கீற்றில் தேட...

“இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டைக் கருதப் போகிறார்களா அல்லது நாட்டைவிட மத நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா? இது எனக்குத் தெரியாது. கட்சிகள் நாட்டைவிடத் தங்கள் மதக்கோட்பாடு களுக்கே முக்கியத்துவம் கொடுத்தால், நமது சுதந்திரத்துக்கு இரண்டாவது தடவையாக ஆபத்து என்பதுடன் என்றென்றைக்குமாக நமது சுதந்திரத்தை இழப்பது என்பது நிச்சயம்.” - அம்பேத்கர்

1949 நவம்பர் 25 அன்று அரசியல் சட்ட மசோதாவை முன்மொழிந்து புரட்சியாளர் அம்பேத்கர் நடத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையிலிருந்து சில பகுதிகள்:

இந்த வரைவுக்குழு சபையின் உறுப்பினர்களும், வரைவுக் குழுவில் என்னுடன் பணியாற்றிய நண்பர்களும் என்மீது பொழிந்த புகழாரங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளச் சொற்கள் கிடைக்காமல் திக்குமுக்காடுகிறேன்.

Ambedkar 305ஷெட்யூல்டு சாதியினர்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தவிர வேறு எந்தவித நோக்கங்களுமின்றித் தான் நான் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தேன். அதிக பொறுப்பான பணிகளை ஏற்க நான் அழைக்கப்படுவேன் என்று நான் சிறிதளவுகூடச் சிந்திக்கவில்லை. என்னை வரைவுக் குழுக்கு சட்டமன்றம் தேர்ந்தெடுத்த போது நான் பெரிதும், ஆச்சரியம் அடைந்தேன். வரைவுக் குழு என்னை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்த போது நான் அதைவிட ஆச்சரியம் அடைந்தேன். எனது நண்பர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற என்னைவிட மிகவும் தகுதிபெற்ற சிறந்த பெரிய மனிதர்கள் வரைவுக்குழுவில் இருந்தனர் என்மீது இவ்வளவு நம்பிக்கை கொண்டு பொறுப்பை என்னிடம் ஓப்படைத்து அவர்களுடைய கருவியாக என்னைப் பயன்படுத்தி நாட்டிற்கு சேவை செய்ய எனக்கு அளித்துள்ள வாய்ப்புக்கு அரசியல் நிர்ணய சபைக்கும், வரைவுக் குழுவிற்கும் நன்றியுடையவனாகயிருப்பேன். (கைதட்டல்)

எல்லா உறுப்பினர்களும் கட்சிக் கட்டுப் பாட்டிற்கு அடங்கி நடந்திருந்தால் அரசியல் நிர்ணய சபையின் நடவடிக்கைகள் சுவையற்றதாக இருந்திருக்கும். கட்சிக்கட்டுப்பாடு அதன் கண்டிப் பான தன்மையால் அரசியல் நிர்ணய சபையை ஆமாம் சாமிகளின் கூட்டமாக மாறியிருக்கும். நல்ல காலமாக சில புரட்சியாளர்கள் இருந்தனர். திரு.காமத், டாக்டர் பி.எஸ். தேஷ்முக், திரு. சித்வா, பேராசிரியர் சாக்னோ, பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியவர்களைக் குறிப்பிடவேண்டும். அவர்கள் எழுப்பிய பிரச்சனைகளெல்லாம் பெரும்பாலும் சித்தாந்தம் பற்றியவையே. அவர்களுடைய ஆலோசனைகளை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதிருந்தது அவர்களுடைய ஆலோசனைகளின் மதிப்பைக் குறைத்துவிடவில்லை; அரசியல் அமைப்பு அவை நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் அளிக்க அவர்கள் செய்த சேவையைக் குறைத்து மதிப்பிட முடியாது. நான் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். அவர்கள் இல்லையென்றால், அரசியல் சாசனத்தை இயந்திர கதியில் நிறைவேற்ற வேண்டியிருக்கும்; அதைவிட இது முக்கிய மானது.

......... ........ ........

எனது நண்பர்கள் திரு. அல்லாடி கிருஷ்ண சாமி அய்யரும், திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் அரசியல் சாசனத்திற்கு எவ்வளவு ஆதரவு அளிக்க முடியுமோ அவ்வளவு ஆதரவு அளித்துள்ளனர். எனவே அரசியல் சாசனத்தின் சிறப்புத் தகுதி களைப் பற்றி இப்பொழுது நான் பேசப் போவதில்லை. ஏனெனில் ஓர்அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துவர்களின் தன்மையைப் பொருத்து, அதுமோசமானதாக மாறலாம். ஓர் அரசியல் சாசனமாகச் செயல்படுத்துபவர்கள் நல்லவர் களாக இருப்பின் அது ஒரு சிறந்த சாசனமாகச் செயல்படும். ஓர் அரசியல் சாசனத்தின் செயல்பாடு அதன் தன்மையை மட்டும் முற்றிலும் சார்ந்ததன்று. அரசின் உறுப்புகளான சட்ட மன்றம், ஆட்சித்துறை, நீதித் துறை ஆகிய வைகளை உருவாக்க மட்டும் அரசியல் சாசனம் வழிவகை செய்யும்.

