நிறுவனமயப்படுத்தப்பட்ட பார்ப்பன – இந்து தெய்வங்களுக்கு எதிரான பண்பாட்டைச் சேர்ந்தவை நாட்டார் தெய்வங்கள். இவை பன்மைத்துவம் கொண்டவை. ஆகமங்கள் போன்ற என்ற விதிமுறைகளும் இல்லாதவை. அதிகார மய்யங்கள் போல நம்மை அடக்காமல், அடித்தட்டு மக்களின் நம்பிக்கை சாந்து இயங்குபவை. அவற்றை மூடநம்பிக்கைகளாகக் கூற இயலாது. இராமன், விநாயகன் போன்ற நிறுவன மயப்படுத்தப்பட்ட பார்ப்பனக் கடவுள்களை எதிர்த்த பெரியாரேகூட, இந்த நாட்டார் தெய்வங்களை எதிர்க்கவில்லை. அந்த நம்பிக்கைகளை விமர்சிக்கவில்லை என்பவை போன்ற பல கருத்துக்களை பல அறிஞர்களும், வரலாற்றாளர்களும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் தமிழறிஞர், இனவியல் ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். கல்வியாளர் மட்டுமல்ல, மக்களோடு மக்களாக வாழ்பவர். பண்பாட்டு அசைவுகளை நேரடியாகவும் நன்கு அறிந்தவர். பண்பாட்டுத் தளத்தில் அவரது கருத்துக்களோடு நமக்கு மாறுபாடு உள்ளது. நாட்டார் தெய்வங்கள் குறித்து பல நேர்காணல்களில் அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்க, அவரது நேர்காணல்களில் இருக்கும் சில தகவல்களை எடுத்து அவற்றுக்கு பதில் கொடுத்துள்ளோம்.
“நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்? இதுதான் என் தெய்வம், வழிகாட்டுகிறது என்று நம்புவது நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு எங்கே அதிகாரம் குறுக்கே வருகிறதோ அங்கே மூடநம்பிக்கை பிறக்கிறது. 'உனக்காக நான் யாகம் பண்றேன், ஹோமம் பண்றேன்' என்று சொல்வது மூடநம்பிக்கை. அதாவது அர்ச்சகர் என்ற ஒரு அதிகாரம் இங்கே குறுக்கே வருகிறது. நம்பிக்கை இயல்பானது.
அதிகாலையில் வயல் வெளிக்குப் போகிற வழியில் சூரிய உதயத்தைப் பார்த்து விட்டால், செருப்பைக் கழற்றிவிட்டு கும்பிடு போடுகிறோம். அதை மூடநம்பிக்கை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அந்த சூரியன் இல்லையென்றால் பயிர் விளையாது. அது ஒரு நம்பிக்கை. அதுவே பெரிய கோவிலாக உருவெடுத்து, அங்கே அர்ச்சகர் வரும் போது, மூடநம்பிக்கை பிறந்துவிடுகிறது. நம்பிக்கையில் அரசு அதிகாரம் மட்டுமல்ல?, ஏதோ ஒரு ஆன்மீக அதிகாரம் குறுக்கே வந்துவிட்டால்கூட?, அது மூடநம்பிக்கை யாகிவிடும்.” - தொ.ப
நாட்டில் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அனைவரும் ஏதோ ஒரு குலதெய்வத்தை வணங்கித்தான் வருகிறார்கள். இதுதான் என் தெய்வம், வழகாட்டுகிறது என்று நம்பி பலநூற்றாண்டுகளாக வணங்கி வந்த மக்களின் வாழ்க்கைநிலை, இன்றுவரை தாழ்த்தப்பட்டவர்களாகவே வாழ்வதும், தீண்டாமை வன்கொடுமைகளில் அழிவதும், மலக்குழிகளில் சாவதுமாக உள்ள மாற்றமின்றி இருக்கிறது. தமிழகத்தில் பதிவான வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகள் குறித்த விபரங்களை வேலூர் பேராசிரியர் அய்.இளங்கோவன் 2008 செப்டம்பர் மாத தலித் முரசு இதழில் வெளியிட்டுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில், கடந்த 1990 முதல் 2006 வரை 16 ஆண்டுகளில், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் பதிவான வழக்குகள் 6157 மட்டுமே. சேலம் மாவட்டத்தில் வெறும் 30 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்பட்ட 6157 வழக்குகளில் 207 வழக்குகள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டவையாகும். பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவை, 3 சதவீதம் மட்டுமே. பதிவு செய்யப்பட்ட 6157 வழக்குகளில், 1657 வழக்குகள் புலன்விசாரணை செய்த காவல்துறை அதிகாரியாலும், 2297 வழக்குகள் நீதிபதிகளாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மிக அண்மைக் கால புள்ளி விபரம் இது. அவற்றின் அடிப்படையில் பார்த்தால், நிலைமை மேலும் மோசமாகி வருவதை அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆண்டறிக்கையில், நாடு முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு விகிதத்தின்படி இந்தியாவில் உள்ள காவல்நிலையங்களில் ஒரு ஆண்டுக்கு ஒரு வழக்கு கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகவில்லை எனக் கூறப்பட்டிருந்தது. அந்த நிலை இப்போது வேறுவடிவில் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் கொஞ்ச நஞ்ச வழக்குகளையும், விசாரணை அதிகாரிகளும், விசாரணை நீதிமன்ற நீதிபதிகளும் தள்ளுபடி செய்கிறார்கள். அதன்மூலம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே நாட்டில் ஒழித்துக் கட்டும் வேலையை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
