“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பது அரசியல் சாசனத்தின் 14 வது பிரிவு நமக்கு வழங்கியுள்ள உரிமையாகும். அதை நிரூபிக்கக் கேரள இடது முன்னணி அரசுக்கு ஒரு வாய்ப்பாக, உச்சநீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று வழிபடலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் கடந்த செப்டம்பர் 28 ந் தேதி வழங்கியது. கேரள அரசும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாதப் பூஜைக்காக நடை திறக்கும் போது அனைவரும் சென்று வழிபடலாம் என்று கூறியது.
அதனைத் தொடர்ந்து கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர் களும், சபரிமலைக்குச் சொந்தம் கொண்டாடும் பந்தளம் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த குடும்பத்தினரும், நாயர் ஜாதி அமைப்பைச் சேர்ந்தவர் களும் இந்து மதவெறி அமைப்பைச் சார்ந்தவர்களும் கேரள இடது முன்னணி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அகில இந்தியத் தலைமை ஆதரித்துள்ளது. ஆனால், கேரள மாநில காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து நிற்கிறது. பா.ஜ.க.வோடு சேர்ந்து போராட்டத்தைத் தூண்டியது.
இப்படிப்பட்ட ஒரு பதட்டமான சூழலில் அக்டோபர் 17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் பெண்களுக்கு அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். காவல்துறையும் குவிக்கப்பட்டது. ஆனாலும் அதையும் மீறி பக்தர்கள் என்ற போர்வையில் இந்து மத வெறியர்களும், நம்பூதிரி, நாயர் ஜாதி வெறியர்களும் சபரிமலைக்குச் செல்லும் வழியான சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல், பம்பை ஆகிய பகுதிகளில் ஆண்களும் பெண்களுமாகத் திரண்டனர்.
மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர் திரண்டார்கள். சபரிமலைக்குச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பெண்கள் இறக்கிவிடப்பட்டனர். குழந்தைகளும், வயதானவர்களுமே அனுமதிக்கப்பட்டனர். வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 10 பத்திரிகையாளர்கள், 5 பக்தர்கள், 15 காவலர்கள் எனப் பலரும் தாக்கப்பட்டனர். கார்களும் வேன்களும் உடைக்கப்பட்டன.
வழக்கும் ஆகம விதியும்
கேரளாவைச் சேர்ந்த “இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம்” என்ற அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் சேர்ந்து வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு பொதுநல வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீண்டகால நிலுவைக்குப் பின்பு கடந்த 2016-ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2017ல் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. 5 பேர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து கடந்த செப்டம்பர் 28 ம் தேதி சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் போகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டனர். அதில் நான்கு நீதிபதிகள் ‘வழிபடலாம்’ என்ற தீர்ப்பையும், ஒரு பெண் நீதிபதியான ‘இந்து மல்கோத்ரா’ என்ற அம்மையார் அதற்கு எதிராகவும் வழங்கினர். அவர் தனது தீர்ப்பில்,
“சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்தும். மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். சம உரிமை என்பதுடன் மதரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது. மதநம்பிக்கையுடன் பகுத்தறிவு, மாறும் சூழல் போன்றவற்றை ஒப்பிட முடியாது. ஒவ்வொரு சமூகமும் பின்பற்றி வரும் மத நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. இந்தியா பல்வேறு மக்கள் வாழும் நாடு. அவர்களது நம்பிக்கையைப் பின்பற்ற அரசியல் சட்டம் அவர்களுக்கு உரிமை வழங்கியுள்ளது”
என்று கூறியுள்ளார்.
