நில உரிமையாளர்கள் ஒப்புதல் பெறாமலே,தொழில் முதலாளிகளுக்குத் தரவே அவசரச் சட்டம்!

சிந்து சமவெளி நாகரிகம் 4000 ஆண்டு பழைமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பழங்காலத் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்று ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிறார்கள். அந்த நாகரிகம் இன்றைய பாக்கிஸ்தானின் பெரும் பகுதியில் தொடங்கி. உத்தரப்பிரதேசம் குசராத் வரை பரவியிருந்தது.

அவர்கள் வாழ்ந்த இடத்தில் காணப்படும் முதலாவது தடயம் தானியங்களைச் சேமித்து வைக்கும் குதிர்கள் அல்லது தொம்பைகள், அடுத்த தடயம் வேளாண்மைக்கும் அன்றாட வீட்டு வாழ்க்கைக்கும் வேண்டப்படும் நீர் சேமிப்பும், நீர் மேலாண்மையும் ஆகும். அவை இன்றும் அங்கே காணப்படுகின்றன.

வடக்கே சிந்து ஆற்றில் தொடங்கி தெற்கே தாமிரபரணி ஆறு வரையில் முதலாவது ஆற்றுப்பாசனம்; இரண்டாவது ஏரிப்பாசனம். அப்படி நீர்ப்பாசனம் பெறுகிற நிலப்பரப்பு மூன்றில் ஒரு பங்குதான்; மீதி மூன்றில் இரண்டு பங்கு வானம் பார்த்த நிலங்கள்.

வெள்ளையன் வெளியேறிய காலத்தில் இருந்த இந்த நிலைமையில் -இந்தியரான காங்கிரசுக் கொள்ளைக்காரர்களும். பாரதிய சனதா பழைமை வாதிகளும், இவர்களை நடத்திக்கொண்டு மாநில ஆட்சிகளை நடத்தியவர்களும் நடத்திய ஆட்சிகளில், இதில் பெரிய மாற்றம் வரவில்லை.

1800க்குப் பிறகு அய்ரோப்பாவிலும் இங்கிலாந்திலும் கையால் தொழில்களைச் செய்யாமல் இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலைகளை இயக்குவது வேகமாகப் பரவியது.

இந்தியா வேளாண்மையை நம்பிய நாடாகவே அன்றும் இன்றும் உள்ளது.

இங்கு விளைந்த நிலக்கடலை முழுவதையும் இங்கிலாந்துக்கு ஏற்றிக் கொண்டுபோய் இயந்திரச் செக்குகளில் எண்ணெய் பிழிந்து திருப்பி எண் ணெயாக இந்தியாவுக்கு அனுப்பினான். அதேபோல் பருத்தி முழுவதையும் ஏற்றிக்கொண்டு போய் அங்கே துணியாக நெய்து இந்தியாவுக்கு அனுப்பி னான். இரும்புக் கனிமத்தை ஏற்றிக்கொண்டு போய்த் தண்டவாளங்களாக வார்த்து இங்கே அனுப்பினான்.

இவற்றால் இங்கிலாந்து வெள்ளைக்காரத் தொழிலாளர்களுக்கு வேலையும் நல்ல கூலியும் கிடைத்தது; வெள்ளை முதலாளிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. இதைத்தான் “வெள்ளைக்காரன் சுரண்டல்” என்றோம்.

பிறகு வெள்ளைக்கார முதலாளிகள் இந்தியாவிலேயே அந்தத் தொழிற் சாலைகளை அமைத்தார்கள். அப்படித் தொழிற்சாலைகளை அமைக்க, வேளாண் நிலங்களை நேரடியாகவும். மாகாண அரசுகள் மூலமும் விலைக்கு வாங்கினார்கள். 1940கள் முதற்கொண்டு இந்தியர்களும் தொழிற்சாலைகளை நிறுவினார்கள். அவர்களும் அப்படியே நேரடியாகவும், அரசு மூலமும் வேளாண் நிலங்களை வாங்கினார்கள்.

வேளாண் நிலங்களைத் தனியாருக்குத் தருவதற் காக அரசு கைப்பற்றுவது அல்லது கையகப்படுத்து வது, சமூகப் பொது நன்மைக்கான பணிகளைச் செய்ய அரசு நிலத்தைக் கையகப்படுத்துவது என்கிற செயலை வரன்முறைப்படுத்திட, “1894ஆம் ஆண் டைய நிலம் கையகப்படுத்தும் சட்டம்” என்பதை வெள்ளையன் நிறைவேற்றினான்.

அதன்படி ஒரு தனி வேளாண் குடியிடமிருந்து நிலத்தை வாங்கும் போது, மூன்று ஆண்டுகளுக்கு முன் அதன் பக்கத்திலுள்ள மூன்று பேர்களின் நிலங் கள் என்ன விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்து, அதன் சராசரியை அன்றைய விலை யாகக் குறித்து, தனியார் நிலத்தை அரசினர் கைப் பற்றினர். அந்தச் சட்டத்தின் 4ஆவது உட்பிரிவின்படி, எந்தெந்தப் பட்டாதாரரின் நிலத்தைக் கையகப்படுத்த அரசு திட்டமிடுகிறது என்பதை நாள் இதழ்களில் முன்கூட்டி அரசு விளம்பரப்படுத்தும்; தனி நில உடை மைக்காரருக்கும் அரசு அறிவிக்கும். ஆனாலும் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை ஏமாற்றிட ஒருவழியாக, நிலத்தை விற்பவரும் வாங்குபவரும் உண்மையான விலையைப் பத்திரத்தில் எழுதாமல், குறைத்தே எழுதி னார்கள். அதனால் புதிதாக நிலத்தை விற்கிறவர் களுக்கு, அன்றைய நிலவரப்படியான -நல்ல விலை கிடைக்காமல் போனது.

இதற்காக ஒரு புதிய சட்டத்தைச் செய்ய, 1980 முதல் முயன்று, “2013ஆம் ஆண்டைய - திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம்” என்பதை, கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்தது.

இடையில் 1990 முதல் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்கிற முதலாளித்துவ -பெருங்கூட்டு வணிக-பெருந்தொழிற் கூட்டுத் தனியார் நிறுவனங்கள் -ஆளுங்கட்சியினர், உயர் அதிகார வர்க்கம் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் -நில விற்பனை உரிமம் பெற்ற அதிகாரத் தரகர்கள் (Power Agents) வழியாக, அயல்நாட்டு -உள்நாட்டுப் பெருவணிகக் குழுமத்தின ரும் -நவீன வேளாண் குழுமத்தினரும் - குடியிருப்புக் கட்டட -அடுக்குமாடிக் கட்டட வணிகர்களும் “தொழில் வளர்ச்சிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்” என்ற போர்வையில், பெரிய பெரிய பரப்புள்ள நிலங் களை அரசு மூலம் வாங்கி உரிமையாக்கிக் கொண் டார்கள்.

அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக இதுவரை அரசினால் ஒதுக்கப்பட்ட வேளாண் நிலங் களின் பரப்பு 46,635 ஹெக்டேர் -அதாவது 1,14,087 ஏக்கர்கள்.

அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் பெரிதும் தொழில் தொடங்கப்படவில்லை; நவீன முறை வேளாண்மை செய்யப்படவில்லை; ஒரு பகுதி நிலங் களில் கட்டடங்களே கட்டப்பட்டுள்ளன.

அந்நிலங்களில் தொழில்கள் தொடங்கப்படாததால், அந்நிலங்கள் மூலம் 2006-2007 முதல் 2012-2013 வரையிலான காலத்தில் அரசுக்கு வரவேண்டிய வரியான ரூபா 83,104 கோடி வராமல் இழப்பு ஆகிவிட்டது.

இப்படி இதுவரை நிலத்தைக் கையகப்படுத்திட, எந்த ஊரில் நிலம் எடுக்கப்பட்டதோ, அந்த நிலம் சமூகமும் -தனியாரும் இணைந்த -பொதுப் பயன்பாட்டுக்கு என் றால் 30 விழுக்காடு பரப்பையும், தனியாருக்கு என் றால் 20 விழுக்காடு பரப்பையும் மட்டுமே எடுக்கலாம். அதற்கும், முறையே உள்ளூர் மக்களில் 70 விழுக் காடு பேர் கூட்டாக ஒப்புதல் தரவேண்டும்; அல்லது 80 விழுக்காடு பேர் கூட்டாக ஒப்புதல் தரவேண்டும்.

இந்த ஒரு மக்கள் நாயக நடைமுறை 2013 ஆண்டைய சட்டத்தில் இருந்தது. அத்துடன் நிலத்தை விற்பவரின் மறுவாழ்வு, உள்ளூர் உறவு அற்று இடம் பெயர்தல், புது இடத்தில் வாழ்வாதாரம் கிடைக்கச் செய்தல் இவற்றுக்கும் அரசினர் பொறுப்பேற்க வேண்டும் என்கிற பாதுகாப்பும் 2013ஆம் ஆண்டைய திருத்தப்பட்ட சட்டத்தில் இருந்தது.

இப்போது 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சிக்கு 543 மக்களவை இடங்களில் 284 இடங்கள் கிடைத்தன. இது அறுதிப் பெரும்பான்மை ஆகும். இதை வைத்து, தானடித்த மூப்பாக உலக -இந்தியப் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்களின் தொழில்-வணிக நலன்களுக்கு வழிகோலிட, முனைந்து வேலை செய்கிறார், பிரதமர் நரேந்திர மோடி.

அவர் அண்மையில் பல உலக நாடுகளுக்குச் சென்று வந்தார். எல்லா அயல்நாட்டு-அந்நிய தேச முதலாளிகளையும், அ0யலகத்தில் குடியேறியுள்ள இந்திய வம்சா வழி முதலாளிகளையும் இரு கைகளையும் நீட்டி வர வேற்று, “வாருங்கள்! வாருங்கள்! இந்தியாவில் உற் பத்தி செய்யுங்கள்” (Make in India) என்று அழைப்பு விடுத்துவிட்டுத் திரும்பிவந்தார்.

இந்தியப் பெருமுதலாளிகளான அம்பானி, ரிலையன்ஸ், டாட்டா, அதானி, வேதாந்தம், பஜாஜ் இவர்கள் போதாது என்று, அமெரிக்கரை-இரஷ்யரை-பிரிட்டிஷாரை-ஜெர் மானியரை அறைகூவி அழைக்கிறார். மோடி. அவர் களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க அவர் அடிகோலுகிறார்.

அதற்காக, முதலில் வேளாண் நிலங்களைக் கையகப் படுத்துவதற்கு எந்தச் சட்ட நெறி முறையையும், நிலச் சந்தைவிலை நிலவரத்தையும், வேளாண்மையை நம்பியிருக்கிற 67 விழுக்காடு இந்திய மக்களையும் ஒரு பொருட்டாக எண்ணாமல்-வேளாண் மக்களை வெறும் பண்டங்கள் போல் நினைத்துக் கொண்டு, ஒரு மசோதாவை அண்மையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் நிறைவேற்றிவிட்டார்.

அந்தச் சட்டத்தில், 1) எந்த ஊரில் வேளாண் நிலத்தை அரசு எடுக்கப் போகிறதோ, அந்த ஊர் மக்களின் ஒப்புதலை அரசு பெற வேண்டியதில்லை; 2) வேளாண் மக்கள் இடம்பெயர்தல், உள்ளூர் உறவு அற்றுப்போதல், புதிய இடத்தில் வாழ்வாதாரம் பெற்றிட வழி செய்தல் என்கிற எது பற்றியும் அரசுக்குப் பொறுப்பு இல்லை; என்று தடாலடிச் சட்டமாக நிறைவேற்றிவிட்டார்.

ஆனால், அச்சட்டத்தை மாநிலங்கள் அவையில் நிறைவேற்றிடப் போதுமான உறுப்பினர்களின் எண் ணிக்கை பா.ச.க.வுக்கு இல்லை.

மொத்தம் உள்ள 245 மாநிலங்கள் அவை உறுப்பினர் களுள் 139 பேர் எதிர்க்கட்சிக்காரர்கள்.

பாரதிய சனதாக்கட்சி முன்மொழிந்த 8 முதன்மை யான மசோதாக்களை நிறைவேற்றிட அவர்கள் ஒப்பு தல் தரவில்லை.

