வெகுமக்களின் பீறிட்ட எழுச்சியாக நடந்து முடிந்திருக்கிறது இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்! ‘ஜல்லிக்கட்டு’க்கு அப்பால், தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகள் பற்றிய குமுறல் இந்த எழுச்சியை உந்தித் தள்ளியது என்பதே உண்மை. மோடிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வுஅலைகளேபோராட்டக்களங்களில் மையம்கொண்டிருந்தது.

“எங்கள் உரிமைகளை ஓர் அன்னிய ஆட்சி எத்தனை காலத்திற்கு மறுத்துக் கொண்டிருக்கும்? “ என்ற கேள்விதான் இந்த உணர்வுகளின் அடித்தளம். அதிகார மையங்களை பணிய வைத்திருக்கிறது இந்த போராட்ட சக்தி. உண்மைதான் ; ஜல்லிக்கட்டு ஜாதிய விளையாட்டாகத்தான் இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலேயே நாமும் அதை எதிர்த்தோம். இப்போது ஜாதியற்ற ஜல்லிக்கட்டு வேண்டுமென்ற கருத்து உருவாகி வருகிறது.

ஜாதி, மதம், பாலின பேதங்களைக் கடந்து இளைஞர்கள் திரண்டனர். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் குளிர்காய துடித்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டினர். பெண்களின் பங்கேற்போ ஏராளம். இரவு பகல் பாராமல் தோழமையோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் இதுவரை பார்க்காத அதிசயம் இது. வெகுமக்கள் எழுச்சியில் மக்களிடம் உள்ள பலவீனங்களின் வெளிப்பாடுகள் இருக்கவே செய்யும்.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகம் ஓர் பேரெழுச்சியைப் பார்த்தது. ‘தமிழ்த் தாயை’ தெய்வமாக்கும் தமிழ் அறிஞர்களும் பழமைவாதிகளும் போராட்டத்தில் பங்கேற்றும் கூட பெரியார் வழங்கிய தலைமைத்துவம் ‘இந்திய’ எதிர்ப்பையும் ’பார்ப்பனீய’ எதிர்ப்பையும் கூர் தீட்டியது. இந்த வரலாற்று வெளிச்சத்தில்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அணுக வேண்டும் .

எத்தனையோ பாடங்களை இந்த போராட்டம் விட்டுச் சென்றிருக்கிறது. தமிழகத்தில் வலிமை பெற்ற தலைமைக்குச் சொந்தம் கொண்டாடிய ‘ஆளுமைகள்’‘பிரபலங்கள்’ பின்னுக்குத் தள்ளப்பட்டன. அரசியல் தலைமைகள் அம்பலப்பட்டு நிற்கின்றன. ‘இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்போர், கேளிக்கைவாதிகள்’ என்ற மாயையையும் இந்த போராட்டம் தகர்த்திருக்கிறது. பொது ஒழுக்கத்தைப் பேணும் பண்பும் நாகரீகமும் பொதுவெளியில் தமிழின இளைஞர்களுக்கு உண்டு என்பதும் இந்த போராட்டம் உணர்த்தும் நம்பிக்கையூட்டும் செய்தி.

சுப்ரமணிய சாமிக்கும், ராதாராஜனுக்கும், குருமூர்த்திக்கும், மோடிக்கும் எதிரான மாணவர்களின் முழக்கங்கள் எதிரிகள் யார் என்பதை இவர்கள் புரிந்தே இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பதட்டமடைந்த பார்ப்பனீயமும் இந்துத்துவமும் மாநில அரசை மிரட்டி காவல்துறையை இளைஞர்கள் மீது ஏவி விடச் செய்தது. ‘தேசவிரோதிகள்’ ஊடுருவினர் என்ற கூக்குரல் கேட்கிறது . இந்த பதட்டமும் ஓலமும் வெற்றிப் பாதையில் தமிழினம் முன்னேறுகிறது என்பதன் அடையாளம். இந்த பின்னணிகளை ஒதுக்கிவிட்டு ஜல்லிக்கட்டு போராட்டமாக மட்டுமே பார்க்க முடியாது என்பதற்காகவே இந்த விளக்கம். இந்த உணர்வுகள் அப்படியே தொடருமா ? போராட்டக் களத்தில் காணாமல் போன ஜாதி, சமூகத்திலும் மறைந்துவிடுமா? என்ற கேள்விகள் இருக்கவே செய்கின்றன. அந்த திசை நோக்கி இந்த எழுச்சியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு சமூக மாற்றத்தை விரும்பும் நம் அனைவருக்குமே இருக்கிறது. 

Pin It