ஆனால் அரசின் இந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஆதாரமான காரணிகள் மக்களும், அவர்கள் தங்கள் நோக்கங்களை அரசியல் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கருவிகளாக உபயோகிக்கும் அரசியல் கட்சிகளுமேயாகும். இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் வெற்றியுள்ளது. இந்திய மக்களும் அவர்களுடைய அரசியல் கட்சிகளும் எம்முறையில் நடந்து கொள்வார்கள் என்பதை யார் கூறமுடியும்? தங்கள் நோக்கங்களை அடைய அவர்கள் அரசியல் சாசன ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பார்களா அல்லது புரட்சிகர முறைகளைப் பின்பற்றப் போகிறார்களா? என்றால், அரசியல் சாசனம் எவ்வளவு சிறப்புள்ளதாக இருந்தாலும் அது தோற்று விடும் என்றுகூற எந்ததீர்க்கதரிசியும் தேவையில்லை. எனவே, மக்களும் அவர்களது கட்சிகளும் என்ன பாத்திரம் வகிக்கப் போகிறார்கள் என்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், அரசியல் சாசனத்தைக் குறித்துத் தீர்ப்பளிப்பது பயனற்றது.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோஷலிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு தரப்பினரிடமிருந்து பெருமளவில் அரசியல்சாசனத்துக்கு எதிரான கண்டனக் குரலைக் கேட்கமுடிகிறது. அரசியல் சாசனத்துக்கு எதிராக அவர்கள் ஏன் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள்? ஏனெனில் அது உண்மையிலேயே அரசியல் சாசனமா? இல்லை, என்று நிச்சயமாகக் கூறுகிறேன். தொழிலாளர் களின் சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசனம் இருக்க வேண்டுமென்று கம்யூனிஸ்ட்கட்சி விரும்புகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப் படையில் இந்த அரசியல் சாசனம் அமைத்து இருப்பதால் அவர்கள் கண்டனம் செய்கிறார்கள்.

சோஷலிஸ்டுகள் இரண்டு விஷயங்களை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் முதல் விஷயம் இதுதான். நஷ்டஈடு எதுவும் அளிக்காமல் எல்லாத் தனியார் சொத்துக்களையும் தேசிய மயமாக்க, அரசியல் சாசனம் அவர்களுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று விரும்பு கிறார்கள். இரண்டாவதாக, சோஷலிஸ்டுகள் விரும்புவது, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் பூரணமானதாக வரம்பற்றதாக இருக்க வேண்டுமென்கிறார்கள். அப்பொழுதுதான் அவர்கள் கட்சி ஆட்சிக்கு வர முடியாவிட்டால், விமர்சிப்பதற்கு அவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் இருப்பதுடன் அரசைக் கவிழ்ப்பதற்கும்கூட உரிமை இருக்கும்.

இந்த முக்கியமான அடிப்படைகளில்தான் அரசியல் சாசனம் குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகக் கோட்பாடு மட்டுமே அரசியல் ஜனநாயக முறையில் சிறந்தது என்று நான் கூறவில்லை. நஷ்டஈடு அளிக்காமல் தனியார் சொத்துக்களை எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற கோட்பாடு புனிதமானதென்றோ, அதிலிருந்து விலகிச் செல்வதுகூடாது என்றோ நான் கூறவில்லை. அடிப்படை உரிமைகள் பூரணமாக இருக்கக் கூடாதென்றோ நான் கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் இந்த அரசியல் சாசனத்தின் கோட்பாடுகள் தற்கால தலைமுறையினரின் கருத்துகளே. ஒருவேளை நான் மிகைப்படக் கூறுவதாகக் கருதினால் அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களின் கருத்துகள் அவை என்று கூறுகிறேன். அரசியல் சாசனத்தில் அவைகள் சேர்க்கப்பட்டதற்கு வரைவுக் குழுவின் மீது ஏன் குறைகூறுகிறீர்கள்? அரசியல் நிர்ணய உறுப்பினர்கள்கூட ஏன் குறைகூறப்பட வேண்டும் என்று கேட்கிறேன்?

அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கு வதில் பெரும் பங்குவகித்த அமெரிக்காவின் புகழ்பெற்ற அரசியல் நிபுணரான ஜெபர்சன் சில அழுத்தமான கருத்துகளை வெளிப்படுத்தி யுள்ளார். அரசியல் சாசனத்தை உருவாக்கு பவர்கள் எவரும் இதைத் தவிர்க்க முடியாது. ஓர் இடத்தில் அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.

“ஒவ்வொரு தலைமுறையும், பெரும் பான்மையின் விருப்பப்படி தாங்கள் ஒருங் கிணைத்துக் கொண்டு வாழும் உரிமையுடைய ஒரு தனிப்பட்ட தேசிய இனமாகக் கருத வேண்டும். மற்ற நாட்டுக் குடிமக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொள்ளும் உரிமை யில்லாதது போலவே அடுத்த தலைமுறையையும் பிணைத்துக் கொள்ள முடியாது.”