- யாக்கன், விழிப்புணர்வு, அக்டோபர் 2008
அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட சமுதாயப் பெண்கள் மீதான தாக்குதல் தொடர்பான புள்ளிவிபரங்களை சூஊசுB அமைப்பு வெளியிட்டுள்ளது. அவற்றின்படி கடந்த 2009 ஆண்டு 1346 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். 2010 ல் 1949 பேரும், 2011 ல் 1557 பேரும், 2012ல் 1576 பேரும், 2013 ல் 2073 பேரும், 2014 2233 பேரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். – Times of india
ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்படும், ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இவை எதையும் மாற்றாத எந்தக்கடவுளானாலும், அது குலதெய்வமோ, பெருந்தெய்வமோ, நடுகல்லோ எதுவாக இருந்தாலும் அவற்றை நம்புவதும், வழிபடுவதும் மூடநம்பிக்கைதானே? இது எப்படி நம்பிக்கை ஆகும்? சிறுதெய்வம், குலதெய்வம், கிராமத்தெய்வம், தமிழ்த்தெய்வம், பெருந்தெய்வம் எதை நம்பினாலும், வழிபட்டாலும் பலன் ஒன்றுமில்லை அனைத்துமே மூடநம்பிக்கைகள் தான். இந்த நிலையில், நம்பிகையில் அதிகாரம் குறுக்கே வந்தால் மட்டுமே மூடநம்பிக்கை. இல்லாவிட்டால் அது சரியான நம்பிக்கை என்று விளக்கம் தருவது அறிஞர்களுக்கு அழகல்ல.
“பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார்; சுடலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன், காத்தாவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. காளியம்மன், மாரியம்மனை எதிர்க்கவில்லை.” - தொ.ப
பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார். ஏசுநாதர் சிலையையோ, மேரி மாதா உருவங்களையோ கொளுத்தவில்லை. அதனால் அவற்றை ஏற்றுக்கொண்டார் என்று கூறமுடியாது.
சுடலை மாடனையும், காத்தவராயனையும், காளியம்மன், மாரியம்மனையும் பெரியார் கடுமையாக விமர்சித்து, பல இடங்களில் பேசியுள்ளார். எழுதியுள்ளார். அவற்றில் சில உரைகள் இந்த இதழில் தனித்தனிக்கட்டுரைகளாக வெளியிடப் பட்டுள்ளன. மாரியம்மன் பற்றிய பெரியாரின் ஒரே ஒரு கருத்தை மட்டும் இங்கு பதிவு செய்கிறோம்.
மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை. இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை. -தோழர் பெரியார், குடி அரசு - 02.04.1933
பெரியார் இயக்கங்களில் பணியாற்றி வயது முதிர்ந்த தோழர்களும், தற்போது பல்வேறு பெரியார் இயக்கங்களில் களப்பணியாற்றும் இளந்தோழர்களும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி என்ற திராவிடர் இயக்கங்களின் ஒரு சிறப்பான பண்பாட்டு நடவடிக்கை பற்றி நன்கு அறிவார்கள்.
பெரியார் காலத்திலேயே, பெரியார் தலைமையிலேயே இலட்சக்கணக்கான தோழர்கள் முன்னிலையிலே ஏராளமான மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு சான்றைக் குறிப்பிட வேண்டுமானால், 1971 ஆம் ஆண்டு ஜனவரி 24 ல் சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணியைக் கூறலாம்.
இது போன்ற பேரணிகளில், தீச்சட்டி எடுப்பது, அரிவாள் ஏறுவது, தீக்குழி இறங்குவது, உடல் முழுதும் எலுமிச்சம்பழம் குத்திக்கொள்வது, அலகு குத்தித் கார் இழுப்பது, பறவைக்காவடி, வாயில் அலகு குத்திக் கொள்வது, ஆட்டு ரத்தம் குடிப்பது போன்றவைகள் மூடநம்பிக்கைகள் ஒழிப்புச் செயல் விளக்கங்களாகச் செய்து காட்டப்படும். இவற்றை எல்லாம் செய்வதற்கு எந்தக் கடவுளின் அருளும் தேவையில்லை. சில நுணுக்கங்கள் தெரிந்தால் போதும் என்பதை விளக்கிக் காட்டிப் பேரணிகள் செல்லும்.
மேற்கண்ட மூடநம்பிக்கைச் செயல்கள் எதுவும் சிவன், திருமால், பார்வதி, இராமன், விநாயகன் போன்ற பெருந்தெய்வக் கோவில்களியோ – நிறுவனமயப்படுத்தப்பட்ட பார்ப்பனக் கோவில்களிலோ நடப்பவை அல்ல. முற்று முழுதாக, நாட்டார் தெய்வங்கள், சிறுதெய்வங்கள், கிராம தெய்வங்கள், குல தெய்வங்கள் ஆகியவற்றின் கோவில்களிலும், அவற்றின் வழிபாடுகளிலும் நடத்தப்படும் காட்டு மிராண்டித்தனங்களாகும்.
