கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு படம் பிடிக்கிறது

(பெரியார் குறுகிய சிந்தனையாளர்; உள்ளூருக்கு மட்டும் தெரிந்த நபர் - என்றெல்லாம் நோபல் பரிசு பெற்ற பார்ப்பனரிலிருந்து உள்ளூர் பார்ப்பனர், ஊடகப் பார்ப்பனர் எல்லாம் திட்டமிட்டு செய்து வரும் பிரச்சாரத்தின் பொய்மைகளைக் கிழித்துக் காட்டி, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஜி. பாபு ஜெயக்குமார், ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். ‘பெரியார் காலத்தின் முன்னோடி’ என்ற தலைப்பில் செப்.17-ல் வெளிவந்த அக்கட்டுரையின் தமிழ் வடிவம்)

“பெரியார், ஓர் உள்ளூர் நபர். அவர் தனது கருத்துகளை விரிந்த தளத்தில் சிந்தித்ததில்லை. குறுகிய வட்டத்துக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவர். காந்தியும், காங்கிரசும், சுதந்திரப் போராட்டமும் மட்டும் இல்லாமல் இருந்திருக்குமானால், அவரது கொள்கைகள், தற்போதுள்ள வலிமையைப் பெற்றிருக்கவே முடியாது. பெரும் புள்ளிகள் முதுகின் மீது சவாரி செய்தவர். அதனால் தான், எனக்கு அவரைப் பற்றி தெரியாமலே போய்விட்டது.”

இப்படி எழுதியவர் நோபல் பரிசு பெற்ற வி.எஸ். நெய்பால்! பெரியாரைப் பற்றி தனது நூலில் (Inida – a million Mutiness) இவ்வாறு அவர் எழுதியுள்ளார். ஆனால் இந்த வரிகளை அவர் எழுதி 30 ஆண்டுகள் முடிந்த பிறகும், பெரியார் மரணமடைந்து 33 ஆண்டுகள் முடிந்த பிறகும், வெள்ளைத் தாடியும், கருப்புச் சட்டையுமாய் காட்சி அளித்த அந்த மனிதன் தமிழக அரசியல் ‘சர்க்கசில்’ உள்ள எல்லா முகாம்களாலும் போற்றப்படுகிறார். ‘மகாத்மா’ காந்தி, அவரது பிறந்த நாள், நினைவு நாளில் மட்டுமே நினைக்கப்படுகிறார். ஆனால் பெரியார் அதுபோல் இல்லை, தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியாலும் “அரசியல் மந்திரமாக” உச்சரிக்கப்படுகிறார். பாரம்பரிய தேசிய கட்சிகளிலிருந்து, புதிதாக முளைவிடும் கட்சிகள் வரை பெரியார் பேசப்படுகிறார். அப்போது தான், மக்கள் செல்வாக்கு தங்களுக்கு கிடைக்கும் என்று கருதுகிறார்கள்.

எந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து 1925-ல் பெரியார் வெளியேறினாரோ, அந்த காங்கிரசும், தத்து வார்த்தங்களில் திராவிடர் இயக்கத்திலிருந்து வேறுபடுகிற கம்யூனிஸ்டு கட்சிகளும்கூட, பெரியார் புகழ் பாடுவதையே தங்களுக்கு சாதகமாகக் கருதுகின்றன.

எந்த தேசிய கட்சியும், இங்கே, மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்யாமல், அதிகார மய்யத்தில் பங்கு பெற முடியாது. அத்தகைய மாநில கட்சிகளின் தோற்றங்களுக்கான காரணமே பெரியார் தான். இதுவே அரசியல் யதார்த்தம். இந்த யதார்த்தமான உண்மை நோபல் பரிசு பெற்ற நெய்பாலின் கருத்தை, கேள்விக்குள்ளாக்கி நிற்கிறது.

நெய்பால், மற்றொரு உண்மையையும் மறந்து விட்டார். பெரியார் குறுகிய வட்டத்தைத் தாண்டி, தனது கருத்துகளை வளர்த்தெடுக்கவில்லை என்று நெய்பால் எழுதிய அதே காலகட்டத்தில்தான் மண்டல் பரிந்துரை அமுலாக்கப்பட்டது. எந்த இடஒதுக்கீட்டை 1928 ஆம் ஆண்டில் பெரியார் வலியுறுத்தினாரோ, அது இந்தியா முழுதும் அமுல்படுத்தப்பட்டது.