உடனே அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

எல்லாக் கட்சிகளையும் கொண்ட ஆய்வுக்குழுவுக்கு இந்த 8 மசோதாக்களையும் ஆய்வுக்கு அனுப்பி ஓர் அறிக்கை தருவதற்கு வழி செய்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல், இந்தியக் குடிஅரசுத் தலைவருக்கு நெருக்கடி தந்து, அவருடைய ஒப்புதலைப் பெற்று அச்சட்டத்தை அவசரச் சட்டமாக வெளியிட்டுள்ளது அரசு!

இது எப்படிப்பட்ட இந்திய வேளாண் மக்களுக்குத் தீமைகளை விளைவிக்கப் போகிறது தெரியுமா?

இந்தியாவிலுள்ள 126 கோடி மக்களில், 12.1 கோடிப் பேர் வேளாண்மை நில உடைமைக்காரர்கள். இந்த

12.1 கோடி நில உடைமைக்காரர்களில் 9.9 கோடிப் பேர் சிறு, குறு நில உடைமைக்காரர்கள். அதாவது அரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நில உடைமை பெற்றவர்கள்.

ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தாரிடம் மொத்த வேளாண் நிலத்தில் 44 விழுக்காடு நிலங் களே உள்ளன. ஆனால் வேளாண்மையை ஒரு தொழிலாகச் செய்கிறவர்களாக உள்ளவர்களில் இவர்கள் மட்டுமே 87 விழுக்காடு பேர்.

மீதிப் பேர் நடுத்தர மற்றும் பெரிய வேளாண்குடிகள்; நகத்தில் அழுக்குப் படாதவர்கள்;வெயிலில் காயாதவர்கள்; மழையில் நனையாதவர்கள்; ஆடு மாடு வளர்க்காதவர்கள்; அதா வது -15 விழுக்காடாக உள்ள மேல்சாதி -சற் சூத்திர சாதிக்காரர்கள்.

ஆதலால், மேலே கண்ட சிறு, குறு வேளாண் குடிகளுடைய வாழ்வுதான் புண்ணாக ஆக்கப் படப் போகிறது, மோடி ஆட்சியில்.

இம்மக்களை, இவர்களுடைய இடங்களில் போய்ப் பார்ப்பவர் யார்? இவர்களுக்கு வரப்போகிற பேரா பத்தை எடுத்துச் சொல்லுவது யார்?

இந்த 8 அவசரச் சட்டங்களில் கையொப்பம் போட்டகுடிஅரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, 19-1-15 அன்று, ஒப்புக்கு ஒப்பாரி வைக்கிறார்.

“எதிர்பாராத சூழ்நிலைகள் இருக்கும் போதுதான்,தவிர்க்க முடியாத காரணத்தால், அவசரச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்” என்று கூறி ஒப்பாரி வைக்கிறார்.

ஏற்கெனவே ஆட்சியிலிருந்த பிரதமர் இந்திரா காந்தி -16 ஆண்டுகளில் 65க்கு மேற்பட்ட அவசரச் சட்டங் களை அமல்படுத்தியதை-எல்லோரும் மேற்கோளாகக்காட்டுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? இந்தியாவில் மக்கள் நாயகம் எப்போதும் இல்லை என்பதைத்தானே!

இந்தியாவில் -மேல்சாதி, பணக்கார, பார்ப்பன,பனியா, ஆங்கிலம் கற்ற கொள்ளைக்காரர்கள் மற்றும்அவர்களின் அடிவருடிகள் ஆட்சிதான் 1946 முதல் 68 ஆண்டுகளாக நடக்கிறது என்பதே உண்மையிலும் உண்மை.

இந்த அமைப்பை அடியோடு ஒழித்திடுவோம் வாரீர், வாரீர்!

- வே.ஆனைமுத்து

Pin It

பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் 22.01.2015 அன்று மறைவுற்றார் என்ற செய்தி அவர் பால் அன்புள்ளவர்களை மட்டுமின்றித் தமிழின் பால்-தமிழரின்பால்-பெரியாரிடத்து-பாவேந்தரிடமிருந்து அன்பும் பற்றும் கொண்ட கோடிக் கணக்கான தமிழர்களைத் துயரில் ஆழ்த்தியது. ஏன்?

தமிழறிஞர்கள் கட்டுக்கட்டாக உள்ள தமிழ் நாட்டில், தமிழ்மொழியை வாழவைப்பதாற்காகச் சொல்ல வேண்டிய செய்திகளை-செய்ய வேண்டிய பணிகளை எந்த இடத்தில், எவரிடம் தெரிவிக்க வேண்டுமோ அதைச் செய்யும் அஞ்சா நெஞ்சினராகப் பேராசிரியர் இரா.இளவரசு விளங்கினார். முதலமைச் சர், தொடர்புடைய துறை அமைச்சர், எவராயினும், நேருக்கு நேர் - ‘செயத்தக்க செய்யாமையாலும் தமிழ் கெடும்’ என்பதை எடுத்துரைத்த ஆண்மையாளர், அவர்.

வளங்கொழிக்கும் கொள்ளிடக்கரையில், நடுத்தர வேளாண் குடும்பத்தில் பிறந்தவராயினும், தந்தை பெரியாரின் சாதிமறுப்புக் கொள்ளையை ஏற்றுத் தாம் பிறந்த வீட்டிலும், தாம் பணியின் நிமித்தம் வெளி யூரில் வாழ்ந்த இடத்திலும் எல்லோரையும், ஒத்த உரிமைகளும் அதை நடத்திக் காட்டியவர்.

திருச்சிக்கு, என் வீட்டுக்கு, 1982இல் முதன் முத லாக வருகை தந்தார், என் மாணவரும் அவருடைய பங்காளியுமான பெரியசாமியுடன்.

நான் வேறு உள்சாதி; அவர்வேறு உள்சாதி. ஆயினும் உடன்வந்த பெரியாசாமியின் தம்பிக்கு என் மூத்தமகளைத் திருமணம் செய்யவேண்டும் என்று, வந்தவுடனே அறிவித்தார். எனக்கும் உடன்பாடு. ஆனால் நான் 3 மாதம் வெளிமாநிலத்தில் இருந்த போது என் குடும்த்தார் என் மகளை வேறு மண மகனுக்கு உறுதி செய்துவிட்டதைத் தெரிவித்தேன்.

அப்போதுதான் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூலை நேரில் விலைக்கு வாங்கினார்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைக்க அவரு டைய இல்லத்துக் ஒருமுறை சென்றேன். அது சமயம் அவருடைய துணைவியாரையும் மக்களையும் பார்த்து உரையாடினேன்.

அவருடைய இல்லத் திருமணம் ஒன்றில் பங் கேற்றேன்.

2002 இல் அன்னாரின் பிறந்த நாளை ஒட்டி, அவர் கல்வி பயின்ற, திருச்சி அர்ச். சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றவர்களுள், நான் முதன்மையான இடம் பெற்றேன்.

பாவேந்தரை மேடைதோறும் பாடிப் பாடித்தான் திராவிடர் இயக்கம் வளர்ந்தது. அப்பெருங்கவிஞரின் பெருமையை எடுத்தியம்பும் திறம்மிக்கோராகக் கரந்தை புலவர் இராமநாதன், நாவலர் இரா.நெடுஞ்செழியன், சிதம்பரம் பேராசிரியர் இராமநுசம், பேராசிரியர் இரா.இளவரசு, பேராசிரியர் ராமர் இளங்கோ ஆகி யோர் விளங்கினர்.

இப்படிப்பட்ட பணிகளில்-பாவேந்தரின் தொடக்க காலப்பாடல்கள் சுப்பிரமணியக் கடவுளைப்பற்றி, தேசியம் பறி, தீண்டாமை ஒழிப்புப்பற்றியவை. அவற்றைத் தொகுத்துச் செம்பதிப்பாக வெளியிட்டவர். பேராசிரியர் இரா.இளவரசு அவர்களே ஆவார்.

பெரியார் கொள்கைகளில் தோய்தோர், பலர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் “பெரியார் உயர் ஆய்வு மய்யத்”தின் தலைவராக 1-7-1999 முதல் 2004 வரை அய்ந்தாண்டுகள் விளங்கினார். அந்த ஆய்வு மய்யம் அவராலும், எஸ்.வி.இராசதுரை, பேரா.க.நெடுஞ்செழியன் போன்றாராலும் பெருமை பெற்றது.

இத்தகைய பெஞ்சிறப்புகளையும் தகுதிகளையும் பெற்ற இளவரசு அவர்கள் உடல்நலங்குன்றியிருப் பதாக அறிய எனக்கு வாய்ப்பே இல்லாமற் போயிற்று.

அன்னாரின் உடலை நேரில் பார்த்தபோது-அந்தோ! அடையாமே தெரியவில்லையே என மனம் நொந்தேன்.

மா.பெ.பொ.க. சார்பில் தோழர்கள் இரா.பச்சமலை, துரை.கலையரசு, கலச.இராமலிங்கம், வாலாசா வல்லவன் நான் அப்பெருகமனாரின் உடலுக்குக் கருப்பு ஆடை போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினோம்.

சாதி ஆதிக்கத்தை அடையாளங்கண்ட பேரறிஞர் ரஜினி கோத்தாரி மறைந்தார்

இந்திய-ஒடுக்கப்பட்ட எல்லாச் சமுதாயங்களுக்கும் எல்லாத்துறைகளிலும் விடுதலை வரவேண்டும் என்றும், அதுவே மக்கள் நாயகம் மலர ஒரேவழி என்றும் கருதி, அதற்காக தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்தவர், பேரறிஞர் ரஜினி கோத்தாரி அவர்கள்.

1977இல் தோழர் எஸ்.வி.இராஜதுரை வழியாக நான் அவரைப்பற்றி அறிந்தேன். அவர்“வளர்ந்து வரும் சமுதாயங்களுக்கான ஆய்வு நிறுவனம் (Centre for the study of Developing Societies) என்னும் நிறுவனத்தை 1963இல் தில்லியில் நிறுவினார்.

சாதிய மோதல்கள், சாதி உணர்வு மறைய உள்ள தடைகள், மக்கள் சிவில் உரிமைகளுக்கு நேரிட்ட இடையூறுகள்- Subaltern எனப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களின் விடுதலை இவற்றில் ஆர்வம் உள்ளவர் களை அடையாங்கண்டு, அவர்கள் களப்பணிகளை மேற்கொள்ள ஊக்கம் அளித்து உதவியவர். அந்நிறு வனத்தின் தலைமைப் பொறுப்பாளராக விளங்கிய டி.எல்.சேத் (D.L.Seth) என்பவர் அவருடைய பணிகளுக்கு உற்ற துணையாக விளங்கினார். அந்நிறுவனத்துடன் 1978 இல் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்நிறுனத் தார்க்கு, தமிழகத்தில் நடந்த-1978 மண்டைக்காடு சாதிமோதல்; 1978 மீனாட்சிபுரம் மதமாற்றம் பற்றிய விரிவான கள ஆய்வு அறிக்கைகளை நான் அளித்தேன்.

1978இல் அரசு வேலையிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான-தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றி திண்டுக்கல்லை அடுத்த ஒரு சிற்றூரில் இரண்டு நாள்கள் நடைபெற்ற கலந்துரையாடலில் அறிஞர் ரஜினிகோத்தாரி, எஸ்.வி.இhஜதுரை, கோவை ஞானி, முனைவர் மு.நாகநாதன் மற்றும் பலருடன் நானும் பங்கேற்றேன். என் முதல்நாள் உரையில், இடஒதுக்கீடு பற்றிய வரலாறு பற்றி நாள் வாரியாக நான் குறிப்பிட்டதை, என் அறைக்கு வந்து, கோத்தாரி மெச்சி, மனமாரப் பாராட்டினார்; அடுத்த நாள் அரை நேரம் என்னையே பேசவைத்தார். அவ்வளவு செய்தி களையும் ஆங்கிலத்தில் எழுதி, ஒரு குறுநூலாக ஆக்குங் கள் என்றும் விருப்பம் தெரிவித்தார். அதற்காக, செனனையில் மூன்று நாள்கள் தங்கி ஆங்கிலத்தில் ஒரு குறு நூலை நான் உருவாக்கினேன். இப்பணிக்கு, எஸ்.வி.இராதுரை ஓர் எழுத்தாரைத் தந்து உதவினார்.

