"நன்றாகப் படிக்க வேண்டும். பர்ஸ்ட் ரேங்க் வாங்க வேண்டும்." - எங்கள் அண்டை வீட்டில் 8 வயது உறவினர் குழந்தை ஒன்றிடம் ஒரு நடுத்தர வயதுத் தாய் இப்படி கூறிக் கொண்டிருந்தார். "நீங்கள் நன்றாகப் படித்தால்தான் நாங்கள் கௌரவமாக வெளியில் நடமாட முடியும். அப்போது உங்களைப் பற்றி பெருமையுடன் வெளியில் நாங்கள் கூறிக் கொள்வோம். அதனால் நீ நிறைய மார்க் வாங்க வேண்டும்" என்று குழந்தையிடம் அந்தப் பெண் பதவிசாக பிளாக்மெய்ல் செய்து கொண்டிருந்தர். இது அந்தக் குழந்தையி்ன் இயல்பை மறுத்து, குழிக்குள் தள்ளும் நடவடிக்கை அல்லவா? வெறும் பர்ஸ்ட் ரேங்கிலும், மதிப்பெண்களிலும் ஒரு குழந்தையின் வாழ்க்கை இப்படி அநாதரவாய் முடிந்து போய்விடுகிறது. அதன் இயல்பு, ஆர்வம், விருப்பம், படைப்புத்திறன் போன்றவை எந்த கணக்கிலும் சேர்க்கப்படுவதில்லை.
குழந்தைக்கு எதுவுமே தெரியாது. அதனால் இயல்பாக கற்றுக் கொள்ள முடியாது. அதற்கு எதையும் படைக்கத் தெரியாது. பெரியவர்கள் அறிவாளிகள், சமூகத்தை, குடும்பத்தை நடத்திச் செல்பவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள் என்ற அகங்கார மனோபாவமே, குழந்தைகளை சிதைக்கும் முதற்புள்ளி.
சமீபத்தில் பள்ளி சார்ந்து குழந்தைகள் அனுபவித்த கொடூரங்கள், துர்மரணங்கள் நமது சமூகம் பற்றிய மிகப் பெரிய விரக்தியை மீண்டும் கிளறிவிட்டுள்ளன. இது தொடர்பான சம்பவங்கள் சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்து விட்டன. மணப்பாறையில் தொடங்கி புதுதில்லி வரை எங்கெங்கும் குழந்தைகள் கொடூரம் அனுபவிப்பதற்கும் மரணத்தை தழுவுவதற்கும் தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு முறை கல்விச்சாலை சார்ந்து குழந்தைகள் கொடூரத்தை அனுபவிக்கும்போது, படிக்க வேண்டும் என்ற சுமை என் மீது சுமத்தப்பட்ட துர்நினைவுகளே என்னை ஆட்கொள்கின்றன. நம்மில் பலரைச் சிதைத்ததில் கல்வி அமைப்புக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன்.
சமீபத்தில் நிகழ்ந்த அந்த துன்பியல் சம்பவங்களில் நிறைய ஒற்றுமைகள். இந்த ஒற்றுமைகள் அனைத்துமே நமது சமூகம்-மக்கள், கல்வி அமைப்பு, அரசின் - சுரணையற்ற தன்மை, அலட்சியம், அகங்காரம் ஆகியவற்றின் வெளிப்பாடுகள். இந்தச் சம்பவங்களை தனித்தனியான சம்பவங்களாகக் கருத இயலவில்லை. விட்டெறிந்த பந்துகள் திரும்ப வருகின்றன. பந்துகளை விட்டெறி்ந்தபோது கவலைப்படாத நாம், அவை திரும்ப நம் முகத்தில் வந்து வேகமாக மோதும் போது வெறுமனே உணர்ச்சிவசப்படுவது சரியான எதிர்வினையா?
ஒரு வசதிக்காக இவற்றை "கல்வி சார்ந்த வன்முறைகள்" என்று வகைப்படுத்திக் கொண்டாலும், இவை அனைத்துமே சமூக வன்முறைகள்-பயங்கரவாதம் தான். சமூகம் தனக்குத்தானே இழைத்துக் கொள்ளும் அநீதி.
