தேர்தல் அரசியலில் இந்துத்துவா வெற்றிகளைக் குவித்துவரும் வேளையில், இந்தியாவின் – ஜக்கி வாசுதேவ் போன்ற - நவீன சாமியார்கள் பொதுத்தளத்தில் இந்திய மரபுகள் முழுவதும் மறைஞான யோக மரபே எனவும், அவை முழுக்க ஐரோப்பியத் தத்துவ மரபுகளுக்கு - அதாவது பகுத்தறிவு, அறிவியல் மரபுகளுக்கு எதிரானது எனவும், வாதிட்டு வருகின்றனர். இவ்வேளையில், இந்தியத் தத்துவ மரபுகளின் தளங்களிலிருந்து விலக்கப்பட்ட நவீன சாதி எதிர்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனையாளர்களுக்கு - குறிப்பாகப் பெரியாருக்கு இந்தியத் தத்துவ மரபுகளில் வேர்கள் உள்ளனவா என்ற கேள்வியோடு மார்க்சிய அறிஞர் ந. முத்துமோகன் அவர்களுடன் தொலைப்பேசி வழியாக உரையாடலைத் தொடங்கினோம்.

நேர்காணல் கண்டவர் : க. காமராசன்

*             இந்தியத் தத்துவ மரபுகளுக்குள் வைத்து பெரியார், அம் பேத்கர் ஆகியோரைத் புரிந்துகொள்ள முடியுமா? எப்படிப் புரிந்துகொள்வது? இந்தியத் தத்துவ மரபு களில் பொருள் முதல்வாத மரபுகளின் தொடர்ச்சி யாக இன்றைய இந்திய மார்க்சியர்கள் உள்ளனர் என்று சட்டோபாத்தியாய இந்திய நாத்திகம் நூலின் முன்னுரையில் கூறுவார். அப்படி ஒரு தொடர்ச் சியை, வேர்களை வலியுறுத்த முடியுமா?

இந்தியத் தத்துவ மரபுகளுக்குள் வைத்து பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் புரிந்துகொள்ள முடியுமா என் பதற்கு இரண்டுவிதமாகப் பதில் சொல்லலாம்.

அம்பேத்கர் ரொம்ப வலுவாக பௌத்தத்தைக் கையிலெடுத்தார். தேவைப்பட்ட இடங்களில், அதில் சில முக்கியமான திருத்தங்களைக்கூட செய்தார். பௌத் தத்தைக் கொஞ்சம் புரட்சித்தன்மை கொண்டதாக மாற்றினார். சமூகவியல்படுத்தினார். அதனால் அம்பேத் கருக்கு இந்திய மரபுகளுக்குள் வேர்கள் கிடையாது என்று சொல்லமுடியாது. ஏனென்றால், தனது வேர் களை வேகமாகவும், அழுத்தமாகவும், தொடர்ச்சி யாகவும் பௌத்தத்திற்குள் அம்பேத்கர் தேடியுள்ளார். அவர் பௌத்தத்தை முன்வைத்து மார்க்சியத்தை எதிர்கொள்ளவும் முயற்சி செய்தார் என்று சொல்ல முடியும். ஆகவே அம்பேத்கருக்கு இந்திய மரபுகளுக் குள் வேர் வலுவாகத்தான் இருக்கின்றது.

இதற்கு இணையாக இங்கு அயோத்திதாச பண்டிதர் வேலை செய்தார் என்பதையும் பார்க்க முடியும். அம்பேத்கருக்கு முந்தியவர் அயோத்திதாசர். அவரும் பௌத்தத்திற்குச் சென்றுசேரும் ஒரு நிலை இருந்தது. ஆகவே, தலித் இயக்கம் இந்த மரபு சார்ந்த வேரை நன்கு தேடியுள்ளது என்று தோன்றுகிறது.