குலதெய்வ, நாட்டார் தெய்வக் கோவில் வழிபாடுகளில் நடக்கும் இவைபோன்ற காட்டு மிராண்டித்தனங்களை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் தலைவராகத் தோழர் பெரியார் இருந்த காலத்திலும், தோழர் கி.வீரமணி தலைமையில் இயங்கும் இந்தக் காலத்திலும் தொடர்ச்சியாக மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. தோழர் கொளத்தூர் மணி தலைமையில் இயங்கும் திராவிடர் விடுதலைக்கழகம், தோழர் கோவை இராமக்கிருட்டிணன் தலைமையில் இயங்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளும் ஆண்டுதோறும் இவ்வகைக் காட்டுமிராண்டித்தனங்களை எதிர்த்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிகளை நடத்தித்தான் வருகின்றன.
“இந்த நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொரு மனிதனின் இரத்த ஓட்டத்திலும் கலந்த விஷயம். மழை வேண்டுமென்றால் மாரியம்மனுக்கு மழைக்கஞ்சி எடுக்க வேண்டும். இது நம்பிக்கை; மூடநம்பிக்கை இல்லை. நாட்டார் தெய்வங்கள் என்பவை அதிகார மையங்கள் அல்ல; காமாட்சி அம்மனைப்போல, மீனாட்சி அம்மனைப் போல அதிகார மையத்தைச் சார்ந்த தெய்வங்கள் அல்ல. நாட்டார் தெய்வத்திலே தெய்வத்திற்கும் மனிதனுக்கும் குறுக்கே நிற்கிற அதிகாரம் எவ்வளவு நேரம்? சாமி ஆடும் நேரம் மட்டும்தான். அந்த பத்து நிமிடம் சாமி ஆடுவான். அந்நேரம்தான் அவனுக்கு அதிகாரம். அதற்குப் பிறகு அவனும் கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு மற்றவர்களோடு வேலைக்குக் கிளம்பி விடுவான்.” - தொ.ப
எந்த நாட்டார் தெய்வமானாலும் அந்தத் தெய்வத்தின் கோவிலில் விழா என்றால், அதை முடிவு செய்யும் கூட்டத்தில்கூட தாழ்த்தப்பட்டவர்கள் அமரவே முடியாது. விழா தொடர்பாகக் கருத்துக்களைக் கூறவும் முடியாது. தாழ்த்தப்பட்டவரிடம் வரிவாங்குவதும் கிடையாது. நாட்டார் தெய்வக் கோவில்களின் வழிபாடுகளில் ஜாதி அடிப்படையிலேயே வழிபாட்டு உரிமைகள், வழிபாட்டு முறைகள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. முதல் மரியாதை பார்ப்பனருக்கு, அடுத்த மரியாதைகள் அந்தந்த ஊரில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, கோவிலின் அடிமைப்பணிகள் மட்டும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ற ஜாதிப் படிநிலையில் தான் அனைத்து நாட்டார் கோவில்களின் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு கிராமக் கோவிலும் அந்தந்த கிராமங்களின் அதிகார மய்யங்கள் தான். சில கிராமங்களில் மட்டும் பார்ப்பனர்களுக்குப் பதிலாக அதிகார மய்யத்தின் தலைவராக பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். அதிகார மய்யத்தின் தலைமையின் ஜாதிமட்டும் மாறியுள்ளது. ஆனால் தன்மை மாறவில்லை.
மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், சிவன் போன்ற பெருந் தெய்வங்களின் கோவில்கள் ஜாதி, வர்ணாஸ்ரமம், மதம் ஆகிய ஒட்டுமொத்த நிறுவனத்தைப் பாதுகாக்கின்றன. சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களும் அதே பணியைத்தான் செயல்படுத்துகின்றன. இரண்டு வகை வழிபாடுகளுக்கும் எந்த வேறுபாடுஇல்லை. (சான்று: முனைவர் ரெ.முத்துராஜன் எழுதியுள்ள அய்யனார் வழிபாடு நூல்)
திருவிழா முடிந்ததும் கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு நம்முடன் நடந்தாலும், அந்தப் பூசாரியின் மீது மக்களுக்கு பயம் என்பது இருக்கவே செய்கிறது. அவரைப் பெரும்பாலும் எவரும் பகைத்துக்கொள்ள மாட்டார்கள். ‘வாக்குக்குடுத்துருவார்’ என்று அவரைப் பற்றிப் பயத்துடன் தான் மக்கள் வாழ்கிறார்கள். அந்தப் பயத்தைப் பயன்படுத்தி கிராமக்கோவில் பூசாரிகளும், பார்ப்பனர்களைப்போல பல மக்கள் விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுத்தான் வருகின்றனர். அப்படிப்பட்ட கிராமக் கோவில் பூசாரிகளையும் விஸ்வ இந்து பரிஷத் தன்வயப்படுத்திவிட்டது. அர்ச்சனைப் பயிற்சி அளிப்பதாக இலட்சக்கணக்கான பூசாரிகளை அழைத்துச் சென்று, வலுவான இந்துத்துவப் பயிற்சியைக் கொடுத்து, சிறந்த பார்ப்பன அடிமைகளாக மாற்றியுள்ளது.