அதனை அடுத்து மேற்கு வங்கத்தில், மார்க்சிய-லெனினியக்கட்சிச் சார்பில் சந்தோஷ் ராணா, பாஸ்கர் நந்தி இருவரும் என்னையும் எங்கள் கட்சித் தோழர் களையும் அழைத்து, கல்கத்தாவில் 1986 அக்டோபர்-நவம்பரில் இடஒதுக்கீடு, தேசிய இனங்களின் விடுதலை பற்றி நான்கு நாள்கள் நடத்திய கருத்தரங்கில் பேசிட ஏற்பாடு செய்தனர்.

அந்நிகழ்ச்சிகளிலும் அறிஞர் ரஜினி கோத்தாரி மற்றும் தில்லி வழக்குரைஞர் பகவன்தாஸ், வே.ஆனைமுத்து, முனைவர் து.மூர்த்தி, க.முகிலன், கலசராமலிங்கம், தில்லி ச.தமிழரசு முதலானோர் பங்கேற்றோம்.

1987 செப்டம்பரில், ஜலந்திரில் பாஸ்கர் நந்த முன்னின்று நடத்திய தேசிய இனவிடுதலை பற்றிய மாநாட்டிலும் பேராசிரியர் ரஜினிகோத்தாரி, வழக்கு ரைஞர் பகவன்தாஸ், வே.ஆனைமுத்து, முனைவர் து.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றோம்.

1991 அக்டோபரில் ரஜினி கோத்தாரி உடல் நலமின்றி இருப்பதாக அறிந்து அவருடைய இல்லத் துக்குச் சென்று நலம் உசாவி வந்தேன். அதன் பின்னர் கடந்த பல ஆண்டுகளில் அப்பெருமகனாரைக் கண்டு பேசிட நாடன் முயலாமற் போனதை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

பேரறிஞர் ரஜனி கோத்தாரி அவர்கள் 2015 சனவரி 18 வாக்கில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்த அதிர்ச்சி அடைந்தேன்.

“Policitcs in India”, “Caste in Indian Policitcs and Rethinking Development in Search of Humane Alternatives” உள்ளிட்ட அவருடைய ஆய்வு நூல்கள் இந்திய அரசியல், சாதியின் இருப்புநிலை, மனித மாண் பைக் காக்க ஏற்ற வழிகள் இவற்றை நாம் அறிந்திட உதவுபவை.

இவற்றை வென்றெடுக்க நாம் முயலுவதே இவற்றை பேரா.ரஜினி கோத்தாரி அவர்களுக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதை ஆகும்; நன்றிக் கடன் ஆகும்.

வளர்க அறிஞர் ரஜினி கோத்தாரி புகழ்!

-    வே.ஆனைமுத்து

Pin It

வடக்கேயிருந்து கேடான இந்துத்துவ வாடைக் காற்று தமிழகத்தில் வேகமாக வீசுகிறது என்பதன் அறிகுறிதான் - பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ எனும் நூல் குறித்து எழுந்துள்ள சிக்கல்.

இது இலக்கியம் சார்ந்த, கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல; இதன் பின்னணியில் சாதி -மத உணர்ச்சிகளை உசுப்பிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சங்பரிவாரங்களின் சதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு -2016 ஏப்ரல்-மே மாதங்களில் தமிழ்நாடு சட்டப்  பேரவைக்குத் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் 48 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் எனப்படும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறித் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்துள்ளன.

எதிரி வலிமையற்ற சூழ்நிலையில் இருக்கும் போது திடீரெனத் தாக்குதல் கொரில்லாப் போர் முறை எனப்படுகிறது. அதுபோல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் களத்தில் ஆயுதங்களை இழந்து நிற்கின்றன. தி.மு.க. தில்லியில் ஆட்சியில் நீண்டகாலம் பங்கு பெற்றதன் தொடர்பாக எழுந்துள்ள பல ஊழல் குற்றச் சாட்டுகளாலும், குடும்ப அரசியல் கோளாறுகளாலும் திணறிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், அதன் வானளாவிய அதிகாரம் படைத் தத் தலைவி செயலலிதா ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டுப் பிணையில் முடங்கிக் கிடக்கிறார். எனவே தமிழகத்தில் வலிமையாகக் காலூன்றி வளர்வதற்கான ஏற்ற அரசியல் -சமூகச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் சங்பரிவாரத் திட்டத்தின் ஒரு பகுதியே பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நூலுக்கான எதிர்ப்பும் போராட்டமும் ஆகும்.

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நூல் 2010 திசம்பரில் வெளிவந்தது. இலக்கிய வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நுல் ‘டீநே ஞயசவ றுடிஅயn’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டு, பெங்குவின் பதிப்பகத்தால் 2014 இறுதியில் வெளியிடப்பட்டது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அனிருத்தன் வாசுதேவனுக்குக் கனடா நாட்டின் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருதை வழங்கியுள்ளது. ஆனால் மாதொருபாகன் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகுதான் அதற்கான எதிர்ப்பும் எழுந்தது. தில்லியில் ஆங்கிலத் தில் இந்நூலைப் படித்த சங்பரிவாரத்தின் ஆள்கள் தமிழகத்தில் இந்நூலை எதிர்ப்பதற்கான திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தனர்.

பெருமாள் முருகன் திருச்செங்கோட்டை அடுத்துள்ள கூட்டப்பள்ளி என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு திரையரங்கின் முன் ‘சோடா’ கடை நடத்தி வந்தார். பெருமாள் முருகன் உயர்நிலைப்பள்ளி வரையில் திருச்செங்கோட்டில் படித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் இருபது ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கொங்கு மண்டலத்தின் வெள்ளாள கவுண்டர் சாதியில் பிறந்த பெருமாள் முருகன், வேலூர் மாவட்டத்தில் டாக்டர் மு. வரதராசன் பிறந்த ஊரான வேலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரான எழிலரசியை மணந்தார், எழிலரசியும் அரசுக் கல்லூரியில் துணைப் பேராசிரியர்.

கொங்கு மண்டலம் என்பது கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங் கள் அடங்கிய பகுதியாகும். கொங்கு மண்டலப் பகுதியில் வழங்கும் வட்டாரச் சொற்களைத் தொகுத்து அகராதியாக 2000ஆம் ஆண்டில் வெளியிட்டார். சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுதல், இழிவுபடுத் தல் குறித்த தங்கள் சொந்த அனுபவங்களை மற்ற வர்களிடம் கேட்டுப் பெற்றுத் தொகுத்து “சாதியும் நானும் - அனுபவக் கட்டுரைகள்” என்னும் நூலாகக் காலச்சுவடு பதிப்பாக 2013இல் வெளியிட்டார். இந் நூலில் உள்ள 32 கட்டுரைகளில் 16 கட்டுரைகள் கல்லூரியில் பெருமாள் முருகனிடம் படித்த மாணவர் கள் எழுதியவை. நானும் சாதியும் நூலை “பலாத் காரத்தில் மனிதனை அடக்கச் சாதி இருக்கிறதே தவிர, இயற்கையில் எங்கே இருக்கிறது? என்று கேட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கு” என்று எழுதிப் படையலாக்கியுள்ளார். கடைசியாக எழுதிய “பூக்குழி” நாவலை, தருமபுரி இளவரசன் நினைவாக என்று குறித்துள்ளார். இவர் ஒன்பது நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், நான்கு கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிலேயே நாமக்கல், திருச்செங்கோடு பகுதியில்தான் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கல்வி வணிகக் கொள்ளை பெருமளவில் நடைபெறுகிறது. நாமக்கல் பகுதி கோழி வளர்ப்புக்குப் பெயர் போனது போல, மாணவர்களைக் கொடுமைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக உருவாக்கும் கல்வி வணிகச் சுரண்டலை எதிர்த்துப் பல கட்டுரைகள் எழுதினார். மேலும் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக் காகக் களமாடினார். இக்காரணங்களால் பணக்கார -ஆதிக்க சாதி வெறியினர் பெருமாள் முருகனைப் பழி தீர்க்க ஏற்ற சமயத்திற்காகக் காத்திருந்தனர். தில்லியில் தலைமையிலிருந்து பெறப்பட்ட ஆணைக்கு ஏற்ப, திருச்செங்கோட்டில் உள்ள இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவாரங்கள் மாதொருபாகன் நூலைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். இந்துத்துவச் சக்திகளுடன் சாதிய ஆதிக்கச் சக்திகளும் என அப்பகுதியைச் சார்ந்த 44 அமைப்புகள் ஒன்றிணைந்து இதைப் பெரும் பிரச்சனையாக ஆக்கின.

192 பக்கங்கள் கொண்ட மாதொருபாகன் நூல் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலின் தேர் திருவிழாக் காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் விதிவிலக்கான பாலியல் உறவு என்பதை மய்யப்படுத்திப் புனையப் பட்ட கதையாகும். குழந்தைப்பேறு இல்லாத கணவன் மனைவி திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டால் மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரியார் ஈ.வெ.ரா.வின் பெற்றோர் வெங்கடாசல நாயக்கரும் சின்னத்தாயம்மாளும் பிள்ளைப்பேறு வேண்டி திருச்செங்கோட்டிற்கு வந்தனர் என்று ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி 12.01.2015 அன்று ‘தி இந்து’ ஆங்கில ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் அவர்கள் வீட்டுப் பெரியவர்களின் உதவியோடு அங்கு நடைபெறும் கோயில் தேர்த் திருவிழா வுக்கு வரும் இளைஞர்களோடு உறவு கொள்வார்கள் என்று பெருமாள் முருகன் எழுதியிருப்பதே இப்பிரச் சனைக்குக் காரணம்.

குழந்தைப் பேறுக்கு வாய்ப்பில்லாத சூழலில், வேறொரு ஆணுடன் உறவு கொண்டு கருவுறுதலுக் கான பலவகையான பழக்கவழக்க முறைகள் தொன்மைக் காலந்தொட்டே இருந்து வந்துள்ளன. இதை அந்தந்தச் சமூகங்களும் அங்கீகரித்துள்ளன. ஒரு பெண் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டு குழந்தைப் பெறு வதற்கு இந்து தர்மம் அனுமதிக்கிறது. இது ‘நியோகா தர்மம்’ எனப்படுகிறது. ரிக் வேதத்திலேயே இதைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்திலும் இராமாய ணத்திலும் மற்ற புராணங்களிலும் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. வால்மீகி எழுதிய இராமாயணத்தை மொழிபெயர்த்த பண்டித மன்மத நாததத்தர் கோச லைக்கு எப்படி பிள்ளை உண்டாயிற்று என்று பின் வருமாறு எழுதியுள்ளார் : “கோசலை மூன்று வெட்டில் அந்தக் குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரை யோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு, உகதா முதலிய ரித்விக்குகள் இராசபார்யைகளைப் புணர்ந்தார்கள்.” இராமனும் அவன் தம்பிகளும் இப்படித்தான் பிறந் தார்கள்.

இக்கதையில் பொன்னன்-காளி என்கிற கணவன், மனைவி அன்பான இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்குக் குழந்தை இல்லை. குழந்தை இல்லாததை உறவினர்கள் இழிவாகக் குத்திப் பேசு கின்றனர். இதனால் வீட்டு -சமயச் சடங்குகளில் இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே பிள்ளைப் பேறு வேண்டி இருவரும் திருச்செங்கோடு திருவிழா வில் கலந்து கொள்கின்றனர் என்பதே கதைக் கள மாகும். இவர்கள் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாகக் கதையில் வருகிறது.