வேகமாக, மேலோட்டமாகப் பார்க்கும்போது, பெரியாரைப் பொறுத்தமட்டில், அவருக்கு மூன்றுவிதமான வேர்கள் காணப்படுகின்றன. ஒன்று சாருவாகம் - உலகாயதம். இதைப் பற்றி, பிரகிருதிவாதம் அல்லது மெட்டிரியலிசம் என்று தலைப்பிட்டு அவரே பேசியுள்ளார். மற்றொன்று நியாய-வைசேடிகத்தை ஓரளவு சொல்லலாம். இத னுடன் பௌத்தக் கூறு களையும் இணைத்து ஏற்றுக்கொண்டுள்ளார். இதைப் பற்றி இப்போது வெளி யாகியுள்ள, ‘இந்தியத் தத்து வங்களும் தமிழின் தடங் களும்’ என்ற எனது நூலில், ‘பெரியாரும் பௌத்தமும்’ என்ற கட்டுரையில், அவரது அனாத்மாவாதம், துக்கம், துக்கநிவாரணம் போன்ற கருத்தாக்கங்கள் குறித்து எழுதியுள்ளேன். பெரியாரிட மும் சாருவாகம் - உலகாயதம், நியாய வைசேடி கம், பௌத்தம் ஆகிய வேர்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வேர்களை எல்லாம் அவர் ரொம்ப சிலாகிக்க வில்லை. அம்பேத்கர் கூட தன் வேர்கள் குறித்து அவ்வப் போது சிலாகித்துப் பேசியுள்ளார். ஆனால் பெரியார் அந்த மாதிரி சிலாகித்துப் பேசுவதற்காக அந்தத் தத்துவ நூல்களை மெனக்கெட்டுப் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. அவரது கேள்வி ஞானம், சில அறிஞர்களுடனான உரையாடல், தேர்ந்தெடுத்த நூல்களைப் படிப்பது ஆகியவையே அவருக்குப் போது மானதாக இருந்தது. திருக்குறளில் பெரியார் நுழைந்து பார்த்துள்ளார். திருக்குறளின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு உள்ளார். விமர்சனங்களையும் வைத்துள் ளார்.

சமூக வரலாற்று வெளிகளில் தீவிரமான உரை யாடல்களுக்கு ஒருவர் முயலும்போதே, மரபு சார்ந்த வேர்கள் அவருக்குக் கிடைத்துவிடும். மரபார்ந்த வேர்கள் என்பது, கண்ணை மூடிக்கொண்டு ஒன்றை ஏற்றுக்கொள்வது என்பதல்ல. வேர் என்பது விமர்சன ரீதியானதாகவும் இருக்க முடியும். நிராகரிப்பாக இருக்கக் கூடாது. நிராகரிப்பு வேறு, விமர்சனம் என்பது வேறு. நிராகரிப்பதை வேர் என்று சொல்ல முடியாது. அப்படிப் பார்க்கும்போது பெரியார், அம்பேத்கருக்கு வலுவான வேர்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இன்னொரு கோணத்திலிருந்து, இந்திய மரபுகளில் பெரியார், அம்பேத்கருக்கு வலுவான வேர்கள் உண்டு என்று சொல்ல முடியும். அது என்னவென்றால், அவர்கள் பேசிய பிரச்சனைகளின் சமூகவியல் பரிமாணம். சாதி, வருணம், பார்ப்பனியம். இவர்கள் காலத்தில் முன்வைக்கப்பட்ட இந்து மதம் என்னும் அடையாளம். அந்த இந்து மதத்தை வைத்து ஒரு தேசியத்தை உருவாக்கும் அரசியல் ஆகிய பிரச்சினை களின் மூலமாகவும் அந்த வேர் கிடைக்கின்றது. அதாவது, எந்தப் பிரச்சினையை எடுத்துப் பேசுகிறார் கள். எந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்து கின்றார்கள் என்பது மூலமாகவே, அந்த மரபின் உரையாடல்களில் ஓர் இடம் கிடைத்துவிடுகின்றது.