“நாட்டார் தெய்வங்கள் ஜனநாயகத் தன்மை வாய்ந்தவை. நான் என்ன சாப்பிடுகிறேனோ அதைச் சாப்பிடுவது தானே என் தெய்வம். இதுவும் ஒரு உயர்தர சமத்துவம் தானே! நான் பன்றிக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் பன்றிக்கறி சாப்பிடணும். நான் ஆட்டுக்கறி சாப்பிட்டால் என் தெய்வமும் ஆட்டுக்கறி சாப்பிடணும். நான் ரோட்டிலே சாப்பிட்டால் என் தெய்வமும் ரோட்டில் சாப்பிடணும். இந்த தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?” - தொ.ப
இவை தேகால யாகங்களின் நடைமுறைதானே? தாங்கள் விரும்பி அருந்திய மதுவையும், தாங்கள் விரும்பி உண்ட மாட்டிறைச்சியையும் யாகத்தில் பலியிட்டு உண்பது பார்ப்பனர்களின் பண்பாடுதான். நாம் நமது சிறுதெய்வங்கள், குலதெய்வங்களுக்கு ஆடு, மாடு, கோழி அறுப்பதும் – பட்டைச்சாராயத்தையும், அது கிடைக்காத இந்தக் காலத்தில் டாஸ்மாக் சரக்கைப் படைத்து வழிபடுவதும் அதன் தொடர்ச்சிதான், பார்ப்பன – ஆரியப் பண்பாட்டின் தொடர்ச்சி தான் நம் குலதெய்வ, நாட்டார் வழிபாடுகள்.
“சில பெரிய சாதிகளுக்கு மட்டும்தான் வரையறுக்கப்பட்ட தெய்வங்கள் உண்டு. மாரியம்மன் எந்த சாதியின் தெய்வம்? ஒரு காலத்தில் மாரியம்மன் உழவுத் தொழில் செய்தவனுடைய தெய்வம். இன்றைக்கு மழை வேண்டுபவர்களுக் கெல்லாம் மாரியம்மன் தெய்வம். எல்லா தெய்வங்களையும் அப்படி சேர்க்க முடியாது. சில சில தெய்வங்கள் வட்டாரம் சார்ந்திருக்கிறது; சாதியைச் சார்ந்திருக்கிறது.” - தொ.ப
திருப்பூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு நாட்டார் தெய்வக் கோவில் வழிபாடுகளில் உள்ள களநிலவரத்தைக் காட்டாறுகுழு தோழர்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அனைத்து நாட்டார் தெய்வமானாலும் அவை ஜாதிமுறையை, ஜாதிப்படிநிலையைத் தவறாமல் பின்பற்றியே வருகின்றன. தாழ்த்தப்பட்டோர் அந்தத் தெய்வங்களின் கோவில்களின் சுற்றுச்சுவரைக்கூட நெருங்க இயலாத அவலமும் நிலவுகிறது.
மழை வேண்டுபவர்களுக்கு மாரியம்மன் தெய்வமாம். அப்படி மழை வேண்டி மாரியம்மனை வணங்க வரும் மக்களை ஜாதிரீதியாகக் கூறுபோட்டு வழிபட வைப்பது தான் இன்றும் நடைமுறையில் உள்ளது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழா 15 நாட்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதியினருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. கோவில் ஒன்றுதான். தெய்வம் மாரியம்மன் தான். ஆனால் வழிபடச் செல்பவர்கள் ‘மண்டகப்படி’ என்ற பெயரில் ஒவ்வொரு ஜாதியும், ஒவ்வொரு நாளில் செல்கின்றனர்.
மாரியம்மன், காளியம்மன், வஞ்சியம்மன், முத்தாளம்மன், பட்டத்தரசி அம்மன் போன்ற அனைத்து நாட்டார் தெய்வக் கோவில்களிலும் நிலவும் பல்வேறு வகையான தீண்டாமைக் கொடுமைகள் இந்த இதழில் விரிவாக, தனியாக, களஆய்வாக வெளியிடப்பட்டுள்ளது.
“சிலஆண்டுகளுக்கு முன் வந்த உயிர்ப்பலித் தடைச்சட்டத்தை இந்துத்துவ சக்திகளும் ஆதரித்தன; கி.வீரமணியும் ஆதரித்தார். இதனை எப்படிப் பார்ப்பது? இது ஒரு அரசியல்முரண் அல்லாமல் பண்பாட்டு முரண் ஆகும்.
பெரியார் உயிரோடு இருந்திருந்தால் இந்தக் கட்டத்தில் பெரியாரது நிலைபாடு என்னவாக இருந்திருக்கும்? “பெரிய கோயில்களில் யாகங்களை நிறுத்துங்கள், அனைவரையும் கருவறைக்குள் நுழைய அனுமதியுங்கள், அதற்கப்புறம் ‘உயிர்ப்பலித்தடை’ பற்றி யோசிக்கலாம்” என்று தான் அவர் சொல்லியருப்பார். ஏனென்றால் பெரியார் உடனடித்தீர்வு பற்றிய சிந்தனையாளர் அல்லர். அவர் ‘நேற்றும் நாளையும்’ ஆகப் பணியாற்ற விரும்பியவர்”. - தொ.ப
தூத்துக்குடியில் 1948 ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள் நடைபெற்ற திராவிடர் கழக 18 ஆம் மாகாண மாநாடு நடைபெற்றது. தோழர் பெரியார் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டின் 17 வது தீர்மானம் உயிர்ப்பலியை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும் என்பதாகும். அந்தத் தீர்மானத்தை அப்படியே பார்ப்போம்.
