ஒருவருடைய கையெழுத்தில் இருந்து என்னவெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்? ஒரு நபரின் குணாதிசயங்கள், ஆளுமை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் தன்மை கையெழுத்திற்கு இருப்பதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கையெழுத்தின் உள்ளடக்கம் உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதைக்கூட இப்போது கண்டறிய முடியும்.

தற்போது நடைமுறையில் உள்ள உண்மை கண்டறியும் சோதனைகள் வாய்மொழியாக நடத்தப்பட்டு  ஆழ்மனம் ஆராயப்படுகிறது. இந்த சோதனைகளின்போது சம்பந்தப்பட்ட நபரின் மீது மனித உரிமை மீறல்கள் திணிக்கப்படுவதாக புகார்கள் எழ வாய்ப்புண்டு. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண உதவும் ஆய்வு ஒன்று அண்மைக் காலத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு நபரின் கையெழுத்தில் இருந்து அவர் உண்மையைக் கூறுகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்க இயலும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் முயற்சிக்கு இந்த ஆய்வு துணை செய்வதாக உள்ளது.

ஹைஃபா பல்கலைக்கழக அறிஞர்கள் கில் லூரியாவும், சாரா ரோஸன்ப்லம் என்பவரும் இணைந்து இந்த ஆய்வில் வெற்றி பெற்றுள்ளதாக Applied Cognitive Psychology இதழ் தெரிவிக்கிறது. எழுதுபவரின் கையெழுத்தின் புறப்பண்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையின் துணை கொண்டு கணினியால் ஆராயப்படுகிறது. பேப்பரின் மீது பேனா இருந்த நேரம், பேப்பருக்கு வெளியில் பேனா இருந்த நேரம், ஒவ்வொரு எழுத்தின் உயர அகலம், எழுதும்போது கொடுக்கப்பட்ட அழுத்தம் இவற்றையெல்லாம்கூட இந்த அட்டவணையின் உதவியால் கணினி கண்டுபிடித்து விடுகிறது. பொய்யான செய்திகளை எழுதும் நபர் தயங்கித் தயங்கி எழுதுவது இயல்புதானே!

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It