்டோம்.

அதிக பாய்வுத்திறன் கொண்ட கடினபாறைகளின் கீழ் தேங்கியிருக்கும் எரிபொருட்களை மரபுசார்ந்த முறையில் எடுப்பதை போன்று அல்லாமல், எண்ணெய் மற்றும் எரிவாயு உருவாக காரணமான மூலப்பாறைகளில் சிக்கியிருக்கும் குறைவான பாய்வுத்திறன் கொண்ட எரிபொருட்களை தூண்டப்பட்ட முறையில், புதிய முறையான நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி அந்த மூலப்பாறைகளை வெடிக்க செய்து எரிவாயு எடுக்கும் திட்டதை இந்த அரசு முனைப்பாக செயல்படுத்த முனைந்துள்ளது. அதன் ஒருபகுதியே சமீபத்திய தமிழக எரிபொருள் திட்டங்கள் ஆகும். விவசாய உற்பத்தி நடைபெறும் பகுதியை சிதைக்கும் எரிபொருள் திட்டங்கள் விவசாய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் என்றால், இந்த நீரியல் விரிசல் முறையை அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் அனைவரையும் அங்கிருந்து விரட்டும். இப்படி பேசினாலே, அறிவியலுக்கு புறம்பாக வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதாக சில அறிவாளிகள் வாதிட்டு வருகிறார்கள். இதனால் அறிவியல் ஆய்வுகள், மற்ற வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப வல்லுனர் குழுக்களை அமைத்து கண்டறிந்த முடிவுகளின் அடிப்படையில், இந்த நீரியல் விரிசல் முறையை தங்கள் நாடுகளில் தடை செய்துள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி பெருமளவு எரிபொருள் உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் அது ஏற்படுத்தி இருக்கும் நேரடி பாதிப்புகளை பற்றி இங்கே விரிவாக முன்வைக்கிறோம். இது அறிவாளிகளுக்கு பதில் சொல்வது மட்டுமல்லாமல், இது மற்றவர்களின் போராட்டம் என கூடங்குளம் போராட்டத்தில் விலகி  இருந்ததைப் போன்று நாம் ஒதுங்கி நிற்க கூடாது என்ற உண்மையை நம் அனைவருக்கும் உணர்த்தும் என்று நம்புகிறோம்.

நீரியல் விரிசல் முறை செயல்படுத்தப்படும் இடத்தின் தோற்றம். (geology.com)

envir2 600இந்த நீரியல் விரிசல் முறை எனப்படும் hydraulic fracturing method அமெரிக்காவில் நிலடுக்கத்தையும் அதிக அளவு நீர் பயன்பாட்டின் காரணமாக கடும் வறட்சியையும் ஏற்படுத்தியதோடு, நிலத்தடிநீர் மாசுபடுதல், பயன்படுத்தப்படும் வேதிபோருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மீத்தேன் எரிவாயு கசிவினால் காற்றுமண்டலம் மாசுபடுதல், 60௦௦ மீட்டர்களுக்கு கீழே துளையிடுவதால் கதிரியக்க தனிமமான ரேடான் வெளியேறுதல், இவை அனைத்தின் காரணமாக மனிதர்களுக்கு கொடிய உடல்நல கேடுகளையும் உருவாக்கி இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த முறையை பயன்படுத்துவதைப்பற்றி ஆய்வு செய்த அறிவியல் வல்லுநர் குழு, இதுவரை வெளிவந்துள்ள அறிவியல் ஆய்வுகள், செய்திகள் ஆகியவற்றை தொகுத்து ஆய்வு செய்தது. (இதன் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள இது போதுமானதாக இருக்கும் என்பதால் அனைவரும் தவறாமல் இதனை வாசிக்க கோருகிறோம்- http://publications.jrc.ec.europa.eu/repository/bitstream/111111111/26691/1/lbna25498enn.pdf) இதில் குறிப்பிடும் மிக முக்கிய இரு பிரச்சனைகள் 1. மக்கள் அடர்த்தி 2. அதிக அளவிலான நீர் பயன்பாடு.ஆகியவைப்பற்றியதாகும். இந்திய, தமிழக பகுதிகள் உலகிலேயே மிகஅதிக மக்கள் நெருக்கம் கொண்ட பகுதிகள் (படம் காண்க) என்பதையோ, நீர்தட்டுப்பாடு நிலவும் பகுதிகள் என்பதையோ சொல்லி தெரிய வேண்டிய தேவை இல்லை. மேற்சொன்ன பிரச்சனைகளோடு, இதில் பயன்படுத்தப்படும் வேதிபொருட்கள் குறித்து நிலவும் மர்மமும், இதுவரை செய்யப்பட்டுள்ள அறிவியல் ஆய்வுகள் அனைத்தும், எண்ணெய் நிறுவனங்களின் உதவித்தொகையில் நடைபெற்று உள்ளதால், அதன் நம்பகத்தன்மை ஐயத்திற்கு உரியது என்பதையும், அவற்றின் முடிவுகள் அறிவியலுக்கு எதிரானது என்பதையும், அமெரிக்காவின் நியூயார்க் மாகாண அரசு அமைத்த அறிவியல் வல்லுனர் குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

