கிரிக்கெட் இங்கு விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டிருந்தால் தமிழ் நாட்டில் இப்போது நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பு இவ்வளவு தீவிரமாக இருந் திருக்காது. தமிழர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பறிபோய்க் கொண் டிருக்கிற வேளையில் இப்படியொரு சூதாட்டம், இப்படியொரு போலிப் பக்தியூட்டும் வெறியாட்டம் இங்கே தேவைப்படுகிறதா என்பதுதான் ஐபிஎல் எதிர்ப்பின் நோக்கமாக உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும் வீதிக்கு வந்து போராட்டக் களத்தில் இறங்கியுள்ளன. நமக்குத் தெரிந்த வரையில் வீதிக்கு வராத கட்சி பாஜக மட்டும்தான். வீதிக்கு வராத ஒரே கூட்டம் பூணூல் உரிமைக்காக வீதிக்கு வந்த பார்ப்பனக் கூட்டம் தான். காவிரி உரிமைக்கான போராட்டம் மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கத் துடிக்கும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிரான போராட்ட மும், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்ட மும், தேனியில் நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டமும் மக்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி மத்திய அரசின் காவிமயக் கல்விக் கொள்கைகள், இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, மாநிலங் களுக்கான நிதிப் பங்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்தல் போன்ற பல்வேறு காரணிகளுக்கான தமிழ்நாட்டின் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பையும் போராட்டங்களையும் தினம்தோறும் முன்னெடுத்து வருகின்றன. பரபரப்பான நிலையில்தான் தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறது. இந்தப் போராட்டங்களின் நியாயங்களையும், மத்திய பாஜக அரசின் தமிழர் விரோதப் போக்கையும் ஒரு வரியில் கூறிக் கடந்துவிட இயலாது.

தமிழகத்தில் தேசிய கட்சிகளின் வாக்கு வங்கி அரசியல் எடுபடாது என்பதை நன்கு அறிந்துள்ள பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை நீண்ட காலமாகவே வஞ்சித்து வருகின்றன. இப்போது உச்ச நீதிமன்றம் வலியுறுத்துகிற போதிலும், மேலாண்மை வாரியம் அமைக்காமல், நீதிமன்றம் கூறியிருக்கிற ஸ்கீம் என்றால் என்னவென்று விளக்கம் கேட்டு இறுதித் தீர்ப்புக்குப் பின்னரும், திட்டமிட்டு காலம் தாழ்த்த மீண்டும் நீதிமன்றம் சென்றிருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக. இதன்மூலம் மேலும், சில காலத்திற்கு காலம் தாழ்த்தி, கர்நாடக சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகியிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 11ஆவது சீசன் ஏப்ரல் 7ஆம் தேதியன்று மும்பையில் தொடங்கியிருக்கிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புனே, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய நகரங்களைச் சேர்ந்த எட்டு அணிகள் இந்தப் போட்டியில் விளையாடுகின்றன. பெரு நிறுவன அதிபர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த எட்டு அணிகளுக்கு உரிமையாளர்களாக உள்ளனர். பில்லியன் கணக்கில் பணம் புரளும் உலகின் முன்னணி கார்பரேட் விளையாட்டு களில் ஒன்றாக ஐபிஎல் விளங்குகிறது.

உலகம் முழுவதும் விளையாட்டு விளையாட்டாக மட்டுமே பார்க்கப்படுகிறது. மேலும் உலக நாடுகள் யாவும் திறமையின் அடிப்படையில் விளையாட்டை கட்டமைத் திருக்கின்றன. ஆனால் இந்தியா அதிலிருந்து மிகவும் மாறுபட்டது. திறமையான விளையாட்டுகளுக்கு மதிப்பும் கிடையாது, அங்கீகாரமும் கிடையாது. ஆனால் கிரிக்கெட் மட்டுமே இங்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விளையாட்டைப் போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், அவர்களை ரசிகர்களாக மட்டுமே இருக்க வைப்பதிலும் இருந்துதான் தொடங்குகிறது இந்தப் பிம்பம். பல்வேறு மொழி, பல்வேறு இனம், பல்வேறு கலாச்சாரம் கொண்ட மக்கள் வாழும் இந்தியா என்ற ஒரு ஒன்றியத்தை ஒரு நாடாக மக்கள் ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு தேசப் பக்தியை ஊட்டுவதற்குப் பார்ப்பன -பனியா கூட்டத்திற்கு பல்வேறு காரணிகள் தேவைப்பட்டன. அதில் ஒன்றாகத்தான் கிரிக்கெட்டை கையிலெடுத்தது பார்ப்பனிய-பனியாக் கூட்டம்.