மற்றொரு இடத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார் :

“ஒரு தேசத்தின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் தங்களுடைய நலனுக்காகக்கூடத் தொடக் கூடியதல்ல, மாற்றக் கூடியதல்ல என்ற கருத்து பொது மக்களுக்காக, அவைகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு, தாராளமாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மன்னர் தவறாகப் பயன் படுத்தாமல் இருக்க ஒரு சட்டவழி முறையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேசத்துக்கு எதிரான முட்டாள்தனமான கருத்தாகும். இது நமது சட்ட வல்லுனர்களும் மதகுருமார்களும் பொதுவாக இந்தக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார்கள். ஒரு வேளை முந்தைய சந்ததியினர்கள் இந்த உலகை அதிக சுதந்திரத்துடன் கையாண்டிருக்கலாம். நம்மால் மாற்ற முடியாத சட்டங்களை நம்மீது திணிக்க உரிமையுள்ளவர்களாக எண்ணியிருக்கலாம். அதேபோன்று நாமும் சட்டங்களை உருவாக்க எதிர்காலத் தலைமுறையினர்களின் மீது திணிக்கலாம். அவர்களுக்கு அதை மாற்றுவதற்கு எந்த உரிமையும் இருக்காது. மொத்தத்தில் உலகம் உயிருடன் வாழும் மனிதர்களுக்கல்ல மடிந்தவர்களுக்கே சொந்தம்.”

ஜெபர்சன் கூறியது முழுக்க உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜெபர்சன் எடுத்துரைத்துள்ள இந்தக் கோட்பாட்டிலிருந்து அரசியல் நிர்ணயசபை விலகிச் சென்றிருந்தால் அதைக் குறைகூறுவது, ஏன் கண்டனம் செய்வதுகூட நியாயமானது தான். ஆனால் அது அப்படி நடந்து கொண்டுள்ளதா என்ற கேட்கிறேன்? அவ்வாறு நடந்து கொள்ளாமல் முற்றிலும் மாறாக அது செயல்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தைத் திருத்துவது சம்பந்தமான வழிமுறைகளை ஆழ்ந்து நோக்க வேண்டும். இந்த அரசியல் சாசனம் தவறற்றது என்றோ, இறுதியானது என்றோ இந்தச் சபை முத்திரை குத்தவில்லை. கனடா நாட்டிலுள்ளது போல மக்களுக்கு அரசியல் சாசனத்தைத் திருத்தும் உரிமை வழங்கப்படாமலிருக்கவில்லை. மாறாக அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கு மிகவும் எளிதாக நடைமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

நாடு இன்றுள்ள நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்த நாம் உருவாக்கியுள்ள எளிதான நடைமுறையை இந்த உலகிலுள்ள வேறு எந்த அரசியல் நிர்ணய சபையாவது கொண்டு வந்துள்ளது என்று நிரூபிக்க முடியுமா? அரசியல் சாசனத்தை விமர்சிக்கும் எந்த நபருக்கும் நான் சவால் விடுகிறேன். அரசியல் சாசனத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளவர்களுக்குத் தேவைப் படுவதெல்லாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைதான். அவர்களுக்கு ஆதரவாக வயதுவந்தோர் ஓட்டுரிமை மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற முடிய வில்லை என்றால் அரசியல் சாசனத்தைப் பற்றிய அவர்களது அதிருப்திகளைப் பொதுமக்கள் பகிர்ந்துக் கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அரசியல் சட்ட முக்கியத்துவம் பெற்ற ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் தான் குறிப்பிடு கிறேன். மத்திய அரசில் அதிகாரம் குவிக்கப்பட்டு மாநிலங்கள் நகரசபைகள் அளவுக்கு அதிகாரம் இழந்துள்ளன என்ற கடுமையான குற்றச் சாட்டுள்ளது. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டு என்பது தெளிவாகத் தெரிவதுடன் அரசியல் சாசனம் எதை நடைமுறைப்படுத்த உள்ளது என்பதைப் பற்றிய தவறான அடிப்படை யிலிருந்து இது எழுந்துள்ளது எனலாம். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்தவரையில் அது அமைத்துள்ள அடிப்படைக் கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வது அவசியம்.

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சட்டமன்ற மற்றும் நிர்வாகப் பிரிவினை மத்திய அரசு இயற்றும் சட்டத்தினால் அல்லாமல் அரசியல் சாசனத்தின் மூலமே நிர்ணயிக்கப் படுகிறது என்பதுதான் கூட்டாட்சி முறையின் அடிப்படையான கோட்பாடு. அதைத்தான் அரசியல் சாசனம் செயல்படுத்துகிறது. நமது அரசியல் சாசனத்தின்படி மாநிலங்கள் தங்கள் சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு மத்திய அரசைச் சார்ந்து இருக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் சமநிலையில் உள்ளன. இப்படிப்பட்ட ஓர் அரசியல் சாசனத்தை மத்திய அரசுக்குச் சாதகமானது என்று கூறப்படுவதைப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.

வேறு எந்தக் கூட்டாட்சி அரசியல் சாசனத்தில் உள்ளதைக் காட்டிலும் அதிக அளவிலான களத்தை அதனுடைய சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரத்தை நடைமுறைப் படுத்த மத்திய அரசுக்கு இந்த அரசியல் சாசனம் ஒதுக்கியிருக்கலாம். எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசுக்கு அளிக்கப் பட்டிருக்கலாம். இந்த அம்சங்கள் கூட்டாட்சியின் சாரமாக அமைவ தில்லை. மத்திய அரசுக்கும் அதன் மாநிலங் களுக்கும் இடையே சட்டமன்ற மற்றும் நிருவாக அதிகாரத்தை அரசியல் சாசனம் பகுத்தளிப்பது தான் கூட்டாட்சி முறையின் முக்கிய அம்சம் எனலாம்.

