இன்னும் சில தினங்களில் (04.05.06), பிரித்தானியாவின் ஆங்கிலப் பிரதேசங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சில வாரங்களாக டோனி பிளேரின மந்திரி சபையிலுள்ள சிலரின் சில தவறான விடயங்களால், டோனி பிளேரின தொழிற்கட்சி தோல்வியடையும் நிலையிலுள்ளது. மக்கள் அரசாங்கத்தில் மிகவும் கோபமாகவிருக்கிறார்கள். கேள்வி கேட்டுத் துளைக்கிறார்கள். அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதால் இங்கு தேர்தல் காலத்தில் யாரும் கடத்தப்படவில்லை. தற்கொலைக்குத் தள்ளப் படவில்லை. அரசனோ அல்லது அரசாங்கமோ அராஜமாக நடக்கும்போது அவர்களைக் கேள்வி கேட்கும் உரிமைகளை பிரித்தானிய மக்களுக்குப் பிரித்தானிய மக்களால் எழுதப்பட்ட சட்டத்தின் பிரதம சூத்திர விஞ்ஞாபனமான 'மக்னகார்ட்டா' என்ற சட்ட அமைப்பு கொடுத்திருக்கிறது.

இந்த் மக்கள் சட்ட விஞ்ஞாபானம், 1250ம் ஆண்டு பிரித்தானியாவை ஆண்ட ஜோன் ட்ரென்ட் என்ற பொல்லாத அரசனின் கொடுமையான ஆட்சிக்கு எதிராக மக்களால எழுதப்பட்ட சட்ட சாசனமாகும். அரசன், இந்த சாசனத்தில தனது கையொப்பத்தையே வைக்கத் தயங்கினான் என்பது சரித்திரம்.

இவனின் கொடுமையை எதிர்த்து றொபின் ஹூட் என்ற நல்ல கொள்ளைக்காரன், அரசாங்கத்திடமிருந்து செல்வத்தைக் கொள்ளையடித்து ஏழை மக்களுக்குக் கொடுத்தது பலரறிந்த கதை. 'மக்னகார்ட்டா' என்ற புராதன விஞ்ஞாபனத்தின் அடிப்படையிற்தான் பிரித்தானியாவின் ஆட்சியிலிருந்த இந்தியா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளின் சட்ட திட்டங்களும் 1952ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் விஞ்ஞாபனங்களும் அமைக்கப்பட்டன. இந்தச் சட்டத்தில் மக்களைப் பாதுகாக்கும், மக்கள் தங்களுக்குப் பிடிக்காத அரசைக் கேள்வி கேட்கும் வலிமையுள்ளன.

எதிர்வரும் 8ம் திகதி தென்னகத்தில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான பிரசாரங்களைப் பார்த்தால், உலகத்திலேயே பெரிய ஜனநாயகமுள்ள நாடென்று சொல்லும் இந்தியாவில் நடக்கும் அரசியற் நாடகங்களுக்கும் உண்மையான ஜனநாயக யதார்த்தங்களுக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கின்றதா என்ற கேள்வி பிறக்கிறது. மக்களுக்குத தொண்டு செய்யும் அரசியல்வாதிகளுக்குப் பதில், மேடையில் அரிதாரம் பூசித் தங்களுக்குப் பணமும் பிரபலமும் தேடும் நடிகர்கள் முக்கிய பங்கெடுக்கிறார்கள்.

நடிகர்கள் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லை. 80ம் ஆண்டுகளில் அமெரிக்கப் பிரசிடென்டாகவிருந்து, பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தச்சருடன் சேர்ந்து கொண்டு உலகிற் பல அரசியல் மாற்றங்களைச் (இரஷ்யாவில பொதுவுடமை மக்களாட்சியை அழித்துவிட்டு, இன்று மார்பியாக்களின் கையில் ஆதிக்கத்தைக் கொடுத்திருப்பது, இயற்கை கொடுத்த நீரையே தனியார் மயப்படுத்தி இன்று வளர்ந்து வரும் நாடுகளில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமல் ஒரு நாளைக்கு 3000 குழந்தைகள் இறப்பது போன்ற மாற்றங்கள்!) செய்த அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றேகன் ஒரு நடிகர்தான்.