பிரிட்டிசாருக்கு எதிராக விடுதலைப் போராட்ட காலத்தில்தான் கிரிக்கெட் மீதான வெறியூட்டம் முதன் முதலாகத் தொடங்கி யிருக்கிறது. இருப்பினும் இந்த வெறியூட்டம் தீவிரமடைந்தது என்னவோ 1980களில் தொலைக்காட்சி ஊடகங்களின் வரத்துக்குப் பின்னர்தான். இந்தியக் துணைக்கண்டத்தில் 18ஆம் நூற்றாண்டில்தான் கிரிக்கெட் முதன்முதலாக நுழைந்துள்ளது.

இந்த விளையாட்டை இங்கு அறிமுகப் படுத்தியது பிரிட்டிஷ் படைவீரர்களும், மாலுமிகளும்தான். பம்பாயில் வாழ்ந்துவந்த மேட்டுக் குடியினராகக் கருதப்பட்ட  பார்சிகள் பிரிட்டிசாரிடமிருந்து இந்த விளையாட்டைக் கற்றுக்கொண்டு விளையாட ஆரம்பித்தனர். பிறகு இந்துக்கள் அணி, முஸ்லிம்கள் அணி என உருவாக ஆரம்பித்தது. இந்துக்கள் அணியை அப்போதே பார்ப்பனர்கள் தங்கள் வசப் படுத்திக் கொண்டனர்.  

தொடக்கக்காலம் தொட்டே மேட்டுக் குடியினர் விளையாட்டாகவே இருந்த கிரிக்கெட்டில் பார்ப்பனர்கள் எளிதில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கவிட்டனர். அன்றிலிருந்து இன்று வரையிலும் அந்தப் பிடியை இறுகத் தளராமல் காப்பாற்றிக்கொண்டே வருகின்றனர். 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற தொடரில் 11 பேரில் 7 பேர் பார்ப்பனர்களாக மட்டுமே இருக்கின்றனர் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு’ பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ஆனால் கிரிக்கெட் வாரியம் இது தற்செயலாக அமைந்தது என்று எளிமையான விளக்கத்தை அளித்தது. இந்த விளக்கத்தை அளித்த அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சேசாங் மனோகரும் பார்ப்பனர்தான். தமிழ்நாட்டில் இருந்து இதுவரையில் இந்திய அணிக்குத் தேர்வானவர் களில் சிரிகாந்த், டபள்யூ.வி.ராமன், சிவராம கிருஷ்ணன், சடகோபன் ரமேஷ், லட்சுமிபதி பாலாஜி, முரளி கார்த்திக், ஹேமங்பதானி, பத்ரிநாத், தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், வாசிங்டன் சுந்தர், விஜய் சங்கர், முரளி விஜய் ஆகிய 14 பேர் பார்ப்பனர்கள்தான்.

மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் இதுவரையில் பார்ப்பனரல்லாத தமிழர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ளனர். 97 சதவிகிதம் இருக்கிற நம்மவர்கள் இதுவரையில் 10 விழுக்காடு கூட தேர்வாக வில்லை. ஆனால் 3 விழுக்காடு மட்டுமே இருக்கிற பார்ப்பனர்கள் இதுவரையில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான எண்ணிக்கையில் தேர்வாகியுள்ளனர்.

கிரிக்கெட்டைப் பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக ஆதரிக்க அது ஒரு எளிமையான விளையாட்டு என்பதைத் தாண்டி மற்றொரு காரணமும் உண்டு. “யாரையும் தொடாமல் விளையாடும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருப்பதுதான் பார்ப்பனர்கள் இந்த விளையாட்டை அதிகம் நேசிக்க ஒரு காரணமாக உள்ளது” என்கிறார் ராமச்சந்திர குகா. இவர் கிரிக்கெட் குறித்த சில ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வை அதிகரிக்கவும், தேச பக்தியை விதைக்கவும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பனிய-பனியாக் கூட்டமும், இந்திய ஊடகங்களும் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டினாலே ஏதோ இருநாட்டுக்கும் இடையில் மிகப்பெரிய போர் நடப்பதைப் போல ஊடகங்கள் சித்தரிக்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் 2003ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மார்ச் 3ஆம் தேதி போட்டியிட்டன. இந்தப் போட்டி குறித்து குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆடுகளத்தில் மட்டைக்குப் பதிலாக துப்பாக்கி வைத்துக்கொண்டு பாகிஸ்தான் வீரர்களை எதிர்கொள்வது போன்ற ஒரு படத்தை வெளியிட்டது. ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முதலாமாண்டு நினைவுதினத்தை எட்டியிருந்த கோத்ரா சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி முசுலிம்கள் குறித்து எழுதாமல் அதே குஜராத் பத்திரிகை கள்ள மவுனம் காத்தது.