“மதத்தின் பெயரால் உயிர்ப்பலி செய்யப்படுவதைச் சர்க்கார் தடை செய்ய வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”
தோழர் வீரமணி அவர்கள் பெரியாரின் வழிநின்றுதான் உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை ஆதரித்துள்ளார்.
“நாட்டார் தெய்வங்கள்’ என்ற சொல்லாட்சி, ஓரளவு வாசிப்புப் பழக்கம் உடையவர் களிடத்திலும் இடதுசாரி இயக்கச்சார்பு உடையவர்களிடத்திலும் உடனடியாகச் ‘சாமியாட்டம், குருதிப்பலி, பலிவடிவங்கள்’ ஆகிய படங்களாகவே விரிகின்றது. பொத்தாம் பொதுவான அல்லது மேலோட்டமான இந்தக் கணிப்புக்கள் அனைத்துமே தவறானவை. நாட்டார் தெய்வங்கள் தத்துவ ‘விசாரங்களிலே’ நொறுங்கிப் போகுமளவு மெலிதானவையல்ல. அவற்றின் வேர்கள் வலிமையானவை. அவை வட்டாரத் தன்மையும் உயிர்ப்பும் உடையன.
சிவன், திருமால், விநாயகர் போல ‘வடவேங்கடம் தென்குமரி’ வரை ஒத்த தன்மை அவற்றுக்கில்லை. சென்னை, செங்கல்பட்டு வட்டங்களில் ‘காளன்’, ஆற்காட்டுப் பகுதியில் ‘பொன்னியம்மன்’, வேலூர் திருவண்ணாமலைப் பகுதி களில் ‘போத்தி ராஜா’, கொங்கு நாட்டில் ‘அண்ணன்மார்’, திருச்சி – புதுக் கோட்டை மாவட்டங்களில் ‘சுடலைமாடனும் இசக்கியம்மனும்’ என்று, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் ஆகப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுபவை. இந்தப் ‘பன்முகத் தன்மை’ என்பது சைவம், வைணவம், ஸ்மார்த்தம், இசுலாம், கிறித்தவம் ஆகிய எந்த நிறுவனச் சமயத்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட இயலாததாகும்.” - தொ.ப.
இந்து மதத்தை வாழ்க்கைமுறையாக ஏற்றுக் கொண்டவர்கள் வாழும் நாட்டில் வட்டாரத் தன்மை, வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகள், வட்டாரம் சார்ந்த உளவியல் என்று எதுவும் இல்லை. அனைத்தும் ஜாதியை அடிப்படையாகக் கொண்டவையே. கொங்கு நாட்டில் அண்ணமார் சாமிகளைக் கும்பிடுபவர்களாகப் பல தரப்பு மக்களும் இருக்கிறார்கள். கவுண்டர்களும் வழிபடுவார்கள். சக்கிலியர், பறையர்களும் வழிபடுவார்கள்.
ஆனால் அந்த வழிபாட்டில் அனைத்து ஜாதிக்கும் ஒரே நடைமுறை இருப்ப தில்லை. வழிபாட்டில் ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு முறை உள்ளது. அந்த நடைமுறைகள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டுள்ளன. சமுதாயத்தில் நிலவும் ஜாதியப் படிநிலை அப்படியே இந்த வழிபாடுகளிலும் இருக்கின்றன. இதில் என்ன பன்மைத்துவம் வாழ்கிறது? ஜாதித்துவம் மட்டுமே வாழ்கிறது.
முக்கியமாக அய்யனார் மற்றும் அய்யனார் போன்ற அனைத்து நாட்டார் தெய்வங்களையும் இந்து மதம் செரித்து – கழித்து - பல நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இப்போது இருப்பவை இந்து மதத்தின் கழிவுகளே. அந்தக்கழிவுகளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள், தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்களின் ஆய்வு மாணவர் முனைவர் ரெ,முத்துராஜன் அவர்களின் ஆய்வுநூலான அய்யனார் வழிபாடு என்னும் நூலிலிருந்து சில சான்றுகளைப் பார்க்கலாம்.
கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில், திருப்பயற்றூர்ப் பதிகத்தில், “அய்யனாரைத் தன் மகனாகச் சிவன் வைத்துக்கொண்டார்” எனப் பாடுகின்றார். சிவன், திருமால் (சைவம் வைணவம்) இணைப்புக்கும் இக்கதை பயன்பட்டிருக்கிறது. இக்காலத்தில் அய்யனாருக்கு ஹரி ஹரப் புத்திரன் என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது. – பக்கம் 17
கி.பி. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களில் அய்யனார் தனித்தே அமர்ந்துள்ளார். இவருக்குப் பணிவிடை செய்வதற்கு இரண்டு பெண்கள் உள்ளனர். குடை பிடித்த பணியாளும், சாமரம் வீசுகின்ற பெண்ணும் சிற்பங்களில் இடம் பெற்றுள்ளனர். ஆனால் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் பிற்காலச் சோழர்காலச் சிற்பங்களில் அய்யனார் இரண்டு மனைவியருடன் காணப்படுகிறார். சங்க இலக்கியங்களில் அய்யனாருக்கு மனைவியர் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை. கி.பி. 7 ஆம் நூற்றாண்டுச் சிற்பங்களிலேயே அய்யனாருடன் இரு மனைவியரைக் காணுகிறோம். – பக்கம் 18
அய்யனாருக்கு இந்திரன் மகள்களைத் ( பூரணை, புட்கலை ) திருமணம் செய்து வைக்கின்றனர். சிவனும், திருமாலும் அய்யானரிடம் ஊர் மக்களையும், தானியங்களையும் காக்கும் பொருட்டு ஊரின் எல்லையில் அமர்ந்து அருளாட்சி செய்யுமாறு பணிக்கின்றனர். - பக்கம் 73
அய்யனார் வழிபாடு என்பது ஏழாம் நூற்றாண்டிலேயே இந்து, பார்ப்பனமயமாமாக்கப்பட்டு விட்டது என்பதற்கு மேற்கண்ட நூலில் இன்னும் எராளமான சான்றுகள் உள்ளன.