கடந்த நான்காண்டுகளில் நான்கு பதிப்புகளைக் கண்டு விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்றி ருந்த மாதொருபாகன் நாவலுக்குத் திடீரென்று 2014 திசம்பர் மாதத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதற்கு முன்னரே குறிப்பிட்டவாறு தில்லியிலிருந்து இந்துத்துவச் சக்திகள் இட்ட கட்டளையே காரணமாகும். 26.12.2014 அன்று திருச்செங்கோட்டில் சங்பரிவாரத்தினரும் சாதி வெறியர்களும், “மாதொருபாகன் நூல் நம் ஊரை, சாதியை, இந்து மதத்தை, பெண்களை இழிவுபடுத்து கிறது; எனவே இந்நூலைத் தடைசெய்ய வேண்டும்; நூலை எழுதிய பெருமாள் முருகனையும், நூலைப் பதிப்பித்தவரையும் கைது செய்ய வேண்டும்” என்று கோரி மாதொருபாகன் நூலின் படிகளையும் பெருமாள் முருகன் படத்தையும் எரித்தனர். இழிவுபடுத்துவதாக இவர்கள் கருதும் நூலின் இரண்டு பக்கங்களை மட்டும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வீடுதோறும் வழங் கிச் சாதித் தீயை மூட்டினர். அனுமதியில்லாமல் ஆங் காங்கே கூட்டங்கள் நடத்தி, பெருமாள் முருகனுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களைப் பரப்பினர். பெருமாள் முருகனைக் கடுமையாகக் கண்டித்து நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டினர். மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ இதைத் தடுத்திட முயலவில்லை. இதனால் திருச்செங்கோட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை உரு வானது.

இச்சூழ்நிலையை உணர்ந்த பெருமாள் முருகன் 07.01.2015 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் “குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் படும் துன்பங்களைப் பேசுவதே நாவலின் மய்யக் கருத் தாகும். எந்தப் பெண்ணையும் இழிவாகச் சித்தரிக்க வில்லை. பாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் அவர் களின் கோணத்திலானவை. அதை எழுத்தாளன் கருத்தாகவோ, பொதுக் கருத்தாகவோ எடுத்துக் கொள்ள இயலாது.

குழந்தைப் பேறுக்கான பல்வேறு வேண்டுதல்களைக் கொண்ட ஊர் திருச்செங்கோடு என்பதாகவே இக்கதை யில் காட்டப்பட்டுள்ளது. நாவலில் திருச்செங்கோடு என்னும் ஊர்ப் பெயரையும் அதன்வழி அடையாளங்களையும் பயன்படுத்தி எழுதியதைத் தங்கள் வாசிப் பின் வழி தவறு என உணரும் திருச்செங்கோடு பொதுமக்களிடம் அதற்காக மிகுந்த வருத்தம் தெரி வித்துக் கொள்கிறேன். அடுத்து வெளியாகும் பதிப்பில் ஊர்ப் பெயரையும் அடையாளத்தையும் நீக்கித் திருச் செங்கோடு என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்க உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று விளக்கமும் வருத்தமும் தெரிவித்தார்.

ஆனால் பெருமாள் முருகனின் இந்த விளக்கத்தை -வருத்தத்தைச் சங்பரிவாரங்களும் சாதி வெறியர் களும் ஏற்கவில்லை. 2002இல் முசுலீம்களைப் படு கொலை செய்து, இந்தியாவுக்கான ஆய்வுக்கூடமாகக் குசராத்தை ஆக்கியதைப் போல, தமிழ்நாட்டின் ஆய்வுக்கூடமாகத் திருச்செங்கோட்டைப் பயன்படுத்திட முடிவு செய்தனர். இந்து மதம், சாதிகள், கோயில்கள், திருவிழாக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்க முறைமைகள் முதலானவற்றை விமர்சனம் செய்தோ, எதிர்த்தோ இனி எவரும் பேசவோ, எழுதவோ முன்வரக்கூடாது என்கிற பாசிச அச்சுறுத்தல் நோக் கத்துடன் 09.01.2015 அன்று திருச்செங்கோடு நகரில் முழுக் கடையடைப்பு நடத்தினர்.

இந்துத்துவ-சாதியவாதிகளின் அச்சுறுத்தலான, அடாவடித்தனமான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க அரசு முயலவில்லை என்பது மட்டுமின்றி, ஆதிக்கவாதிகளின் அகங்குளிரும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12.01.2015 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பெருமாள் முருகனை அழைத்து அச்சுறுத்தியது அரசு நிர்வாகம். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை யில் நான்கு மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் பெருமாள் முருகன் மட்டுமே கலந்து கொண்டார். எதிர்த்தரப்பில் ஏழு பேர் கலந்து கொண்டனர். ஆனால் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி, பெருமாள் முருகனும் எதிர்த்தரப்பாரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவிடாமல் இடைத்தரகர் போல் செயல் பட்டார். முன்பே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பெருமாள் முருகனை மேலும் அச்சுறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு உடன்பாட்டில் கையெழுத்திடச் செய்தனர். அதன் பிறகே மாதொருபாகன் நூலுக்கு எதிரானப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவ தாக இந்துத்துவ சாதிய வாதிகள் கையொப்பம் இட்டனர். இவ்வாறாக, அரசமைப்புச் சட்ட விதி 19(1)(a)வில் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துச் சுதந்தரத்தை இந்துத்துவ பாசிச சக்திகளுடன் தமிழ்நாட்டு அரசும் கூட்டுச் சேர்ந்து ஒடுக்கியமை சனநாயகப் படுகொலை யாகும்.

நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க நேரிட்ட மன உளைச்சலின் உணர்ச்சி மேலீட்டால், 48 அகவையினரான பெருமாள் முருகன் அன்று இரவே தன் முக நூலில் “எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் இல்லை. ஆகவே அவன் உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, அற்ப ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்” என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை இலக்கிய உலகிலும் முற்போக்குச் சிந்தனையாளர்களிடையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெருமாள் முருகன் புறமுதுகிட்டுப் பின்வாங்கியிருக்கக் கூடாது; நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது அவரை ஆதரித்த எழுத்தாளர்களைச் செருப்பால் அடித்தது போன்றது என்பன போன்ற கருத்துக் களை எழுத்தாளர்களில் சிலர் கூறினர். பெருமாள் முருகனின் இம்முடிவு சரியா? தவறா? என்பது விவாதத் துக்குரியது. ஆனால் இதில் மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது தமிழ்நாட்டு அரசின் நிர் வாகம் இந்துத்துவச் சக்திகளின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக நின்று நடத்திய கட்டப்பஞ்சாயத்துதான்.

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலைக் கண்டித்து மதவாத-சாதியவாத பிற்போக்காளர்கள் எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில், 7-1-2015 அன்று பாரீசு நகரிலிருந்து வெளியிடப்படும், கேலிச் சித்திரங்களைப் பெருமளவில் தாங்கிவரும் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) எனும் கிழமை ஏட்டின் அலுவலகத்துக்குள் இசுலாமிய பயங்கரவாதிகள் புகுந்து அதன் ஆசிரியர் உட்பட 12 பேரைச் சுட்டுக் கொன்றனர். முகமது நபியை இழிவுபடுத்தும் வகை யில் கேலிச்சித்திரங்களைத் தொடர்ந்து சார்லி ஹெப்டோ ஏடு வெளியிட்டு வருவதற்கான பழிவாங்கல் நடவடிக்கையே இது என்று பயங்கரவாதிகளின் அமைப்பு கூறியது. ஆனால் கருத்துச் சுதந்தரத்தின் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பிரான்சு உட்பட எல்லா நாட்டுத் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். இசுலாமிய மதப்பற்று உடையவர்கள் மனம் நோகும்படி அக்கேலிச்சித்திரங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டவர்கள் கூட வன்முறை மூலம் இதை ஒடுக்க முயன்ற பயங்கரவாதிகளைக் கண்டித்தனர். ஏனெனில் பிரான்சில் 1789இல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகக் கருத்துச் சுதந்தர மும், மனித உரிமைகளும் எந்த நிலையிலும் ஒரு குழுவாலோ, சமூகத்தாலோ, அரசாலோ ஒடுக்கப்படக் கூடாது என்கிற கோட்பாட்டைப் பின்பற்றி வருகிறார் கள். வால்டேர், ரூசோவின் சுதந்தரக் கருத்துரிமை என்பது அய்ரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக வலிமையாகக் காலூன்றியுள்ளது.

அதனால் 11.1.2015 அன்று பாரீசு நகரில் பல நாடுகளின் உலகத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. பிரான்சு நாட்டில் அன்று பல நகரங்களில் மொத்தம் இருபது இலட்சம் பேர் வீதியில் இறங்கி சார்லி ஹெப்டோ ஏட்டின் கருத் துரிமைக்கு ஆரவாகக் குரல் கொடுத்தனர். எனவே தான் இப்படுகொலைக்குப் பிறகும் சார்லி ஹெப்டோ இதழ் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வெளியிடப் பட்டது.

இந்தியாவிலோ தனிமனித கருத்துரிமை சாதி-மதம் என்ற சட்டகச் சிறைக்குள் பூட்டி வைக்கப்பட் டுள்ளது. அதனால் தனிமனித கருத்துரிமை எளிதில் ஒடுக்கப்படுகிறது. பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பெருமளவில் மக்களிடையே ஆதரவு எழவில்லை.

பெரியாரின் படத்தைப் போட்டுக் கொள்ளும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் கட்சி என்ற நிலையில், சாதி வாக்குச் சரிந்துவிடுமோ எனக் கருதி இப்பிரச்சினையில் வாய் மூடிக்கிடந் தன. நாள்தோறும் தவறாமல் அறிக்கை விடும் எழுத்தாளர் கலைஞர் கருணா நிதியும் பெருமாள் முருகனின் கருத்துச் சுதந் தரக் குரல்வளை நெறிக்கப்பட்ட போதுகூட, காந்தி யாரின் மூன்று குரங்கு பொம்மைகளைப் போல இருந்தார்.

கலைஞர் கருணாநிதி முதலமைச் சரான பின்பு, படிப்படியாக ஆட்சியிலும் கட்சியிலும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் கைவிடப்பட்டன. கலைஞர் கருணாநிதி மட்டும் தன் கட்சிக்காரர்களின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் பேசும்போது, உணவில் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல, பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை வழிவந்தவன் என்று சொல்லிக் கொள்வார். மற்றபடி, கட்சிக்கும் கட்சிக்காரர்க ளுக்கும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை களுக்கும் எத்தகையத் தொடர்பும் இல்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் இவர்களும் புதிய பார்ப்பனர் களாகிவிட்டனர். இவர்களுள் ‘திறமையானவர்கள்’ பெரும் பணக்காரர்களாகிவிட்டனர்.

அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா 1991இல் முதலமைச்சரானது முதல், இடஒதுக்கீடு என்கிற ஒரு கொள்கையைத் தவிர மற்ற எல்லா வகையிலும் பெரியார் கொள்கைகளுக்கு எதிரான, பார்ப்பனியத் துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகி றார். அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கே இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்கிற சங்பரிவாரத்தின் கோரிக்கையை தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்திலேயே வெளிப்படையாக ஆதரித்தார். கரசேவைக்குக் கட்சிக் காரர்களை அயோத்திக்கு அனுப்பினார். பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கதை யில் கூறப்படும் இராமன் கட்டிய பாலத்தைத் தகர்த்து சேதுக் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடுத்து நிறுத்தியவர் -தமிழ்நாட்டின் அதிகாரபூர்வ மற்ற தன்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவியாகச் செயல்படும் செயலலிதா! ஆட்சியில் இருந்த போது மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து சங் பரிவாரத்தையும் விஞ்சி நின்றார்.

திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளின் சீரழிவால் ஏற்பட்ட இடைவெளியைக் கடந்த முப்பது ஆண்டுக்காலத்தில் வட தமிழகத்தில் வன்னியர், மேற்குப் பகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் போன்ற பெரிய எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் உள்ள தன்னல ஆதிக்கச் சக்திகள், சாதிப் பெருமித அடையாளங்களை முன்னிறுத்தி அரசியலிலும், பிற தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தும் நிலை உரு வாகியுள்ளது. இப்போக்கு எல்லா சாதிகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதனால் சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் கூர்மையடைந்துள்ளன. கடந்த நூற் றாண்டில் பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர் களால் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி ஒற்றுமையை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் பின்னடைவைக் கண்டுள்ளன. சாதிகளாகப் பிரிந்து நின்று, சாதியப் பெருமிதங்களை, அடையாளங்களை வளர்த்தெடுப்பது, இந்துத்துவப் பாசிச சக்திகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலுக்கு எழுந்துள்ள எதிர்ப் புக்கான காரணங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் முதல் பெரியார் காலம் வரையில் தமிழகத்தில் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் முற்றிலுமாக வெற்றி கொள்ளவிடாமல் தடுக்கப்பட்டு, தமிழ் மொழியின் தனித்த உயர் செம்மையையும், தமிழ் இனத்தின் தனிப் பண்பாட்டுக் கூறுகளையும் பேணிக் காத்து வந்துள்ளோம். இப்போது 21ஆம் நூற்றாண்டில் சங்பரிவாரங்கள் இந்து மதமே-இந்தியாவின் தேசியக் கலாச்சாரம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங் களையும், மொழிகளையும், பன்மையான பண் பாட்டுக் கூறுகளையும் அழித்தொழிக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எனவே தமிழகத்தில் பெரியாரிய - அம்பேத்கரிய -மார்க்சிய கொள்கையாளர்கள் ஓரணியில் திரண்டு, மக்கள் எழுச்சிகள் மூலம் இந்துத்துவப் பாசிசத்தைக் காலூன்ற விடாமல் தடுத்து, விரட்டியடிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம். 

