மத்திய கிழக்கே இஸ்லாமிய தேசம் என ஓர் அமைப்பு கொன்று குவித்துக் கொண்டிருக்க, தெற்காசியாவில் இன்னொரு அமைப்பு இந்து தேசம் என மாட்டிறைச்சி தின்றதற்கும், புத்தகம் எழுதியதற்கும் மெதுவாக கொன்று குவித்துவருகிறது.

hindutva 284அங்கே இஸ்லாமிய தேசத்தின் ஆதரவாளர்களைக் கொல்ல இராக், சிரியாவுக்குள்ளே புகுந்த ஏகாதிபத்திய ஆதரவுப் படை வழக்கம் போல இஸ்லாமிய தேச ஆதரவாளர்களோடு சேர்த்து அமைதி, வளம் என அனைத்தையும் அழித்துக் கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ அதுவே உண்மை.

ஒரு சிரிய தோழரை பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதில் அவர் கூறியது "இங்கு தீவிரவாதிகளை விட அதிக கொடுமைகளை அமெரிக்க ஆதரவுப் படை செய்துவருகிறது. அவர்களுக்கு சிரியாவில் டார்டஸ் எனும் இடத்தில் உள்ள ரஷ்ய கப்பற்படை தளத்தை அகற்ற வேண்டுமாம்.".

இதே நிலை இந்தியாவில் நடந்தால் நிலை என்ன? ஏற்கனவே இங்கு உள்ள வளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. இப்போதும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த வளத்தையும் சுருட்டிக் கொண்டிருக்கின்றன. மேலும் இங்கே உள்நாட்டு யுத்தம் ஒன்று வந்தால் இங்கு வரப்போகும் ஏகாதிபத்தியப் படை நடத்தப்போகும் அட்டுழியங்கள் என்னவாக இருக்கும்?

சிரியா, இராக்கில் நடப்பவை தான் இங்கேயும். ஆனால் இஸ்லாமிய தேச தீவிரவாதிகளைப் போல மொத்தமாக கொன்று குவிக்கவில்லை, போர் தொடுக்கவில்லை. ஏனெனில் இந்தியாவில் ஆட்சி நடத்துபவர்களே இந்து தீவிரவாதிகள் தானே. அவர்களை எதிர்த்து அவர்கள் ஏன் யுத்தம் புரிய வேண்டும்?

ஒரு விதத்தில் இஸ்லாமிய தேச தீவிரவாத அமைப்பும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பல விதத்தில் ஒன்றே.

இஸ்லாமிய தேச தீவிரவாதிகள் தீவிர இஸ்லாமிய மதப்பற்று உடையவர்கள். அதேபோல இந்து தேசம் வேண்டுபவர்கள் தீவிர இந்து மதப்பற்று உடையவர்கள். இராக், சிரியாவில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமியர்களே. அதேபோல இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்.

இஸ்லாமிய தேச தீவிரவாதிகள் தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பரப்புபவர்கள். அதேபோல அவர்களது கலாச்சாரத்தை ஏற்க மறுத்தவர்களை கொலை செய்தனர். அவர்களைப் போலவே இந்து தேசம் கோரும் அமைப்பும் தீவிர இந்து கலாச்சாரத்தைப் பரப்புபவர்கள். அதை ஏற்க மறுத்தால் கொலை செய்தனர். மாட்டிறைச்சிக்காக கொலை, இந்து மதத்திற்கு எதிராக புத்தகம் எழுதிய கல்புர்கி கொலை என அனைத்தும்.

இஸ்லாமிய தேச தீவிரவாதிகள் பிறமதத்திற்கு எதிராக வன்முறை மற்றும் வன்சொல்லாடல்களை பரப்பினர். இஸ்லாமிய தேச தீவிரவாதிகளின் டிவிட்டர் பதிவுகள் இதைக் காட்டுகிறது. மேலும் அவர்கள் இஸ்லாமியர் அல்லாதோரை கொன்று குவித்தனர். அதேபோல தான் இந்து தேச அமைப்புக்களும் ஒடிசாவிலே, மகாராஷ்டிரியத்திலே, குஜராத்திலே வன்முறையை அரங்கேற்றியது. இதுவும் இந்து அல்லாதோரை நாட்டை விட்டு வெளியேறுங்கள் என காழ்ப்புணர்ச்சி பொங்க மேடையில் முழங்கியது.

இஸ்லாமிய தேச தீவிரவாதிகள் தீவிர மதவாதத்தைப் பரப்பி ஆள்சேர்த்தனர். அதேபோல இந்து தீவிரவாதிகளும் தீவிர மதவாதத்துடன் தேசியவாதத்தைக் கலந்து பரப்பி ஆள்சேர்த்தனர்.

அங்கே இஸ்லாமிய தேச தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகின்றனர். ஆனால் இங்கே இந்து தீவிரவாதிகள் ஆயுத பயிற்சியளிக்கப்பட்டு மறைமுகமாக போரிட்டு வருகின்றனர் சிறுபான்மையினருக்கு எதிராக.

இரு அமைப்புகளும் மத அடிப்படையில் எதிரும் புதிருமாக இருந்தாலும் கொள்கை, செயல்படும் முறை, ஆள்சேர்க்கும் முறை என அனைத்திலும் ஒத்துப் போகிறது.

இன்னும் இவர்கள் ஆயுதம் ஏந்தி நேரடி வன்முறையில் இறங்கவில்லை என்பது தான் இஸ்லாமிய தேச தீவிரவாதிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் இடையேயான வித்தியாசம்.

ஆயுதம் ஏந்தும் அளவுக்கு சிவ சேனா, பஜ்ரங் தள் போன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளைகளுக்கு வலிமை உண்டு. அது வரை பொறுத்து இருக்க வேண்டுமா? அகிம்சை தேசம் வன்முறைக்காடாக மாறத்தான் வேண்டுமா? உலகம் மற்றுமொரு ஹிட்லரை சந்திக்கத்தான் வேண்டுமா? பாசிச இந்தியாவா அல்லது மக்களாட்சி இந்தியாவா?

அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. எதிர்காலத்தில் இந்நிலை ஏற்படாமல் இருக்க நம் வருங்காலத் தலைமுறை சுதந்திரக் காற்றுடன் வாழ ஒரே வழி ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் சங்கப் பரிவாரங்களும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். ஏன் நீங்கள் "சிமி" இயக்கத்தை தடைசெய்தவர்கள் தானே.. அவர்கள் தவறு என்றால் இவர்களும் தவறுதான்.

வருங்காலத்தில் மூன்றாம் தர நாடுகள் வந்து நம் சுதந்திரத்தை இந்து தீவிரவாதக் குழுக்களிடம் இருந்து பெற்றுத்தரும் நிலைக்கு தள்ளிவிடாதீர். இன்றே குரல் கொடுங்கள் பாசிச ஆட்சிக்கு எதிராக.. மதச்சாயமுள்ள ஆட்சிக்கு எதிராக .

மத்திய கிழக்கில் கண்முன்னே ஒரு மதவாதத்தின் வெறியாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இனியாவது விழித்தெழுவோம் மதவாதத்திற்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக..

- நேதாஜிதாசன்

Pin It