இவ்வாறு காலம் காலமாக முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு நஞ்சைக் கக்குவதற்கு கிரிக்கெட்டை தேசப் பக்தியின் வெளிப் பாடாகச் சித்தரித்து வருகிறார்கள். இந்த விளை யாட்டில் புழங்கும் பணமும் அளவில்லாதது.

கிரிக்கெட் வணிக விளையாட்டாக மாறிய காலத்திலிருந்தே இதில் நடைபெறும் சூதாட்டங் களும் எண்ணிலடங்காதது. உலகிலேயே அதிக பணம் கொழிக்கும் கிரிக்கெட் வாரியமாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. கிரிக்கெட் மூலம் மேலும் பலமடங்கு வருவாய் ஈட்டவே ஐபிஎல் என்ற தொடரையும் ஆரம்பித்தார்கள். இதுவரையில் 10 சீசன்கள் முடிந்து இப்போது 11ஆவது சீசன் தொடங்கியுள்ளது. போலியாக தேசபக்தியை ஊட்டவும், நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் நிலவும்போது அதிலிருந்து மக்களை மடைமாற்றவும் ஒரு கருவியாகவே இதுவரையில் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழ்நாட்டில் நடந்துவரும் வாழ்வாதாரப் போராட்டங்களை திசை திருப்பும் விதமாக இந்த ஐபிஎல் இருக்கக்கூடும் என்று காரணத்தினால்தான் இந்த விளையாட்டை ஒத்திப் போடுங்கள் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.

ஆனால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த நியாயமான கோரிக் கைளை நிராகரித்து விட்டு, தமிழர்கள் எக்கேடு கேட் டாலும் பரவாயில்லை, தமிழ் நாட்டில் ஐபில் போட்டிகளை நடத்து வோம் என்று ஆணவத் தோடு செயல்பட்டது. பல்வேறு இயக்கங்களும், திரைத் துறையினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாட்டில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என போராட்டக் களத்தில் குதித்தனர்.

சென்னையில் ஐபிஎல் போட்டி நடக்க விருந்த ஏப்ரல் 10ஆம் தேதி காலை யிலிருந்தே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைத் தமிழின உணர்வாளர்கள் முற்றுகையிடத் தொடங்கினர். மாலை போட்டி நடக்கும் நேரம் ஆக ஆக எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வந்தது. சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி வரும் அண்ணாசாலை, மெரீனா சாலை போராட்டக் காரர்களால் நிரம்பி வழிந்தது. பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. போராட்டக் காரர்களை ஒடுக்க முடியாமல் காவல்துறை திணறியது. ஒரு வழியாக மாலை 6.30 மணிக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக் காரர்களை கைது செய்து அடைத்துவைத்தது காவல்துறை. சுமார்  4,000க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புடன் போட்டியை நடத்தத் தயாராகினர். குறிப்பிட்ட நேரத்தில் போட்டியும் துவங்கியது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் காலணிகளை வீசியும், கைபேசி விளக்குகளைக் காட்டியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு என்ற வாசகங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளைக் காட்டியும் போராட்டக் காரர்களும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்பைக் காட்டினர். இதற்குப் பின்னர்தான் தமிழ்நாட்டில் நடக்கவிருந்த போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது.

இந்தப் போராட் டங்களால் தமிழ் நாட் டுக்கே அவமானம் ஏற்பட்டு விட்டது, கிரிக்கெட் வேறு, அரசியல் வேறு, இரண் டையும் ஏன் இணைத்துப் பார்க்கிறீர்கள் என்றெல் லாம் பார்ப்பனர்கள் கொக்கரித்தனர். ஆனால் சென்னை அணி சூதாட்டப் புகாரில் சிக்கி 2016, 2017ஆம் ஆண்டு களில் ஐபிஎல் போட்டி யில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட போது இந்தப் பார்ப்பனர்களுக்கு எந்த அவமானமும் ஏற்படவில்லை. ஏனென்றால் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை அணிக்கு உரிமையாளர் பார்ப்பனர் சீனிவாசன். இவர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உரிமை யாளராவார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது மட்டும் இவர் நேர்மையாகத்தான் செயல்பட் டிருப்பார் என்று எப்படி நம்ப முடியும்? ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்தும் ஒரு ஊழல் வழக்கில் இவர் சிக்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து கிரிக்கெட் தொடர்பானவற்றில் ஈடுபட வாழ்நாள் தடை பெற்ற குருநாத் மெய்யப்பன் சீனிவாசனின் சொந்த மருமகன்.  