இந்த அளவுக்கு மார்க்சியர்களுக்கு அந்த வேர் களில் வலு இல்லை. நமக்கு உலகாயத-சாருவாக வேர் உண்டு என்று தேவிபிரசாத் சொல்கிறார். ஆனால் அந்தத் தத்துவச் சொல்லாடல்களில் நமக்கு ஒரு தொடர்ச்சி இல்லை. நாம் சாதி, வருணம், பார்ப்பனியம், இந்து மதம் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசவில்லை. மார்க்சியர்களைப் பொறுத்தமட்டில், இதில்தான் பிரச்சினை ஏற்படுகின்றது. செவ்வியல் மார்க்சிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், மார்க்சியர் சமூக ரீதியாக சாதியைவிட, வர்க்கத்தை முன்னிலைப் படுத்தி விட்டார்கள். நடைமுறைத் தளத்தில் சாதியை எல்லாம் தொட்டு இருக்கின்றார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. விவசாய இயக்கத்தை நடத்திய போது, சாதிப் பிரச்சினையைத் தொட்டுச் சென்றுள்ளார் கள். நிலச்சுவான்தாரின் சாதி என்ன? கூலி விவசாயி களின் சாதி என்ன? என்று தெரியாமல் அங்கு படு கொலைகள் நடக்காது. ஆனால், அம்பேத்கர் போல ஏராளமாகக் கருத்தாக்கத் தளங்களில் நுழைந்து நாம் விவாதிக்கவில்லை.

ஆகவே அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் மரபில் இடம் இல்லை என்று சொல்ல முடியாது. மரபில் இடம் வேண்டுமானால், வேதாந்தத்தைப் பேசினால்தான் உண்டு; சமஸ் கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் உண்டு என்ற வாதம் மிகமிக மொன்னையானது. இது இவர்களிடத்து கிடையாது. ஏன், புத்தரிடமும் அந்த ஏற்பு இல்லைதானே. கபீரிடம் கடுமையான பார்ப்னிய, சனதான, மூடநம்பிக்கை எதிர்ப்பு உண்டு. ஆகவே, பெரியார், அம்பேத்கர் தொட்ட பிரச்சினைகளுக்குச் சமூகரீதியான ஒரு வரலாறு இருக்கின்றது. இந்தப் பிரச்சனைகள் நேற்று, இன்று ஆரம்பித்தவை அல்ல; அவை இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் ஆரம்பித் தவை. அந்தப் பிரச்சினைகளைப் பேசிய அம்பேத்கர், பெரியார் ஆகியோரும் அந்த மரபுகளுள் நின்றும், தாண்டியும் அந்தப் பிரச்சினைகளை எதிர்த்து, வெவ் வேறு தளங்களில் நின்று பேசுகிறார்கள்.

*             பெரியாரையும் அம்பேத்கரையும் சமகால இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிறுத்துகிறோம். அவர்கள் நாத்திகர்கள், அவைதீகர்கள் என்ப தாலா? அவ்வாறு நிறுத்துவது நம் சமகாலத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்ய முடியுமா?

பெரியாரையும் அம்பேத்கரையும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்தவில்லை. இந்துத்துவ அரசியலே அவர்களை அவ்வாறு நிறுத்துகிறது. ஹைதராபாத்தில் ரோஹித் வெமுலாவை, ஜே.என்.யூ. மாணவர்களை நாமா இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தினோம். இல்லை, மகாராஷ்டிரம், குசராத், அரியா னாவில் தலித்துகள் தாக்கப்பட்டது, தாக்கப்படுவது, அதனால் தலித்துகள் இந்துத்துவத்திற்கு எதிராகப் போராடி வருவது ஆகியவற்றைப் பார்த்தால் நாமாக தலித்துகளை இந்துத்துவத்திற்கு எதிராக நிறுத்தவில்லை. இந்துத்துவமே அவர்களை எதிரிகளாகக் கருதுகின்றது; எதிரிகளாக ஆக்கி வைத்துள்ளது. இதை இந்துத்துவ வாதிகள் சில சமயங்களில் வெளிப்படையாகப் பேசு கின்றார்கள்; சில சமயங்களில் மறைமுகமாகப் பேசு கின்றார்கள். ஆனால் மிகுந்த வக்கிரத்தோடு செயல்படு கின்றார்கள். அதனால் பெரியாரையும், அம்பேத்கரை யும் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நாம் நிறுத்து கிறோம் என்பது கிடையாது.

