இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப் போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 1 - 32 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் தற்கால சட்ட மறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமே யாகும். மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதியவர்கள் “சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின் வாங்கி நிற்கும்?” என்று கேட்கும் கேள்வியும், “சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமுலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா” என்று கூறிவிருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும். அதிலும் காங்கிரஸ்காரர்கள்பால் அநுதாபம் காட்டுவதன் மூலம் “தேசாபிமானிகள்” என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதின் மூலம் அரசாங்கத்தாருக்கும் “நல்ல பிள்ளைகளாக” இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டிருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.

periyar with garlandஅவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டி தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் ‘திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்கா’தெனவும், ஆகவே ‘ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்தியவர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு’ எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்தமில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரியாகிய தன் னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர்களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமாதானம் பேச முன் வருவாரானால் அது நியாயமாக இருக்கும். அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னுடைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் ‘ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க மறுத்து விட்டது தவறு’ என்று சொல்லுவதற்கு அர்த்தமிருக்க முடியும்.

இது நிற்க, சட்ட மறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவதில்லை என்பது நமது நேயர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை. இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்குக் கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்டமறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் வேலை இன்னும் திறமையாகவும். தாராளமாகவும், விரைவாகவும் நடந்து முடியக்கூடும். இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்களும், வியாபாரங்களும் விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்பு நடைபெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவதில்லையென்று ஆரம்பமுதல் கூறி வந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.

ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுலுதக்குப் பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை நடத்துவதற்கு உதவி செய்வதே சிறந்த காரியமாகும். “சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும்” என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறியிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். “பூனைக்குத் தோழன் பாலுக்கும் காவல்” என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.01.1932)

Pin It