அய்யனார் போன்ற நாட்டார் தெய்வ வழிபாடுகளைப் புகழ்ந்து, அவற்றை ஏற்றுப் பேசும் அறிஞர் தொ.ப அவர்களின் கருத்துக்கு அவரது ஆய்வு மாணவரின் நூலே பதிலாக உள்ளது. இந்தச் சான்று போதாது என்பவர்கள் நேரடியாக எந்த நாட்டார் தெய்வக் கோவிலையும் சென்று பார்த்து ஆய்ந்து எழுதலாம். காட்டாறு குழு அவ்வாறு மாரியம்மன், அண்ணன்மார் போன்ற தெய்வங்களின் வழிபாடுகளை நேரடியாகக் களஆய்வு செய்தோம். அவை முழுவதும் பார்ப்பனமயமாக்கப்பட்டு விட்டன என்பதை நேரடியாக அறிந்து அவற்றை இந்த இதழில் பதிவு செய்துள்ளோம்.
தமிழர்களைப் பல ஜாதிகளாகப் பிரித்து நிறுத்தும் நாட்டார் தெய்வங்கள்
அறநிலையத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட பார்ப்பனமயமான தெய்வங்களும், பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் கோவில்களும் வழிபடவரும் மக்களை இருபெரும் பிரிவாகப் பிரித்துள்ளன. வேதங்கள் உருவாக்கிய வர்ணப் பிரிவுகளை காலங் காலமாக, பலநூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தி வைத்துள்ளன. பார்ப்பனர் களுக்குக் கருவறை, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோவிலில் கருவறை தவிர்த்த மற்ற இடங்கள் என்று இரண்டு தரமாகப் பிரித்துவைத்துள்ளன.
பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை முருகன் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், தஞ்சைப் பெரியகோவில், மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் போன்ற அனைத்துப் பார்ப்பனக் கோவில்களிலும் எந்த ஜாதியினர் வேண்டுமானாலும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடலாம். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற வேறுபாடு கிடையாது. பார்ப்பனர்களுக்குச் சொந்தமான கருவறைக்குள் இரு தரப்புமே நுழைய முடியாது.
இந்தநிலை இந்தக் கடவுள்களும், கோவில்களும் உருவான காலத்திலிருந்தே இருந்துவந்த நடைமுறை அல்ல. சில பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும், தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் பார்ப்பன மயமான மேற்கண்ட கோவில்களில் நுழைந்து கடவுளை வழிபட ஏராளமான உரிமைப் போராட்டங்கள் நடந்தன. இன்று அனைத்து ஜாதியினரும் கோவிலுக்குள் சென்று வழிபட முடிகிற தென்றால், அதற்கு அடிப்படைக் காரணம், கடவுளை நம்பாத பெரியாரும், அவரது சுயமரியாதை இயக்கமும் தான். இது வரலாற்று உண்மை.
ஆக, பார்ப்பனமயமான, பெருந்தெய்வக் கோவில்களில் தற்போது மக்கள் இரு பிரிவாகப் பிரிந்துள்ளனர். பார்ப்பான் தனியாக இருக்கிறான். பிற்படுத்தப்பட்டவரும், தாழ்த்தப்பட்டவரும் ஒன்றாக நின்கின்றனர். ஆனால், சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள், கிராம தெய்வங்களின் கோவில்களிலும் வழிபாடுகளிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இரு தரப்பும் பிரிந்து நிற்கிறது. அதுவும் இரு பிரிவாகப் பிரிந்து நிற்கவில்லை. 2000 க்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்.
எந்தச் சிறுதெய்வக் கோவில்களிலும் பிற்படுத்தப்பட்டவருக்கும், தாழ்த்தப்பட்ட வருக்கும் ஒரே உரிமை, ஒரே மரியாதை என்ற நிலை கிடையாது. எந்தக் கிராமக் கோவில்களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதியே கிடையாது. ஊர்த் திருவிழாக்களுக்குச் சேரிகளில் வரிவாங்குவதே கிடையாது. வரிகொடுக்கும் அளவுக்கு அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும், தாழ்த்தப்பட்டவர் களிடம் வரிவாங்குவது கிடையாது. சேரிகளுக்குத் தனிக் கோவில், தனித் திருவிழா என்ற நிலைதான் உள்ளது. குலதெய்வக்கோவில்களோ, ஒவ்வொரு ஜாதியையும் தனித்தனியாகப் பிரித்துவிடுகிறது. பிரிந்து நிற்கும் ஒவ்வொரு ஜாதியையும் மேலும் மேலும் கூறுபோட்டு, மக்களை ஆயிரக்கணக்கான பிரிவுகளாகப் பிரித்துவிடுகிறது.