சமூகப் படிநிலைகளுக்குச் சமயரீதியான புனிதம் கற்பித்ததை இந்துத்துவவாதிகள் சுயவிமர்சனம் செய்து கொண்டதே கிடையாது. இந்தப் புனிதம் கற்பித் தல் குறித்து, எந்தவொரு மடாதிபதியோ, எந்தவொரு சங்கராச்சாரியாரோ, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்தவொரு சைவ மடத் தலைவரோ அதிகாரப்பூர்வ மாக சுயவிமர்சனம் செய்து கொண்டதே கிடையாது. மத அந்தஸ்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு மடாதிபதியோ, யோகியோ யாராவது ஒரு இந்துமதத் தலைவர், வருணாசிரமம், சாதி வேறுபாடுகள் இந்து மதத்தில் ஏதோ ஒரு காலத்தில் நுழைந்துவிட்டன. அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளிப் படையாக, பிசிறுகள் இல்லாமல் சொன்னது கிடையாது. ஏதாவது அக்கன்னா, இக்கன்னா போட்டுத்தான் அவர்கள் சொல்கிறார்களே தவிர, வெளிப்படையாகப் பேசுவது கிடையாது.

ஆகவே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் தேவை, கால இயைபு, முக்கியத்துவம் எதில் உள்ள தென்றால், தாங்கள் தேர்ந்துகொண்ட விமர்சனக் கருவி, அதை எந்தளவு கூர்மைப்படுத்தியுள்ளார்கள் என்பது போன்ற மற்ற விசயங்களெல்லாம் ஒருபுற மிருக்க, அவர்கள் தேர்ந்துகொண்டு பேசிய பிரச்சி னையின் தளத்தில் உள்ளது, அதுவே, அவர்களை இந்துத்துவம் நிராகரிக்கும்படி ஆக்கிவிடுகின்றது. அதனால் அவர்களைப் பற்றி நாம் மீண்டும் மீண்டும் பேச வேண்டியதாகவும் உள்ளது.

*             பெரியாருக்குத் தத்துவப் பார்வை உண்டா? அல்லது நடைமுறை ரீதியாக பார்ப்பனியத்தை, சாதியத்தை, இந்து மதத்தை எதிர்த்த, பார்ப்பன ரல்லாத இடைநிலைச் சாதிகளின் நலன்கள் முன் னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியார் சிந்த னையா?

இந்தக் கேள்வியில், பெரியாருக்குத் தத்துவப் பார்வை உண்டா, இடைநிலைச் சாதிகளின் நலன்கள் முன்னிறுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியார் சிந்த னையா என்ற இந்த இரண்டு சொற்றொடர்களும் மிகக் கடுமையானவையாகப்படுகின்றன.

அந்தோனியா கிராம்சி எல்லோருக்கும் தத்துவப் பார்வை இருக்கின்றது என்று சொல்வார். தத்துவம் என்பது என்னமோ தலையில் கொண்டை முளைத்த வருக்கு மட்டும்தான், பல்கலைக்கழகப் படிப்பாளிகளுக்கு மட்டும்தான், பெரிய மேதாவிகளுக்கு மட்டும்தான் என்பதைக் கிராம்சி ஏற்றுக் கொள்ளமாட்டார். அவரைப் பொறுத்தவரையில், அவரது நாட்டுச் சூழலில் கிறிஸ்த வப் பங்குத் தந்தை, பள்ளிக்கூட ஆசிரியர், அந்த வட்டார மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் செயல்பாட்டா ளர்கள் ஆகிய எல்லோருக்குமே தத்துவப் பார்வை உண்டு. ஆகவே தத்துவப் பார்வை ஒரு அபூர்வமான சங்கதி அல்ல; அசாதாரணமான ஆற்றல் ஒன்றுமில்லை. ஒருவகையில் அது சாதாரணப் பார்வைதான். ஆகவே பெரியாருக்கு மிக வலுவான, வளமான தத்துவப் பார்வை உண்டு என்பதை மேலே உரையாடியவற்றால் அறியலாம்.