மேலும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஏதோ தமிழ்நாட்டு அணியைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். ஐபிஎல் விதிமுறைகளின்படி ஒரு அணியில் வெளிநாட்டு வீரர்கள்  அதிகபட்சமாக 4 பேர் விளையாடலாம். எஞ்சிய 7 பேர் உள்நாட்டு வீரர்களாக மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் அணியாகக் காட்ட முயலும் சீனிவாச பார்ப்பனர் அணி இதுவரையில் எத்தனைத் தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது என்று பார்த்தாலே இது யாருடைய அணி என்பது எளிதில் புரிந்துவிடும். 11 தொடர்களில் தமிழ்நாட்டில் இருந்து விளையாடிய அஸ்வின், பத்ரிநாத், பாலாஜி, அபினவ் முகுந்த், யோ மகேஷ், வித்யூத் சிவராமகிருஷ்ணன், முரளி விஜய் எனப் பலர் பார்ப்பனர்களாகத்தான் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்களில் வெகு சிலரும் அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்துள்ளனர்.

முழுக்க வர்த்தக நோக்கில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில், திரைமறைவில் நடக்கும் சூதாட்டத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டுமெனவும் பிக்கி (கiஉஉi) என்ற முதலாளிகள் அமைப்பு 2013ஆம் ஆண்டில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவில் விளையாட்டுத் துறைகளில் சூதாட்டம் நடைபெறுவதாகவும் இந்த அமைப்பு அறிக்கை ஒன்றையும் அளித்தது. இதில் கிரிக்கெட்டில் தான் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில்தான் அதிகளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. சூதாட்டம் பணமாக மட்டுமில்லாமல் பெண்களை போகப் பொருளாய் பயன் படுத்துவது வரை நீள்கிறது. அப்படியான ஒரு குற்றச்சாட்டும் சிலர் மீது நிரூபிக்கப்பட்டது. அதில் இந்திய அணிக்காக விளையாடிய கேரளப் பார்ப்பனர் சிரிசாந்த்தும் அடங்குவார். எனவே இந்தப் பார்ப்பனர்களுக்கு தேச பக்தி யெல்லாம் ஒன்றும் கிடையாது. பணவெறியும், உடலுழைப்பில்லாத ஒரு தொழிலும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள ஒரு தளமும் தேவைப்படுகிறது. அப்படியொரு தளமாய் இவர்களுக்கு கிரிக்கெட்  இருக்கிறது அவ்வளவுதான்.

இன்று கிரிக்கெட்டில் எப்படி எல்லாப் பொறுப்புகளை வகித்துக்கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அப்படித்தான் கோயில் சொத்துக்களையும் இவர்கள் முன்பு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால்தான் நீதிக்கட்சி காலத்தில் 1922ஆம் ஆண்டில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றி கோயில் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டது. கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டது போல, கோடிக்கணக்கில் பணம் புரளும் கிரிக்கெட்டையும் அரசுடைமையாக்கி, பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை அதிலிருந்து ஒழிக்காமல் சூதாட்டத்தை ஒழிக்க இயலாது.

ஆனால் ஐபிஎல் போட்டியை தமிழ்நாட்டில் நடத்தியே தீர வேண்டுமென்ற பார்ப்பனர்களுக்கு ஒருபோதும் தமிழ்நாட்டின், தமிழர்களின் நலன்கள் குறித்த கவலையோ, அக்கறையோ இருந்ததே இல்லை. அதை இப்போதும் வெளிக்காட்டியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் என்றாலே முதலில் நினைவு வருவது பெர்னாட்ஷாவின் கூற்றுதான். "11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் பார்க்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட்" என்றார் அவர். இன்று பார்க்கிறவர்களின் எண்ணிக்கை மேலும் சில ஆயிரங்கள் கூடியிருக்கிறது.

(கட்டுரையாளர் - பத்திரிகையாளர்)