முதல் சம்பவம்: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள புனித மரியன்னை தொடக்கப் பள்ளியில் யுகேஜி மாணவி சிறீ ரோகிணி மார்ச் 24ந் தேதி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்த அப்பாவி குழந்தை தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்துள்ளது. குழந்தையை தலையில் அடித்த வகுப்பாசிரியை ஜெயராக்கினி, தண்டனைக்குப் பயந்து தண்ணீர் தொட்டியில் தள்ளியிருக்க வேண்டும் என்பது குற்றச்சாட்டு.
கல்வி என்பது 5 வயதுக்கு மேல் தொடங்கப்பட வேண்டும் என்று கல்விச் சிந்தனையாளர்கள் ஒரே குரலில் தெரிவித்திருக்கிறார்கள். நம் ஊர்களில் 80களுக்கு முன் வரை நேரடியாக 1ம் வகுப்பில் சேர்ப்பதுதான் வழக்கமாக இருந்தது. இப்பொழுதோ குழந்தையின் இயல்பான வளர்ச்சிப் போக்கைக் குலைத்து "மாமாவுக்கு ஏ,பி,சி,டி சொல்லிக் காட்டு, 1...100 வரை சொல்லு" என்று ஒன்றுமறியாத வயதில் சாதனை புரிய வன்கொடுமை செய்கிறது மத்தியதர வர்க்கம். இந்த நடைமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை. மேலும் குழந்தையின் இயல்பான வளர்ச்சிக்கு துணையாக இல்லாமல், அது அலமாரியில் ஏறுகிறது, பொருட்களை கொட்டி விடுகிறது, எல்லாவற்றையும் அள்ளிப் போடுகிறது என்று போலிக் குற்றச்சாட்டுகளை அவிழ்த்துவிட்டு, சோம்பேறிகளாக இருக்கும் பெற்றோர்கள் இரண்டு-இரண்டரை வயதிலேயே பிரி கேஜி என்று எங்காவது தள்ளிவிட்டுவிட்டு, அப்பாடா என்று நிம்மதியாய் சீரியல் பார்க்கலாம், பக்கத்து வீட்டுடன் பேசலாம், ஆபீசுக்கு ஓடிப் போய்விடலாம் என்றெல்லாம் நினைக்கிறார்கள்.
அடுத்ததாக நம் சமூகத்தில் ஆசிரியர் வேலை என்பது, அரசு வேலைக்கு அடுத்ததாக ரொம்பச் சௌகரியமான வேலையாகக் கருதப்படுகிறது. ஆசிரியர் வேலை என்பது குறிப்பிட்ட நேரம் மட்டும் செலவழித்தால்போதும், பெருமளவு வருமானத்தைத் தரக்கூடியது. பாதுகாப்பானது. பலன்கள் அதிகம். மற்றொரு தொழிலையும் ஜெகஜோதியாய் நடத்தலாம். அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்ட ஆசிரியர்களை நாம் தரமானவர்களாக உருவாக்குகிறோமா? கல்லூரியில் பயனற்ற படிப்புகள் என்றறியப்படும் கலை பாடங்களை படிக்கும் இவர்கள், லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து கல்விப் படிப்பை படிக்கின்றனர்! பிறகு லஞ்சம் கொடுத்தே வேலை வாங்குகின்றனர். இவர்கள் எப்படி சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்?
கொலை பாதகர்கள் எந்தப் பொய்யைக் கூறவும் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு, ரோகிணியின் தாய்க்கு முறையற்ற தொடர்பு இருக்கிறது என்று ஆதாரமற்ற கூற்றுகளை பள்ளி நிர்வாகம் பரப்புவது. சாராய வியாபாரிகளும், ரியல் எஸ்டேட் அதிபர்களும், ரௌடிகளும், தாதாக்களும், அரசியல்வாதிகளும்தான் கல்விச்சாலைகளை நடத்துகின்றனர். இவர்களிடம் இருந்து என்ன நியாய-தர்மத்தை எதிர்பார்க்க முடியும்? குறைந்தபட்ச நேர்மை, நம்பகத்தன்மைக்குக்கூட வாய்ப்பில்லை.