1928 ஆம் ஆண்டிலே அவர் வலியுறுத்திய கருத்து, இன்றைக்கும் தேவையாகிறது என்பதை மண்டலறிக்கை அமுலாக்கம் நிரூபித்தது. அதே இடஒதுக்கீட்டைத்தான் இன்று உயர்கல்வி நிறுவனங்களிலும்கூட அமுலாக்க, காங்கிரஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த முறையான படிப்பையும் நிறுவனங்களில் சேர்ந்து படித்திடாத - அந்த சமுதாய விஞ்ஞானி, இடஒதுக்கீட்டுக்கு மட்டும் குரல் கொடுக்கவில்லை. மிகவும் எளிமையான மொழிகளில் அவர் முன் வைத்த முற்போக்கான கருத்துகள், இன்றைய நவீன வாழ்வியலுக்கும் பொருத்தமாகிறது. அந்தக் கொள்கைகள் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இன்றைய நவீனமான இளம் தலைமுறையினருக்கு பெரியார் ஒரு குறியீடாகவும்; அடையாளமாகவும் திகழ்கிறார். பழைய சம்பிரதாயங்களையும், பழக்க வழக்கங்களையும் பெரியார் கேள்விக்குள்ளாக்கினார். ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து, தங்களின் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்; பழங்காலப் பெருமைகளில் மூழ்கிக் கிடக்க வேண்டாம் என்கிறார். இதைத் தான், இன்றைய இளம் தலைமுறை பின்பற்றி வருகிறது.

இன்றைக்கு தங்களை முன்னிறுத்தி அரசியல் நடத்தும் ‘வேட்டி கட்டும்’ பழைய தலைமுறை அரசியல் தலைவர்களின் ‘புனிதப் பாதுகாவலரே’ பெரியார்தான் என்பதுபோல் - மேட்டுக்குடியினர் முன்வைக்கும் கருத்து சரியானது அல்ல. மாறாக - பெரியாரின் உலகப் பார்வை, பழைய தலைமுறை அரசியல்வாதிகளோடு இணைந்து போகாமல், இன்றைய நவீன இளம் தலைமுறையின் சிந்தனைகளோடு இசைந்து நிற்கிறது என்பதே உண்மை.

தற்போதைய அரசியலிலும், தேர்தலிலும், தீவிர ஈடுபாடு காட்டாமல் புறந்தள்ளும் மனப்பான்மைதான் இளம் தலைமுறையிடம் மேலோங்கி நிற்கிறது. பல இளைஞர்கள் தேர்தலில் வாக்களிப்பதில்கூட ஆர்வம் காட்டுவதில்லை. இவர்களின் இத்தகைய எண்ண ஓட்டத்தின் குறியீடுகூட - பெரியாராகத் தான் இருந்திருக்கிறார். 1944 ஆம் ஆண்டிலேயே சேலத்தில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபோது, தமது இயக்கம் தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்தவர் பெரியார்.

இந்தியாவில் பெண்கள் தங்களின் உரிமைக்கு கிளர்ந்து எழாத காலத்திலேயே பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். 75 ஆண்டுகளுக்கு முன்பே வேலை வாய்ப்புகள் உட்பட அனைத்துத் துறைகளின் பெண்களுக்கும் ஆண்களுக்கும் 50 சதவீத இடங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் கூறினார். ஆனாலும் இன்றும், 33 சதவீத இடஒதுக்கீட்டைக்கூட உறுதி செய்ய முடியவில்லை.

குடும்பக் கட்டுப்பாடு பற்றிய கருத்தில்கூட, மற்றவர்களின் கருத்தைவிட பெரியார் கருத்து மாறுபட்டது. பெண்கள் சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய பெரியார், குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை, அவர்களுக்கே இருக்க வேண்டும் என்றார். திருமணம் முடிந்தவுடன், அய்ந்து ஆண்டுகளுக்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள் என்று பெண்களுக்கு அறிவுறுத்தினார். இன்றைய நவீன சூழலில் அந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. குழந்தை பெறும் உரிமைகளை பெண்களுக்கு உரியதாக்கி, பெரியார் 1930களிலே பேசினார்.

