‘ஆனந்தவிகடன்’ ஏட்டுக்கு வளர்மதி அளித்த பேட்டியி லிருந்து சில பகுதிகள்:

2014-ம் ஆண்டு... சிதம்பரம் அண்ணமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான போராட்டம். மாணவர்களை அடித்து விரட்ட போலீஸைக் கல்லூரிக்குள் இறக்குகிறது நிர்வாகம். தடியடி நடத்துவதற்குக் கையிலிருந்த பிரம்பை இறுக்கிப் பிடித்தபடி, மாணவர்களை நோக்கி ஆயிரம் பூட்ஸ் கால்கள் நடந்துவர அவர்களுக்கு எதிரே நின்று ஒரே ஒரு மாணவி உரத்த குரலில் பேசுகிறார்; அவர்தான் வளர்மதி.

“அது எப்போ இருந்து ஆரம்பிச்சதுன்னு கேட்டீங்கன்னா, ஜே.என்.யு மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணம் அடைஞ்ச சமயத்துலதான். ரோஹித் வெமூலாவோட மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடினவர் முத்துக்கிருஷ்ணன். மாணவர்கள் சமூக நீதியை நோக்கி எழுச்சி அடையணும்னு தொடர்ந்து பேசிட்டு வந்தவர். அவர் தற்கொலை செஞ்சிருக்கவே மாட்டார்னு நாங்க நம்புறோம். அவர் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது ஊர்த்தலைவர்கள், போலீஸ்காரர்கள் எல்லாம் சேர்ந்து முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு நிறைய அழுத்தம் கொடுத்து அவர் உடலை எரிக்கிற மனநிலைக்குக் கொண்டு வந்தாங்க. ஆனா, நாங்க விடலை. இந்த மரணத்துல மர்மம் இருக்கு; அவரை எரிக்கக் கூடாது, புதைக்கணும்னு சொன்னதோட இதுக்கு நீதி விசாரணை வேணும்னு போராடினோம். மறுநாள் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தப்போ அவர்மீது செருப்பு வீசிய சாலமனை அடிச்சு இழுத்துட்டுப் போனதோடு அவரை எந்த ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறாங்கனுகூட சொல்லலை. சட்டப்படி அவருக்குத் தண்டனை கொடுங்க. ஆனால், அவரைப்பற்றிய தகவல்களை மறைக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லைன்னு நான் அதிகமா போராடினேன். அப்போதான் பி.ஜே.பி. அதிகார மையங்களுக்கு என்னைப் பற்றிய தகவல்கள் போய் சேர்ந்துச்சுன்னு நினைக்கிறேன்” என நடந்த சம்பவங்களைக் கோர்வையாக அடுக்குகிறார் வளர்மதி.  

``நான் இரண்டாவதாகக் கைது செய்யப்பட்டது நெடுவாசல் வேணாம்னு மக்கள்கிட்ட விழிப்பு உணர்வு செஞ்சப்போதான். ஜல்லிக்கட்டுன்னா எல்லோருக்கும் தெரியும். ஹைட்ரோ கார்பன் யாருக்கும் தெரியாது. அதனால அதன் ஆபத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு போகணும்னு புதுக்கோட்டை, சேலம், கோயம்புத்தூர் முழுக்க, பஸ் ஸ்டாண்ட், உழவர்கள் மத்தியில், இரயிலுக்குள்ளே பறை அடிச்சுனு தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம்.

`நக்சலைட்டுகள்தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பாங்க. நெடுவாசல்ல போராடுறவங்கள்லாம் நக்சலைட்டுகள்தான்’னு ஹெச்.ராஜா சொன்னாரு. அப்படிச் சொன்ன ஒருத்தர் ஏன் நெடுவாசல் வராருன்னு ஒரு கேள்வி எங்களுக்கு வந்தது. அங்கே போனோம். எங்களை உள்ளேவிடாம தடுத்தாங்க. ரொம்பக் குள்ளமா இருக்கிறது நல்லதுன்னு எனக்கு அப்போதான் தோணுச்சு. தடுத்தவங்களை மீறி அவங்களுக்குத் தெரியாம சந்து பொந்துல நுழைஞ்சி ஹெச்.ராஜா பேசிட்டு இருந்த இடத்துக்கு ரொம்பப் பக்கத்துல போயி அவர் பேசினதைக் கேட்டுட்டு இருந்த மக்களைப் பார்த்துக் கத்திச் சொன்னேன்.`நெடுவாசல் திட்டத்தை எதிர்த்துப் போராடுறவங்களை நக்சலைட்னு சொன்ன இவரை இங்கே பேச விடுறீங்க. மக்களுக்காக வந்த மாணவர்கள் எங்களை உள்ளே விட மாட்றாங்க. உங்களுக்காக வேற வேற ஊர்கள்ல இருந்தெல்லாம் வந்து இருக்கோம். நீங்க எல்லாம் எங்ககூட துணைக்கு இருக்கணும்’னு நான் சொல்லி `ஹெச்.ராஜா வெளியேறு... ஹெச்.ராஜா வெளியேறு’ன்னு  கோஷமிட்டதும் ஏற்கெனவே கொந்தளிப்புல இருந்த மக்கள் அப்படியே எழுந்து நான் இருக்கிற பக்கம்வந்து அவரை வெளியேறச் சொல்லிட்டாங்க. ஹெச்.ராஜா அவமானத்துடன் வெளியேறினார். அப்போ இருந்து சரியா ஒரு மாசம் அடுத்தகட்ட நெடுவாசல் போராட்டத்துக்காகப் பிரசாரம் செய்தபடியே ரயில்ல நாங்க போயிட்டு இருக்கிறப்போ குளித்தலையில் என்னையும் என் தோழி சுவாதியையும் கைது பண்ணினாங்க. அப்போதான் திருச்சி மத்தியச் சிறையில் 36 நாள்கள் சிறை வைக்கப்பட்டு எங்க வாழ்நாளோட உச்சகட்டக் கொடுமைகளையும், அவமானங்களையும் அங்கே சந்திச்சேன்” என்று வளர்மதி தனக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போக, அவர் அம்மா கண்களைத் துடைத்தபடியே அங்கிருந்து எழுந்து போனார்.

.....``சிறையிலிருந்து வெளியே வர்றப்போ கவுரி லங்கேஷ் டெத் நியூஸ் படிச்சுட்டுதான் வெளியே வந்தேன். பக்குன்னு இருந்துச்சு. ஆனா, பயமா இல்லை. இது எனக்கும் நடக்கும்னு தோணுது.  இதுக்கெல்லாம் பயந்து வீட்டுக்குள்ள உட்கார்ந்து இருக்க முடியாது. இப்போதான் ரொம்ப   ஸ்ட்ராங்காகி இருக்கேன். நல்ல நல்ல தலைவர்களுக்கு எல்லாம் வயசாகிட்டு வர்றதால பாசிஸ சக்திகளுக்கு குளிர்விட்டுப் போகுது. என்னைப்போல இருபத்தி மூணு, இருபத்தி நாலு வயசுள்ள பசங்க இவங்களை எதிர்க்க ஆரம்பிச்சா என்ன பண்ணுவாங்க?

Pin It