திராவிடக் கட்சி ஆட்சிகளில் அரசியல்வாதிகளின் சுய வருமானத்தை கருத்தில் கொண்டு மெட்ரிகுலேஷன் பள்ளி முறை திட்டமி்ட்டு வளர்க்கப்பட்டது. தமிழகத்தைத் தவிர, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் மெட்ரிக் பள்ளி முறைக்கு தனி இயக்ககம் கிடையாது. குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பவர்கள் மெட்ரிக் பள்ளிகளைத் தொடங்கினார்கள். இன்று பள்ளிக் கல்வியை இந்தக் கூட்டமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் நிலை தொடங்கி சம்பந்தப்பட்ட சங்கங்கள் வரை அரசியல்வாதிகளை அனுசரித்துக் கொண்டு இந்தக் கூட்டம் பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பும் மதிப்பும் கொடுத்து, ஆசிரிய தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று டிசம்பர் 2000ல் பொது நல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பள்ளிகளில் குழந்தைகளை தண்டிக்கக்கூடாது என்று தமிழக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆணையிட்டிருக்கிறதாம். ஆணைகள் வாழ்க! அவை விதிமுறைப் புத்தகங்களில் தூங்குவதற்காகத்தான் இயற்றப்படுகின்றன. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச்சட்டம், ராகிங் தடுப்புச் சட்டம், ஈவ் டீசிங் தடுப்புச் சட்டம் என்று எத்தனையோ சட்டங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. என்ன பிரயோசனம்? குழந்தைகளை தண்டிக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று கல்வித் துறை அதிகாரிகள் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார்கள். அவர்களுக்குத்தான் எத்தனை வேலை, இந்த சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட எல்லாம் நேரமில்லாத அளவுக்கு அவர்களுக்கு கடுமையான வேலை!
மணப்பாறை சம்பவத்தில் இறந்தது ஒரு பிஞ்சுக் குழந்தை என்றால், இதே போன்று தில்லியில் ஆசிரியர் கொடு்த்த கொடூர தண்டனையால் இறந்த தில்லி மாணவி இறக்கக் காரணம் - ஆங்கிலம் தெரியாதது. தில்லி எம்.சி.டி. தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த அந்த 11 வயது சிறுமி ஷன்னுவுக்கு தண்டனையாக கொதிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்துள்ளார் ஆசிரியை மஞ்சு. கோமாவில் விழுந்த அந்த மாணவி இரண்டு நாளில் இறந்து போனார். அந்தக் குழந்தை இரண்டு மணி நேரம் வெயிலில் "முருகா" நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறது. முருகா நிலை என்பது கால்களின் வழியாகக் கைகளைக் கொடுத்து காதுகளை பிடித்துக் கொண்டிருக்கும் நிலை. அந்த கொடூர தண்டனை நிலையில் அவள் இருந்து மாறிவிடக் கூடாது என்பதற்காக தோளில் ஏழு செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. தாகத்தில் அவள் தண்ணீர் கேட்டபோது, ஆசிரியை மஞ்சு உதைத்து தள்ளியுள்ளார். குழந்தையின் தலை சுவரில் மோதி மூக்கில் ரத்தம் வந்து செத்தாள் என்று அப்பாவியாய் கூறுகிறாள் அவளது அக்கா ஷாஹினா. இவர்களது தந்தை ஒரு சாதாரண ஹோட்டல் வெயிட்டர்.
ஆங்கில எழுத்துகளை நினைவில் வைத்து கூறத் தெரியாததே ஷன்னு கொடூரமாய் இறந்ததற்குக் காரணம். வெள்ளைக்காரன் நம்மை விட்டுச் சென்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும், அடிமை ரத்தங்கள் அடிமைத்தனத்திலேயே ஊறித் திளைத்து பிரபுக்களுக்கு சேவகம் செய்யத் துடிக்கின்றன.
இந்தச் சம்பவங்களில் பெற்றோர்களது மனநிலை பற்றியே தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைகளிடம் என்ன சொல்கிறார்கள்? ஆசிரியர் மீது புகார் கூறக்கூடாது. ஆசிரியர் கடவுள் மாதிரி (மாதா, பிதா, குரு...). அவர் என்ன சொன்னாலும் வாயை மூடிக்கிட்டு கேட்டுக்கணும் என்றெல்லாம் குழந்தையின் வாயை அடக்கியே வைத்திருக்கிறோம். யார் செய்தாலும் தவறை தட்டிக் கேட்க வேண்டும். நடக்கும் எல்லா உண்மைகளையும் பெற்றோரிடம் கூற வேண்டும் என்று குழந்தையை பகுத்தறிவுடன், சுயஆளுமையுடன் வளரவிடுவதில்லை. குழந்தையின் உலகத்தை புரிந்துகொள்ளத் தயாராக இல்லாத நாம், மண்டையை உடைத்தாவது அதை நல்ல சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றவும், குழந்தையின் இயல்பான படைப்பூக்கத்தை தடை செய்யும் வகையிலும் மிரட்டவும் அடிக்கவும் கடுந்தண்டனைகள் வழங்கவும் தயாராக இருக்கிறோம். நமது இயலாமைகள் தண்டனைகளாக அவர்கள் தலையில் இறங்குகின்றன. இதே தவறை ஆசிரியர் செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். "தட்டினால்தான் இரும்பு வளையும்" என்று தத்துவமும் சொல்கிறோம்.