- க.முகிலன்

Pin It

22 இந்திய மொழிகளையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சிமொழிகளாக ஆக்கிட, இந்தியா முழுவதும் சென்று சாதிப்போம்! வாரீர்!

மேலே கண்ட கோரிக்கையை மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, 1991 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் நடத்திய மாநாட்டில் முதன் முதலாக வரித்துக் கொண்டது. அது முதல் 10 ஆண்டுக்காலம் பலரிடமும் அதுபற்றி விவாதித்தது.

2001 அக்டோபர் 24இல் புதுதில்லியில் வே. ஆனைமுத்து, பஞ்சாப் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜித் சிங் பெயின்ஸ், ஈரோடு பேராசிரியர் மு.க.சுப்பிரமணியம், அலிகர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் து. மூர்த்தி, தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி. அலோஷியஸ், மயிலாடுதுறை பகுத்தறிவாளர் நாக. இரகுபதி ஆகியோர் கூடி, “உண்மையான கூட்டாட்சிக்கான விவாதக் குழு” ஒன்றை உருவாக்கினோம்.

அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகப் பணி யாற்றிய மு.க. சுப்பிரமணியம் எழுதிய, “இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி வேண்டும். ஏன்?” என்ற நூலை, 2003 சனவரியில் வெளியிட்டோம். அதுவே இந்தியக் கூட்டாட்சி பற்றிய முதலாவது தமிழ் நூல்.

பின்னர் 2012 சனவரியில் பல்லாவரத்திலும், 2013 சனவரியில் வேலூரிலும், 2014 சனவரியில் செயங்கொண்டத்திலும் இந்தியக் கூட்டாட்சி பற்றிய மாநாடுகளை நடத்தி விளக்கம் அளித்தோம்.

2015 சனவரி 11இல் சென்னையில் மேற்கு மாம்பலத்தில், இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை நீக்கிடவும், 22 இந்திய மொழிகளையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிடக் கோரியும் நடந்த மாநாட்டில்,  

1. “இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக்குப் பேரிடை யூறுகள் - Federalism in India in Peril” என்ற ஆங்கில நூலை வெளியிட்டோம்.

2. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதைக் கண்டனம் செய்தும், இடைக்காலமாக இந்தி பேசாத மக்கள் இந்தியை ஏற்கிற வரையில் இந்திய அரசின் இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்பதைக் கண்டித்தும், 22 இந்திய மொழி களையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிடக் கோரியும் 4 விரிவான தீர்மானங்களை, 11-1-2015 மாநாட்டில் நிறைவேற்றினோம்.  

இந்தியக் கூட்டாட்சியில் தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசின் இலக்கணம் என்ன என்பதை, 5ஆவது தீர்மானத்தில் தெளிவுபட விளக்கியுள்ளோம்.

மேலே சொல்லப்பட்டவையெல்லாம் - மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் குறிக்கோள் -உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கான விவாதக் குழுவினரின் கருத்து என்கின்ற நிலை மாற்றப்பட்டு, தமிழகத்தில் இயங்கும் (1) தனித் தமிழ்நாடு கோரும் அமைப்புகள்; (2) தன்னுரிமைத் தமிழகம் கோரும் அமைப்புகள் ஆகியோரின் நேர் மையான ஆய்வுக்கு உரியவையாக உள்ளன என் பதையும்; (3) இந்தி பேசாத மற்ற மொழி மாநில மக்களுக்கு விளக்கிச் சொல்லப்பட வேண்டியவை என்பதையும் வலியுறுத்தவே இக்கட்டுரை.

‘சிந்தனையாளன்’ 2015 பிப்பிரவரி இதழைப் படிப்போர் ஒவ்வொருவரும், அன்புகூர்ந்து, 11-1-2015 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத் தையும் முதலில் (இவ்விதழில்) படித்துவிட வேண்டு கிறோம்.

“இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற சட்ட ஏற்பை நீக்கிவிடு” என்றால், எல்லோருக்கும் எளிதில் புரிகிறது.

அதே மூச்சில் “22 இந்திய மொழி களையும் இந்தியக் கூட்டாட்சியின் ஆட்சி மொழிகளாக ஆக்கிச் சட்டம் இயற்றிடு” என்றால் -அதன் பொருள் என்ன என்பது எல்லோருக்கும் புரிய வேண்டும்.

அது பற்றி இனி விளக்குவோம்.

1. “இந்தியா” என்பது ஒரே நாடாக இப்போது இருக்கிறது. அந்த ஒரே நாடு என்கிற அமைப்பை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது -மாற்றிட யாரும் முயலக்கூடாது -அதை மனமார இந்தியாவி லுள்ள எல்லா மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் -அதை மனமார ஏற்றுக்கொண்ட கட்சிகள் மட்டுமே மக்களவைத் தேர்தல், மாநிலச் சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இவற்றில் போட்டியிட முடியும் என்பதுதான் இப்போதைய அரசமைப்பில் எழுதப்பட்டுள்ள விதிகள்.

முதலில், இந்த ஏற்பாட்டை அடியோடு மாற்றக் கோருகிறோம், நாம். ஏன்?

இது உண்மைக்கு - இருப்பு நிலைக்கு முற்றிலும் மாறானது; எதிரானது; பொய்யானது.

இந்திய அரசு, 13 இலக்கம் பேருள்ள படை வலிi மயைக் கொண்டும், காவல் துறை அடக்குமுறையைக் கொண்டும், ஒற்றையான அனைத்திந்திய நிருவாக அதிகார வர்க்கத்தைக் கொண்டும், ஒற்றையான உச்சநீதிமன்றத்தைக் கொண்டும், வெள்ளையர் காலத் தில் இயற்றப்பட்ட, ‘தேசத்துக்கு எதிரான குற்றத் தண்ட னைச் சட்டங்களை’ப் பயன்படுத்திக் கொண்டும்-

“இந்தியா” என்ற ஒற்றை ஆட்சியை -வலிமை யான அடக்குமுறைக் கருவியைக் கொண்டு காப் பாற்றிக் கொண்டிருக்கிறது.

இதை நாம் எல்லா மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

அதாவது இவ்வளவு அதிகாரங்களும் ஒரே இடத்தில் -இந்திய ஆட்சி என்கிற ஒரே மய்யத்தில் தேங்கிக் கிடப்பது உண்மையான சுதந்தரத்தை -உண்மை யான விடுதலை பெற்ற நாட்டில் பெறவேண்டிய உரிமைகளை - தமிழர், கேரளர், தெலுங்கர், கன்னடர், மராட்டியர், பஞ்சாபியர், வங்களாத்தார், அசாமியர் முதலானோர் என்றென்றைக்கும் பெறவும் அனுபவிக் கவும் முடியாது என்பதை-இந்தி பேசாத மாநில இவ்வளவு மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.

இப்படிப்பட்ட உணர்ச்சி உள்ளவர்கள் பஞ்சாபில், அசாமில், மீசோரம்மில், நாகாலந்தில் இருக்கிறார்கள். அவர்கள் படித்தவர்களாகவும், ‘இந்தியல் வேறு’ - ‘நாம் வேறு’ என்ற உணர்வு உள்ளவர்களாகவும் கூட இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு மொழி மாநிலத் தாரும் தனித்தனியாகத் தங்கள் தங்கள் நாட்டை -தங்கள் தங்கள் பண்பாட்டை -தங்கள் தங்கள் மொழியைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

1967க்குப் பிறகு ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்கள் - மக்களை அரசியல் படுத்தாமல் - மக்களிட மிருந்து தனியே ஒதுங்கியிருந்து, தலைமறைவாக இருந்து, ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டு உள்ளூர் காவல்துறையினரையும், சில சமயங்களில் இந்தியப் படையையும் எதிர்த்துக் கொண்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திட வேண்டி பணம் படைத்தவர்களிடம் மிரட்டல் மூல மும், அவர்களின் நடப்பில் தலையிடாமல் இருப்பதற் காக அவ்வப்போது ஒரு வரி போல் பணம் பெற்றுக் கொண்டும் துன்பத்துடனேயே ஆயுதந் தாங்கிப் போராடுகிறார்கள்.

இது, ஆளும் அதிகார வர்க்கத்தினரால் அவ்வப் போது தாக்கப்படவும் நசுக்கப்படவும்; மீண்டும் தலை யெடுத்துப் போராடிப் போராடி அசந்து போய்விடவும் வழிவகுத்துவிட்டது.

பிரிட்டிஷ்காரன் இந்தியன் என்பவனின் எந்தக் கோரிக்கையையும் உடனே ஏற்காமல் -கோரிக்கை கோரிக்கையாகவே இருந்து, போராடிப் போராடி அசந்து போன பிறகு, கோரிக்கையின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டும், அந்த ஒரு கோரிக்கையைச் சுற்றிச் சுற்றியே மக்கள் போராடிப் போராடி ஓய்ந்து போகவும் ஆன தந்திரத்தைக் கையாண்டுதான் -200 ஆண்டுக்காலம் 35 கோடி இந்திய மக்களை அடக்கி ஆண்டான்.

ஆங்கிலத்தைப் படிப்பு மொழியாக -ஆட்சி மொழியாக - நீதிமன்ற மொழியாக ஆக்கி இந்தியரின் -இந்திய மொழிகளின் வளர்ச்சியைப் பாழ்படுத்தினான்.

வெள்ளை ஆளும் வர்க்கத்தார், “Give the people long rope and then sack them” - “மக்களை நீண்ட காலம் போராடிப் போராடி அசந்து போகவிடு; அப்புறம் அவர்களை அடக்குவது எளிது; அடக்கிவிடு” என்கிற போர்த்தந்திரம் ஆகும், இது. உலகம் முழுவதிலும் ஆளும் சிறு பான்மைக் கும்பல்கள், அந்த ஆதிக்கத் தைக் காப்பாற்றும் முறையைக் கையாண்டு தான் ஆங்காங்கே, பெரிய எண்ணிக்கை யுள்ள மக்களைப் பிரித்து வைத்து ஆளு கிறார்கள்.

இந்தியா ஒரு விநோதமான -காட்டுமிராண்டிக் கால சமுதாய அமைப்பைக் கொண்டது. இந்துக்கள் என்போர் எப்போதும் 80 விழுக்காட்டினராக இருக்கிறார்கள்.

இன்று 126 கோடிப் பேரில் 100 கோடிப் பேர் இந்துக்கள். இவர்கள் படுக்கை வாட்டில் நான்கு உயர்வு-தாழ்வு உள்ள வருணசாதிப் பிரிவினராகவும்; குத்துவாட்டில் 6,700 உள்சாதிப் பிரிவினராகவும் வாழ்க்கை நடப்பில் பிரிந்து கிடக்கிறார்கள். இவர்கள் மொழியாலும், பண்பாட்டாலும் நேற்றும் இன்றும் ஒன்றுசேர முடியவில்லை. மொழித் தேசியம், இந்துத் தேசியம் பேசுகிறவர்கள் இதுபற்றி இணக்கமான எந்தச் செயலையும் செய்யவில்லை; செய்யமாட் டார்கள். ஏன் எனில் இது எதிர்நீச்சல் அடிக்கிற மூச்சுத்திணறும் பணி.

வேதம் பற்றி அதிகமான இந்துக்களுக் குத் தெரியாது. ஆனால் மேலான இதிகாசங்களாகப் போற்றப்படும் இராமாயணம், மகா பாரதம் பற்றி இந்துக்கள் எல்லோருக்கும் தெரியும்; இங்குள்ள மற்ற மதத்தினருக் கும் தெரியும். இவை இந்து -இந்துத்துவம் -இந்திய தேசம் என்கிற உணர்வுகளை நாடிநரம்புகளில் பாய்ச்சியுள்ளது.

