கனடாவில் சட்பரி, அமெரிக்காவில் சௌடன் சுரங்கம், ஜப்பானில் மி-ஓகா, இத்தாலியில் கரேன் சாஜோ மலை, இந்தியாவில் கோலார் பகுதியைத் தொடர்ந்து நியூட்ரினோ ஆய்வகத்திற்கான தேடுதல் வேட்டை தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நியூட்ரினோ என்பது சூரியன் மட்டுமல்லாது விண்மீன்களிலிருந்தும் வெளிப்படும் அணுத்துகள்களாகும். கனமற்ற இத்துகள்கள் விண்வெளியிலிருந்து கீழிறங்குகின்றன. பல கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்த வண்ணம் இருந்தாலும் அவற்றை ஈர்த்து, ஆய்வு செய்வது கடினம். இந்த அணுத்துகளைப் பிடித்து அதனை ஆய்வு செய்தால் சூரியன் குறித்த ரகசியங்களையும், விண்வெளியின் ஆற்றல் பற்றியும் பூமியின் பிறப்பு குறித்தும் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் நியூட்ரினோ ஆய்வு முயற்சி 1930களில் இருந்து தொடங்கியது. நியூட்ரினோ துகள்களை ஒரு கருவி மூலம் ஈர்த்து அவற்றை ஆய்வு செய்வதுதான் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்.

இதில் பிரச்சினை என்னவென்றால், இந்த நியூட்ரினோ ஆய்வகத்தை சாதாரண தரைத்தளத்தில் அமைக்கமுடியாது. கருங்கல்  (சார்கோநைட்) பாறைப்படிவம் நிறைந்த செங்குத்தான மலைப்பகுதியில், அதுவும் மழைப்பொழிவு அதிகமில்லாத நிலையான புவியியல் அமைப்பைக்கொண்ட பகுதியில் தான் ஆய்வகத்தை அமைக்கமுடியும். 10 மீட்டர் அகலமும், 250 மீட்டர் (2.5 கிலோ மீட்டர்) நீளமும் உள்ள இந்த நியூட்ரினோ ஆய்வகமானது மலையிலிருந்து சுரங்கம் அமைத்து ஆழத்தில் அமைக்கப்படவேண்டும். இந்த அமைப்பு முறையே நியூட்ரினோ ஆய்வுக்கான அடிப்படை வசதியைத் தரும்.

இப்படி ஒரு ஆய்வு மையத்தை இங்கு அமைக்க இமாச்சல பிரதேசம் மணாலி, சிக்கிம் ராமன் நீர் மின் திட்ட பகுதிகள் என ஆய்வு செய்த நியூட்ரினோ ஆய்வுக்குழுவினர் இறுதியாக தமிழகத்தில் நீலகிரி சிங்காரா மலைப்பகுதியைத் தேர்வு செய்தார்கள். கோவை மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், சூழலியல் சிந்தனையாளர்கள், புலிகள் சரணாலய நலம் விரும்பிகள் என அனைவரும் இத்திட்டத்தை எதிர்க்க, ஒரு வழியாக இந்திய புலிகள் ஆணையத்தலைவர் ராம் கோபால் வர்மாவின் பரிந்துரையின் பேரில் சிங்காரா திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்த ஆய்வில் தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

நியூட்ரினோ ஆய்வு என்பது இயற்கையைப் பற்றிய புரிதலுக்கான அடிப்படை ஆய்வு என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டம் குறித்த எதிர்மறையான கருத்துக்களோடு இரண்டு தரப்புகள் மோதிக்கொள்கின்றன. ஒன்று - கண்மூடித்தனமான எதிர்ப்பு, இன்னொன்று கண்மூடித்தனமான ஆதரவு. இத்திட்டத்தின் பயன், அதன் நம்பகத்தன்மை, அதனால் ஏற்படும் உடனடி அல்லது நீண்டகால விளைவுகள் போன்றவற்றை கவனமாக பரிசீலிக்க இரண்டு தரப்புமே தயாராக இல்லை.

“நியூட்ரினோ என்பது அணுத்துகள், எனவே ஆய்வில் அணுசக்தி வெளிப்படும்” என்ற பாமரத்தனமான வதந்தி ஒருபுறம். விஞ்ஞானிகள் பக்கமோ “வளர்ச்சிக்கட்டத்தில் ஏற்படும் சூழல் பாதிப்பு என்பது தவிர்க்கமுடியாதது. எனவே பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றும் விவாதங்கள் தொடர்கின்றன.

புவி வெப்பமயமாதல், நிலத்தடி நீர் பற்றாக்குறை, பருவகால மாறுதல்கள் என்று பலவித நெருக்கடிக்குள்ளாயிருக்கிற இந்தச் சூழலில் எதிர்மறையான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிப்பது அவசியமானது. நியூட்ரினோ ஆய்வகம் அமைப்புப் பணியில் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் மற்றும் ஆய்வகம் இயங்கும் நிலையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை. ஆய்வகம் அமைப்பதற்கான அளவீடுகளின்படி விஞ்ஞானப்பூர்வமான கணக்கின் அடிப்படையில் மலையைக்குடைவதால் கிடைக்கும் சுமார் ஆறு லட்சத்து முப்பதாயிரம் டன் கழிவுகளை நீக்குதல், கட்டுமானத்திற்காக பயன்படுத்த வேண்டிய ஏழு லட்சத்து அறுபதாயிரம் டன் கட்டுமான பொருட்களை கொண்டு சேர்த்தல், 130 கனரக வாகனங்களின் பயன்பாடு போன்றவை அடர் காடுகளில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