இடைநிலைச்சாதிகளின் நலன்களை முன்னி றுத்திய சொல்லாடல்கள்தாம் பெரியாரின் சிந்தனைகள் என்ற குற்றச்சாட்டு திரும்பத் திரும்ப முன்வைக்கப் படுகின்றது. ஒரு கட்டத்தில் இதைத் தோழர் ரவிக் குமார் ஆரம்பித்து வைத்தார். அதுதொடர்ந்து பேசப் பட்டது. இந்த இடத்திலும் நீண்ட நெடிய கால வரலாறு கொண்ட பார்ப்பன எதிர்ப்பை உற்றுப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பார்ப்பன எதிர்ப்பு புத்தர் காலத்தில் தொடங்கி, சாரு வாகம்-உலகாயதம், தாந்திரிகம், தாந்திரிக அடிப்படை கொண்ட சித்தர் மரபு, பக்தி மரபு, இந்தோ - இசுலாமிய மரபு, சந்தர் மரபு, கபீர் மரபு, குருநானக் கினுடைய சீக்கியம் ஆகிய பல இடங்களில் உள்ளது. பல காலங்களில், பல மரபுகளில் பார்ப்பன எதிர்ப்பில் சத்திரியர்கள், வைசியர்கள், கறாராகக் கலைச் சொற் களைக் கொண்டு குறிப்பிட்டால் கைவினைஞர்கள் போன்ற இடைநிலைச்சாதிகள்தாம் முன்னிலை எடுத்து நின்றிருக்கின்றார்கள். கைவினைஞர்களுக்குச் சித்தர் மரபோடு ஒரு நெருங்கிய தொடர்புண்டு. சித்தர் மரபில் தனிப்பட்ட திறன்களை மையப்படுத்துவதால், அதனைக் கை வினைஞர் சிந்தனை என்று சொல்வார்கள். ஆகவே பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனரல்லாத எல்லாச் சாதிகளிடமும் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்து வந்திருக்கின்றது. அது நீண்டகால வரலாறு கொண்டது.

தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னெடுத்ததில் பெரியாரை யும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தேர்தல் அரசியல் கட்சி களையும் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அப்படிப் பிரித்துப் பார்க்காததால், சில சமயங்களில் எல்லாப் பழிகளையும் பெரியார் மீதே சுமத்திவிடுகின்றோம். பெரியாரின் தனிப்பட்ட பண்பு நலன்களே சற்று வித்தியாச மானது. அவை அராஜகப் பண்பு கொண்டவை. இந்த விசயம் பற்றி, எஸ்.வி.ஆரைவிட, பின்னை நவீனத்து வங்கள் வந்த காலத்தில் தெரிதா, பூக்கோ ஆகியோரை எல்லாம் முன்வைத்து அ.மார்க்ஸ் அதிகம் சிந்தித்துள் ளார். பாரதியிடம் எப்படி ரொமாண்டிக்கான கருத்துகள் இருந்தனவோ, அப்படி பெரியாரிடம் ஒரு அராஜக வெடிப்புகள், தீப்பொறிகள் போல கருத்துகள் வந்து விழும். அவர் தன்னை ஒரு மேட்டுக்குடியாக, அறிவாளியாகக் காட்டிக்கொள்ளவில்லை. பட்டறிவுத்தளத்திலிருந்து பேசிய தெறிப்புகள் அவரிடம் உண்டு. ஆகவே அவர் திட்டமிட்டு இடைநிலைச் சாதிகளின் நலன்களைப் பற்றிய உணர்வோடு செயல்பட்டார். அவற்றை முன்னிறுத்திப் பேசினார் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவர் முன்வைத்த விவாதத் தளங்கள் நம்மை எங்கெங்கோ அழைத்துச் செல்லும் பண்பு கொண்டவை. அந்த விவாதத் தளங்களின் அடிப்படை விரிவுநிலைப் பண்புகள் மிகப் பரந்தவை. அவற்றால் தாம் நம்மிடையே அவர் தொடர்ந்து நிற்கின்றார்.

பெரியாரிடம் தேர்தல் அரசியல் இல்லை. தேர்தல் அரசியல் நலன்களுக்காக, அந்த ஊரில் உள்ள பெரும் பான்மை சாதி எது, அதிலிருந்து ஓர் ஆளை எடுப்பது, அந்தச் சாதி பற்றி பெருமைப்படுத்திப் பேசுவது எல்லாம் பெரியாரிடம் இல்லை. ஆனால் இவையெல்லாம், இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்வைத்துத் தேர்தல் அரசியலைக் கையிலெடுத்த திராவிட இயக்க அரசியல் கட்சிகளிடம் உண்டு. இந்தக் கட்சிகள் இடை நிலைச் சாதிகளை முன்னிறுத்தி, ஆட்களைத் தேர்ந் தெடுத்துள்ளார்கள். ஓட்டு வங்கிகளாக அவர்களைப் பயன்படுத்தியுள்ளார்கள். சில சமயங்களில், சில மோதல்களில் இடைநிலைச் சாதிகளை ஆயுதப் பாணிகள் ஆக்கியுள்ளனர். ஆகவே, பெரியாரையும் தேர்தல் அரசியல் திராவிடக் கட்சிகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு பிரித்துப் பார்த்தால்தான் பெரியாரைப் புரிந்து கொள்ள முடியும்; இடைநிலைச் சாதிகளின் நலன்களை முன்னிறுத்திய சொல்லாடல் கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாது என்று நினைக்கிறேன்.