அவர் மட்டுமல்ல முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேயகட்ஜு, மன்னர் குடும்பத்தினர், இந்து அமைப்புகள் என அனைவரும் தெரிவிப்பது ஒரே ஒரு விஷயம்தான். அதுதான் ஆகம விதி. ஆகம விதியின் அடிப்படையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்ட பெண்கள் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். மற்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் ஆகம விதியைப் பின்பற்றாத இவர்கள் சமத்துவத்திற்கான நடவடிக்கைகளை மட்டும் ஆகம விதியைக் காரணம் சொல்லித் தடைசெய்யப் பார்க்கிறார்கள். அய்யப்பன் பிரம்மச்சாரி என்றும் அவன் சன்னதிக்கு மாதவிடாய் முடியாத பெண்கள் வரக்கூடாது என்பது ஆகமவிதி என்றும் சொல்லுகிறார்கள்.
அய்யப்பன் பிரம்மச்சாரியா?
அய்யப்பன் பிரம்மச்சாரி என்றும் அவருடைய பக்தர்கள் மது, மாது போன்ற பழக்கங்கள் இல்லாமலும் அசைவம் உண்ணாமலும் சபரி மலைக்கு வரவேண்டும் என்பதும், சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து விட வேண்டும் எனப் பல விதிகள் உள்ளன. ஆனால் இன்று அவை எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அய்யப்ப பக்தர்களுக்கு மதுக்கடைகளில் தனி டம்ளர் முறை கடைப்பிடிக்கப் படுகிறது. பெண்கள் விஷயத்திலும் கண்டரரு உள்படப் பல அர்ச்சகர்கள் குற்றச் சாட்டுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையெல்லாம் நாம் தனிமனிதப் பலவீனங்கள் என்று ஒதுக்கினாலும் அய்யப்பனே இரண்டு மனைவிகளுக்குக் கணவராக உள்ளார் என்பது பக்தர்கள் அனைவரும் அறிந்தும் வசதியாக மறந்த கதையாகும். அய்யப்பன் கோவில்கள் மொத்தம் ஏழு இடங்களில் உள்ளன. அவை ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப் புழா, எருமேலி, பந்தளம், சபரிமலை, ஊசாத்துணை ஆகும்.
இவற்றில் ஆரியங்காவுக் கோவிலில் செளராஸ்ட்டிர குலத்தைச் சேர்ந்த புஸ்கலையுடன் அரசராகக் காட்சி தருவதாக ஸ்தல வரலாறு சொல்கிறது. அச்சன் கோவிலில் பூர்ணா, புஸ்கலை என்ற இரண்டு பெண்களுடன் காட்சியளிப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆக ஏழு கோவில்களில் இரண்டில் பெண்களோடு காட்சி தரும் அய்யப்பன் சபரிமலையில் மட்டும் பெண்களை ஏற்றக்கொள்ள மாட்டாரா?
மாதவிடாய் என்பது மனித சமூகத்தின் சரிபாதியாய் இருக்கக்கூடிய பெண்களின் உடலில் இருந்து வெளிவரும் ஒரு இயற்கையான கழிவு என்பது கூட இவர்களுக்குத் தெரியாதா? மெத்தப் படித்த மேதாவிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், ஏன் பெண் பிரமுகர்கள் என அனைவரும் எதிர்க்கின்றனர்.
இதில் மிகப்பெரிய கொடுமை என்ன வென்றால் 2006-ல் பெண்களைக் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என வழக்குப் பதிந்தது ஆர்.எஸ்.எஸ்.ஸின் பெண் வழக்கறிஞர்கள்தான். ஆனால் இன்று தங்கள் சுயநலத்திற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் போராட்டத்தைத் தூண்டிவிடுகின்றன. உண்மையில் மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான பிரச்சனை என்பது நீதிபதி இந்து மல்கோத்ரா அவர்களுக்குத் தெரியாதா? பிறகு ஏன் இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால் இவர்களின் மூளை மனுதர்மத்தால் ஆட்சி செய்யப்படுகிறது.