envir3 600(உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட இந்தியா (ஐரோப்பிய அறிவியல் ஆய்வு அறிக்கை))

நியூயார்க் மாகாண அரசு அமைத்த வல்லுநர் குழுவும், இந்த நீரியல் விரிசல் முறை சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், இதுவரை இந்த முறையை பயன்படுத்திய பகுதிகளில் கதிரியக்க பொருட்களின் தாக்கத்தால், மக்களுக்கு பெருமளவு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த மாகாணம் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதித்துள்ளது. இதேபோன்று ஸ்காட்லாந்து, பிரான்சு, நெதர்லாந்த், ஜெர்மனி போன்ற நாடுகளும் தனித்தனியாக வல்லுனர் குழுக்களை அமைத்து, அதன் அடிப்படையில் தடை செய்துள்ளன. இனி இந்த நீரியல் விரிசல் முறை நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுப்படுத்தியதால் மனிதர்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை பற்றிய அறிவியல் ஆய்வு முடிவுகளை இனி தொகுத்து பார்ப்போம்.

நீரியல் விரிசல் முறையால் நிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தொகுப்பு

 • பாறையை வெடிக்கச் செய்ய, மிக அதிக அழுத்தத்தில் நீரையும் வேதிக்கரைசல்களையும் பூமிக்கடியில் 3000 மீட்டருக்கு கீழே இந்த முறையில் செலுத்துவதால் நில அமைப்பியலில் மாற்றம் ஏற்பட்டு நிலநடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 • இந்த முறையை பயன்படுத்தி அமெரிக்காவில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்கும் மாகாணங்களில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான, 3.8 ரிக்டர் வரையிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

 • ஒஹியோ மாகாணத்தில் 400 சிறு நிலநடுக்கங்களை நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியதாகவும், அது 3 கிலோமீட்டர்களுக்கு கீழே பாறையை உடைப்பதில் இருந்து 29 மணி நேரத்திற்குள்ளாக பலபத்து நில அதிர்வுகளை ஏற்படுத்தியுருப்பதாகவும் அறிவியல் ஆய்விதழில் (Seismology Research Letters) ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 • ஒக்லஹாமா (oklahama) மாகாணத்தில் பாறையை உடைக்க ஆரம்பித்த வருடமான 2008 ஆம் ஆண்டிலிருந்தே நூற்றுக்கும் மேற்பட்ட 3 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 2014  ஆம் ஆண்டில் மட்டும் 4 ரிக்டர் அளவுக்கும் அதிகமான 24 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் (Science Advances) வெளியிடப்பட்டுள்ளது. 

enir4 450

Ref: Science Advances 2015.   

 • டெக்சாஸ் (Texas) மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு 120 நிலநடுக்கங்களும், 2015 ஆம் ஆண்டு 4 ரிக்டர் அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பிற்கும் பாறையை உடைப்பதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிவியல் துறையில் பெரிதும் மதிக்கப்படும் நேச்சர் குழும ஆய்விதழில் (Nature Communications) ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 • அலபாமா (Alabama) மாகாணத்தில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க தொடங்கிய பிறகு 3.8 ரிக்டர் வரையிலான நில நடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 • ஒஹியோ, ஒக்லஹாமாவில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்கும் கிணறுகளில் செலுத்தும் திரவங்களின் காரணமாக சமீப வருடங்களில் நூற்றுக்கணக்கான 3 ரிக்டருக்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும், அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி அறிவியல் உலகின் உயரிய தரமதிப்பீடு வைத்திருக்கும் சயன்ஸ் (science) ஆய்விதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

envi5 350

 • பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க பாறைகளை உடைப்பதற்கும், கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக அம்மாகாண புவியியல் ஆய்வாளர் தெரிவித்திருக்கிறார்.