இந்தக் கோட்பாட்டைத்தான் நமது அரசியல் சாசனம் கொண்டுள்ளது. அதைப்பற்றி எந்தவித அய்யப்பாடும் இருக்க முடியாது. எனவே மாநிலங்கள் மத்திய அரசின் கீழ் வைக்கப்பட் டுள்ளன என்று கூறுவது தவறாகும். இந்த அதிகாரப் பிரிவின் எல்லையை மத்திய அரசு தன் விருப்பப்படி மாற்ற முடியாது. நீதித்துறைகூட ஒன்றும் செய்ய முடியாது. இது மிகவும் தெளிவாகக்கூறப்பட்டுள்ளது.

“நீதிமன்றங்கள் திருத்தம் செய்யலாம் ஆனால் எதை ஒன்றையும் அதற்குப் பதிலாகப் புகுத்த முடியாது. முன்பு கூறிய விளக்கங்களுக்குப் புதிய வாதங்களை, புதிய கருத்துக்களை அளிக்கலாம். ஒருசில விசேஷ சந்தர்ப்பங்களில் இந்த எல்லைக்கோட்டைத் தாண்டலாம். ஆனால் சில வரையறைகளை அவை தாண்ட முடியாது. குறிப்பிட்டு ஒதுக்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை அவை மாற்றி ஒதுக்க முடியாது. ஏற்கெனவே உள்ள அதிகாரத்தின் கூட்டுக் கோப்பை அவை விரிவுபடுத்த முடியும். வெளிப் படையாக ஒரு அமைப்புக்குக் கொடுக்கப் பட்டுள்ள அதிகாரத்தை வேறு ஒரு அதிகார அமைப்புக்குக் கொடுக்க முடியாது.”

ஆகவே கூட்டாட்சி முறைக்கு மாறாக மத்திய அரசியல் அதிகாரக் குவிப்பு என்ற முதல் குற்றச் சாட்டு தோற்றுவிடுகிறது.

மாநில அரசுகளைப் புறக்கணித்து செயல்பட மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது என்பது இரண்டாவது குற்றச்சாட்டு இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் இந்த மாதிரி அதிகப்படியான அதிகாரங்களை அரசியல் சாசனம் அளிப்பதற்கு அதைக் கண்டனம் செய்வதற்கு முன் சில நோக்கங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அதிகப்படியான அதிகாரம் என்பது அரசியல் சாசனத்தின் பொதுவான அம்சமாக இல்லை. அது உபயோகப்படுவதும், செயல் படுத்தப்படுவதும், நெருக்கடி கால நிலைகளில் மட்டுமே. இரண்டாவதாகச் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நெருக்கடிநிலை தோன்றும் போது மத்திய அரசுக்கு அதிகப் படியான அதிகாரம் கொடுப்பதைத் தவிர்க்க முடியுமா? ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மத்தியஅரசுக்கு இப்படிப்பட்ட அதிகப்படியான அதிகாரம் கொடுப்பதின் நியாயத்தை மறுப்பவர்கள், பிரச்சினையின் அடிப்படையில் உள்ள விஷயத்தைத் தெளிவாகக் காணவில்லை என்று தெரிகிறது. வட்டமேஜை என்ற இதழின் 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வெளியீட்டில் இந்தப் பிரச்சினை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பின்வரும் பகுதியைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றுஆசிரியர் கூறகிறார் .

“அரசியல் அமைப்பு முறைகள் என்பவை உரிமைகளும், கடமைகளும் அடங்கிய தொகுதியாக உள்ளன. இறுதியில் யாருக்கு அல்லது எந்த அதிகார அமைப்புக்கு ஒரு குடிமகன் தன் விசுவாசத்தைச் செலுத்துகிறான் என்பதில் இது அடங்கியிருக்கிறது. சாதாரண நடைமுறைகளில் இந்தக்கேள்வி எழுவதில்லை. ஏனெனில் சட்டம் அதைக் கவனித்துக் கொள் கிறது. இந்த மாதிரி பல்வேறு நடவடிக்கைகளில் ஒருகுறிப்பிட்ட செயல்பாடுகளில் ஒர் அதிகார அமைப்பிற்கும், மற்ற நடவடிக்கைகளில் வேறு ஒரு அதிகார அமைப்பிற்கும் பணிந்து குடிமகன் தன் அலுவல்களைக் கவனித்து வருகிறான். ஆனால் ஒரு நெருக்கடி உருவாகும்போது விசுவாசத்தை கோரும் உரிமை யாருக்கு என்பதில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. இறுதியான விசுவாசத்தைப் பிரிப்பது சாத்தியமில்லை என்பது அப்போது தெளி வாகிறது. இறுதியாக சட்ட விளக்கத்தின் மூலம் விசுவாசப் பிரச்சினையை தீர்மானிக்க முடியாது. எல்லா யதார்த்த நிலைமை களுக்கும் ஒத்து சட்டம் இருக்க வேண்டும். எல்லா சம்பிரதாய முறைகளையும் களைத்துவிட்டுப் பார்த்தால் கேள்வி இதுதான், குடிமகனின் எஞ்சிய விசுவாசம் எந்த அதிகார அமைப்பிற்கு உள்ளது? அது மத்திய அரசுக்காக அல்லது உறுப்பினராக உள்ள மாநிலத்திற்கா?”