தன்னுடைய கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களைத் தங்களிடமிருந்து தாழ்த்திக் காட்டவும், அவர்களைவிட நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்தவும், உறுதிப்படுத்தவும்தான் கிராமக்கோவில் திருவிழாக்கள் பயன்படுகின்றன.
தாழ்த்தப்பட்டவர்களின் தனிக்கோவில் தனி வழிபாடுகளும், தனி தெய்வங்களும் பிற்படுத்தப் பட்டவர்களைவிட நாங்கள் தாழ்ந்தவர்களே என்பதை தங்களுக்குத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ளவே பயன்படுகின்றன.
தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ அவர்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான ஜாதிகளைப் பிரித்துக்கொண்டு ஜாதிக்கொரு கோவில், அந்த ஜாதிகளுக்குள்ளும் பல பிரிவுகளை பிரித்து குலத்துக்கொரு கோவில் என பலஆயிரமாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் பிரிவினையை களையும், உயர்வு தாழ்வுகளையும் கற்பிக் கின்றன குலதெய்வ வழிபாடுகள். இதில் என்ன பன்மைத்துவம் வாழ்கிறது? தன் ஜாதிக்குள்ளேயே மற்றொரு பிரிவை அனுமதிக்காத குறுகிய மனப்பான்மை யையும், காட்டுமிராண்டித்தனத்தையும் தான் இந்தக் குலதெய்வங்கள் உருவாக்கு கின்றன. இவற்றால் உருவானது பன்முகத்தன்மை அல்ல. ஜாதிமுகத் தன்மை.
ஜாதிமுறையைப் பலப்படுத்தும் நாட்டார் தெய்வங்கள்
அய்யனார் என்ற நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் மக்கள் தமிழ்நாடு முழுவதும் வாழ்கிறார்கள். பேராசிரியர் முனைவர் ரெ,முத்துராஜன் அவரது முனைவர் பட்ட ஆய்வுக்காக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இரண்டு வட்டங்களில் அய்யனார் வழிபாடு குறித்து விரிவான கள ஆய்வை நடத்தியிருக்கிறார். இரண்டு வட்டங்களிலும் சேர்த்து 148 ஊராட்சி ஒன்றியங்கள், 300 கிராமங்களில் இந்த ஆய்வு நடந்துள்ளது. 203 அய்யனார் கோவில்களில் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
முழுமையான அந்த ஆய்வு 250 பக்க நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இருந்து மேலே சில சான்றுகளைக் கண்டோம். அந்த நூலில் இந்த அய்யனார் என்ற நாட்டார் தெய்வ வழிபாட்டில் உள்ள ஜாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை வன்கொடுமைகள் ஏராளமான இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் இருந்து சில தகவல்களைப் பார்ப்போம்.
வழிபாட்டில் ஜாதியப்படிநிலை
மக்கள் வாழ்கின்ற இடத்தில் காணும் சாதியப் படிநிலை அமைப்புப் போன்றே வழிபாட்டுச் சடங்கியல் தளத்திலும் பேணப்படுகின்றது. இந்தப்படிநிலை அமைப்பை
அய்யர், வேளாளர் - முதல் படிநிலை
கோனார், மறவர், சேர்வைக்காரர் - இரண்டாம் படிநிலை
தச்சர், கொல்லர், குயவர், பண்டாரம், நாவிதர், நாடார், வண்ணார் - மூன்றாம் படிநிலை
பள்ளர், பறையர், சக்கிலியர் - நான்காம் படிநிலை
என ஆய்விற்காக வகைப்படுத்தலாம். இந்தச் சாதியப் படிநிலையில் ஒரு ஜாதி எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளதோ, அதைப் பொறுத்து விழாக்களில் உரிமையும், விலக்கும் அளிக்கப்படுகின்றது. தெய்வத்திற்கான படையல் பொருட்களைப் பெறும் உரிமைகூட இப் படிநிலையினாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
காளாஞ்சி பெறுதல், மாலை பெறதல், பரிவட்டம், திருநீறு பெறுதல் என்பன போன்ற மரியாதைகள் ஆதிக்கச் சாதியினருக்கு மட்டும் வழங்கப்படுகின்றன.
ஊரின் ஒவ்வொரு அசைவுகளிலும் அய்யர், வேளாளர் ஆகிய இரண்டு சாதியினரை முன்னிலைப் படுத்துகின்றனர். அதுபோல், சடங்குத் தளத்திலும் இவர்கள் முன்னிலை உடையவர்களாகத் திகழ்கின்றனர். இதனால்தான் இவர்கள் கோவிலின் சந்நிதானம் வரை செல்ல முடிகின்றது.
இரண்டாம் படிநிலையில் உள்ளவர்கள் வாழ்தளத்தில் இயங்குவது போன்றே, வழிபாட்டில் பிடிமண் எடுத்தல், உருவம் செய்தல், கரகம் சுமத்தல், குதிரை சுமத்தல் என்ற நிலையினை எய்துகின்றனர். இதில் தச்சாசாரி, கொல்லாசாரி போன்ற சேவை சாதியினரும் அடங்குவர். இவர்கள் வேளாண்மைக்குத் தேவையான உற்பத்திக் கருவிகளைச் செய்து தருகின்றனர் என்ற வகையில் இவர்களும் கோவில் தளத்தில் மதிக்கப்படுகின்றனர்எனக் கருதலாம்.