சாதி, வருணம், பார்ப்பனியம், இந்துமதம் ஆகிய வற்றுக்கு எதிராக, வலுவாகப் பெரியார் நின்றிருக் கின்றார், அகில இந்திய அளவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார் என்று இன்று உணரமுடிகிறது. மதம் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும், கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு பெரியாரை நோக்கி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் பெரியார் தான் இந்துப் பெரும்பான்மைவாதத் தேசியத்திற்கு எதிராக வலுவான தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார். அவரைச் சின்னச் சின்ன குற்றச்சாட்டுகளை முன் வைத்துப் புறக்கணிப்பதில் பயனில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இழப்புகளையும் தோல்விகளையும் சந்திக்க வேண்டிவரும் என்று நினைக் கிறேன்.

*             பெரியார், அம்பேத்கர் ஆகியோரை இந்திய இடது சாரிகள் / மாக்சியர்கள் பயன்பாட்டுவாத நோக்கில் கைகொள்கின்றார்கள். ஆனால், இந்திய மார்க்சி யர்கள் தங்கள் சிந்தனையுடன் இவர்களை இணை வாக்கம் செய்துகொள்ளவில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. இது சரியா? சில தமிழ் மார்க் சியர்கள், மார்க்ஸ் காலத்து முந்தைய ஐரோப்பிய பொருள் முதல்வாத மரபுடன் ஒப்புவைத்து, பெரியாரைக் கொச்சைப் பொருள்முதல்வாதி என்று வரையறை செய்கின்றனர்; வாதிடுகின்றனர். இது சரி தானா? இந்த இந்திய மரபில் தங்கள் வேர் களில் ஊன்றி நின்று, இவர்களையும் தமது ஊற்று களாக இந்திய, தமிழக மார்க்சியர்கள் கொள்ள முடியுமா?

நமது கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான ராஜேஷ்வர் ராவ் அறக்கட்டளை, இந்தியப் பொருள் முதல்வாதங்கள் பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்த இருக்கின்றது. அக்கருத்தரங்கில் கலந்துகொள்ள எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை விடுத்த தோழருக்கும் எனக்கும் நடந்த உரையாடலில் நவீன காலத்துக்கு முந்தைய இந்தியப் பொருள் முதல்வாத வகைகளின் முக்கியத்துவம் குறித்து பேசிக் கொண்டோம். இந்தியாவின் அந்தந்த வட்டாரத் தாய்மொழி களில் உள்ள பொருள்முதல்வாதங்கள் பற்றி அறிந்துகொள்ளுதல் மிகமிக அவசியம். பொதுவாகச் சொல்வதென்றால் நவீன காலத்துக்கு முந்திய சிந்தனை முறைகளை அறிந்துகொள்ள வேண்டும்.

கறாராக நோக்கின், நவீன காலப் பொருள் முதல் வாதத்தை முன்னுக்குக் கொண்டு சென்றவர்கள் ஐரோப்பாவின் முதலாளிகள். பாயர்பாக்கின் செர்மானியப் பொருள்முதல் வாதம் மானிடவியல், மனிதப் பண்பியல் சார்ந்த பொருள் முதல்வாதம் என்பார்கள். பிரான்சிஸ் பேக்கன், ஜான் லாக் போன்றோருடைய பொருள்முதல் வாதம் முரட்டுப் பொருள் முதல்வாதம், முதலாளியத்தின் பொருள்முதல்வாதம், வணிகத் தொழிற்சமூகத்தின் பொருள்முதல்வாதம். இதில் கொச்சைத் தன்மை உண்டு. இது அதிகாரத்தின் கோட்பாடாகவும் இருந்தது. பொருள்முதல்வாதம் என்று சொன்னால், நாம் என்னமோ புனிதமான மார்க்சியக் கோட்பாடு போல நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அறிவியல்-தொழில்நுட்பங்களை அதீதமாக உன் னதபடுத்திப் பார்க்கும்போதுதான், நவீன காலத்துப் பொருள்முதல் வாதங்கள் அதிக அற்புதமானதுபோல தெரியும். ஆனால் நாம் இன்று வாழ்ந்து கொண் டிருக்கிற காலத்தில் அறிவியல்-தொழில்நுட்பங்களை அதிகமாக உன்னதப்படுத்த இயலாது. முதலாளிய காலகட்டத்தில் உருவான கோட்பாடுகள், தொழில்நுட்ப வாதம், பொருளாதாரவாதம் ஆகியவற்றைக் கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