பிரச்சினையின் காரணமான இந்தக் கேள்வியின் பதிலைப் பொறுத்துத்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளது. பெரும்பான்மை யான மக்களின் கருத்துப்படி நெருக்கடி காலத்தில் குடிமகனின் எஞ்சிய விசுவாசம் மத்திய அரசின் மீதுதான், உறுப்பினராகவுள்ள மாநிலங்களின் மீதல்ல என்பதில் ஐயப்பாடு இல்லை. நாடு முமுவதற்குமான பொதுநலனுக்காக பொதுவான முடிவுக்கு மத்திய அரசே செயலாற்ற முடியும். ஒரு நெருக்கடி காலத்தில் மத்திய அரசுக்கு அதிகப் படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டதற்கான நியாயம் இதில்தான் இருக்கிறது. இந்த நெருக்கடி கால அதிகாரங்களினால் உறுப்பு மாநிலங்களுக்கு என்ன கடமைகள் தான் சுமத்தப்பட்டுள்ளன? இதைத் தவிர வேறு ஓன்றுமில்லை ஒரு நெருக்கடி நிலையின் போது தங்களுடைய பிராந்திய நலன் களுடன் மொத்தமாக தேசத்தின் நலன்களையும் கருத்துகளையும் கணக்கிலெத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாதவர்கள் மட்டும் அதை எதிர்த்துக் குறை கூற முடியும்.

இத்துடன் நான் என் உரையை முடித்திருப்பேன், நமது நாட்டின் எதிர்காலம் என் உள்ளம் முழுவதையும் ஆட்கொண்டுள்ளது. அதுகுறித்து என்னுடைய கருத்துகள் சிலவற்றை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 1950 ஜனவரி 26 இல் இந்திய ஓரு சுதந்திர நாடாக மலர்ந்து விடும். (கரவொலி) பிறகு அதனுடைய சுதந்திரம் என்னவாகும்? தன் சுதந்திரத்தை அது காப்பாற்றிக் கொள்ளுமா அல்லது மீண்டும் அதை இழந்துவிடுமா? இந்தச் சிந்தனையே முதலில் என் மனதில் தோன்றுகிறது.

இந்தியா ஒரு பொழுதும் சுதந்திர நாடாக இருக்கவில்லை என்று கூறமுடியாது? ஒரு காலத்தில் தான் பெற்றிருந்த சுதந்திரத்தை அது இழந்தது. இரண்டாவது தடவையாக இந்தியா தன் சுதந்திரத்தை இழந்துவிடுமா? இந்தச் சிந்தனைதான் எதிர்காலத்தைப்பற்றி எனக்கு மிகுந்த அச்சத்தை அளிக்கிறது.

இதற்கு முன்பு இந்தியா தன் சுதந்திரத்தை இழந்துவிட்டது என்ற உண்மை மட்டு மல்ல என் மனதில் சஞ்சலத்தை தோற்றுவிக்கிறது. நமது மக்கள் சிலரின் துரோகமும் வஞ்சகத் தன்மையுமே அதற்குக் காரணம் என்பதை எண்ணும் போதுதான் மனம் கவலை அடைகிறது.

சிந்து மாகாணத்தின் மீது முகமது பின் காசிம் படையெடுத்தபோது தாகர் மன்னனின் ராணுவப் படைத்தலைவர்களே தமது மன்னரின் பக்கம் போரிட மறுத்ததுடன் முகமது-பின்- காசிமின் முகவர்களிடமிருந்தே கையூட்டும் பெற்றுள்ளனர். முகமது கோரியை இந்தியாவின் மீது படையெடுக்க அழைத்தவர் ஜெய் சந்த் ஆவார். பிரிதிவி ராஜ் அரசனுடன் போர் செய்ய அவர் உதவி செய்ய முன்வந்ததுடன் சோலாங்கி அரசர்களின் உதவியையும் பெற்றுத் தருவதாகக் கூறினார். இந்துக்களின் விடுதலைக்காக சிவாஜி போரிட்டுக் கொண்டிருந்தபோது, மற்ற மராத்திய பிரபுக்களும், ராஜபுத்திர மன்னர்களும் முகலாய மன்னர்களின் தரப்பில் போரில் ஈடுபட்டிருந்தனர். சீக்கிய ஆட்சியாளர்களைப் பிரிட்டிஷ் அரசு அழிக்க முயன்றபோது சீக்கியர்களின் முக்கிய தளபதி கலாப்சிங் சீக்கிய அரசைக் காப்பாற்ற உதவிக்கு வராததுடன், செயலற்று இருந்து விட்டார். 1857இல் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்தியாவின் பெரும் பகுதியிலும் கிளர்ச்சி வெடித்த போது, வெறும் ஊமைப் பார்வை யாளர்களாக அதை சீக்கியர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மீண்டும் அதே நிகழ்வுகள் நடக்குமா? இந்தக் கவலைதான் என் மனதை ஆட் கொண்டுள்ளது. சாதி மற்றும் மத நம்பிக்கைகள் வடிவத்திலான பழைய விரோதிகளுடன், பல் வேறு மாறுபட்ட அரசியல் கொள்கைகளை யுடைய அரசியல் கட்சிகளும் சேர்ந்து கொள்ளப் போகின்றன என்பதை எண்ணும் போது என் கவலை மேலும் அதிகமாகிறது.

இந்த விளைவுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்கவேண்டும் நமது கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தைப் பாது காப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் (ஆரவாரம்)

1950 – ஆம் ஆண்டு ஜனவரி 26 இல் இந்தியா ஒரு குடியரசு நாடாக ஆகிவிடும். அதாவது அந்நாளிலிருந்து இந்திய அரசு மக்களுடைய, மக்களால் ஆன, மக்களுக்கான அரசாக இருக்கும், திரும்பவும் முன்பு தோன்றிய அதே எண்ணம் என் மனதை வருத்துகிறது. அதனுடைய ஜனநாயக அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு என்ன நேரப் போகிறது? அதைக்காப்பாற்றிக் கொள்ளுமா அல்லது மீண்டும் இழந்துவிடுமா? இதுதான் என் மனதில் முன்னதைப் போன்று இரண்டாவதாக என்னை கவலையுறுத்தும் சிந்தனை.