திருமணம் என்பதே பெண்களை அடிமைப்படுத்தும் நிறுவனமாக பெரியார் பார்த்தார். எனவே அதை ஒழிக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் காதல் கொள்வதையும், வாழ்வில் சமபங்கு சம உரிமை கொண்டு வாழ்வதையும் அவர் வெறுத்து ஒதுக்கியதில்லை.

பெரியார் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியது இன்று நகர்ப்புற வாழ்க்கையில் வந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளாமலேயே தங்களுக்குள் உடன்பாடுகளைச் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் வாழ்வதைப் பார்க்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை முறையை மனித சமூகம் மட்டும் ஏன் பின்பற்றிக் கொண்டு அதற்காக கடும் துன்பங்களை சுமந்துக் கொண்டு வாழ வேண்டும் என்ற கேள்வியை பெரியார் எழுப்பினார். ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்தையே அவர் கேள்விக்குள்ளாக்கினார். கற்பு தான், பெண்களின் சுதந்திரத்தையும், சுய சிந்தனையையும் அவர்களிடமிருந்து பறித்து விடுகிறது என்றார்.

பெண்களிடம் அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கு 1930களிலேயே அவர் மாநாடுகளையும், ஊர்வலங்களையும் நடத்தினார். அப்படி, சென்னையில் கூடிய ஒரு பெண்கள் மாநாடுதான் 1938-ல் அவருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தைத் தந்தது. பெண்களைப் பொது வாழ்க்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பெரியார், தனது மனைவியையும், சகோதரியையும் போராட்டத்தில் இறங்க வைத்தார். பெண்களை பொது வாழ்க்கைக்குக் கொண்டு வராத அரசியல் தலைவர்களை அவர் கண்டித்தார்.

மகனுக்கும் - மகளுக்கும் வேறுபாடு காட்டக் கூடாது என்று தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். பெண்கள் விளையாட்டுகளில் பங்கற்கவும், மல்யுத்தம் கற்றுக் கொள்ளவும் முன் வரவேண்டும் என்றும், அதற்கு அவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் கூறிய பெரியார், பெண்கள் ஆண்களைப் போலவே உடை அணிய வேண்டும் என்றார். அவரைப் பொறுத்தவரை, பெண் கல்வி என்பது பள்ளிப் படிப்பை சடங்குத்தனமாக முடித்து விட்டு, அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு வீட்டில் முடங்கி விடுவது அல்ல. பெண்களை அதிகார மயமாக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், அவர்களின் சிந்தனையைத் தூண்டி விடுவதாகவும், பெண் கல்வி அமைய வேண்டும் என்றார்.

இப்போது - பெண்ணியவாதிகள், ஊடகங்கள், பெண்களைத் தவறாக சித்தரிப்பதைப் பார்த்து கொதிப்படைகிறார்கள். ஆனால் பெண்களின் உடலை வர்ணிக்கும் பழம் தமிழ் இலக்கியங்கள், அவர்களின் அறிவாற்றலைப் புகழ்வதில்லையே என்று 1946 லேயே கண்டித்தவர் பெரியார். இப்போது ‘ஆண்மையை’ எதிர்க்கும் நோக்கத்தில் பல ஆண் இளைஞர்கள் ஆண்களுக்கான அடையாளத்தைத் தவிர்க்கும் கலாச்சாரங்களைப் பின்பற்றி வருகின்றனர். இதைத்தான் பெரியாரும் சொன்னார்.

பெண்ணடிமை ஒழிய வேண்டுமானால், ‘ஆண்மை’ என்ற வார்த்தையே அழிக்கப்பட வேண்டும், ‘ஆண்மை’ என்ற சொல்லே பெண்களை இழிவுபடுத்துகிறது, என்றார். பெண்கள், நீண்ட கூந்தலை வளர்க்காமல், கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும். அதனால் நேரத்தை வீணடிக்காமல் இருக்க முடியும் என்றார்.

இப்போது சொல்லுங்கள் - அவர் காலத்தின் முன்னோடியாக நின்று கருத்தைச் சொன்னவர் அல்லவா? அவரை ‘உள்ளூர் நபர்’ என்று கூற முடியுமா? அவர், தனது கருத்தை விரிந்த தளத்தில் சிந்திக்காமல் குறுகுலான புத்தியுடையவராக இருந்தார் என்று கூற முடியுமா?