 • இந்த ஆய்வுகளும், செய்திகளும் இந்த பாறை எரிவாயு- மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கும், தொழில்நுட்பதிற்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பிருப்பதை காட்டுகின்றன. மேலும் திட்டம் ஆரம்பம்பித்த வருடங்களில் குறைவான ரிக்டர் அளவில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம், ஆண்டுகளும், கிணறுகளும் அதிகமாகும் போது, பல நூறு எண்ணிக்கையில் 3 ரிக்டருக்கும் அதிகமான நிலநடுக்கம் ஏற்படுவதை காட்டுகிறது.

 • தமிழகத்தில் காவிரி படுகையில் பாறை எரிவாயு-மீத்தேனை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டிருக்கும் ONGC, மூலப்பாறைகள் இருப்பதையும், அங்கு எரிவாயு எடுப்பது வர்த்தக ரீதியில் பயனளிக்ககூடியது என்பதையும், உறுதி செய்த இடங்களில் உற்பத்தி தொடங்க அனுமதி கோரியுள்ளதோடு, 25 ஆண்டுகளுக்கு எரிவாயு எடுக்க போவதாக மும்பை பங்கு சந்தையில் தனது பங்குகளையும் வெளியிட்டுள்ளது.

 • 25 ஆண்டுகளுக்கு எரிவாயு எடுக்கும் போது, அமெரிக்காவில் ஏற்பட்டிருப்பதை போன்று தமிழகத்திலும் நீடித்த உற்பத்தியின் காரணமாக, நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியகூறுகள் மிக அதிகம். தமிழக அரசு அமைத்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவும், நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பை சுட்டிக்காட்டி உள்ளது.

 • அவ்வாறு நிலநடுக்கம் ஏற்படும் போது, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய நான்கு மாவட்ட குடியிருப்புகளின் நிலநடுக்க தாங்குதிறன், அந்த பகுதிகளில் உள்ள புராதான சின்னங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவைகளை குறித்து, உற்பத்தியை தொடங்கும் முன்பு ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமாகிறது.

 • மிக முக்கியமாக, பாறை எரிவாயு- மீத்தேன் உற்பத்தி செய்ய ONGC  அனுமதி கோரியுள்ள புவனகிரி பிளாக், நெய்வேலி நிலக்கரிசுரங்கத்திற்கு மிக அருகில் உள்ளதால், அதன் நிலைத்தன்மை குறித்தும் விரிவான ஆய்வு செய்வது மிக முக்கியமானதாகும்.    

 • ஆனால் இதுவரை ONGC சோதனைக்கிணறுகள் அமைக்க அனுமதி கோரிய சுற்றுசூழல் ஆய்வறிக்கையிலும் அல்லது உற்பத்திக்கிணறுகள் அமைக்க அனுமதி கோரியுள்ள ஆவணங்களிலும், கிணறுகள் தோண்டுவதற்கு செய்யப்படும் சுற்றுசூழல் ஆய்வையும், அதனால் ஏற்படும் விளைவுகளை தணிக்கும் நடவடிக்கைகளை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

 • அதில் ONGC, பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க பயன்படுத்த போகும் தற்போது உள்ள ஒரே முறையான நீரியல் விரிசல் முறைக்கு, பயன்படுத்த போகும் நீரின் அளவு, வேதிப்பொருட்கள், அதன் விளைவுகள் குறித்த தகவல்கள், அது தமிழகத்தில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இடம்பெறசெய்யாமல் முற்றிலுமாக மூடிமறைக்கப்பட்டுளது.

 • மேலும், மத்திய, மாநில சுற்று சூழல் துறைகள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அது குறித்த எந்த ஆய்வும் இதுவரை செய்யாமல், இது குறித்து மத்திய சுற்றுசூழல், வனத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளிலும் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நீரியல் விரிசல் முறை நீரில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு.

 • இந்த நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி மீத்தேனை உற்பத்தி செய்ய, ஒரு கிணறை துளையிடவும், வேதிக்கரைசல்களை கொண்ட நீரைக்கொண்டு அதிக அழுத்தத்தில் பாறையை உடைக்கவும் ~1.1 முதல்1.5 கோடி லிட்டர்கள் வரை (~11,000 முதல் 15,000 கன மீட்டர்கள்) நீர் தேவை.

 • இவ்வாறு துளையிட்டு, உடைத்து உற்பத்தியை ஆரம்பிக்கும் கிணறுகள், மரபான உற்பத்தி கிணறுகளை போலல்லாமல், ஆரம்பித்த ஒரு ஆண்டுக்குள்ளாக 60% முதல் 70% வரை தனது உற்பத்தி திறனை இழந்துவிடுகின்றன. (மரபான உற்பத்தி கிணறுகள் 2 வருடங்களில் 45-50% உற்பத்தி திறன் வீழ்ச்சி). எனவே, அதிகளவு தொடர்ந்து கிணறுகள் அமைப்பது இன்றியமையாததாகிறது.