Jayalalithaஅரசியலில் 'நடிப்பவர்கள்' நுழைந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தென்னிந்தியா மாதிரி ஒரு பெரிய உதாரணம் உலகில் இருக்க முடியாது. காங்கிரஸின் கையிலிருந்த அரசியல் ஆதிக்கத்தைத் தங்கள் கையிலெடுக்கச் சினிமாவைப் பாவித்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலைக் கருத்துக்களை முன்னெடுத்தார் பெரியார். அவரைத் தொடர்ந்து, 60 வீதமான தமிழர் தெருக்களிலும் சேரிகளிலும் வாழ்வதைப் பொறுக்காத, 3 விகிதமான உயர்சாதிப் பார்ப்பனர் கையில 90 வீதமான அரசாங்க உத்தியோகங்கள் இருப்பதை எதிர்த்து, சாதாரண மக்கள் கையில் ஆதிக்கம் வரவேண்டும் என்ற அறிஞர் அண்ணாதுரையின் ஆத்மீகக் கோபத்தின் நெருப்பில் கொழுந்து விட்டுப் பரவியது 'தமிழம் தமிழனால் ஆளப்படவேண்டும்' என்ற கோஷம்.

அதன் பிரதிபலிப்பு 1960ம் ஆண்டின் நடுப்பகுதியில் திமுக பதவிக்கு வந்தது. இந்த மாற்றங்களுக்குச் சினிமாவும் பெரியாரின் முற்போக்குக் கருத்துக்களுள்ள நாடகங்களும் உந்து சக்திகளாவிருந்தன. திமுக கருத்துக்கள் நாடகங்கள், சினிமாத்தறை மூலம் 40-50 ஆண்டுகளில் மக்கள் மயப்படுத்தப்பட்டன. பராசக்தி, வேலைக்காரி போன்ற சமுதாயக் கருத்துக்களைக் கொண்ட சினிமாப் படங்கள் மக்கள் சிந்தனையை மாற்றும் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. ஊரோம இராச்சியத்தின் கொடுமைகளிலிருந்து யூதமக்களை விடுவிக்க இயேசு நாதர் வந்திருக்கிறார் என்று அவரின் சீடர்கள் நம்பியதுபோல், வடக்கின ஆதிக்கத்திலிருந்தும், பார்ப்பனர்கள் பிடியிலிருந்தும் தங்களுக்கு விடிவு காட்ட அறிஞர் அண்ணா வந்திருப்பதாகச் சேரியிலும் தெருவிலும வாழ்ந்த கோடிக்கணக்கான தமிழர்கள் நம்பினார்கள்.

அண்ணாவின் மறைவுக்குப் பின் உண்டான பதவிப் பூசல்கள், குத்துவெட்டுக்களின் காரணமாக இன்னுமொரு இயேசு நாதரை (எம்.ஜி.ஆர்) மக்கள் கண்டுபிடித்தார்கள். அதன்பின் நடக்கும் விடயங்களில் ஆணித்தரமான முத்திரை பதித்திருப்பவர் ஜெயலலிதா. தென்னகத் தமிழனின் பலவீனங்கள் அத்தனையையம், படிப்பறிவற்ற பெரும்பாலான தமிழகப் பெண்களின் மிகவும் மேலோட்டமானதும், இலகுவில் திரிவு படுத்தக் கூடியதுமான மனவேட்டத்தைப் பரிபூரணமாகப் புரிந்து கொண்ட ஹைதாராபாத் புத்திசாலி (?) இந்தப் பெண்மணி.

தமிழரின் சுதந்திர சிந்தனைகளை அடியோடு வெறுப்பவர். ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுபவர். தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க ஒரே நாளில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களைச் சீட்டுக் கிழித்தனுப்பும் வைராக்கிய மனம் படைத்தவர். இயற்கையின் குழந்தைகளாக வயலோடு மாரடித்து வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் விவசாயிகளின் பட்டினிக்குரலைக் கேட்காதவர்; கண்டு கொள்ளாதவர். இன்று உலகில் வேகமாக முன்னேற்றம், பொருளாதாரம் என்று மேற்கத்தியரால் பொறாமைப்படும் இந்தியாவில் பட்டினியால் வாடும் ஏழைத் தமிழ் விவசாயி எலிக்கறியுண்டு இறந்ததைப் பொருட்படுத்தாதவர்.

இவரது கனவு சென்னையிலல்ல. தில்லியிலுள்ள சிம்மாசனத்திலுள்ளது. உடைந்து, சிதைந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சி, வயதுபோய்த் தளர்ந்து தள்ளாடும் பாரதிய ஜனதாக் கட்சிகளுக்கப்பால் தனது பிடியை வலுப்படுத்த யோசிக்கிறார் இந்த ஆங்கிலம் படித்த புத்திசாலிப் பெண். பாரதிய ஜனநாயக் கட்சி உறுப்பினரின் சராசரி வயது 74 என்று சொல்லும்போது 60 வயதுடைய தென்னக முதலவர் மிகவும் இளமையானவர். பா.ஜ.க.வுக்குத் தேவையான பார்ப்பனிய பரம்பரையைக் கொண்டவர். திராவிட ஆண்கள் (பார்ப்பனிய மொழியில் அசுரர்கள்!) அத்தனை பேரையும் தனது காலில் விழந்து பணியப் பண்ணும் தேவ பரம்பரையானவர்.

