பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி - தமிழர்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர் களாகவும் ஏற்றிடும் நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர்.

ஆரிய கலாச்சாரத்தினைப் பரப்பியவர் 'எசமானர்' நிலைப் பெற்றனர். வழிவழி வந்த உயர்ந்த பண்பாட்டில் நிலைப் பெற்றிருந்த தமிழர் - கற்பனையாக பிறவி இழி மக்கள் ஆக்கப்பட்டு மீளா அடிமைகளாயினர்.

அதனால் தான் பிறிதொரு இனத்துடன் வரலாற்றுத் தொடர்பு ஏற்படும் காலத்திலும் - அதைத் தொடர்ந்து வளர்ந்திருக்க வேண்டிய இன உணர்வும்-மொழிப் பற்றும்- மங்கி, மறைந்து தேய்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.

“வைதீக மத வழிபற்று” ஆரியத்தைப் பிரித்துக் காணும் ஆற்றலை (சிந்தனையை) இழக்கச் செய்தது.

ka anbazhaganவருணாசிரம - மனுதர்ம நெறி தமிழர் களை ஒன்று பட முடியாத அளவுக்கு பிரித்து வைத்ததுடன், குலத்தையே ஜாதியாக நம்பி பேதம் வளர்க்கச் செய்தவுடன் “இழி பிறவி” என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களே - தம்மினும் இழிபிறவியாகப் பஞ்சமர்களைக் கருத செய்தது. வரலாற்று அடிப்படையில் கூறப்படும் ஒரு செய்தி - ஆரிய மத சாத்திர, ஜாதி எண்ணங்களை அடியோடு ஏற்க மறுத்தவர்களை தீண்டப்படாதவர் ஆக ஒதுக்கப்பட்ட ஆதிதிராவிடர் என்பதாகும்.

வடமொழிக்குத் தரப்பட்ட ஏற்றமும், அதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டதும், தமிழ் மொழியைத் தாழ்த்தியதால் - அம் மொழிக் குரிய மக்கள் தமது அடிமை நிலையை இயல்பானதாகக் கருதி அதற்கு உடன்பட்டு வாழவழி செய்ததுடன் தன்னம்பிக்கை இழந்து தலை நிமிர முடியாத நிலையில் தள்ளிவிட்டது.

தமிழர்களிடையே அறநெறியை வலியுறுத்தி, அன்புடைமை, பண்புடைமை, நன்றியுணர்வு, ஒப்புரவு, பிறவிச் சமன்மை, தோழமை, ஆன்ம நேயம், சமரச சன்மார்க்கம் ஆகியவை குறித்து ஆன்றோரும் சான்றோரும் அறிவுறுத்தியுள்ள போதிலும், அவற்றை ஏற்றுச் செயல் படுத்துவதற்கான உறுதியும் சூழலும் இன்மையால் உறங்கிக் கிடக்கின்றன.

தமிழரின் நிலை : திருவள்ளுவரும், சங்கப் புலவர்களும், வள்ளலாரும், சித்தர்களும் விளக்கிய மனித இன மாண்புகள், சமுதாய வாழ்வில் இடம் பெறவோ வெற்றி பெறவோ இயலவில்லை. வடலூர் வள்ளலார், “கடை விரித்தேன், கொள்வாரில்லை- விடை கொண்டேன்” என்று கூறி மறைந்து விட்டார் என்றால், அது காறும் கூறப்பட்ட அறிவுரைகள் எடுபடவில்லை என்று தானே பொருள்?

இந்நிலை ஏன், எதனால் விளைந்தது? தமிழர்கள் அறிவற்றவர்களா? பண்பற்றவர் களா? இரக்க மற்றவர்களா? பிறர் நலனை மதிக்காதவர்களா? கடவுள் பற்று அற்றவர்களா? இருந்தும் ஏன் சாதி வேற்றுமையும் சமயப்பற்றின் வழி எழும் பகையும் வளர்ந்தன? நியாய உணர்வு, பொது நீதி, ஏன் வெற்றி பெறவில்லை?

தமிழன் தனது தனி மரபுக் காக்கும் இலக்கியங்களில் பற்றுக் கொள்ளாது, வட மொழி வழிபட்ட இதிகாச புராணங்களிலும், வைதீக சடங்குகளிலும், பக்தி வளர்க்கும் வழியிலும் பற்றுடையவனானதால் தன் தனித் தன்மையைக் காத்து கொள்ளாதவனாயினான்? நாளடைவில் அவற்றை அறியாதவனும் ஆயினான், அவற்றை அறிந்தாலும் வைதீக மத புராணக் கற்பனையில் இருந்து பிரித்து காண முடியாதவனாயினான்..

கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலையெனக் கொண் டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக வேண்டும்' எனும் வள்ளலார் வாக்கினைப் புரிந்து கொள்ளவும் இயலாதவனானான். ஏன்? தன்னை ஒரு இனத்தவன் என்றும், தனக்கென ஒரு மொழி, இலக்கியம், மரபு, நாகரீகம் உண்டெனவும், அதற்கு மாறானவற்றை, எந்த வடிவில் வந்தாலும் ஏற்பது தனது இன அழிவுக்கு வழி செய்வது எனவும் உணராதவனாகவே ஆகிவிட்டான்.

ஆரியச் செல்வாக்கின் வழிவந்த கலாச்சாரம் ஒரு வகையிலும், மத நம்பிக்கைகளின் வழிபட்ட பகுத்தறிவுக்கு இடமற்ற சூழல் ஒரு வகையிலும் - தமிழனை தன் இனத்தை எண்ணிப்பாராத நிலைமைக்கு ஆளாக்கின.

எண்ணத்தில் மாற்றப்பட்ட தலைகள்: நீண்ட பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரே நிலத்தில் வாழ்ந்திருந்த பழமையும் - மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் இன உணர்வு கொள்ளுதற்கான தேவையும் வாய்ப்பு இன்மையும் அதன் விளைவாய்த் தமிழ் மண்ணில் தமிழின ஆட்சிக்கு மாறாக வேற்றின ஆட்சி ஏற்படலாகாது என்னும் எண்ணம் வேரூன்றாமையும் இதற்கிடையே வைதிக மதவழியால் தனித் தன்மை இழந்ததும் - நாளும் வலுப்பெற்ற ‘ஜாதி’ முரண்பாடுகளால் ஒற்றுமை கொள்ள முடியாத நிலைமையும், மூட நம்பிக்கைகள் இறுகிப்போனதால், மறுவுலக வாழ்வையே எண்ணும் மனப் பழக்கத்தால் இவ் வுலக வாழ்வில் இழக்கும் உரிமைகளை உணராத நிலைமையும் ‘தமிழனை’ மாற்றாரின் ஆதிக்கத்தை உணராமலே ஏற்று, மண்டியிடச் செய்து விட்டன.

தமிழன் - இன்னொரு இனத்தவன் இவனைப் பிரித்து அடையாளம் காட்டி - கொடுமைப் படுத்தத் தலைப்படும் போதுதான் கொடுமையிலிருந்து மீள்வதற்கு வேறு வழியற்ற, துணையற்ற நிலையில் ‘ஓகோ, நாம் தமிழர்’ என்று எண்ண முற்படுகிறான். இதுவரை அவன் பல மனிதரிடையே ஒரு மனிதன். அந்த மனிதத் தன்மையைக் காத்துக் கொள்ள இடமில்லாத சூழ்நிலையாயினும் அதனை உணர மாட்டாதவன். உரிமை வாழ்வின் பயனை அவனால் மதித்தறிய முடிவதில்லை.

ஒரு வகையில் அடிமைகளில் விலைக்கு வாங்கப்பட்ட ஏவலர்கள் அந்த அடிமை நிலைக்கு உணர்ந்து உள்ளங் குமுறுவதற்கு ஏதுவாக இருந்த அந்தத் தெளிவுங்கூட தமிழனுக்கு இல்லை.

கையில் விலங்கு - கால்களில் தளை - அமைக்கப்பட்டிருக்கும் இடமோ சிறை, ஆண்டையின் கையிலோ சவுக்கு, அடிக்கும் போது எதிர்த்தாலோ உயிரும் பறிக்கப்படும் எனும் நிலைக்கு ஆட்பட்டிருந்த கருப்பு நிற மக்கள் எல்லாம், எத்தனையோ போராட் டங்களில் ஈடுபட்டு பெரும்பகுதி விடுதலை கண்டுவிட்டனர்.

அப்படிப்பட்ட விலங்கும்-தளையும் கண்ணுக்குத் தெரியும்படி பூட்டப்பட வில்லையே தவிர - தமிழனின் எண்ணத்தில் - கருத்தில் சிந்தனையில் மாட்டப்பட்டுள்ள தளைகளே - சாதி உயர்வு தாழ்வு, வைதிகச் சடங்கு, வட மொழி ஆதிக்க நிலை - அதன் வழி வளர்ந்த மூடநம்பிக்கைகள். அதனால் தான் தமிழனுக்குத் தன்னையே அடையாளம் தெரியாத கருத்துக் குருடாகும் நிலை ஏற்பட்டு, அந்த நிலை இன்றும் மாறவில்லை.