 • இந்த அதிக நீர் தேவையின் காரணமாகவும், கிணறுகளின் குறைந்த ஆயுட்காலம் காரணமாகவும், தொடர்ந்த உற்பத்தி பெருக்கத்தின் காரணமாகவும், பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க கிணறுகள் அமைத்த அமெரிக்க மாகாணங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவு பாறை எரிவாயு-மீத்தேன் உற்பத்தி செய்யும் டெக்சாஸ், கலிபோர்னியா மாகாணங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இது அரசு ரேசன் முறையில் நீரை குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பங்கிடும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கிறது.

 • சனவரி 2011 முதல் மே 2013 வரை 36718 கோடி லிட்டர் தண்ணீர் செலவு செய்து 39294 புதிய கிணறுகள் அமைக்கப்பட்டதால், இந்த புதிய கிணறுகள் தோண்டிய 55% அமெரிக்க பகுதிகள் கடும் வறட்சியை சந்தித்திருக்கின்றன.

 • சோதனை செய்வதற்கே சில நூறு கிணறுகள் தோண்டியுள்ள ONGC, 25 வருடங்கள் எரிவாயு எடுக்க திட்டமிட்டுள்ள நிலையில், பாறை எரிவாயு-மீத்தேன் கிணறுகளின் குறைந்த ஆயுட்காலம் காரணமாக, பல நூறு முதல் சில ஆயிரம் கிணறுகள் தோண்டப்போவது உறுதி.

 • அவ்வாறு தோண்டும் போது, அங்குள்ள குடும்பங்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயம் செறிவாக நடைபெறும் அந்த பகுதிகளின் விவசாய தேவைக்கும் நீரின்றி வறண்டுவிடும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே, பருவமழை பொய்க்கும் காலங்களிலும், அண்டை மாநிலங்களுடனான நீர்பங்கீட்டு சிக்கல் ஏற்படும் காலங்களிலும் அங்குள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கபடுவது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை இந்த அதிக நீர் பயன்பாடு மேலும் மோசமாக்கும்.  

 • இந்தளவு உற்பத்திக்கிணறுகளில் பூமிக்கடியில் செலுத்தப்படும் மிக அதிகளவு நீர், மீண்டும் கழிவாக புவிபரப்பிற்கு மேலே கொண்டுவரப்படுகிறது. இவ்வாறு வெளியேற்றப்பட்டு சேகரிக்கப்படும் பெரும் கழிவுநீர் கிணறுகள், ஒக்லஹாமா மாகாணத்தில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 • கலிபோர்னியாவில் இந்த கழிவுநீரை மீண்டும் பூமியில் செலுத்தி நிலத்தடிநீர் மாசுபடுத்தப்பட்டுள்ளது.

 • அதோடு, உற்பத்தி கிணறுகள் புவிபரப்பிற்கு மிக அருகிலுள்ள நிலத்தடி நீர் வழியாகவே அதிக ஆழத்திற்கு தோண்டப்படுகிறது. அப்போது, நிலத்தடிநீர் மீத்தேன் மற்றும் கழிவுநீர் கலந்து மாசுபடாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள் (cement casing) அமைக்கபடுகிறது. ஆனால், அது உடைந்து விபத்து ஏற்படும் போது மொத்த நிலத்தடி நீரும் மாசுபட்டு பயன்படுத்த தகுதியற்றதாகிப்போகிறது.

 • டெக்சாஸ், பென்சில்வேனியாவில் அவ்வாறான விபத்து ஏற்பட்டு மீத்தேன் நிலத்தடிநீரில் கலந்து, வீட்டு கிணறுகளில் எடுக்கும் நீர் தீப்பிடித்து எரியும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 • அது மட்டுமல்லாமல், இந்த கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் மிக அதிகளவு கழிவுநீர் திறந்தவெளியில் தேக்கி வைக்கப்படுகிறது. கடற்கரைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இந்த உற்பத்தி கிணறுகள் அமைய போவதால், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம் ஏற்படும் காலங்களில், அது நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளையும், நிலப்பரப்பையும் நிச்சயம் மாசுபடுத்தும்.

