முதல் பகுதியின் தொடர்ச்சி...
அழித்தொழிப்புக்காக ஓரிடத்திற்குச் செல்லும்போது முன்பின் தெரியாதவர்களை எப்படி அணி திரட்டினீர்கள்? அவர்கள் எந்த அரசியல் கொள்கையும் இல்லாதவர்களாகத் தானே இருந்திருப்பார்கள்?
Thiyagu
அது ஒரு கடினமான வேலை தான். எந்த அறிமுகமும் இல்லாமல் ஒரு கிராமத்திற்குச் சென்று தங்கிவிட முடியாது. ஊரில் ஏற்கனவே அறிமுகமான ஒருவர் எங்களை வேறு ஒரு பெயரில் அறிமுகப்படுத்தித் தான் ஊருக்குள் தங்க வைப்பார். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் தான் எங்களை அவர்களது ஊருக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார்கள். அங்கு சென்று ஏதாவது வேலை செய்வது போல் தங்கிக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களுடன் பழகி, அதில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அழித்தொழிப்புக்குத் தயார்படுத்துவோம்.
  
நீங்கள் அழித்தொழிப்புக்குத் தேர்வு செய்யும் இடங்களில் ஏற்கனவே இருக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு இயக்கங்களின் தோழர்களோடு உங்களது உறவு எப்படி இருந்தது?
எங்கள் பார்வை இதில் மோசமானதாக இருந்தது. அவர்களை விரோதிகளாக கருதிக்கொண்டு தான் நாங்கள் அந்த ஊருக்குள் நுழைவோம். தஞ்சைப்பகுதியில் பொதுவுடைமை இயக்க நிர்வாகிகளாக இருப்பவர்கள் அனைவருமே நேர்மையான, கட்சிக்காக நன்கு உழைக்கக்கூடிய தோழர்கள். ஆனால் எங்களது பார்வையில் அவர்கள் அனைவருமே விரோதிகள். எனவே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்தக் கட்சிகளே நுழையாத புதிய கிராமங்கள் தான் எங்களது முதல் தேர்வாக இருந்தது.
 
உங்களது முதல் அழித்தொழிப்பு பற்றிக் கூற முடியுமா?
 
அழித்தொழிப்பு என்பது ஒரு கொள்கை வடிவம். அதுதான் சரியானது என்பது சாரு மஜூம்தாரின் கருத்து. அந்த வகையில் நான் முதலில் வேலை செய்த கிராமம் திருவாரூர் அருகில் உள்ள பெரும்பண்ணையூர். அங்கிருந்து கொண்டு, முதல் அழித்தொழிப்புக்கு நாங்கள் தேர்வு செய்தது குடவாசல் அருகிலுள்ள பெருமங்கலம் ஊரைச் சேர்ந்த, முனுசாமிசோளகர் என்கிற நிலச்சுவான்தார். அவர்தான் அந்த ஊர் மணியக்காரர். சுற்றியுள்ள எல்லா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்மீது விரோதம் இருந்தது.
அந்த ஊரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞன் நாகப்பனின் சகோதரியை சோளகரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்ய, அதைத் தட்டிக் கேட்கப் போன நாகப்பனை சோளகரின் மகன் கத்தியால் குத்தி விட்டான். இதுதொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் காவல்நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது, அங்கு அதிகாரியின் நாற்காலியில் சோளகர் உட்கார்ந்திருந்தார். வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் பல நிகழ்வுகள் அவர்களுக்குள் முரண்பாடு வருவதற்குக் காரணமாக இருந்தது.
இந்த நேரத்தில் தான் நாங்கள் சோளகரை அழித்தொழிப்பு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். தோழர் ஏ.எம்.கே.தான் இதற்கு வழிகாட்டியாக இருந்தார். அவர் தலைமையில் அந்த ஊரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பகுதி மக்கள் சோளகர் மீது கோபமாக இருந்தபோதும் திட்டமிட்டு அவர்மீது தாக்குதல் நடத்த அவர்கள் தயாராக இல்லை. கூட்டத்தின் முடிவில் ஏ.எம்.கே. எங்களிடம், ‘இந்த ஊரில் யாரும் உங்களுடன் வராவிட்டாலும் பரவாயில்லை, வேறு ஊரிலுள்ள யாரையாவது சேர்த்துக் கொண்டாவது சோளகரை அழித்து விடுங்கள்’ என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
ஏற்கனவே நான் குடவாசல் அருகிலுள்ள தண்டியூர் என்ற கிராமத்தில் வேலை செய்து அங்குள்ள இளைஞர்களை அழித்தொழிப்புக்குத் தயார் செய்து வைத்திருந்தேன். நான், தோழர் மாணிக்கத்தின் மகன் பாலு, இன்னும் இரண்டு இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அழித்தொழிப்புக்குத் தயாரானோம். உண்மையில் நானும், பாலுவும்தான் தாக்குதலில் ஈடுபட்டோம். சோளகர் திருப்பித் தாக்கியதும் மற்ற இருவரும் பயந்து ஓடிவிட்டார்கள். பல இடங்களில் மிக ஆழமான கத்துக்குத்துக்கள் விழுந்தும் சோளகர் பிழைத்து விட்டார். அதுதான் எங்களது முதல் அழித்தொழிப்பு நிகழ்ச்சி.