சமத்துவத்திற்கு எதிரான ஆகமங்கள்
இந்தியத் துணைக்கண்டத்தில் எந்தச் சமூக மாற்றமாக இருந்தாலும் அவை ஆகம விதிகளுக்கும், இந்துமத சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கும் எதிரானதே ஆகும். நாம் இன்றைக்குக் காட்டு மிராண்டி வழக்கம் என்று சொல்லக்கூடிய ‘சதி’ எனும் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், கோவில்களுக்குப் பெண்களைப் பொட்டுக் கட்டி விடுதல் போன்றவை கடந்த காலங்களில் புனிதமானதாக இருந்தன. பல படித்த மேதாவிகள் அதை மாற்றக்கூடாது எனச் சட்டமன்றங்களிலும் பேசியுள்ளனர். ஆனால் அவை இன்று நமக்குக் காட்டுமிராண்டி காலப் பழக்கங்களாக மாறிப் போயின. அதுபோல்தான் மாதவிடாயும். மாதவிடாய் பற்றி மனுதர்மம் என்ன சொல்கிறது?
ரஜஸ்வலையான (மாதவிலக்கான) பெண் ரஜஸ் (ரத்தம்) நின்றபிறகு சுத்தமடைவாள். - 5அத்யாயம் 66ஆம் சுலோகம்
நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைப் படித்தாலும், உடல் உறுப்புகளைப் பற்றிய மருத்துவம் படித்தாலும் இந்தியச் சமூகத்தின் மூளையில் பதிந்துள்ள இந்த மனுதர்மச் சிந்தனையை மாற்றாமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஆகமங்களாக இருந்தாலும், வேத சாஸ்திரங்களாக இருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சுரண்டலுக்கான கருவியாகத்தான் இருந்துள்ளது. நாம் ஆகம விதிகளையும், மனு சாஸ்திரச் சட்டங்களையும் அடித்து நொறுக்காமல் சமூக மாற்றங்களைச் சாத்தியப்படுத்த முடியாது. அதனால்தான் இந்தியச் சமூகத்தில் சமத்துவத்தை நேசித்த மாபெரும் தலைவர்களான பெரியாரும் அம்பேத்கரும் மனுசாஸ்திரத்தைக் கொளுத்தினர். புராணங்களையும் கொளுத்த வேண்டும் என்றனர்.
ஆகமங்களைச் சிதறடித்த தமிழகம்
பார்ப்பனியப் பண்பாட்டிற்குப் பாடைகட்டும் இடமாகத் தமிழகம் எப்பொழுதும் இருந்துள்ளது. தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஆகமங்கள், வேதங்கள் என்று கதை விட்டோர்களின் புரட்டுகளுக்கு எதிராகச் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டங்களை முன்னெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
கோவில்கள் 1920 வரை பார்ப்பனப் பண்ணையமாகவே இருந்தன. அவர்கள் வைத்ததுதான் சட்டம். ஒவ்வொரு கோவிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், நகைகள், மாடுகள் எனச் சொத்துக்களும் இருந்தன. அந்தக் கோவிலுக்குட்பட்ட கிராமத்து மனிதர்கள் அனைவரும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்தனர். கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்ற நயவஞ்சக வார்த்தையைக் கூறி மக்கள் வெளியே நிறுத்தப்பட்டனர்.
1920-ல் இந்து அறநிலையத்துறைப் பாது காப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பல்வேறு திருத்திய அம்சங்களுடன் 1925-ல் பனகல் அரசர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களிலும் ஆண் - பெண் இருபாலரும் கருவறைக்கு வெளியில் உள்ள பிரகாரம் வரை சென்று வழிபடலாம். கோவில் சொத்துக்கள் அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
ஒவ்வொரு கோவிலிற்கும் அறநிலையத் துறையின் சார்பில் நிர்வாகக் குழு அமைக்கப் பட்டது. அனைத்துக் குழுவிலும் தாழ்த்தப்பட்ட சமூக உறுப்பினர் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதும் கட்டாயம் ஆக்கப்பட்டது. சட்டம் செய்வது நீதிக்கட்சியின் வேலை என்றால், அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டிய அளவுக்குத் தேவையான சமுதாய மாற்றத்தைப் பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் வேலையாக மேற்கொண்டார்.