ஆகவே, நான் சொல்ல வருவது என்னவென்றால், நவீன காலத்து ஐரோப்பிய பொருள்முதல்வாதங்கள் என்று பேசப் படுவதைப் போல, மூன்றாம் உலகப் பொருள்முதல்வாதங்கள் பற்றிப் பேச வேண்டும். பழங்குடிகளின் பொருள்முதல்வாதங்கள் பற்றிப் பேசிப் பார்க்க வேண்டும். சாருவாகம் ஒரு பொருள் முதல் வாதம். சாங்கியத்தில் பொருள் முதல்வாதம் உண்டு. தாந்திரிகத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. வைசேடி கத்தில் பொருள்முதல்வாதம் உண்டு. தமிழில் திணைக் கோட்பாட்டில் பொருள் முதல்வாதம் உண்டு. சாக்த சிந்தனையில் பொருள்முதல்வாதம் உண்டு. இந்திய பொருள்முதல்வாதங்களின் பல்வேறு வடிவங்கள் பற்றி ஆழமாகப் பேச வேண்டும்.

தமிழில் உள்ள திணைக்கோட்பாட்டில் அட்டகாசமான பொருள்முதல்வாதம் இருக்கின்றது. நிலமும் பொழுதும் முதல் எனப் பேசும்போது, அது வித்தியாசமான பொருள் முதல்வாதத்தைப் பேசுகிறது. மார்க்ஸ் காலத்துக்கு முந்தைய பொருள்முதல்வாதங்கள் சரியானவை அல்ல என்று கழித்துக் கட்டுகிற வரைசட்டகமே சரியான தில்லை.

பெரியார் ஒரு வித்தியாசமான பொருள்முதல்வாதி. அவர் கொச்சைப் பொருள்முதல்வாதி அல்ல. அப்படி வரையறுப்பது தவறு. இந்தியச் சூழல்களில் பார்ப்பனிய எதிர்ப்பு சார்ந்த, பெரியாரின் நாத்திகம் என்பது ஒரு நியாயமான வரலாற்றுத் தொடர்ச்சியின் –  Historical Argumentative - வரலாற்று நிலைப்பாட்டின் உச்சம்; எல்லை. ஆகவே அதை அப்படியே நிராகரித்து விட, மறுதலித்துவிட முடியாது. அதனுடன் நின்று தான், நாம் அதைக் கொஞ்சம் நெகிழ்வார்ந்த நிலைக் குக் கொண்டுச் செல்லலாம். வித்தியாசமான இயங்கியல் நிலைக் குப் பயணிக்கலாம். ஆனால் பெரியார் பேசிய நியாயத்தன்மை கொண்ட வைதீக எதிர்ப்புப் பொருள் முதல்வாதம் என்பது ஒரு வரலாற்று அறிவிக்கை. பழைய தத்துவார்த்தக் கலைச் சொற்களில் சொன்னால் வரலாற்றின் மகாவாக்கியம். அதனால் பெரியார் சிந்தனை நெடுநாளைக்குத் தங்கி நிற்கும்.