நீலகிரி சிங்காரா திட்டம் ஏன் கைவிடப்பட்டதோ அதே அளவிற்கான முக்கியக் காரணங்களை தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையும் கொண்டுள்ளது. இங்கு அமைந்துள்ள மேகமலை யானைகள் மற்றும் காட்டு எருதுகளுக்கான சரணாலயமாக இப்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரியாறு புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் காப்பகத்திற்கான உயிர் பாதுகாப்பு வளையமாக சுருளியாறு காடுகள் அமைந்துள்ளன. ஆய்வகத்தின் கட்டுமான காலத்தில் பயன்படும் வெடிமருந்துகள், கிரஷர்கள், ஒலி மாசுபாடு போன்றவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். மேற்கண்ட பிரச்சினைகளுக்கு மாற்று வழி கிடையாது.

அடுத்தது - ஆய்வகத்தின் இயங்கும் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள். நியூட்ரினோ ஆய்வில் எந்த விதமான ரசாயணப் பொருட்களும் பயன்படுத்தப்படாது, எனவே எந்த விதமான விளைவுகளும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.

இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் (The Gran Sasso National Astro physics Laboratory) கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதாகக்கூறி அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். நியூட்ரினோ திறனறியும் கருவியில் பயன்படுத்தப்பட்ட ரசாயன எண்ணெய் தவறுதலாகக் கையாளப்பட்டதில் 50 லிட்டர் அளவிற்கு வெளியேறியதாகவும், அதில் 1,2,4-trimethylbenzene என்ற ரசாயனம் இருப்பதாகவும் அதனால் பாதிப்பு சிறிய அளவில்தான் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இறுதியில் இத்தாலிய இயற்பியல் மற்றும் அணுசக்தித்துறை தலைவர் லாரோகி இந்த ரசாயனக்கசிவு கவனக்குறைவால் ஏற்பட்டது என்றும், இதன் விளைவுகள் மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு தற்காலிகமாக மூட பரிந்துரைத்தார். 2003 ஆம் ஆண்டு ஆய்வகம் மூடப்பட்டது.

பாதிப்புகள் பற்றி பேசும் விஞ்ஞானிகள் தம் ஆய்வின் மீது கொண்ட காதலினால் பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் அல்லது குறைத்துச் சொல்கின்றனர். ஆய்வகக்கட்டுமானமும், அதன் பின்னான ஆய்வின் போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே நியூட்ரினோ ஆய்வக விஷயத்தில் ஒரு தீர்வை எட்ட முடியும். இவ்வளவு சிக்கலான, இயற்கையின் மீதான சில விளைவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த ஆய்வின் பலன் என்னவாக இருக்கும் என்பதே இதற்கான முடிவாகவும் அமையும்.

உலக அளவில் 1930களில் மிக மெதுவாகத் துவங்கிய நியூட்ரினோ ஆய்வுகள் 1960களில் வேகமடைந்தது. 1965 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் கோலாரில் அமைக்கப்பட்ட இந்திய நியூட்ரினோ ஆய்வகம் இந்த 2010 ஆம் ஆண்டு வரையில் என்னவிதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது என்பதும், உலக நியூட்ரினோ ஆய்வுகள் இந்த 70 வருடங்களில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய விஷயங்களாகும்.

மக்களின் அடிப்படைத்தேவைகளே நிறைவடையாத இந்தியா போன்ற ஒரு தேசத்தில் அத்தியாவசியமான ஆய்வுகளில், உடனடி பலன் மக்களின் மீது பிரதிபலிக்கக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவதே காலத்தின் தேவையாக இருக்கிறது. செயற்கைக்கோள் அனுப்புகிற பட்ஜெட்டில் உணவுத்தேவையை நிறைவுசெய்ய முடியுமா என்று யோசித்த கடந்த காலமும் நமக்கு உண்டு.

அறிவியல் ஆராயப்படுவதும், நவீன கண்டுபிடிப்புகள் வெளிப்படுவதும் மனித அறிவின் வளர்ச்சிதான். அதன் விளைவுகளுக்கும் , பலன்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பொருத்து ஆய்வுகளின் தேவை இறுதி செய்யப்படவேண்டும். பிரபஞ்ச ரகசியங்களை அறியும் அடிப்படை ஆய்வுகளின் மேல் நமக்கு ஆர்வம் இருப்பது உண்மைதான் என்றாலும், பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் அவ்வாய்வுகளை முன்னெடுத்துச்செல்ல வழிவிடலாம்.

இந்திய விஞ்ஞானிகள் - அமெரிக்க விஞ்ஞானிகளின் தொடர்ச்சியாகவோ, உலக விஞ்ஞானிகளின் தொடர்ச்சியாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. இந்தியத்தேவைகளைக் கருத்தில் கொண்டு விஞ்ஞானத்தை முன்னெடுத்துச் செல்பவர்களாக இருப்பார்களேயானால் மக்களின் ஆதரவு விஞ்ஞானத்திற்கு என்றும் இருக்கும்.

- மருத்துவர் அ.உமர் பாரூக் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It