“இராமாயணம், மனுநீதி இரண்டும் சாதியைக் காப்பாற்றுகின்றன” என 1922இல், திருப்பூரில் காங்கிரசுப் பொதுக்கூட்டத்தில், பெரியார் பேசினார்; இரண்டையும் எரிக்கச் சொன்னார். மேதை அம்பேத் கர் 1927இல் மனுநீதியை எரித்தார்.

தாம் சாகும் வரையில், பெரிய சங்கராச்சாரியார், இராச கோபாலாச்சாரியார், காந்தியார் ஆகியோர் இராமாயணம், பாரதம் இவற்றைப் பரப்பினர்; பாதுகாத்தனர். இந்த இருதரப்பு நிலைபாடுகளைப் பற்றி நாம் ஆழமாக உணர வேண்டும்.

இவ்வளவு இருப்பு நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் -இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்பதை நாம் எதிர்த்து ஒழிக்க வேண்டும்.

இந்தி, அரசமைப்புச் சட்டப்படி இன்றும் ஆட்சி மொழி.

“1967 அலுவல் மொழிச் சட்டப்படி” ஆங்கிலம், இன்றும் இணை ஆட்சி மொழி.

ஆங்கிலம், 2015-2016இலேயே, நீக்கப்படும் சூழலை, இன்றைய நரேந்திர மோடி அரசு உருவாக்கி வருகிறது. ஆங்கிலம் நீக்கப்பட்ட இடத்தில், அரச மைப்பு விதி 343(1)இன்படி, இந்தி மட்டுமே ஆட்சி மொழி ஆகிவிடும்; இந்தி உச்சநீதிமன்ற மொழி ஆகிவிடும்; நாடாளுமன்ற நடப்புக்கான மொழி ஆகி விடும்; உயர்கல்விக்கான மொழி ஆகிவிடும்; உரிமை இயல் சட்டங்கள், குற்றவியல் சட்டங்கள், குற்றத்தண்ட னைச் சட்டங்கள் எல்லாம் இந்தி மொழியில் வெளி யிடப்படும்.

இது தமிழருக்கு -கேரளருக்கு -ஆந்திரருக்கு -கன்னடருக்கு -மராட்டியருக்கு -பஞ்சாபியருக்கு -வங்காளியருக்கு -அசாமியருக்கு என்று, இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ள 22 மொழி மக்களுக் கும் எதிரானது; மற்ற இந்தி பேசாத பலமொழி மக்களுக்கும் எதிரானது. இவர்களின் மொழிகளின் பயன்பாட்டையும் வளர்ச்சியையும் அடியோடு தடுப்பது.

பயன்பாட்டில் இல்லாத மொழி, எவ்வளவு செழிப் பானதாக இருந்தாலும், ஒரு தலைமுறைக் காலத்தில் அழிந்தேவிடும். சமற்கிருதம் அழிந்தது அப்படித்தான்.

இந்தக் கெடுதி விரைவில் கெட்டியாக வரப்போவ திலிருந்து எல்லா மொழிகளையும் காப்பாற்றிட, முதலாவது தேவை-எல்லா மொழி மாநிலங்களையும் தன்னுரிமை பெற்ற நாடுகளாக -மொழிவழித் தேசங்களாக அமைப்பதுதான். இதைத் தமிழர் ஒவ்வொருவரும் ஆய்வு செய்திட முன்வர வேண்டும் எனக் கோருகிறோம்.

நம்மால் முன்மொழியப்பட்டுள்ள இந்தியக் கூட் டாட்சி என்பதன் வடிவம் என்ன?

“இந்தியாவில் இன்று அமைக்கப்பட்டுள்ள ஒவ் வொரு மொழி மாநிலமும், ஒவ்வொரு ஒன்றியப் பகுதி யும் தத்தம் மொழிப் பாதுகாப்பு -பண்பாட்டுப் பாது காப்புக்கருதி, அரசின் எல்லாத் துறைகளிலும் - தன்னுரிமை பெற்ற (Full Autonomy) நாடுகளாக உருவாக்கப்படவும்; பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறை அதிகாரங்கள் மட்டும் இந்தியக் கூட்டாசிக்கு, தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் தாங்களே விரும்பி அளித்திட்ட அதிகாரங்களைப் பெற்றிருக்கும்.”

அதேபோல், தன்னுரிமை பெற்ற தமிழ்நாடு எப்படிப்பட்ட அதிகாரங்கள் உடையதாக இருக்கும் என்பதும் எல்லோரும் அறியத்தக்கது.

“தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசு சமதரும, மதச்சார்பற்ற அரசாக விளங்கும். தமிழ்நாட்டு அரசுக் கெனத் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக் கொடி, தனிக் குடி உரிமை, தற்காப்புப் படை ஆகிய வை இருக்கும்.”

இந்தியா முழுவதிலும் உள்ள இந்தி பேசுகிற -இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலமும், தன்னுரி மை பெற்ற தமிழ்நாட்டைப் போலவே, தன்னுரி மை பெற்ற தனித்தனி நாடாக இலங்கும். அந் தந்த மாநிலத்தில் அவரவர் தாய்மொழி மட்டுமே எல்லாப் பயன்பாட்டுக்கும் இருக்கும். 22 மொழி களும் கூட்டாட்சியிடம் மட்டும் இருக்கும்.

இந்தியக் கூட்டாட்சி முழுத் தன்னுரிமை (Sovereignty)) பெற்றதாக இராது; இருக்கக் கூடாது.

தன்னுரிமை பெற்ற ஒவ்வொரு மொழி மாநிலமும் முழுத் தன்னுரிமை பெற்றதாக இராது.

இந்தியக் கூட்டாட்சி மூன்று அதிகாரங்களை மட்டுமே பெற்றிருக்கும்.

தன்னுரிமை பெற்ற ஒவ்வொரு மொழி மாநிலமும் மூன்று துறை அதிகாரங்கள் தவித்த -மற்ற எல்லா அதிகாரங்களையும், மற்றும் எஞ்சிய அதிகாரங்களை யும் (Residuary Powers) பெற்றிருக்கும்.

அதாவது கூட்டாட்சியிடமும், தன்னுரிமை மாநிலத்திடமும் பகிர்வு செய்யப்பட்ட உரிமைகள் (Divided Sovereignty) மட்டுமே இருக்கும்.

தமிழ்ப் பெருமக்களும் தமிழ்த் தேசிய அமைப் பினரும் இத்தகைய அரசியல் தீர்வு பற்றி - அரசமைப் புப் பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.

நம் முதலாவது தப்படி -முதலாவது அடி இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை ஒழிப்பதாக இருக்க வேண்டும்.

எல்லா இந்தி பேசாத மாநிலங்களுக்கும் மிக மிக விரைந்து நாம்தான் இக்கோரிக்கையைச் சுமந்து செல்ல வேண்டும்.

வரும் 2015 மார்ச்சு 1 முதல் பஞ்சாப் மாநிலத்தில் மா.பெ.பொ.க. சார்பில் நான் செயல்படுவேன். தோழமை அமைப்பினர் ஆர்வத்துடன் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன்.

தமிழர்க்கும், மற்றோர்க்கும் எல்லாத் தீமைகளும் இந்தி ஆட்சி மொழியாவதன் வழியாக உடனடியாக வரப்போகின்றன.

அயலுறவு அமைச்சகம் மூலம் இந்தி ஆட்சி மொழியாகத் தகுதி பெற்றிட உரிய பெரிய பெரிய ஏற்பாடுகளை மோடி அரசு முனைப்புடன் செய்கிறது.

பாரத அரசு மொழி - Bharat Sarkar’s Basha - என்ற பெரியட்டு, அயல்நாட்டுடன் ஆன உறவுக்குத் தனக்கு, எல்லாத் துறைச் செய்திகளையும் இந்தியில் தரவேண்டும் என மோடி அரசு முனைந்துவிட்டது. அதற்காக உள்துறை அமைச்சகத்தில்  துணைச் செயலாளர் பதவி வகிக்கும் அலுவலர் ஒருவரை மொழிச் சட்டப் பிரிவுக்கு (MEA), மாற்றச் செய்து, இந்தி மொழி ஆட்சி மொழியாக விரைவில் வளர்த்தெடுக்கப்படுவதற்கு எல்லா ஏற்பாடு களும் அவர்மூலம் செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பிரிவுக்கு மீனா மல்ஹோத்ரா என்கிற இ.ஆ.ப. பெண் அதிகாரி, துணைச் செயலாளர் ஆக அமர்த்தப்பட் டுள்ளார். அவர் இணைச் செயலாளர் எனப் பதவி உயர்வு தரப்பட்டுள்ளார். எல்லா ஆவணங்களையும் இந்தியில் மொழிபெயர்க்கவும், உள்நாட்டில் தொடர்புக் கான எல்லா வரைவுகளும் சுற்றறிக்கைகளும் இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளைக் கொண்டதாக அனுப்பப்படவும் எல்லா ஏற்பாடுகளையும் போர்க்கால விசையில் செய்திட மோடி அவர்களால் முடுக்கிவிடப் பட்டுள்ளன (The New Indian Express, Chennai, 19-1-2015).

இந்து தேசம் -இந்தி தேசம் -இந்துத்துவக் கொள்கையை ஊட்டும் கல்வி என, 2015-2019 ஆகிய 5 ஆண்டுக்காலத்தில் -எல்லா மொழி மக் களும், எல்லா இன மக்களும், எல்லா மத மக்களும் இந்துத்துவ -பார்ப்பனியக் கொள்கைகளில் அமிழ்த்தப்படுவார்கள்.

இந்தியா முழுவதிலும் பயணிப்போம் வாருங்கள்! இந்தியா முழுவதிலும் உள்ள பார்ப்பனரல்லாத இந்துக் களிடம் - இந்து மதத்துக்கு வெளியே உள்ளவர்களிடம் இந்துத்துவ எதிர்ப்பை விதைப்போம் -வளர்ப்போம், வாருங்கள்! வாருங்கள்!

-    வே.ஆனைமுத்து

Pin It

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 11-01-2015 ஞாயிறு அன்று சென்னை, மேற்கு மாம்பலம், சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு - தேசிய இன உரிமை மீட்பு” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1

இந்திய அரசமைப்புச் சட்டம், விடுதலை பெற்ற இந்தியாவில், வயதுவந்த எல்லோருக்கும் வாக்குக் கொடுத்து, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அவையினால் செய்யப்பட்டதல்ல என்பது ஒரு மாபெரும் உண்மை. அதன் காரணமாகவே, பல மதத்தினரையும், நூற்றுக் கணக்கான வெவ்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும் கொண்ட வெகு மக்களுக்கு அவரவரின் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள ஏற்ற உரிமையை அளிப்பதாக இச்சட்டம் அமைந்திருக்கவில்லை என இம்மாநாடு திடமாகக் கருதுகிறது. எனவே வெகுமக்களுக்கு அவரவர் உரிமைகளை அளிக்கமுடியாத இவ் அரசமைப்பை அடியோடு மாற்றிட இந்திய அரசு முன்வர வேண்டுமென்று இந்திய அரசை வலியுறுத்திக் கோருகின்றது. இக் கோரிக்கையின் உண்மையை உணர்ந்து எல்லாப் பெருமக்களும் இது பற்றித் தீவிரமாகச் சிந்தித்து, இந்நிலையை உருவாக்கிட அணியமாக வேண்டும் என இம் மாநாடு கோருகிறது.