இவர் வறுமையில் வாடும் ஏழைத் தமிழர்களைப் பற்றியோ, மிக மிக அடிமட்டப் படிப்பறிவற்றிருக்கும் தமிழ்நாட்டுப் பெண்களைப் பற்றியோ இவருக்குப் பெரிதாகக் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. இவர் செய்த ஒரு சில நன்மைகளுக்காகத் தமிழகப் பெண்கள் இவருக்கு இன்னும் சில தலைமுறைகளுக்கு வாக்களிப்பார்கள்.

சாதிப் பிரிவினைகளும், பிற்போக்குச் சமய நம்பிக்கைளும் இந்திய அரசியலின் அடித்தளமாகவிருப்புது வெட்கப்படவேண்டிய விடயமென்று புத்திஜீவிகள் துக்கப்பட்டாலும் வளரும் 'ஹிந்து அடிப்படைவாதம் படிப்றிவற்ற ஏழை மக்களைப் பெரிதும் ஆட்கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம் ஒரிஸா, குஜராத் மாநிலங்களில் தொடரும் சமய சார்பான வன்முறைகளாகும். இந்தப் பயங்கரக் கலவரங்களில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளுமாகும். வரதட்சணைக் கொடுமையால், குடும்ப வன்முறைகளால் ஒவ்வொரு நாளும் இறக்கும் இந்தியப் பெண்கள் எண்ணிக்கையற்றோர்.

இன்று உலகம் தெரிந்த இந்தியப் பெண்ணாகவிருப்பவர்கள் எழுத்தாளர் அருந்ததி ரோய், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பழைய பிரதமர் இந்திரா காந்தி, நடிகை ஐஸ்வர்யா ராய், பழைய கொள்ளைக்காரியாயிருந்த பூலான்தேவி என்போராகும். பழைய தலைமுறையைக் கேட்டால் விஜயலட்சுமி பண்டிட் (இந்தியாவின் முதலாவது ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி - பண்டிட் ஜவகர்லால் நேருவின் சகோதரி, சரோஜினி நாயுடு - பெயர் பெற்ற பெண் சுதந்திரப் போராளி), ஆஷா போஸ்லே, லதா மங்கோஷ்கர் என்று சொல்வார்கள்.

இவர்களோடு சேர்த்து ஜெயலலிதாவின் பெயர் இந்தியாவின் முக்கிய பெண்மணிகள் பட்டியலில் இருக்கிறது. உலகம் தெரிந்த இந்தியப் பெண்மணிகள் பட்டியலில் இவர் பெயர் இல்லை. அமெரிக்காவின் கறுப்புப் பெண்மணி கொண்டலீஸா றைஸ் அமெரிக்காவின் வெளிவிவகாரக் காரியதரிசியாயிருப்பதுபோல் இவர் வரவிரும்ப மாட்டார். நூறு கோடி மக்களுள்ள ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக வரப் பார்க்கிறார்.

தன்னை ஒரு உலக வல்லமை படைத்த பெண்ணாக் கற்பனை செய்கிறார் இவர். தில்லி சிம்மாசனத்தில் உட்கார்ந்து, இன்று இந்தியாவின் பணக்காரக் குடும்பங்களில் ஐந்தாவது இடத்திலிருக்கும் கருணாநிதி குடும்பத்தைக் கூண்டோடழிக்கக கனவு காண்கிறார் என்று பொதுவாகச் சொல்லப் படுகிறது. வாரிசு வழியில் பதவி சீர்குலைக்கப்படக் கூடாது என்று தத்துவம் பேசும் இவர் தனது தோழி சசிகலாவின் பிடியிலிருந்து கொண்டு சசிகலாவின் குடும்பத்தின் கையில் தென்னாட்டின் தலைவிதியைப் பணயம் வைக்கிறார் என்பதை உணராத அப்பாவிகள் தென்னகத் தமிழர்கள். இந்த மாஜி நடிகைக்கு ஆதரவு தேடி மேடையேறப் பல அரிதாரம் போடாத நடிகர் நடிகைகள் மேடையேறுகிறார்கள்.