பிறசேவைச் சாதியினரான வண்ணார், நாவிதர் முதலிய சாதியினர் அடுத்த படியிலையை உடையவர்களாக உள்ளனர். இவர்கள் அய்யனார் சந்நிதானத்திற்கு முன்புவரை செல்லலாம். ஆனால், மேற்குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினருக்குத் திருநீறு வழங்கிய பின்பே பூசாரி இவர்களைத் திருநீறு வாங்க அழைக்கின்றார்.
பள்ளர் சாதியினர் நான்காம் படிநிலையில் உள்ளவராவர். இவர்களை அய்யனார் சந்நிதானத்திற்கு அருகில் செல்ல அனுமதிப்பதில்லை. இக்கோவிலில் அமைந்துள்ள கருப்பசாமி சன்னதியின் அருகிலேயே நிற்கின்றனர். இத்தெய்வத்தின் இருப்பிட எல்லையே இவர்களுக்குரிய சாதியப் படிநிலையாகும்.
சில இடங்களில் இத்தெய்வம் இவர்களின் குலதெய்வமாகவும் உள்ளது. இத்தெய்வத்திற்குரிய பூசாரி வேளாளரே ஆவர். அய்யனாருக்குப் பூசை முடித்து ஆதிக்கச் சாதியாருக்குத் திருநீரு வழங்கிய பின்பு பரிவாரத் தெய்வங்களுக்குப் பூசை செய்கின்றனர். அதுவரை இம்மக்கள் இங்கு காத்திருக்க வேண்டும்.
நான்காம் படிநிலை அமைப்பின் உட்படிநிலை உடையவர்களாக, பறையர், சக்கிலியர் சாதியினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் சடங்கியல் எல்லைக்குள் செல்ல ஆதிக்கச் சாதியார் அனுமதிப்ப தில்லை. சடங்கியல் தளத்திற்கு முன்பாகவே இவர்களின் சாதியப் படிநிலை எல்லை வரையறை செய்யப் படுகின்றது. இதற்கு சமயம்சார்ந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. மேளச்சத்தம், உருமிச் சத்தம், உலக்கைச் சத்தம் ஆகியவற்றை அய்யனார் விரும்புவதில்லை. எனவே தான் இச்சத்தங்கள் கேட்காத தொலைதூரத்தில் அவர் அமர்ந்துள்ளார் எனக்கூறுகின்றனர்.
அய்யனர் வழிபாட்டுச் சடங்கில் பறையர், சக்கிலியர் சாதியினரே மேளம் அடிப்படி வழக்கம். இவர்களின் சாதியப் படிநிலை எல்லையை வரையறுப்பதற்காகவே மக்கள் இந்த நம்பிக்கையினை ஏற்படுத்தியிருக் கின்றனர். அதோடு பள்ளரைவிட பறையர், சக்கிலியர் சாதியின் தாழ்ந்த படிநிலை கொண்டவர்கள் என்பதனைச் சடங்கியல்வெளி நமக்கு உணர்த்துகின்றது.
அய்யனார் வழிபாட்டுச் சடங்குகளில் ஆதிக்கச் சாதியினர் பங்கேற்கும் உறவும், தாழ்த்தப்பட்ட சாதியினர் பங்கேற்கும் உறவும் வாழ்வியல் படிநிலை அமைப்பின் படியே அமைகின்றது எனலாம். இந்த எல்லை அனுமதிப்பு உறவானது அய்யனார் கோவிலின் சடங்கு நாளில் மட்டுமே செயல்படுத்தப் படுகின்றது. சடங்கு நிகழ்வுகள் அல்லாத காலங்களில் தாழ்த்தப்பட்ட சாதியினர் அய்யனார் சந்நிதானத்தின் முன்புவரை இயல்பாகச் செல்லலாம்.
இதுவே பெருந்தெய்வக் கோவிலுக்கும், நாட்டார் தெய்வக் கோவிலுக்குமான மிக முக்கியமான வேறுபாடு ஆகும். எனவே சாதியப் படிநிலை அமைப்பு, ஆண்டுக்கொருமுறை விழாக்களின் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது எனலாம். - ரெ.முத்துராஜன், அய்யனார் வழிபாடு நூல்
ஆரியப் பார்ப்பனர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட - ஆகம வழிப்பட்ட - அதிகார மய்யங்களாகத் திகழும் கடவுள்களின் கோவில்களின் நோக்கம் என்னவோ - அதையே தான் அவற்றுக்கு எதிரானவை என்று கூறப்படும் நாட்டார் தெய்வங்களும், குல தெய்வங்களும், சிறு தெய்வங்களும் செயல் படுத்துகின்றன. இரண்டு வகை தெய்வங்களின் இலக்கும் ஒன்றுதான். இந்துமத வேதங்கள், சாஸ்திரங்கள், அவை உருவாக்கிய சம்பிரதாயங்கள், பண்பாடுகளைக் காப்பது என்பதே இரண்டு வகை வழிபாடுகளின் நோக்கம். எனவே, பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகிய அனைத்தையும் அழிப்பதுதான் ஜாதிஒழிப்பாளர்களின் முதல் பணியாக இருக்கவேண்டும்.