பூமியைப் போலவே நிலவும் இரும்பிலான இதயத்தையே பெற்றுள்ளது என்று விஞ்ஞானிகள் முதல்முறையாகக் கண்டுபிடித்துள்ளனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நடந்த ஆய்வுகளுக்குப் பிறகு நிலவின் உட்கருப்பகுதி (inner core) பூமியைப் போல திட வடிவ இரும்பைக் கொண்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள நிலவின் அமைப்பு கடினமான மேலோடு (crust), மிகக் கடினமான மேண்டில் (Mantle) பகுதி, மேண்டிலும் கருப் பகுதியும் சந்திக்கும் இடைப்பட்ட இடத்தில் குறைந்த பாகுநிலை அடர்த்தியுடைய (viscocity) பகுதி, திரவநிலை வெளிக்கருப் பகுதி மற்றும் திடநிலை உட்கருப் பகுதியைப் பெற்றுள்ளதைக் காட்டுகிறது.

இதன் மூலம் நிலவின் உள்ளமைப்பைப் பற்றிய நீண்ட நாள் புதிருக்கு விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர். நமக்கு அருகாமையில் இருக்கும் வான் பொருளான நிலவு கூழ்ம நிலை வெளிக்கருப் பகுதி மற்றும் திட நிலை உட்கருப் பகுதியைக் கொண்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள கோட் டேசர் பல்கலைக்கழகம் மற்றும் வான்பொருட்களின் இயந்திரவியல் ஆய்வுக்கழகத்தின் (Côte d'Azur University and the Institute of Celestial Mechanics and Ephemeris Calculations IMCCE) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.moon 641பாறைகளின் உலகமா நிலவு?

நிலவை ஆராய விண்கலங்களை மனிதன் அனுப்புவதற்கு பல காலங்களுக்கு முன்பிருந்தே அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பூமி உருவாகும் முன்பே செவ்வாயின் போபோஸ் (Phobos) மற்றும் (Deimos) நிலவுகள் போல தோன்றிய பாறைகளின் உலகமா நிலவு அல்லது இந்த துணைக்கோள் செழுமையான நிலவுப் புவியியலைப் பெற்ற ஒன்றா என்பது பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்தன.

நாசாவின் அப்போலோ திட்டங்கள் மூலமே நிலா பூமியைப் போன்ற உள்ளமைப்பைப் பெற்றுள்ளது என்ற கருத்து முதல்முறையாக விண்வெளியியலாளர்களிடையில் ஏற்பட்டது. லூனார் ஆய்வுக்கலன்களின் தரவுகள் நிலவின் மையப்பகுதி அடர்த்தி மிக்க பொருளாலான அடுக்கினால் ஆனது என்றும், மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் பகுதி குறைந்த அடர்த்தியுடைய பொருளால் ஆனது என்றும் கண்டறியப்பட்டது.

இதனால் அதுவரை நினைக்கப்பட்டிருந்தது போல நிலவு ஒரே மாதிரியான பாறைப்பொருட்களால் ஆன சமதளப் பரப்பு இல்லை என்று அறியப்பட்டது. அப்போலோ பயணிகள் நிலவின் பரப்பில் விட்டுவிட்டு வந்த நில அதிர்வுகளை ஆராயும் கருவிகள் அதன் மேற்பரப்பில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை கண்டறிந்து கூறின.

கூழ்ம நிலையில் வெளிப்புற கருப்பகுதி

என்றாலும் அப்போலோ பயணங்கள் மற்றும் லூனார் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட எண்ணற்ற தரவுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நிலவின் உட்கட்டமைப்பைப் பற்றிய தெளிவான விவரங்களை பல ஆண்டு ஆய்வுகளுக்குப் பிறகு இப்போதே கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் தரவுகள் மூலம் நிலவின் வெளிப்புற கருப்பகுதி கூழ்ம இரும்பினால் ஆனது என்றும், இது மேன்டிலுடன் சந்திக்கும் பகுதி உருகிய பரப்பினால் தெளிவாகப் பிரிந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

விரிவான கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி நடந்த ஆய்வின் மூலம் நிலாவின் உட்புற கருப்பகுதியில் இரும்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அப்போலோ திட்டங்கள் மற்றும் நாசாவின் க்ரெயில் (Grail) திட்டத்தின் மூலம் கிடைத்த நிலவின் நிலவியல் அமைப்பு பற்றிய தரவுகள் ஒரு ஆண்டிற்கும் மேலக ஆராயப்பட்டபோது இதன் உட்கருப் பகுதி 500 கிலோமீட்டர் அகலம் மட்டுமே உடையது என்பது தெரிய வந்துள்ளது.

நிலவில் இரும்பு

நிலவின் மொத்த அகலத்தில் இது வெறும் 15% மட்டுமே. இதன் உள்ளமைப்பைப் பற்றி ஆராய்வதில் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு இதுவே காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேண்டில் பரப்பில் இருந்து மெழுகுக் குமிழ்கள் போல வெதுவெதுப்பான உருகிய பொருள் வெளிவருவதும் அறியப்பட்டது. நிலாவின் மேற்பரப்பில் இரும்பு இருப்பதை இது எடுத்துக் காட்டலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

எழில் கொஞ்சும் பூமியின் அருகாமை வான்பொருளான நிலவின் உட்பகுதி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய அறிவு மனிதனுக்கு இதன் நிலவியல் அமைப்பு பற்றி இருந்து வரும் புதிர்களுக்கு விடை காண உதவும். ஒருகாலத்தில் நிலவு வலிமை வாய்ந்த காந்தப்புலத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இன்று அங்கு அது இல்லை. பாறை மாதிரிகள் பூமிக்கே சவால் விடும் வகையில் அமைந்த காந்தப்புலம் அங்கு இருந்ததைக் காட்டுகிறது.

பத்தாண்டில் பல உலக நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் பல தனியார் அமைப்புகளும் நிலவுக்குப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வான்பொருளின் ஆழ்பகுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் மனிதகுலத்திற்குக் கிடைக்கத் தொடங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நிலவைப் பற்றி மேலும் ஆழமாக ஆராய இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று கருதப்படுகிறது.

** ** **

மேற்கோள்: https://www.livescience.com/space/the-moon/for-the-1st-time-scientists-confirm-the-moon-has-a-solid-iron-heart-just-like-earth

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It