1921ல் நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சி நாடு முழுவதும் நடந்த வேல்ஸ் இளவரசர் சுற்றுப்பயணமாகும். அவர் அந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வருவாரென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவில் அரசியல் கொந்தளிப்பு இருந்ததால் இளவரசருக்குப் பதிலாக கன்னாட் கோமகன் அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் அரசு குடும்பத்தின் கௌரவம் கருதி இளவரசர் டிசம்பரில் அனுப்பப்பட்டார்.

28.7.21ல் மும்பையில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வேல்ஸ் இளவரசரைப் நிராகரிக்குமாறு தேச மக்களுக்கு வேண்டுகோள் விட்டது. இந்தியாவில் தோன்றியுள்ள ஒத்துழையாமை இயக்கத்தை முறியடிப்பதற்காகவே வேல்ஸ் இளவரசர் அனுப்பப்படுவதாக காங்கிரஸ் கருதியது. அதனாலேயே அவரை நிராகரிக்க முடிவெடுத்தது.

ஆனால் வேல்ஸ் இளவரசரின் வருகைக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாதென்று அறிவித்து நிராகரிப்பை தவிர்க்குமாறு வைசிராய் பாரத மக்களைக் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு மறுத்து ஏற்பாடுகளை தீவிரமாக நடத்தினர். கிலாபத் இயக்கத்தின் சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் தொண்டர் படைகள் நிறுவப்பட்டிருந்தன. இந்தப் படைகளில் மேலும் தொண்டர்கள் சேர்க்கப்பட்டு அவர்கள் இளவரசரை எதிர்ப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

வேல்ஸ் இளவரசர் நவம்பர் 17ல் மும்பைத் துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கினார். வைசிராய், உயர்தர அதிகாரிகள், வணிகர்கள், நிலச்சுவான்தார்கள் ஆகியோர் மும்பைத் துறைமுகத்தில் திரண்டு வேல்ஸ் இளவரசரைப் வரவேற்றனர். அதே சமயத்தில் சௌபாதிக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் காந்தி பேசினார். இளவரசர் மும்பைத் துறைமுகத்தில் கப்பலை விட்டிறங்கிய நாளிலே இந்தியப் பெருநாடெங்கும் பந்த் கடைபிடிக்கப்பட்டது.. கதவடைப்பும் வேலை நிறுத்தமும், கண்டன ஊர்வலங்களும் பொதுக் கூட்டங்களும் நடைபபெற்றன.

திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஊர்வலகத்தினர், ‘வேண்டாத விருந்தாளியான வேல்ஸ் இளவரசே திரும்பிப் போ’ என்று கோஷமிட்டனர். ஒத்துழையாமை இயக்கத்தை விரும்பாத ‘இந்து’, ‘சுதேசிமித்ரன்’ ஆகிய மதவாத ஏடுகளும் வேல்ஸ் இளவரசர் வருகையை எதிர்த்தன.‘தேசம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போர்க்கோலம் கொண்டிருக்கும் நேரத்தில் வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைத்தது ராச தந்திரமற்ற செயல்’ என்று எழுதியது இந்து பத்திரிக்கை.

வேல்ஸ் இளவரசர் மும்பைத் துறைமுகத்தில் கால் வைத்த நாளிலே நகரின் பல்வேறு இடங்களில் அன்னிய ஆடைகள் குவிக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய தோரணங்கள் நகரெங்கும் கட்டப்பட்டிருந்தன. நகரெங்கும் கலகம் மூண்டது. தெருக்களில் மக்கள் அணி அணியாகத் திரண்டு இளவரசருக்கு எதிரான கோஷங்களை எழுப்பிச் சென்றனர். காங்கிரஸ் கிலாபாத் தொண்டர் படையினர் கடைகளை அடைக்குமாறு வணிகர்களையும் தொழிற்சாலைக்குச் செல்ல வேண்டாமென்று தொழிலாளர்களையும் வேண்டிக் கொண்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆங்கிலேயர் கிலாபத் தொண்டர்களைத் தாக்கினர். கதரணிந்தவர்களைக் கண்டால் பழிவாங்கும் போக்கில் தாக்கி அவர்களைப் படுகாயப்படுத்தினர். அதன் காரணமாக அன்று காலையில் அமைதியான முறையில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் நடுப்பகலுக்குள் பெருங்கலவரமாக மாறியது. வெள்ளை நிறத்தவரும் ஆங்கிலோ இந்தியரும் பார்ஸிகளும் வாழும் பிரதேசங்கள் தாக்குதலுக்குள்ளாயின. வெள்ளையரைக் கண்டால் தங்கள் தலைகளில் அணிந்துள்ள தொப்பிகளைக் கழற்றுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

