நாவின் சுவை மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. தனித்துவம் மிகுந்த நம் நாவின் அடையாளங்களால் நாம் ஒவ்வொருவர் விரும்பும் உணவிலும் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. நாவில் காணப்படும் சமதளமற்ற, நீண்ட, குறுகிய, பள்ளம் போன்ற வெவ்வேறான அமைப்புகள் முப்பரிமான தொழில்நுட்பம் மூலம் ஆராயப்பட்டபோது, அவை மனிதரின் விரல் அடையாளம் போலவே ஒவ்வொருவரிலும் தனித்துவம் மிகுந்ததாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மனிதரின் உணவு விருப்பமும் ஏன் பல வகைகளில் வேறுபடுகிறது என்ற வினாவிற்கு இந்த ஆய்வு பதில் தருகிறது. ஆய்வின் முடிவு ஆரோக்கியமான, ஆனால் சுவை மிகுந்த, கொழுப்பு, இனிப்பு சுவைக்கு மாற்றான உணவுகளை மக்கள் விரும்புமாறு செய்ய உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சராசரியாக பத்து செண்டிமீட்டர் அளவு இருக்கும் நாக்கின் மூன்றில் இரண்டு பகுதி மட்டுமே வெளியில் தெரியும் வகையில் அமைந்துள்ளது.
நீண்ட அல்லது பிசுபிசுப்பு நிறைந்த, குழைவுத் தன்மையுடைய, அகண்ட அல்லது சீரற்ற, வெடிப்புகள் உள்ள, இறுக்கமான அமைப்புடைய அல்லது உரோமங்கள் நிறைந்த இப்படி பல்வேறு பண்புகளுடன் காணப்பட்டாலும் நாக்கு என்னும் அதிசய உறுப்பு, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் பல மடங்கு தனிச்சிறப்புடையது.
சிக்கலான இது பல மேம்பட்ட திறன்களைப் பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான சிறிய சுவை மொட்டுகள் உள்ளன. இவை பாப்பிளி (papillae) என்று அழைக்கப்படுகின்றன. முன்னோக்கிய நிலையில் அமைந்துள்ள இவற்றில் சில சுவை மொட்டுகள் உள்ளன. மற்ற மொட்டுகள் அமைப்பு, உராய்வு, உயவு, தொடுதல் போன்ற உணர்வுகளை நாவில் இருந்து அனுப்ப உதவுகின்றன.
“இச்செயல்கள் வாயில் உணவு மற்றும் நீர்மப் பொருட்களின் கையாளும் திறன், அவற்றின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று எடின்பரோ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும் ஆய்வுக்குழுவின் தலைவருமான ரேனா ஆண்ட்ரிவா (Rayna Andreeva) கூறுகிறார். உணவு குறித்த நம் உளவியல்ரீதியான பதில்வினைகளுக்கு இந்த மொட்டுகள் பொறுப்பாக அமைகின்றன.
சாக்லேட் போல விருப்பமான ஒரு உணவை உண்ட பின், உண்ணும்போது நிகழும் உராய்வு, உயவு போன்ற செயல்களால் நமக்கு ஏற்படும் உணர்தல் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட உணவை உண்ட மன நிறைவைப் பெறுகிறோம். சுவையுடன் தொடர்புடைய பாப்பிளியின் செயல்கள் முன்பே நன்கு ஆராயப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் வடிவம், அளவு, பாணியில் (patterns) தனிநபர்களுக்கு இடையில் காணப்படும் வேறுபாடுகள் பற்றி இன்னும் அதிகம் அறியப்படவில்லை.
இது குறித்து ஆழமாக ஆராய ஆய்வுக் குழுவினர் தனிநபர்களின் பாப்பிளியின் ஆயிரக்கணக்கான மைக்ரோ ஸ்கோப்பிக் ஸ்கேன்களை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி பயிற்றுவித்தனர். 15 நபர்களின் நாக்குகளில் இருந்து சிலிகான் அச்சுகள் எடுக்கப்பட்டு ஆராயப்பட்டன. அளவுகள் வரைபடமாக்கப்பட்டன. நாவின் அளவு, குணநலன்கள், நாவின் பரப்பில் பாப்பிளி அமைந்துள்ள இடம் போன்றவை வரைபடமாக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தன.
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயண்டிபிக் ரிபோர்ட் (Scientific Reports) என்ற இதழில் வெளிவந்துள்ளது. தனி ஒரு பாப்பிளி ஒருவரின் பாலினம், வயது போன்ற விவரங்களை 67 முதல் 75% வரை துல்லியமாகக் கூறுகிறது. பங்கேற்ற 15 நபர்களில் ஒவ்வொருவரையும் பாப்பிளியின் உதவியுடன் 48% துல்லியமாக அடையாளம் காணமுடியும்.
நாவில் உள்ள பாப்பிளியை ஒரு தனிநபர் அடையாளமாக பயன்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “மைக்ரான் அளவே உள்ள இவை தனித்துவம் மிகுந்தது என்பதை அறிந்த போது பெரும் வியப்பு ஏற்பட்டது” என்று எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரியருமான பேராசிரியர் ரிக்ஸ் ஆர்க்கார் (Prof Rik Sarkar) கூறுகிறார்.
தனிநபர்களுக்கு இடையில் அமைந்துள்ள பாப்பிளியின் விநியோகம் பற்றிய வருங்கால ஆய்வு ஒரு சிலர் ஏன் மற்றவர்களை விட ஒரு சில உணவுப் பொருட்களை அதிகமாக விரும்புகின்றனர் என்பதை அறிய உதவும். மருத்துவம் தொடர்பான பல்வேறு செயல்களில் நாவின் ஒருங்கிணைப்பு முக்கியமானது.
தனிநபர்களுக்கு விருப்பமான உணவுகளை வடிவமைப்பதில் இந்த ஆய்வு உதவும். குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும் பிடித்தமான வகையில் அமைந்த உணவுகளை வடிவமைப்பதில், பலவீனமான மனிதர்களுக்கு சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை தயாரிப்பதில், அவற்றை பிடித்தமானதாக உருவாக்குவதில் இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.
கொழுப்பும் சர்க்கரையும் அதிகமாக உள்ள சாக்லேட்டுகளுக்கு மாற்றாக அவற்றை விரும்பி உண்போருக்கு அதே சுவையுடன் கூடிய ஆனால் சத்துள்ள, உடலுக்கு தீங்கு செய்யாத மாற்று உணவுப் பொருட்களை தயாரித்து வழங்கும் காலம் விரைவில் வரும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்