ஜனநாயகம் - புத்தர் காலத்தில் அறிமுகமானது

ஜனநாயகம் என்பது இந்தியா அறியாத ஒரு கோட்பாடல்ல ஒரு காலத்தில் இந்தியாவில் பல ஜனநாயகக் குடியரசுகள் இருந்தன. மன்னர் ஆட்சிகள் இருந்த இடங்களில்கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவோ அல்லது சில வரையறைக்கு உட்பட்டவர்களாகவோ இருந்தனர். அவர்கள் எல்லையற்ற அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. நாடாளுமன்றத்தையோ அல்லது நாடாளுமன்ற நடவடிக்கைகளையோ இந்தியா அறிந்திருக்கவில்லை என்று கூற முடியாது.

பௌத்தர்களின் பிட்சு சங்கங்களைப் பற்றிப் படிக்கும்போது நாடாளுமன்றங்கள் இருந்ததை அறிகிறோம். சங்கங்கள் நாடாளு மன்றங்களைப் போன்றதே. நவீன கால நாடாளுமன்ற நடைமுறைகளை சங்கங்கள் அறிந்திருந்ததுடன் அதை செயல்படுத்தியும் வந்திருக்கின்றன. சங்கங்களில் உறுப்பினர்களின் அமர்வு முறை பற்றியும், தீர்மானங்கள் பிரேரேணைகள், கோரெம், கொரடா, வாக்கெண்ணிக்கை, இரகசிய வாக்களிப்பு, தீர்மானம், ஒழுங்குமுறை, கண்டனத் தீர்மானம், முன் தீர்ப்புத் தடை ஆகியவைகள் குறித்த விதிகள் இயற்றியிருந்தனர். சங்கங்களின் அமர்வுகளை நடத்த இந்த நாடாளுமன்ற விதிமுறைகள் புத்தரால் செயல்படுத்தப்பட்டாலும், அந்தக் காலத்தில் நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியல் சட்ட மன்றங்களின் விதிகளிலிருந்து இவைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஜனநாயக முறையை இந்தியா இழந்தது. இரண்டாவது தடவையாக அதை அது இழந்துவிடுமா? அது எனக்குத் தெரியாது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில் அது சாத்தியமே. ஜனநாயகம் நெடுங்காலமாக பழக்கத்தில் இல்லாமல் இருந்ததால் அது ஒரு புதுமையாகவே இருக்கிறது. ஜனநாயகம், சர்வாதி காரத்துக்குப் பணிந்துவிடக் கூடிய அபாயம் உள்ளது. புதிதாகப் பிறந்துள்ள இந்தக் குடியரசு தனது ஜனநாயகத் தோற்றத்தை வைத்துக் கொண்டு யதார்த்த செயல்பாட்டில் ஒரு சர்வாதிகார அமைப்பாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஜனநாயகம் பற்றி மக்களின் சிந்தனையில் தீவிர மாற்றம் ஏற்பட்டால் இரண்டாவதாகக் கூறப்பட்டது நடைபெறக் கூடிய வாய்ப்பின் அபாயம் அதிகமாக உள்ளது.

தோற்றத்தில் மட்டுமல்லாது உண்மை யிலேயே ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டு மென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? முதலாவது நமது சமூக மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு அரசியல் சட்ட முறையை நாம் உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதை என்னுடைய முடிவாக உள்ளது. அதன் பொருள் இரத்தக்களறியான புரட்சி முறையைக் கைவிட வேண்டும். சட்ட மறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகம் ஆகிய முறைகளைக் கைவிட வேண்டும். பொருளாதார மற்றும் சமூக இலட்சியங்களை அரசியல் சட்டமுறையில் அடைவதற்கு வாய்ப்பில்லாத போதுதான் அரசியல் சட்ட சம்பந்தமற்ற முறையை கையாளுவது நியாயமாக இருக்க முடியும். ஆனால் அரசியல் சட்டரீதியாக வாய்ப்புகள் இருக்கும்போது இம்மாதிரியான அரசியல் சட்டத்திற்கு புறம்பான வழிமுறைகள் நியாய மற்றதாகும். இம்முறைக ளெல்லாம் கட்டுப்பாடு இழந்த அரசியல் குழப்ப நிலையின் இலக்கணமே எவ்வளவு விரைவில் இதை உதறித் தள்ளுகிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது.

இரண்டாவதாக ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு ஜான் ஸ்டூவர்டு மில் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் கடைப்பிடிக்கவேண்டும். அதாவது தங்களுடைய சுதந்திரத்தை எந்த ஒரு பெரிய மனிதரின் கால்களிலும் அர்ப்பணித்து விடக் கூடாது அல்லது ஜனநாயக அமைப்புகளைக் குலைப்பதற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கும் அளவுக்கும் அவரிடம் நம்பிக்கை வைத்துவிடக்கூடாது. நாட்டுக்காக வாழ்க்கை முழுவதையும் அர்ப் பணித்த பெரிய மனிதர்களிடம் நன்றியுடன் இருப்பது எந்த விதத்திலும் தவறாகாது. ஆனால் இதற்கு ஒரு வரம்புள்ளது.