மாறும் அரசியல் விவாதச் சூழ்நிலைக்கு ஏற்ப, இன்னும் சில புதிய நெகிழ்வார்ந்த நிலைக்குக் கொண்டுச் செல்ல வேண்டியதாக இருக்கலாம். இப்போது நாத்தி கம், செக்குலரிசம் - சார்பின்மைவாதம் பற்றி புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பண்பாட்டு வேர்கள் இல்லை என வாதிடப்படுகின்றது. மானிட வியல் ஆய்வுகளின், பண்பாட்டு ஆய்வுகளின் வழியாக அவற்றுக்குப் பண்பாட்டு வேர் கிடைக்கும்போது, பண்பாட்டு வேர் கொள்ளல் நடக்கும்போது அவை சற்று வேறுவிதமாக மாறக்கூடும். தமிழிலேயே பண்பாடு மற்றும் பெரியாரியம் பற்றிய விவாதம் நடந்திருக்கின்றது. இவற்றைத் திராவிட இயக்கச் சிசுக்களும் நாமும் செய்துள்ளோம். தொ. பரமசிவன் முழுக்க, வலுவான பெரியாரியவாதி. ஆனால், மானிட வியல், நாட்டார் வழக்காற்றியல் வழியிலான ஆய்வுகள் செய்திருக்கின்றார். பண்பாட்டுக் கூறுகளையெல் லாம் ஆழமாகத் தன்வயப்படுத்திக் கொள்வார். ஆனாலும்கூட பெரியார் சிந்தனை என்பது வரலாற்று வாக்கியம். அதை நிராகரிக்க முடியாது. கொஞ்சம் நெகிழ்வாக்கம் செய்யலாம். பெரியார் கொச்சைப் பொருள்முதல்வாதி என்பதெல்லாம் பொறுப்பில்லாத, அப்புறப்படுத்த வேண்டிய வார்த்தைகள்.

எஸ்.வி.ஆருடைய பணிகள், அ.மார்க்ஸ் உள்ளிட்ட பின்னை நவீனத்துவரின் வேலைகள், பெண்ணிய தளங் களிலிருந்து வ. கீதா அவர்கள் பெரியாரைத் தன தாக்கிக் கொள்ளும் இடங்கள் போன்ற நியாயப்பாடுகள் வலுவாகும்போது, மார்க்சியர்களாகிய நமது பார்வை களும் மாறிக்கொண்டே வருகின்றது. பயன்பாட்டுவாத நோக்கில் பெரியாரை எடுத்துக்கொண்டோம் என்று சொல்ல முடியாது. பெரியாரை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்ற விவாதம் நம்மிடையே நீண்ட நாள்களாக நடைபெற்று வருகின்றது. நாம் பெரியாரை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனமைக்குப் பலவித காரணங்கள் இருந்திருக்கின்றன. எரிச்சல்படுத்தக் கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியலும் சில சமயங்களில் காரணமாக இருந்திருக்கின்றது.

‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ எஸ்.வி.ஆர். - வ. கீதா ஆகியோரின் மிக நல்ல படைப்பு. அதில் அவர்கள் பெரியார், சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பிப்பதற்கு முயன்றதைப் பற்றியெல்லாம் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளனர். அது நமக்குப் புதுவெளிச்சங் களைத் தருகின்றன. பெரியாரின் சில பரிமாணங்கள் பற்றிய அ. மார்க்சின் பார்வைகளும் மிக முக்கிய மானவை. பெரியாரிடம் உள்ள கட்டவிழ்த்தல், அராஜகக் கூறுகள் இல்லாமல் இந்தியப் பழமையை எதிர் கொள்ள முடியாது என்று அ. மார்க்சின் பார்வை முக்கியமானது.

ஆனால் நாம் இன்னும் இயங்கியல் பொருள்முதல் வாதம் என்ற சொல்லை மட்டும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றேம். ஆனால் இந்தியச் சூழல்களுக்குள் பொருள்முதல் வாதம் என்பது சாதி, அதைத் தாங்கிப் பிடிக்கிற சனாதனம், இந்துத்துவம் ஆகியவற்றை விமர்சிக்கின்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படி உருவானால்தான் சமூகத்திற்கும் பயனுடையதாக இருக்க முடியும் . இதிலில்லாமல் வெறும் வர்க்கவாதம் பேசினால் பயனில்லை.

(நன்றி : நியூசெஞ்சுரியின் “உங்கள் நூலகம்” 2017 ஏப்பிரல் இதழ் - தோழர் ந.முத்துமோகன் அவர்களின் நேர்காணல் சற்று சுருக்கித்தரப்பட்டுள்ளது)