கட்டடமோ கருவறையோ
தேவையில்லை

திறந்தவெளி வழிபாட்டில்
கடவுளுக்கு
எந்த ஆட்சேபனையும் இல்லை

காற்றோ வெயிலோ
கடவுளை
ஒன்றும் செய்துவிட முடியாது

மழையில் நனைவதால்
கல்லான கடவுளுக்கு
காய்ச்சல் சளியா
பிடிக்கப் போகிறது?

வானம் முட்ட வீச்சரிவாளோடு
வெட்டவெளியில் நிற்கவில்லையா
அய்யனார்களும் குலசாமிகளும்

அவர்களும்
கடவுள்கள் தானே!

‘பூசாரி’ நனையக்கூடாது
என்பதற்காகவே
கருவறைகள் கட்டப்படுகின்றன

அண்ட பரம்பொருளை
அறைக்குள் பூட்டி
அடைத்து வைப்பதை
நல்லதென்று எவன் சொன்னான்?
அது ஆகக் கூடியதா என்ன?

அறையில் அடைந்து கிடக்கும்
கல்லுச் சாமிகளுக்கு
அர்ச்சனை செய்யும்
அய்யரின் மூஞ்சிகளைத் தெரியுமா?
வேறெதுதான் தெரியும்?

நாலு சுவற்றுக்குள் அடைபட்டு
கிணற்றுத் தவளைகளாய்க் கிடக்கும்
பெருந் தெய்வங்களைவிட
நட்ட நடுவெளியில் நிற்கும்
நாட்டார் தெய்வங்களே தேவலாம்

என்ன செய்ய?
கருவறைக்குள்
கறுவிக் கொண்டுதானிருக்கிறது
கடவுள்களின் ‘கல்நெஞ்சம்’

சாமிகள் கைநீட்டித் தின்றதாய்
சரித்திரமில்லை என்றாலும்...
‘படைத்தல்’ என்னவோ
நடந்து கொண்டுதானிருக்கிறது

கடவுளின் பெயரால்
சேர்த்து வைத்துள்ள
காசுபண நகைநட்டுகளுக்காக
இரும்புக் கதவுகளும் பூட்டுகளுமாய்
கன கச்சிதமாய் நடக்கிறது
‘காத்தல்’

சொல்லவே தேவையில்லை
மதங்களின் பெயரால்
நாடெங்கிலும் நடக்கிறது
ஆள்களை அழித்தலும்
கருவறையில் கற்பழித்தலும்
‘அழித்தல்’

ஆக...
ஒப்புக்கொள்ளலாம்
படைத்தல், காத்தல், அழித்தல்
என்னும் முத்தொழிலும்
சாட்சாத் “சாமிகளின்”
“ஜோலியென்று.”

- பாவலர் வையவன்

Pin It