ஜரிஷ் தேசபக்தரான டேனியல் ஒ கன்னல் குறிப்பிட்டது போல் தன்னுடைய சுயமரியாதையை இழக்கும் அளவுக்கு எந்த மனிதனும் நன்றியுடையவனாக இருக்க முடியாது. தன் கற்பை இழக்கும் அளவுக்கு எந்தப் பெண்ணும் நன்றியுடையவளாக இருக்க முடியாது. தன்னுடைய சுதந்திரத்தை இழக்கும் அளவுக்கு எந்த நாடும் நன்றியுடையதாக இருக்கமுடியாது. மற்ற நாடுகளைவிட இந்தியா போன்ற நாட்டிற்குத்தான் இந்த எச்சரிக்கை அவசிய மாகிறது. இந்தியாவில் தான் இறைவழிபாடு என்றழைக்கப்படும் பக்தி அல்லது தனிநபர் வழிபாடு, இந்த உலகின் வேறு எந்த நாட்டின் அரசியலிலுள்ளதையும்விட அரசியலில் பெரும் பங்கு வகிக்கிறது. மதச் சம்பிரதாயங்களில் ஆத்மாவின் விடுதலைக்கு பக்தி ஒரு மார்க்கமாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தனிநபர் வழிபாடு சீரழிவுக்கு ஒரு நிச்சயமான பாதையாகும். அத்துடன் அது இறுதியில் சர்வாதிகாரத்துக்கே இட்டுச் செல்லும்.

மூன்றாவது விஷயம் என்னவென்றால், அரசியல் ஜனநாயகத்துடன் மனநிறைவு அடைந்து விடக் கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாகவும் மாற்றவேண்டும். சமூக ஜனநாயக அடிப்படை யின்றி அரசியல் ஜனநாயகம் நீண்டு நிலைத்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், ஆகியவைகளை வாழ்க்கையின் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறை அது. சுதந்திரம். சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளைக் கொண்ட இந்த மும்மையின் தனிப் பகுதிகளாக அவைகளைப் பிரிக்க முடியாது. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்துள்ளன. அதாவது ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகும்.

சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. அதே போன்று சமத்துவத்திலிருந்து சுதந்திரத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம் சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து சகோதரத்து வத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாத சுதந்திரம் சிலரின் மீது பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தைத் தோற்றுவிக்கும், சுதந்திரமில்லாத சமத்துவம் தனிப்பட்டவரின் முன்முயற்சியை அழித்துவிடும். சகோதரத்துவம் இல்லாத சுதந்திரம் சமத்துவமும் செயல்களின் இயற்கையான போக்காக இருக்க முடியாது. அதை செயல்படுத்த ஒரு காவல் அதிகாரி தேவைப் படுவார்.

இந்தியச் சமுதாயத்தில் இரண்டு விஷயங்கள் இல்லாதிருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்து நாம் ஆரம்பிக்க வேண்டும். அதில் ஒன்று தான் சமத்துவம், சமுதாய நிலையில் சமத்துவமற்ற தரவாரியான கோட்பாட்டைக் கொண்ட ஒரு சமுதாயமே இந்தியாவில் உள்ளது. சிலருக்கு உயர்ந்த அந்தஸ்தும் சிலருக்குத் தாழ்ந்த நிலையுமே அதன் பொருள். பொருளாதார நிலையில் சிலருக்கு அளவிடற்கரிய செல்வமும், சிலருக்கு தாங்க முடியாத வறுமையில் வாட வேண்டிய நிலையும் கொண்டது நமது சமுதாயம்.

1950 ஆம் ஆண்டு 26 ஜனவரியன்று ஒரு முரண்பாடான வாழ்க்கை முறையில் நுழையப் போகிறோம். அரசியலில் சமத்துவமும், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவத்தை எவ்வளவு காலம் மறுக்கப் போகிறோம்? நீண்டகாலம் அதைத் தொடர்ந்து மறுத்தால், நமது அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்தை விளைவிப்பதிலிருந்து தப்ப முடியாது. நாம் விரைவில் இந்த முரண்பாடுகளை நீக்கவேண்டும் இல்லையெனில் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்கள் இந்த சபை கடுமையாக உழைத்து உருவாக்கிய அரசியல் ஜனநாயக கட்டமைப்பையே உடைத்தெறியலாம்.

இரண்டாவது விஷயம் என்னவென்றால் சகோதரத்துவம் என்ற கோட்பாட்டை அங்கீ கரித்தது எனலாம். சகோதரத்துவம் என்றால் அதன் பொருள் என்ன? இந்தியர்கள் ஒரே மக்கள் என்பதால், எல்லா இந்தியர்களும் பொதுவான உடன்பிறப்புகள் என்ற உணர்வுதான். அது, இந்தக் கோட்டுபாடுதான் சமுதாய வாழ்வில் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையம் அளிக்கிறது. இதை அடைவது மிகவும் கஷ்டமே, அமெரிக்க ஐக்கிய நாடுகள் பற்றி “அமெரிக்க காமென்வெல்த்” என்ற தனது நூலில் ஜேம்ஸ் பிரைஸ் எழுதியுள்ளதை எடுத்துக் காட்டுவதன் மூலம். இது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிரைஸின் சொந்த வார்த்தைகளில் சொல்வ தென்றால், விஷயம் இதுதான்

“சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க புரோடஸ்டென்ட் திருச்சபை பொதுவழிபாட்டு முறையைப் பற்றி மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அதன் கூட்டத்தில் விவாதித்தது. பிரார்த்தனையில் மக்கள் எல்லோருக்குமான ஒரு பிரார்த்தனை வாசகத்தைச் சேர்க்க வேண்டு மென்று ஒரு கருத்து எழுந்தது. நியூ இங்கிலாந்தைச் சார்ந்த ஒரு பிரபல சமயவல்லுநர் பின்வரும் வார்தைகளை முன்மொழிந்தார். “ஓ, பிதாவே எங்கள் தேசத்தை ஆசிர்வதியுங்கள்” ஒருநாள் மாலைநேர அவசர நிலையில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஆய்வுக்காக மறுநாள் அது கொண்டுவரப்பட்டு “தேசம்” என்ற சொல்லுக்கு எதிராகப் பல ஆட்சே பனைகள் எழுப்பப்பட்டன. “தேசம்” என்ற சொல் தேசிய ஒற்றுமையை மிகவும் அழுத்தமாகத் தெரிவிக்கிறது என்று அது நிராகரிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக இந்தச் சொற்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. “ஓ பிதாவே இந்த ஐக்கிய நாடுகளை ஆசிர்வதியுங்கள்”.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றபோது அமெரிக்காவில் அதிகமான ஒருமைப்பாடு காணப்படவில்லை. அமெரிக்க மக்கள் தங்களை ஒரு தேசிய இனமாகக் கருதவில்லை. இந்திய மக்களுக்கு தங்களை ஒரு தேசிய இனம் என்று கருதுவது எவ்வளவு கடினமான விஷயம். ..... நாம் ஒரு தேசிய இனம் என்று நம்புவது பெரும் மாயையில் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும் இவர்கள் எப்படி ஒரே தேசிய இனமாக முடியும்? இந்தச் சொல்லின் சமூக மற்றும் மனோதத்துவ ரீதியான பொருளில் நாம் இன்னும் ஒரு தேசிய இனமாக உருவாகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. அப்பொழுதுதான் நாம் ஒரு தேசிய இனமாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அந்த இலக்கை அடை வதற்கு தீவிரமாகச் சிந்தனை செய்வோம். இந்த இலக்கை அடைவது மிகவும் கடிமனான விஷயமாக இருக்கும்.

அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சினை கிடையாது. இந்தியாவில் ஜாதிகள் உள்ளன. தேச விரோதமானது ஜாதிகள். முதலில் சமூக வாழ்வில் அவை பிளவுகளை ஏற்படுத்து கின்றன. ஜாதிக்கும் ஜாதிக்கும் இடையே வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசிய இனக் கொள்கைக்கு விரோதமாக இருக்கின்றன. உண்மையிலேயே நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமென்றால் இந்த தடைக்கற்களை யெல்லாம் கடந்து வரவேண்டும். ஒரு தேசிய இனம் உருவானால் தான் சகோதரத்துவம் உண்மையானதாக இருக்க முடியும். சகோதரத்துவம் இல்லாத சமத்துவமும் சுதந்திரமும் ஒரு வண்ணப் பூச்சின் ஆழத்தைவிட அதிமாக இருக்க முடியாது.

நம் முன்னுள்ள பணிகளைப் பற்றிய என் சிந்தனைகள் இவைதான். சிலருக்கு இது மனதுக்கு உகந்ததாக இருக்காது. பல காலமாகவே அரசியல் அதிகாரம் இந்நாட்டில் சிலரின் ஏகபோகமாக இருந்து வந்துள்ளது. பலரும் பொதி சுமப்பவர் களாவும், வேட்டையாடப்பட்டவர்களாகவுமே இருந்து வந்துள்ளனர். சிலரிடம் ஏகபோகமாக இருந்த அதிகாரத்தின் விளைவாக மற்றவர்கள் வாழ்க்கையில் மேம்பாடு அடையும் வாய்ப்பை இழந்தவுடன், வாழ்க்கையின் பொருளையே அது உறிஞ்சிக் குடித்துவிட்டது. தாங்கள் ஆளப்படு வதிலிருந்து அவர்கள் சோர்ந்து போய் விட்டார்கள். தாங்களே ஆளவேண்டும் என்ற ஆவல் அவர்களிடம் பொங்கி வழிந்து கொண் டிருக்கின்றது. நசுக்கப்படும் வகுப்பினரிடையே சுய உணர்வுக்கான ஆர்வம் ஒரு வர்க்கப் போருக்கோ, வகுப்பினர்களுக்கிடையேயான போராட்டத்தை வளர்த்து விடவோ, அனுமதித்து விடக்கூடாது. இந்த அவையின் பிளவுக்கு இது வழி வகுக்கும். உண்மையிலேயே அது அழிவுக்கான நாளாகும்.

ஆப்ரகாம் லிங்கன் கூறியபடி தனக்குள்ளாக பிளவுப்பட்ட ஓர் அவை (சட்டமன்றம்) நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது. அவர் களுடைய அவாக்கள் நிறைவேற வாய்ப்பளித்தால் அந்தச் சிலருக்கு நல்லது நாட்டுக்கும் நல்லது. அதனுடைய சுதந்திரத்தைக் காப்பதற்கும் சிறந்தது. அதனுடைய ஜனநாயகக் கட்டமைப்பைத் தொடர்வதற்கும் சிறந்தது. வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிறுவப்பட்டால் தான். இது சாத்தியமாகும் எனவேதான் நான் இதற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறேன்.