ஷன்னு சம்பவம் தொடர்பாக நியாயங்களை எடுத்துரைத்துப் பேசிய கல்வியாளர் (!) கோல்டி மல்ஹோத்ராதான் இரண்டு நாட்களுக்குப் பின்னர் தன் பள்ளியில் ஒரு மாணவி இறக்க ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார். ஆசிரியர் குரலை உயர்த்தலாம், மிரட்டலாம் என்று அவர் கூறுகிறார். அடிகள், உதைகளைவிடவும் மனதில் வடுவை ஏற்படுத்தும் அவமானங்கள், அவமானப்படுத்தல்கள் கொடியவை. நமது ஆசிரியர்கள் இதிலும் கை தேர்ந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
தில்லி பள்ளியில் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட மாணவி ஆக்ருதிக்கு சரியான நேரத்தில் உரிய மருத்துவ உதவி கிடைக்கச் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால், அவர் இறந்து போயுள்ளார். தி்ல்லி வசந்த விஹாரில் உள்ள மாடர்ன் பள்ளியைச் சேர்ந்த அந்த மாணவி ஏப்ரல் 20ந் தேதி இறந்துள்ளார். திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தைப் பற்றி அந்தப் பள்ளி முதல்வர் (கல்வியின் காவலர் என்ற மிதப்பில் இருப்பார் போலிருக்கிறது) கோல்டி மல்ஹோத்ரா கூறுவதைக் கேளுங்கள்: அந்த மாணவியை பெற்றோர்கள் பள்ளிக்கே அனுப்பியிருக்கக் கூடாது என்கிறார். பைத்தியக்காரத்தனமாக இல்லை?
அந்த மாணவியின் வீட்டிலிருந்து கார் அனுப்பும் வரை 45 நிமிடங்கள் காத்திருந்திருக்கிறார் கோல்டி. ஒரு மாணவியை உயிர் பிழைக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது கூடத் தெரியாத ஒருவரை எதற்காக பள்ளி முதல்வராக வைத்திருக்க வேண்டும்? ஆக்ருதி ஆஸ்துமாவால் அவதிப்பட்டபோது, ஆக்சிஜன் முகமூடியை பள்ளி முதல்வர் அகற்றியுள்ளார். ஆம்புலன்ஸைக்கூட கூப்பிடவில்லை என்கிறார் சக மாணவி.
நகராட்சிப் பள்ளி என்றாலும் சரி, உலகத்தரமான பள்ளிகள் என்று பறைசாற்றிக் கொள்பவை என்றாலும் சரி முதலுதவிப் பெட்டிகள் கிடையாது. பெண்கள் படிக்கும் பள்ளிகளில்கூட பதிவுபெற்ற செவிலியரோ, எத்தனை ஆயிரம் குழந்தைகள் படித்தாலும் அவசர உதவிக்கு மருத்துவர்களோ கிடையாது. ஆனால் ஒன்றுக்குப் போவது முதல், ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டணம் நிர்ணயித்து பெற்றோர்களிடம் கறப்பதில் இந்தப் பள்ளிகள் எந்தக் குறைச்சலும் வைப்பது இல்லை. நம் ஊரில் மக்களின் காசை சுரண்டுவதில் முதலாளிகளுக்கு ஆர்வம் இருக்கிறது. வாங்கும் காசுக்கு அவர்கள் முறையாக வேலை செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் மக்களுக்கு அக்கறை இருப்பதில்லை.
இந்த நேரத்தில் இதே தரம் கொண்ட சென்னை பள்ளியில் நிலவும் அநியாயம் நினைவுக்கு வருகிறது. அந்தப் பள்ளியில் ஒரு குழந்தையின் உணவுப் பழக்கம் என்னவாக இருந்தாலும் பள்ளிக்கு அசைவ உணவு எடுத்து வர தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். தெரியாமல் கொண்டு வரும் குழந்தைகளின் உணவு சாக்கடையில் கொட்டப்படுகிறது. மாற்று உணவும் தரப்படுவதில்லை.