இதில் இருபது கோடிகளுக்குத் தங்களை விலைபேசியதாகச் சொல்லப்படும் நடிகர் சரத் குமார், நடிகை ராதிகா தம்பதிகளின் இணைவு மிகவும் முக்கியமானது. முதல்வரின் வாழக்கையில் சசிகலா இனி இடம் தெரியாமற் போகப் போகிறார் எனபது விளக்கமாகத் தெரிகிறது.

காஞ்சி பீடத்தின் சாபத்தை வாங்கிக் கொண்ட முதல்வருக்கு, மலையாள மந்திரவாதிகளின் துணையிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறதது. ஹோமங்களும், யாகங்களும் செய்வதில் பிரசித்தமானவர் முதல்வர். துனது பதவியைக் காக்கப் பலவித மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்று வளரும் ஒரு புத்திசாலி இளம் இந்தியத் தலைமுறையினரையும் இந்த அரசியல்வாதிகள் கணக்கில் எடுக்க வேண்டும். வளர்ந்து வரும் இளம் தலைமுறை, பேய் பிசாசுகளிலும், மந்திர தந்திரங்களிலும் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயமே.

தேர்தல் பிரசாரம் தொடங்கியவுடன் நடக்கும் விடயங்களைப் பார்க்கும்போது, தமிழகத்தில உண்மையாகவே ஜனநாயகம் இருக்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது. எம்.ஜி.ஆரின் சகோதரர் மகள் லீலாவதி என்ற பெண் தான் வேட்பாளராக விண்ணப்பம் கொடுப்பதைத் தடுக்கத் தன்னைக் கடத்திக் கொண்டுபோய் மறைத்து வைத்திருந்தார்கள் (யார் கடத்தியிருப்பார்கள் என்று நீங்களே ஊகிக்கவும்) என்று போலிஸில் புகார் கொடுக்க, அவரின் புகாரையே ஏற்றுக் கொள்ளாமல் காவற் படை(!!) அவரைத் துரத்தி விட்டது. இதுதான் பெண்களுக்குத் தென்னிந்தியாவில் கிடைக்கும் அரசியல் வாய்ப்புக்கள்.

நடிகர் கார்த்திக் கட்சியின் வேட்பாளர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இறந்து விட்டார். தகப்பனையிழந்த அவரின் குழந்தைகள், தாலியிழந்த அவரின் மனைவி இவர்களின் கதறற் குரலில் தென்னகத் தேர்தல் அமர்க்களமாகிறது.

இந்தியாவின் சனத் தொகையில் பெண்களின் தொகை 51 விகிதம். அவர்களுக்குப் பாராளுமன்றத்தில் 33 விகிதம் கேட்டே பெண்கள் போராடி வருகிறார்கள். 1994 ம் ஆண்டு, ஜனநாயக முறைக்கு வநத தென்னாப்பிரிக்காவில் பாராளுமனறத்தில் பெண்களின பங்கு 40 விகிததிற்கு மேலுள்ளது. பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடுவதாகச் (??) சொல்லப்படும் இந்தியாவில் இன்றும் பெண்களுக்குச் சரியான அரசியல் வாய்ப்புக்களோ பிரதிநிதித்துவமோ கிடையாது.

அகிம்சைக்குத் தன்னை அர்ப்பணித்த புத்தர் பிறந்த மாநிலமான பீகாரில் சாதிக் கொடுமையால் பலவிதமான வன்முறைக்க்கு ஆளாகுபவர்கள் பெண்களாகும். இந்தியாவில் மிகவும் படித்த பெண்கள் உள்ள மாநிலமாகக் கருதப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒரு நாடென்று சொல்லப்படுகிறது. பெண்களின் படிப்பு தங்களினதும் தங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட பெண்களினதும் விடுதலைக்குப் போராட உதவி செய்யும் என்பது எனது கருத்து. தென்னகப் பெண்கள் தங்கள் அறிவின் திறமையைத தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புவோம்.

ஓடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் போராடிய பெரியாரின் தத்துவத்திற் பிறந்த தமிழக அரசியற் தத்துவம் இன்று இடையழகி சிமரன், தொடையழகி ரம்பா போன்றோரின் கைகளிற் சிக்கிக் கிடப்பது இந்தியத் தமிழர்களுக்கு வெட்கத்தை உண்டாக்குகிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் பெரியாரின் பெண்ணடிமைத் தனத்திற்கெதிரான தத்துவங்களில் நம்பிக்கையுள்ள வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு மிகவும் வெட்கத்தையும் தலைகுனிவையும் தருகிறது.

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

Pin It