 • டெக்சாஸில் இவ்வாறு தேக்கி வைத்த கழிவுநீர் வீடுகளை சூழ்ந்ததால் அந்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதனாலேயே இங்கிலாந்தில் இந்த கழிவுநீரை மூடிய கழிவுநீர் தேக்க தொட்டிகளில் வைக்க வேண்டுமென அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

 • மீத்தேனை உற்பத்தி செய்ய  இருக்கின்ற நீர் அனைத்தையும் உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் இந்த தொழில்நுட்பம், நிலத்தடிநீர், நீர்நிலைகள், நிலப்பரப்பு என அனைத்தையும் மாசுபடுத்தும் ஆபத்தை இந்த திட்டம் கொண்டுள்ளது. அவ்வாறன சூழலில், அங்குள்ள குடும்பங்கள் இடம்பெயர்வதை தவிர வேறு வழியேதும் இல்லை.

 • ஆனால், ONGC இதுவரை சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அமெரிக்காவை போன்று கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டம் பற்றியோ ஏதும் குறிப்பிடவில்லை. (அமெரிக்கவிலேயே இந்த சுத்திகரிப்பு, முறையாக நடைபெறவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன)   

 • அதோடு மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் செய்தியாக, இந்த கழிவுநீரில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களும், கதிரியக்க பொருட்களும் இருப்பதாக சுற்றுசூழல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பாறை எரிவாயு-மீத்தேன் எடுக்க தொடங்கிய ஆண்டிற்கு பிறகு கதிரியக்க தனிமமான ரேடானின் (Radon) அளவு அதிகரித்துள்ளதாக அறிவியல் ஆய்விதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 • இதுவரை நிறுவனங்கள் வெளியிட்ட பாறை உடைப்பிற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை ஆய்வு செய்த வேதியியல் அறிஞர்கள், அதில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் இருப்பதாகவும், அவை குறித்த வெளிப்படைத் தன்மை வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 • ஜெர்மனியில் இந்த திட்டத்தை செயல்படுத்தவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும், இதுவரை இந்த தொழில்நுட்பம் மற்றும் திட்டம் குறித்த ஆய்வுகள் முழுமையற்றதாகவும், நிறுவனங்களின் நிதியிலேயே அனைத்து ஆய்வுகளும் நடைபெறுவதால், சார்புநிலையற்ற சுதந்திரமான ஆய்வுகள் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளது.

envir6 350நீரியல் விரிசல் முறை காற்று மண்டலத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளின் தொகுப்பு.

 • இந்த திட்டம் சுற்றுசூழலை மாசுபடுத்தாத தூய்மையான புவிக்குகந்த திட்டம் என கூறப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மீத்தேன் கசிவை கண்காணித்த அமெரிக்காவின் சுற்றுசூழல் கட்டுபாட்டு நிறுவனம் (Environmental Protection Agency) குறைவான மீத்தேன் கசிவே இருப்பதாக பதிவு செய்திருந்தது. ஆனால், ஒரு கிலோமீட்டருக்கு மேலே பறந்து எரிவாயு உற்பத்தி செய்யும் கிணற்றுப் பகுதிகளில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பதிவு செய்த மீத்தேன் அளவை விட, மிக மிக அதிகளவு இருப்பதை கண்டறிந்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 • பசுமைக்குடில் வாயுவான இந்த மீத்தேன், புவி வெப்பத்தை அதிகரிக்க செய்யும். உலகமெங்கும் தற்போது பெரும் அளவு எங்கும் காணப்படும் கார்பன் டைஆக்சைடு வாயுவை விட நீண்ட கால நோக்கில் மிக அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் நீரியல் விரிசல் முறையை கையாளும் நிறுவனங்கள் கடும் விமர்சனதிற்குள்ளாகி வருகின்றன.

 • இந்த திட்டமும், தொழில்நுட்பமும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்துவதோடு, பல உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்களையும் பயன்படுத்துகிறது. அதோடு, இந்த கிணறுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் கதிரியக்க தனிமங்களும் இருப்பதால், இந்த திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுவாசகுழல் கோளாறு, புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கபடுகின்றனர்.

இப்போது சொல்லுங்கள், நீரியல் விரிசல் முறையில் பயன்படுத்தி எடுக்கப்போகும் எரிபொருள் நம்மை வாழவைக்கவா, அழிக்கவா என்பதை? தற்போது இரண்டாவது கட்டமாக நெடுவாசலில் தொடங்கியுள்ள போராட்டத்தின் முடிவுதான் நெடுவாசலை, மற்றும் நெடுவாசலை சுற்றியுள்ள மக்களின் வாழ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால வாழ்வை தீர்மானிக்கப்போகிறது என்பது மிகையல்ல.

References

- சூறாவளி

Pin It