தந்தை பெரியார் வந்தார்!

இவைகளெல்லாம் - பல்வேறு வகையில் - பல்லாண்டு காலம் எண்ணிப்பார்த்து, நாமறிந்த உண்மைகளை மற்றவர்களுக்கும் அறிந்தாக வேண்டும் என்று தீர்மானித்து, அந்தப் பணியைவிடத் தாம் தமது வாழ்நாளில் செய்ய வேண்டிய பணி வேறு இல்லை என்னும் முடிவுக்கு வந்து, ‘தீண்டாமைக் கொடுமை’, ‘ஜாதி’, ‘வருண தருமம்’, ‘வைதிகம்’, ‘வட மொழி ஆதிக்கம்’, ‘புரோகிதச் செல்வாக்கு’, ‘சடங்குகள்’, ‘புராணங்கள்’, ‘மூடநம்பிக்கைகள்’ ஆகிய வற்றை நொறுக்குவதற்கான சம்மட்டியாகச் ‘சுயமரியாதை இயக்கத்தை’த் தொடங்கிப் பகுத்தறிவு பரப்பும் பணியில் ஈடுபட்டார் தந்தை பெரியார் அவர்கள். அந்த நோக்கம் நிறைவேற பலமுனைத் தாக்குதலும், பல்வேறு கோணத்திலான விளக்கங்களும் தேவை என்று தெளிந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் - தமது சிந்தனைத்திறன் மிக்க பேச்சாலும் - எழுத்தாலும் - கலைப் பணியாலும் துணை நின்றார்கள்.

இருபது நூற்றாண்டுகளாகவே மெல்ல மெல்ல உருக்குலைந்து, உள்ளமும் கெட்டுப்போன தமிழினத்தைத் 'தன்மானம்' கொள்ளச் செய்வதும் - 'பகுத்தறிவு' தனைப் பயன்படுத்தச் செய்வதுமே - இழந்த மனிதத் தன்மையை உணரச் செய்யும் வழி என்றும் , அப்படிப் பெறும் விழிப்புணர்வில் அவன் தமிழன் (திராவிடன்) என்னும் உணர்வு பெறலாகுமென்றும் தெளிந்த சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார் அவர்களே ஆவார்.

அறிஞர் அண்ணா : கடுங் காய்ச்சல் தீரும் மருந்து கொடுத்தால் - வாய் உளறுதலும் நிற்கும் - வாய்க் கசப்பும் மாறும், நிதானம் வந்தபின் எதிரிலுள்ளோர் புலனாவர் என்பதை ஒப்ப - தமிழினத்தின் வைதிக வழிபட்ட காய்ச்சல் நீங்கும் கடுமையான மருந்தாகத்தான், சுயமரியாதை - பகுத்தறிவு இயக்கம் தந்தை பெரியாரால் காணப்பட்டது. அந்த மருந்தினை இனிப்பில் வைத்து விழுங்கச் செய்யும் முறையை கொண்டவரே அறிஞர் அண்ணா அவர்கள்.

எனவே தமிழினத்தின் வரலாற்றில் காணப்படும் அடிப்படை வீழ்ச்சியை - தாழ் நிலையை - அடிமை மனப்பான்மையை மாற்ற விரும்பும் எவரும் தன்மானப் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்புவதன் மூலம் தமிழர்களைத் தம்மை உணர்ந்தவர்களாக ஆக்கிவிடும் பணியையே தலையான பணியாக உணர்ந்து மேற்கொண்டாக வேண்டும். எதிர்ப்புகள் எத்தனை வந்தாலும், எப் பக்கமிருந்து வந்தாலும், எதற்கும் அஞ்சாது, ஏன்? எப்படி? எதற்காக? என்னும் கேள்வியை எழுப்பி விடைகாணும் ஆற்றலை - நம்மிடையே பலரிடம் உருவாக்கிய தந்தை பெரியாரின் தொண்டே - தமிழர்களை விழுப்புறச் செய்யும் வழி கண்ட தலையான தொண்டாகும்! வாழ்க பெரியார்!விழிப்புறுக தமிழினம்!

(முடிவுற்றது)

- பேராசிரியர் க.அன்பழகன்

Pin It