தன் கண் முன்னாலேயே பள்ளி வாகனத்தின் முன் கதவு வழியாக இறங்கிய பிஞ்சுக் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி இறப்பதை காணும் நிலையி்ல்தான் நம் தந்தையர்கள் உள்ளனர். பள்ளிவாகனம் என்ற பெயரில் எமனின் வாகனங்களாக அவை வலம் வருகின்றன. அதற்கும் கொள்ளைக் காசு கேட்கும் பள்ளி, குழந்தையை பாதுகாப்பாக வீட்டில் சேர்க்க முன் வருவதில்லை.
இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்தும் "கல்விக்கொடை வள்ளல்களைத்"தான் நாம் பெற்றிருக்கிறோம். இவர்கள் கல்வியாளர்கள் என்ற பெயரில் நம் சமூகத்தில் மகான்களைப் போல வலம் வருகிறார்கள். கல்வி்ச்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் சார்ந்து எத்தனை விபத்துகள் நடந்தாலும் எதுவும் மாறாது என்ற விரக்தி மேலிடுகிறது. கல்வி அமைப்பு உட்பட எந்த பொது விஷயத்திலும் சமூகத்துக்கு கடப்பட்டு இருக்க வேண்டும், பொறுப்புடன் இருக்க வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்த சமூகம் தவறுகிறது. கும்பகோணம் தீவிபத்து நடந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் பெரிய மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.
பள்ளிகள் மட்டும்தான் என்றில்லை, கல்லூரிகளிலும் அலட்சிய மனப்பான்மை விரவிக் கிடக்கிறது. ராகிங் தொடர்பான நிகழ்வுகள் இதையே காட்டுகின்றன. இமாசலபிரதேசத்தில் உள்ள கல்லூரியானாலும், கோவையில் உள்ள கல்லூரியானாலும் ராகிங் நடந்தால் அந்த மாணவர்களின் நலன் பற்றி நிர்வாகங்கள் கவலைப்படுவதில்லை. தங்கள் கல்லூரியின் நற்பெயர், மதிப்பு கெட்டு விடக்கூடாது, மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது, சொத்து குறைந்துவிடுமே என்ற அச்சம்தான் அந்தக் கல்வித்தந்தைகள் மத்தியில் பெரிதாக உள்ளது. மாணவன் கண் போனால் என்ன? யார் செத்துப் போனால்தான் என்ன, அவர்களுக்கு அதனால் என்ன கெட்டுவிடப் போகிறது?
ராகிங்குக்காக சில மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டும் நேரத்தில், சமூகமும் மாணவர்களும் இந்த மாணவர்கள் மீது நடத்தும் பலாத்காரத்தை மறைத்து விடுகிறோம். ஏதோ அந்த மாணவர்களே தாதாக்கள் போல மாறிவிட்டதாகச் சித்தரிக்கிறோம். அவர்கள் வில் போன்ற கருவிகள் மட்டுமே, அம்பு-ஆதாரம் இந்த சமூகத்தின் மனப்பான்மையிலும், பெற்றோர்களது பணக்காரக் கனவுகளிலும் புதைந்து கிடக்கிறது.
இந்தியாவில் பெற்றோர்களின் போக்கு ஒன்று சர்வாதிகாரக் கொடுங்கோன்மையாக இருக்கிறது அல்லது எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையைப் பார்ப்பதாக இருக்கிறது. மார்க்குகளிலும், சம்பளத்திலும் மட்டுமே தன் குழந்தையின் அடையாளத்தை தேட விழையும் பெற்றோர்களுக்கு, மற்ற கேள்விகளை கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.
ராகிங் நடப்பதற்கான காரணத்தை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் உண்மையிலேயே ஒரு நிதர்சன உண்மையை கூறி இருக்கிறது. "படி, மார்க் வாங்கு, வேலைக்குப் போ" என்று அளவுக்கு மீறி "குருவி தலையில் பனங்காயை" வைப்பதால் குழந்தைமை என்ற அம்சம் சிதைக்கப்பட்டு, அவர்கள் கொடூரர்களாக மாறுகிறார்கள். அதன் வடிவமே ராகி்ங். இன்றைய இளைஞர்களின் தாறுமாறான நடத்தைக்கு இந்த நெருக்கடி காரணமாக இருக்கலாம். இப்படியாக அடங்காப்பிடாரி போக்குடன் அவர்கள் அறிவு சீர்குலைந்த நிலையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் அவ்வப்போது இது போன்ற சமூக நிதர்சனங்களையும் கூறுவதுண்டு.