சேரன்மாதேவி குருகுலம், வைக்கம் போராட்டம், சுசிந்திரம் பத்மநாபசாமி கோவில் வீதிகளில் நடக்க உரிமை எனப் பல போராட்டங்கள் நடந்தன. 1921 ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முறைகேடுகளை எதிர்த்தும் மற்றும் அனைத்து மக்களையும் கோவிலுக்கு அழைத்துச் சென்றதாலும் ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்பிரமணியன், ஜே.எஸ். கண்ணப்பர் ஆகியோர் மீது கல்லடி நடத்தப் பட்டது. மூவர் மீதும் 300 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, ஜே.என்.ராமநாதன் திருச்சி தாயுமானவர் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக் கொண்டு செல்லும்போது கோவில் படிக் கட்டுகளில் அடித்து உருட்டி விடப்பட்டனர். தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் திருவண்ணா மலைக் கோவிலில் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பர் கோவிலுக்குள் வைத்துப் பூட்டப்பட்டார். இப்படி ஏகப்பட்ட போராட்டங்களை நடத்தி மக்களைப் பக்குவமடையச் செய்தது; இன்றைக்கு நாம் அனுபவிக்கின்ற எந்த ஒரு உரிமையும் ஆகமங்களையும், கோவில் சம்பிரதாயங்களையும், பழக்க வழக்கங்களையும் எதிர்த்துப் போராடியதன் விளைவே ஆகும்.
பி.ஜே.பி எதிர்ப்பு போதாது; ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமத எதிர்ப்பே அவசியம்
கேரளாவில் இன்றைக்கு முதல்வராக இருக்கக் கூடிய தோழர் பினராயி விஜயன் அவர்கள் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதிலும் முனைப்போடு செயல்படுகிறார். தோழரின் அனைத்து நடவடிக்கைக்கும் நாம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.
மேலும் அமித்ஷாவின் மிரட்டல்களைத் துணிச்சலாக எதிர்கொண்டு காவிப்பயங்கர வாதிகளைக் கைதும் செய்தார். சபரிமலைப் பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். ஆனால் காவிக் கூட்டத்தை அமைப்பு ரீதியாக எதிர் கொள்ளவில்லை. பத்தாயிரக் கணக்கில் மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் திரண்ட போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக நாம் ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டியிருக்க வேண்டும்.
அமைப்புரீதியாக வலுவாக உள்ள ஒரு கட்சி, போதிய அளவிற்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை என்றே கருதப்படுகிறது. கேரள சி.பி.எம். அமைப்பு அரசியல் களத்தில் இந்துத்துவ எதிர்ப்பில் சமரசமின்றிப் போராடுகிறது. ஆனால், அரசியல் களத்தில் இந்துத்துவாவை வெற்றிபெற வேண்டுமானால், சமுதாயச் சட்டங்களான இந்துமத வேதங்கள், சாஸ்திரங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு, பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் அழிக்க வேண்டியதன் அவசியத்தைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். தோழர்கள் வெகு மக்களிடையே அவற்றைப் பரப்ப வேண்டும்.
அரசியல் விடுதலையை மட்டும் நோக்கமாகக் கொண்டு ஒரு அமைப்பு இயங்கினால், இப்போது கேரளாவில் நடப்பது போன்ற எதிர்ப்புகளுக்குப் பணிந்துதான் ஆகவேண்டும். பி.ஜே.பி. எதிர்ப்பு என்பது போதாது. நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.ஸை எதிர்ப்பது, ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படைக் கொள்கைகளை எதிர்ப்பது என்ற நிலைக்கு உயர்ந்தால், அரசியலில் பி.ஜே.பி.யை வெல்லலாம். பெரியார் அந்த அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் பல புரட்சிகளைச் செய்தார். பெரியாரியல் எனும் ஆயுதத்தைப் பொதுவுடைமைத் தோழர்களும் கையிலெடுத்தால் ஆரியத்தை அழிக்கலாம்.