தீர்மானம் 2

இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதியின் தலைப்பு “அலுவல் மொழி” என்று மட்டும் குறிக்கப் பட்டுள்ளது. அது, இந்தியா முழுவதிலும் உள்ள நூற்றுக் கணக்கான மற்ற மொழிகளைப் பேசும் கோடிக்கணக்கான மக்களின் பேரில் இந்தி பேசும் குடிமக்களின் மொழியைத் திணிக்கிறது. மற்ற மொழிகளைப் பேசும் மக்களின்பேரில் ஒரு வேற்று மொழியைத் திணிப்பது, “ஒரு மொழி ஆதிக்க வன் கொடு மையாகும்”. எனவே இந்திய அரசமைப்பு விதி 343(1)இல் உள்ள, “தேவநாகரி எழுத்து வடிவில் உள்ள இந்தி மொழி, (இந்திய) ஒன்றியத்தின் அலுவல் மொழியாக விளங்கும்” என்பது, இந்தி மொழி மக்களின் வல்லாதிக்கத்தை, இந்தி பேசாத பெரும்பான்மை மக்களின்பேரில் திணிப்பதாக உள்ளது என்பதை, இம் மாநாடு மறுபடியும் இந்திய அரசினர்க்கும், இந்தியப் பெருமக்களுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இந்தியைவிட காலத்தால் மூத்த மொழிகள் -மற்றும் பண்பட்ட மொழிகள் பல உள்ளன. அவற்றுள் 22 மொழிகள் மட்டும் அரசமைப்பின் விதிகள் 344(1), 351இன்படி -அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில், வெறும் “மொழிகள்” என்ற தலைப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளன.

இந்தி மட்டுமே இந்தியாவின் அலுவல் மொழி என்பதை நீக்கிவிட்டு, இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் கண்டுள்ள 22 மொழிகளையும் ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக ஆக்கிடவும், விதிகள் 343(1), 344, 345, 346, 347 ஆகியவற்றை அடியோடு நீக்கிடவும், அதற்கு ஏற்ற அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை இந்திய அரசு முன்மொழிந்து நிறைவேற்றிடவும் வேண்டும் என்றும் இந்திய அரசினரை இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது.

இந்தியா முழுவதிலுமுள்ள 58 விழுக்காட்டினரான இந்தி பேசாத பெருமக்கள், இந்தியுடன் தத்தம் மொழி மட்டும் இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று கோராமல் -அரசமைப்பில் கண்டுள்ள 22 மொழிகளும் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக ஆக்கப்பட வேண்டும் - அதற்காக இந்தி பேசாத மொழி மாநில மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் போராட முன்வர வேண்டும் என்று இம் மாநாடு தொடர்புடைய எல்லா மக்களையும் அன்புடன் வேண்டிக் கொள்ளுகிறது.

இத் திசையை, 1991 அக்டோபரில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புது தில்லியில் மவுலங்கர் மன்றத்தில் நடத்திய இந்தியக் கூட்டாட்சி மாநாட்டில் முதன்முதலாகச் சுட்டிக் காட்டியது என்பதைப் பெருமிதத்துடன் அனைவர்க்கும் நினைவுபடுத்த விரும்புகிறது.

தீர்மானம் 3

இந்திய அரசமைப்பின் விதி 343(2)இன்படி, 1950 முதல் 15 ஆண்டுகளுக்கு, ஒன்றிய அரசின் அன்றாட அலுவல்களைச் செய்திட ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்று கண்டுள்ளது. அதாவது, விடுதலை பெற்ற இந்தியாவில் இந்தி அலுவல் மொழியாகப் பயன்பட ஏற்ற சொல் வளத்தையும் மற்ற எந்தத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை என்பதால்தான், அந்தத் “தகுதியின்மை”யை மறைக்க வேண்டி, ஓர் அயல்மொழியை அலுவல்மொழி என அரசமைப்பே ஏற்றுக்கொண்டது அவமானம் ஆகும். மேலும், அந்தப் பதினைந்து ஆண்டு, 1965இல் முடிந்தது. அதற்குள் எட்டாம் அட்டவணையில் கண்டுள்ள எல்லா மொழிகளையும் இந்திய அரசின் அலுவல் மொழிகளாக ஆக்குவதை விட்டுவிட்டு, ஆங்கிலம் தொடர்ந்து அலுவல் மொழியாக இருக்க, தனியாக ஒரு அலுவல் மொழிச் சட்டத்தை நிறைவேற்றி வைத்துக்கொண்டு, அதே சமயத்தில் நடுவணரசின் அனைத்து அலுவலர்களுக்கும் அரசின் பணி நேரத்தில், அரசுச் செலவில் இந்தியைக் கற்றுக் கொடுப்பதிலேயே முழு நாட்டத்தையும் இந்திய அரசு செலுத்தியது. இது இந்திய மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்துவிட்டதுடன், ஆங்கிலம் பயன்படுத்தி அலுவல்களைச் செய்திட்ட எல்லோரும் இந்தியை மட்டுமே கற்றுத்தீர வேண்டிய கட்டாயத்தை இந்தி பேசாத மக்கள் பேரில் திணிக்க அரசு கையாண்ட சூழ்ச்சியாகவும் ஆகிவிட்டது.

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத - இந்தி பேசாத எல்லா மொழி மக்களுக்கும் அது அந்நிய மொழி. அதேபோன்று இந்தியாவிலுள்ள எல்லா மொழி மக்களுக்கும் ஆங்கிலம் அந்நிய மொழி. 2015இலும் அந்நிய மொழி அலுவல் மொழியாக இருப்பது மிகமிக இழிவானது. இதனை எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், சட்டவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும், ஊடகவியலாளர் களும், பொதுமக்களும் சீர்தூக்கிப் பார்த்து - இன்றைய அரசமைப்பில் கண்டுள்ள 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழிகளாக உடனே ஆக்கிட வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராட அனைத்துமொழி மக்களும் முன்வரவேண்டும் என இம் மாநாடு அன்புடன் வேண்டுகிறது.

தீர்மானம் 4

“இந்தியா” என்கிற பெயரில் இன்றுள்ள நிலவியல் அமைப்பு முழுவதுமோ அல்லது 1947 வரை இருந்த பரப்பிலுமோ -1801 வரையில், ஒரே ஆட்சி, ஒரே நாடாளு மன்றம், ஒரே நிருவாகம், ஒரே படை, ஒரே பணம், ஒரே உச்சநீதிமன்றம் என்று எப்பகுதியிலும் இருந்ததில்லை. இந்த மாபெரும் வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, “பாரதம்”, “இந்தியா”, “இந்து இராச்சியம்” என்கிற பழைய இதிகாசக் கருத்துகளை இந்திய அரசின்பேரில் ஏற்றி, 300 வளர்ந்த -பண்பட்ட மொழிகளைப் பேசும் 126 கோடி மக்களையும் ஓருறுப்பு ஆட்சி என்கிற “இந்திய ஒற்றை ஆட்சி”யின் கீழ், ஆளும் வகுப்பினரும், பிறவியால் மேல்சாதிக்காரர்களும், பெருநிலவுடமையாளர்களும், பெரு முதலாளிகளும் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பது -பரந்துபட்ட பகுதியில் வெகுமக்களைச் சுரண்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை இம்மாநாடு அனைவர்க்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, இந்தியாவில் இன்று அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மொழி மாநிலமும், ஒவ்வொரு ஒன்றியப் பகுதியும் தத்தம் மொழிப் பாதுகாப்பு -பண்பாட்டுப் பாதுகாப்புக் கருதி, அரசின் எல்லாத் துறைகளிலும் தன்னுரிமை பெற்ற நாடுகளாக உருவாக்கப்படவும்; பாதுகாப்பு, பண அச்சடிப்பு, செய்தித் தொடர்பு ஆகிய மூன்று துறை அதிகாரங்களை மட்டும் இந்தியக் கூட்டாட்சிக்கு, தன்னுரிமை பெற்ற மாநிலங்கள் தாங்களாகவே விரும்பி அளித்திட முன்வரவும் ஆவன செய்ய வேண்டும் என இம் மாநாடு அனைவரையும் வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் 5

தன்னுரிமை பெற்ற தமிழ்நாட்டு அரசு சமதரும மதச் சார்பற்ற அரசாக விளங்கும். தமிழ்நாட்டு அரசுக்கெனத் தனி அரசமைப்புச் சட்டம், தனித் தேசியக்கொடி, தனிக் குடிஉரிமை, தற்காப்புப்படை ஆகியவை இருக்கும். இத் தன்மையிலேயே இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் உறுப்பாகவுள்ள ஒவ்வொரு மொழிவழித் தன்னுரிமைபெற்ற நாடும் இலங்கும். தமிழ்ப் பெருமக்களும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரும், தமிழ்நாடு விடுதலை கோரும் அமைப்பினரும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி முன்மொழியும் இவ் அரசியல் அமைப்புக் கோரிக்கையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தீர்மானம் 6

புத்தரும், வள்ளுவரும், மகாத்மா புலேவும், அயோத்தி தாசரும், தந்தை பெரியாரும், மேதை அம்பேத்கரும், பாவேந்தரும் கோரிய வண்ணம் மனுதருமம், பராசர ஸ்மிருதி, யக்ஞவல்க்ய ஸ்மிருதி, இராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை முதலான பிராமணிய நூல்களை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று அனைத்துத் தமிழ் மக்களையும், பார்ப்பனரல்லாத எல்லா இந்திய மக்களையும் இம்மாநாடு வேண்டிக் கொள்ளுகிறது. மானுட ஒப்புரவுக்கு எதிரான இந்நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று இந்திய அரசினரை வலியுறுத்துவதுடன், தமிழர்கள் இக்கோரிக்கையை வென்றெடுக்கப் போராட முன்வர வேண்டும் எனவும் இம் மாநாடு வேண்டிக் கொள்கிறது.

தீர்மானம் 7

பகவத் கீதையின் காலம் 5151 ஆண்டு பழமையுடையது -ஆதி சங்கரர் கி.மு. 488 - 477 காலத்தில் வாழ்ந்தவர் என்னும் அதீதமான கற்பனைகளை வரலாறு எனக் கற்பித்து, இன்றைய பாரதிய சனதாக் கட்சி அரசின் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முதலானவர்கள் பேசுவதும்; பகவத் கீதையைப் பள்ளிக் கல்வியில் பாடங்களாக வைத்துக் கற்பிக்க இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறையினர் முயலுவதும்; அரியானா மாநில அரசினர் அத்தகைய முயற்சியினை மேற்கொள்ள ஆயத்தமாவதையும் இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 8

“மோடி அரசு ஒரு மோசடி அரசு” என்று சொல்லத்தக்க வண்ணம், தலைமை அமைச்சர், ஒளிரும் இந்தியாவை உருவாக்கிட, அயல்நாட்டு வங்கிகளில் முதலாளிகள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களில் மீட்டு வருவேன் என்று தேர்தலின்போது மக்களுக்குத் தந்த வாக்குறுதி பொய்த்துவிட்டது.

விடுதலைபெற்ற 67 ஆண்டுகளுக்குப் பிறகும் -நாட்டுப் பாதுகாப்புக்கு வேண்டிய ஆயுதங்கள், மக்கள் நலம் காக்கும் மருந்துகள், நாட்டின் வேளாண்மை, தொழில் வளப் பெருக்கத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் மின்சாரம் -பாசன நீர் வசதி; தரமான கல்வி இவற்றுள் எதையும் தரமுடியாமல் போனதற்குக் காரணம் -1947 முதல் முதலாளித்துவப் பொருளாதாரத் திட்டத்தையே முன்வைத்து 50 ஆண்டுகள் காங்கிரசாரும், 10 ஆண்டுகள் பாரதிய சனதாவினரும், 7 ஆண்டுகள் இவர்களின் தொங்குசதைக் கட்சியினரும் இந்தியாவை ஆண்டதுதான் என்பதை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வசதியாக மறந்து விட்டார். இன்று உலகின் ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடத்திலிருக்கிறது. அந்நிய - உள்நாட்டுக் கடனில் இந்தியா மூழ்கியிருக்கிறது.