டிராம் வண்டிகளும் மோட்டார் கார்களும் கொளுத்தப்பட்டன. தொழிலாளர்களும் கலவரத்தில் கலந்து கொண்டனர். கலவரம் நான்கு நாட்கள் தொட்ர்ந்து நடைபெற்றது. இராணுவத்தினரும் போலீசாரும் சுட்டதில் 53 பேர் உயிரிழந்தனர். 400 பேர் படுகாயமடைந்தனர். காந்திஜியும் மற்றும் மும்பை நகரக் காங்கிரஸ் கிலாபத் தலைவர்களும் கலகக்காரர்கள் மத்தியில் சென்று அமைதி காக்குமாறு வேண்டிக் கொண்டனர். சரோஜினி தேவி மிகுந்த துணிவோடு பல மணி நேரம் கலகக்காரர்கள் மத்தியில் நின்று அகிம்சையைப் போதித்தார்.

அண்ணல் காந்தியடிகள் மும்பையில் நடந்த கலவரத்தால் அதிர்ச்சியுற்று ‘அகிம்சை உதட்டவில்தான் உள்ளது. உள்ளத்தில் இல்லை’ என்றும் ‘மும்பை நகரில் நான் கண்ட சுயராஜ்யம் என் மூக்கைத் துளைக்குமளவுக்கு மூடை நாற்றம் வீசியது’ என்றும் அறிக்கை விட்டார். வேல்ஸ் இளவரசர் நவம்பர் 25ல் கொல்கத்தா செல்வதாக இருந்தது. அங்கே தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் எத்ர்ப்பை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்தார். இந்த ஏற்பாடுகளை முறியடிக்க விரும்பி தொண்டர் படையை அரசு தடை செய்தது.

தேசபந்துவின் மனைவி வசந்தா தேவியும் மகன் சித்தரஞ்சனும் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி நகரில் பரவியதும் எங்கும் அமைதி குலைந்தது. வசந்தா தேவி ஒரு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்திதான் கொல்கத்தா மக்களை ஆவேசமடையச் செய்தது. நிலைமை மோசமாவதை அறிந்த வங்காள அரசு நள்ளிரவில் வசந்தா தேவியையும் சித்தரஞ்சனையும் விடுதலை செவதோடு அவர்களைக் கைது செய்ததற்காக மன்னிப்பும் கோரியது.

கிறிஸ்துமஸ் நாளை இளவரசருடன் கழிப்பதற்காக வைசிராய் கொல்கத்தாவுக்கு வந்திருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வைசிராய்க்கும் தேசபந்துவுக்கும் இடையே சமரசம் செய்து வைத்து மும்பையில் நடந்த அசாம்பாவிதங்கள் கொல்கத்தாவிலும் நடப்பதைத் தவிர்க்கப் பண்டித மாளவியாவும் வேறு சிலரும் முயன்றனர். அவர்கள் வைசிராயிடம் தூது சென்று பேசிய பின் கொல்கத்தா நகரிலுள்ள அலிப்பூர் சிறையிலிருந்த தேசபந்துவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தேசபந்துவோ காந்தியடிகளிடம் பேசும்படிக் கூறிவிட்டார்.

சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டால்தான் சமரசம் பேச முடியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார். வைசிராய் அப்பேச்சு வார்த்தையின்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக் கொண்ட போதிலும் லாலாலஜபதி, அலி சகோதர்கள் ஆகியோரை விடுதலை செய்ய மறுத்து விட்டனர். வேல்ஸ் இளவரசர் தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 14.1.22ல் வருகை தந்தார். இங்கும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

போலீசார் மீது கல்லெறித் தாக்குதல் நடைபெற்றது. பலர் படுகாயமடைந்தனர். டிராம் வண்டிகள் கொளுத்தப்பட்டன. வெள்ளைப் பெண்கள் பலர் துன்புறுத்தப்பட்டனர். போலீசார் சுட்டத்தில் 6 பேர் உயிர் நீத்தனர். ஜஸ்டிஸ் கட்சியினர் இளவரசர் வரவேற்பில் கலந்து கொண்டனர். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் சர்.பி.தியாகராச செட்டியார் வேல்ஸ் இளவரசரை வரவேற்கப் புறப்பட்ட போது கலக்காரர்கள் அவரது மாளிகையைச் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்தனர்.

Pin It