நமது சமூகம் எப்படி அடுத்த தலைமுறையை முழுமையாகச் சிதைக்கிறது என்பதற்கு உதாரணம், சமீபத்தில் மார்க் எடுக்க முடியாமல் போன பாவத்துக்காக தற்கொலை செய்து கொண்டு இறந்த சென்னை இஞ்சினியரிங் கல்லூரி மாணவியைச் சொல்லலாம். மார்க்குகளில் வாழ்க்கை இல்லை என்பதை அவளது பெற்றோரும், ஆசிரியர்களும், இந்தச் சமூகமும் சொல்லித் தரவில்லை. ஏற்கெனவே, இந்த சமூகத்தால் கொல்லப்பட்டுவிட்ட அவள், இலக்கை தொட முடியாதபோது இரண்டாவது முறையாக உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இப்படியாக குழந்தைகள், இளைஞர்களின் மனஅவசங்கள் மௌனத்தில் புதைக்கப்படுகின்றன.
ஆசிரியப் பணி என்பதும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் திறமையற்ற மாணவர்களை திறமையானவர்களுடன் போட்டி போட வைப்பதற்காகவே கொடுக்கப்படுகின்றன. ஆனால் ஏற்கெனவே சிறப்பாக படிப்பவனை ஊக்குவிப்பதுடன் தங்கள் வேலையை முடித்து மூட்டையைக் கட்டிக் கொண்டு, அடுத்த இடத்தில் கல்லா கட்ட கிளம்பிவிடுகிறார்கள் ஆசிரியர்கள். நன்றாகப் படிப்பவர், படிக்காதவர் இடையிலான ஒரு இடைவெளியை குறைத்து தாழ்வு மனப்பான்மையை போக்கினாலே போதும் எல்லா குழந்தைகளும் சிறப்பாகப் படிக்கும். ஆனால் சிறு வயதில் இருந்தே தாழ்வு மனப்பான்மை, விரக்தி, வெறுப்பு போன்றவற்றையே நமது கல்வித் திட்டம் திட்டமிட்டு மாணவர்கள் மனதில் புகுத்தி வருகிறது. இதனால்தான் தன் அறிவுக் கதவுகளைத் திறக்கும் கல்வியை குழந்தைகள் அனுபவித்து ரசிக்க மறுக்கின்றனர். நாளைக்கு லீவு என்பதிலும், பள்ளி இறுதி மணி அடிக்கும்போது குழந்தையின் மனதில் எழும் உற்சாகம் இதையை வெளிப்படுத்துகிறது.
ஆனால் வளர்ந்தவர்களோ படிக்க வேண்டும், பிள்ளை இங்கிலீஸ் பேச வேண்டும், டை கட்டிக் கொண்டு திரிய வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறோம், திட்டமிடுகிறோம், எதிர்காலம் பிரகாசமாகிவிடும் என்ற குருட்டு நம்பிக்கையுடன் வளைய வருகிறோம். குழந்தையின் மனநிலை, அதன் சுயஆளுமை, படைப்புத்திறன், இவற்றால் உருவாகும் விருப்பம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெற்றிகரமாகச் சம்பாதிக்கும் இயந்திரங்களாக உருவாக்குவதில் மட்டுமே முனைப்பு காண்கிறோம். அவர்கள் தாக்கப்படும் போதும், கொல்லப்படும் போது மட்டும் கொதித்தெழுகிறோம். இது மிகப் பெரிய முரண். இந்த கொலைக் குற்றங்கள் நடக்க நாமும் உடந்தையாக இருந்திருக்கிறோம். கொலை நடந்த பிறகு விலகி நின்று மற்றவரை குற்றஞ்சாட்டுவது முறையில்லை. இனிமேலும் இதுபோன்ற கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றால், அது நம் கைகளில் மட்டுமே அடங்கியுள்ளது.
- ஆதி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
குழந்தைகளைக் கொல்லும் பெற்றோர்கள் - அதிகரிக்கும் சமூக பயங்கரவாதம்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: கட்டுரைகள்