இந்த இழிந்த நிலையில், இரு கை நீட்டி, தொலைதூர அயல்நாடுகளையும், குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளையும், அயலகத்தில் உள்ள இந்திய வம்சாவளி முதலாளிகளையும் “இந்தியாவில் நீங்கள் உற்பத்தி செய்யுங்கள்” என்று வருந்தி வருந்தி அழைப்பது கண்டனத்துக்கு உரியது. இது, நரேந்திர மோடி, தன் கட்சிப் பதவிச் சுகத்துக்காகவும், இந்துத்துவக் கொள்கையை இந்திய மக்கள் அனைவர் பேரிலும் கெட்டியாகத் திணித்துவிடவும் வேண்டி இந்தியாவையும், இந்தியாவின் இயற்கை வளங்களையும், மக்களின் சுதந்தரத்தையும் விற்பதே ஆகும். எனவே, இந்த மாபெரும் கேட்டினைச் செய்யும் இன்றைய இந்திய ஆட்சியினரை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 9

அன்மையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துமுடிந்த உடன்காலில், இந்திய அரசு அவசரச் சட்டங்கள் மூலம் இரண்டு திருத்தங்களை நிறைவேற்றியது. இது கடுங் கண்டனத்துக் குரியது. ‘பொது நோக்கத்துக்காக’ என்கிற போர்வையில் பெரிய பெரிய பரப்புள்ள வேளாண் நிலங்களை அரசு கையகப்படுத்த – நிலம் வைத்திருப்பவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டியதில்லை என்றும், அப்படி நிலத்தைக் கையகப்படுத்துவதால் ஏற்படும் எந்தக் கெடுதல்களைப் பற்றியும் அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்றும் இந்த அசவரச் சட்டம் கூறுகிறது. மேலும், நிலக்கரி முதலான கனிம வளங்கள் மிகுந்த நிலங்களையும் இப்படிக்கைப்பற்றி வேதாந்தம், அதானி முதலான பெரு முதலாளிகளுக்கு விற்றுவிட வழிவகை செய்யவே இச் சட்டம் அவசரக்கோலத்தில் இயற்றப்பட்டுள்ளது. இதனால் நில உரிமையாளர்களுக்கும், சமூகத்துக்கும் ஏற்படும் கேடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த அவசரச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என இந்திய அரசினரை இம் மாநாடு கோருகிறது.

வாழ்நாள் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டுக்கு ஏற்கெனவே இருந்த வரம்பான 26 விழுக்காடு என்பதை 49 விழுக்காடாக உயர்த்தி இன்னொரு அவசரச் சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றியுள்ளதை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

வாழ்நாள் காப்பீட்டுப் பணம் பொதுமக்களுடையது. அதன் கணிசமான பகுதி அரசின் திட்டங்களுக்குக் கடனாகத் தரப்படுகிறது. இதில் அந்நிய முதலீட்டை அதிகப்படுத்துவதால், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக விரைவில் மாற்றப்படவே வழிவகுக்கும்.

எனவே, இந்த இரண்டு அவசரச் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசினரை இம் மாநாடு கோருகிறது.

 தீர்மானம் 10

2015ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்நல (சுகாதார) வரைவுக்கொள்கையில், நாட்டின் மொத்தவருமானத்தில் வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே இந்திய அரசினரால் ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற அறிவிப்பை மக்களின் பார்வைக்கு அரசு வெளியிட்டுள்ளது. இது, கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பாதையினையே பாரதிய சனதாக் கட்சி பின்பற்றுகிற - மிகக் குறைவான திட்ட ஒதுக்கீடாகும்.

வரும்2015 -2016ஆம் நிதிஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில், மக்கள் நலக் காப்புத் துறைக்கு, மிகக் குறைந்தது 5 விழுக்காடேனும் ஒதுக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசினரை இம் மாநாடு கோருகிறது.

தீர்மானம் 11

இந்திய அரசினர் 1990இல் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அப்போது முதல் அரசுத் திட்டங்களை நிறைவேற்றிடப் பணம் வேண்டும்போதெல்லாம் -மக்கள் மற்றும் அரசு முதலீட்டில் நடைபெறும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றே முதலீடு திரட்டுகிறது. இது பொதுத்துறை நிறுவனங்களை மூடிவிடவே வழிவகுக்கும்.

அரசு தேசிய வங்கிகள் அளித்தவாராக்கடன்கள் என்பவை, ஆளும் கட்சியினரின் தலையீட்டாலும், வங்கி அதிகாரிகளுக்குக் கைக்கூலி தந்தும் முதலாளிகளால் பெறப்பட்டவை.

அப்படிக் கடன் பெற்ற பெரும் பணக்காரர்களில் 50 கடன்காரர்கள் செலுத்தவேண்டிய நிலுவை மட்டும் ரூபா 40,528 கோடியாகும். 2013 மார்ச்சு கணக்குப்படி 400 நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய பணம் ரூபா 70,300 கோடி. 2014 மார்ச்சு கணக்குப்படி அத் தொகை 85,000 கோடியாகிவிட்டது.

எனவே, வாராக்கடன்களைத் தண்டுவது, வரிகளைக் கறாராக வசூல் செய்வது என்கிற வருவாய் வழிகளை முடுக்கிவிடாமல், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மேலும் மேலும் அரசு விற்றுவருவது வெகு மக்களுக்கு எதிரானதும், பிற்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் வேலை வாய்ப்புப் பெற முடியாமல் தடுப்பதும் ஆகும். இப் போக்கினை இம் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், எல்லாத் தரப்பு மக்களும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அரசு விற்பதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவேண்டும் என வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம் 12

இந்திய அறிவியல் பேரவை 1913இல் நிறுவப்பட்டது. பல துறைகளைச் சார்ந்த அறிவியல் வல்லுநர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஓரிடத்தில் கூடி அறிவியலின் ஒவ்வொரு துறையையும் நவீனமான நிலைக்கு உயர்த்துவது பற்றியும், மூடநம்பிக்கை, அறியாமை இவற்றை நீக்க என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் மட்டுமே விவாதிப்பார்கள்.

ஆனால், 3-1-2015, 4-1-2015இல் மும்பையில் நடைபெற்ற இந்திய அறிவியல் பேரவை மாநாட்டில், கி.மு. 7000இல் ரிக்

வேதத்திலும், பின்னர் பௌதாயனரின் சுல்ப சூத்திரத்திலும் -வானூர்திகள், வேதக் கணக்குச் சூத்திரங்கள் ஆழமாகச் சொல்லப்பட்டிருப்பதாகச் சிலர் பறைசாற்ற இடம் அளித்திருக்கிறார்கள்.

பாரதிய சனதா அரசினரும், இந்திய அரசின் கல்வித் துறையினரும் இத்தகைய மூடத் தனங்களை “வேதத்தின் அறிவியல்” என்கிறபெயரால் வளர்த்திடஊக்கம் அளிப்பதைஇம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம் 13

தமிழ்நாட்டை 1967 முதல் 48 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தன; இப்போதும் ஆட்சி செய்கிறது.

6-3-1967 முதல் 3-2-1969 முடிய அறிஞர் சி.என். அண்ணாதுரை முதல்வராகஇருந்தார்.மும் மொழிக் கொள்கை என்கிற பேரால் இந்தி விருப்பப்பாடமாக இருந்ததை ஒழித்து ஒரு நன்மையைச் செய்தார். தேர்தல் காலத்தில் மலிவு விலையில் அரிசி என்கிற முடியாத திட்டத்தை அறிவித்தார். அவர் இரண்டு ஆண்டுகளில் மறைவுற்றார். அவருக்குப் பின்னர் மூன்று பேர்களே 45ஆண்டுக்காலம் முதலமைச்சர்களாகஇருந்தார்கள். இவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழையும் தமிழர் நலனையும் தன்மானத்தையும் கெடுக்கும் நான்கு தீய திட்டங்களை நிறைவேற்றினார்கள்.

தி.மு.க. முதல்வர் சாராயக் கடைகளைத் திறந்தார். அ.இ.அ.தி.மு.க. முதலமைச்சர்கள் இருவரும் கிஞ்சிற்றும் சிந்திக்காமல் சாராயக் கடைகளை வளர்த்தார்கள். ஆளும் திராவிடக் கட்சிக்காரர்களும், திராவிட எதிர்க் கட்சிக்காரர்களுமே சாராயத் தொழிற்சாலைகளை நிறுவினார்கள். தனியாரிடம் கடைகள் இருந்தபோதும், அரசுக் கடைகளாக மாறிய பிறகும் அவர்களே சாராய உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள். இது தமிழினத்தைச் சீரழித்த மாபெரும் தீய செயலாகும்.

இரண்டு திராவிடக் கட்சிக்காரர்களும் போட்டி போட்டுக்கொண்டு, ஆங்கில வழியில் தனியார் கல்விச் சாலைகளை நிறுவச் செய்தார்கள். இவர்களில் பலரும் கள்ளப்பணம் கொழுக்கிற ஆங்கில வழிப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவினார்கள். தமிழ்வழிக் கல்வி வரவே முடியாமல் -தமிழ்வழிக் கல்வியைத் தராமல் மாபெருங் கேட்டைச் செய்தார்கள்.

மலிவு விலையில் அரிசி; கிலோ 2 ரூபாவுக்கும், பின்னர் 1 ரூபாவுக்கும் அரிசி; இப்போது பலருக்கும் இலவச அரிசி என்று படிஅளந்து தமிழரின் தன்மானத்தை மழுங்கடித்தார்கள்; தமிழர்களை இலவசங்களுக்கு அடிமைகளாக ஆக்கினார்கள்.

இரண்டு திராவிடக் கட்சிகளும் எல்லாச் சிக்கல்களிலும் எதிரும் புதிருமாக நின்று தில்லிக்காரனிடம் மட்டு மரியாதையை இழந்தார்கள்; தமிழரிடமிருந்து பறித்துக் கொண்ட கல்வி உரிமை, காடு மேலாண்மை உரிமை முதலானவற்றைக் காக்கத் தவறினார்கள்.

இவ் இரண்டு திராவிடக் கட்சியினருமே,

சாராயத்தை ஒழிக்க

தமிழ்வழிக் கல்வியை வளர்க்க

இலவசங்களைப் பெரிய அளவில் ஒழிக்க

தில்லிக்காரனிடம் இழந்துவிட்ட அரசியல் உரிமைகளை மீட்க முதன்மையாகப் போராட வேண்டியவர்கள் ஆவர்.

இவர்கள் போராட முன்வராவிட்டால், இவ் இரண்டு திராவிடக் கட்சிகளையும், பாரதிய சனதா உள்ளிட்ட எல்லா அனைத்திந்தியத் தேசியக் கட்சிகளையும் நிலைகுலையச் செய்ய எல்லாம் செய்ய வேண்டும் என்று மான உணர்வும் பொறுப்பும் உள்ள தமிழ்ப்பெருமக்களுக்கும், தமிழின -திராவிடரியக்க இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி அன்பான அறைகூவல் விடுத்து வேண்டி அழைக்கிறது.

மேலும் தற்போதைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியினர் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைப் புகுத்தி தமிழ்வழிக் கல்விக்குச் சவக்குழி தோண்டிவிட்டனர். இதனை இம் மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ்நாட்டில் தொடக்ககல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை எல்லா நிலைக் கல்வியும் தாய்மொழிவழியிலும் இலவயமாகவும் வழங்கிட வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசினரைக் கோருகிறது.

தீர்மானம் 14

தமிழ்நாட்டில் சிறிய -பெரிய ஏரிகள் 39,000-க்கு மேல் உள்ளன. இவ் ஏரிகள் தூர் வாரப்படாததாலும், நீர்வரத்து வாய்க்கால்கள் -போக்கு வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புக்காரர்களால் தூர்க்கப்பட்டுவிட்டதாலும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலும், தென்மேற்குப் பருவமழைக் காலத்திலும் வட தமிழ்நாட்டு ஏரிகளில் பெரும்பாலானவற்றில் நீர் தேக்கப்பட முடியவில்லை. தென் தமிழ்நாட்டு ஏரிகளிலும் தூர் மண்டியிருப்பதால் முழுக்கொள்ளவுக்கு நீர் தேக்கப்பட முடியவில்லை.

நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு புட்டிகளில் குடிநீரை அடைத்து விற்கும் தொழில், கண்மண் தெரியாமல் வளர்த்தெடுக்கப் பட்டுவிட்டது.

எனவே, மிஞ்சியிருக்கிற வேளாண் நிலங்களில் ஒரு பருவத்திற்குக்கூடப் பயிர் செய்யத் தண்ணீர் போதாமல் சிறு, குறு, நடுத்தர வேளாண் குடிகள் அழிவை நோக்கி, கதியற்று நிற்கின்றனர்.

தமிழக அரசினர் வாக்கு வாங்கும் நோக்குடன் ஊதாரித்தனமாக இலவசங்களை வாரித் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், ஏரி - குளங்களைப் போர்க்கால வேகத்தில் இயந்திரங்களை வைத்துத் தூர் வார வேண்டும் என்றும் தமிழ்நாட்டு அரசினரை இம்மாநாடு வலியுறுத்தி வேண்டிக்கொள்ளுகிறது. 

Pin It