ஆனால் இதில் எங்கள் மீது வழக்குப் பதிவு எதுவும் இல்லாமல் தப்பித்து விட்டோம். சோளகரிடம் மருத்துவமனையில் வாக்குமூலம் கேட்கும்போது தனக்குப் பகையாக அந்த ஊரில் உள்ள அனைவரது பெயரையும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையினரும் அவர்களைக் கைது செய்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கொடி, துண்டறிக்கை எல்லாவற்றையும் விட்டு வந்திருந்தும் யாரும் எங்கள் மீது சந்தேகப்படவில்லை. இது எங்களுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது.
தமிழகச் சூழலில் அழித்தொழிப்பு என்பது எந்தளவுக்கு செயல்பாட்டுக்கு உகந்ததாக இருந்தது?
அழித்தொழிப்பு என்கிற ஒரே ஒரு போராட்ட வடிவம் தான் சரி என்கிற சாரு மஜூம்தாரின் அணுகுமுறையே மிக செயற்கையானதாகும். இதை என்னுடைய சிறை வாழ்க்கையின்போதுதான் உணர முடிந்தது. தமிழகத்திற்கு வரும்போது, எங்களைப் பார்த்ததும் சாரு கேட்கும் முதல் கேள்வியே, ‘அனிலேஷனுக்குத் தயாராக எத்தனை பேர் இருக்கிறார்கள்’ என்பது தான். ‘அடுத்து யாரைக் கொலை செய்யப்போகிறீர்கள், எத்தனை நாட்கள் தேவைப்படும், சரி உடனடியாக தயாராகி விடுங்கள். தமிழ்நாட்டில் இருந்து கிளம்பும் முன் எனக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுப் போய்விடுவார். இதுதான் அவரது உரையாடல் பாணி.
அந்தப் பகுதியின் நிலைமை என்ன, அந்தப் பகுதி மக்களின் உடனடித் தேவை என்ன, இப்படி ஒரு போராட்டம் எடுபடுமா என்பது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையே கிடையாது. அவரது வழியில் தான் அழித்தொழிப்புக்கு நாங்கள் ஆட்களைத் தயார் செய்ய வேண்டியிருந்தது. அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்தது. கல்லூரியில் இருந்து நான் வரும்போது என்னைப் போல் வந்த தோழர்கள் பலரும் நடைமுறைச் சிக்கல்களை தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் வெளியேறி விட்டார்கள். ‘அழித்தொழிப்பின் விளைவாக புரட்சி வரும், சமூகம் மாற்றம் பெறும்’ என்ற போதனையைக் கேட்டு ஒரு வேகத்தில் கிளம்பி வந்தவர்கள், அது நடக்காமல் போனதால் ஏற்பட்ட விரக்தியில் சோர்ந்து போனார்கள்; வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள்.
பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் இயக்கத்தில் ஆர்வம் கொண்டு எங்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். எத்தனை தோழர்கள் வந்தாலும் அவர்களைக் கல்லூரி விடுதியில் தங்கவைப்பது, அவரது ஊருக்கு வரும் தோழர்களைத் தங்க வைப்பது என பல உதவிகள் செய்வார். அவரை இயக்கத் தலைமை ‘படிப்பை விட்டு விட்டு முழுநேர வேலைக்கு வா’ என்றழைத்தது. அவரும் வந்தவுடனே ‘அழித்தொழிப்பு செய்து விடலாம்’ என்ற நம்பிக்கையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். மிக ஏழ்மையான குடும்பம் அவருடையது, பால் வியாபாரம் செய்து தான் அவரது தந்தை அவரைப் படிக்க வைத்தார்.
அந்தத் தோழரை ஏதாவது கிராமத்திற்கு அனுப்பினால் போன நான்காவது நாள் திரும்பி விடுவார். அவரால் அங்கு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. அழித்தொழிப்புக்குப் போகும் தோழர்களுக்கு கருத்துக்கள், வழிமுறைகள் சொல்வதைத் தவிர இயக்கம் வேறு எந்த உதவியும் செய்வதில்லை. செலவுக்குப் பணமும் கொடுப்பதில்லை. நாங்களாகவே அங்கு சென்று வேலை செய்து எங்களது தேவைகளை கவனித்துக் கொண்டு, அழித்தொழிப்புக்கு அங்குள்ள ஆட்களை தயார் செய்து வேலையை முடிக்க வேண்டும்.
Charu Mazumdar
இது எல்லோராலும் முடிவதில்லை. நடைமுறைக்கு சாத்தியமில்லாத இந்த நடவடிக்கைகளால் பொறியியல் தோழருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. அதற்கு முன்னால் எங்களிடம், ‘ஒவ்வொருவரையாக அழிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு மாலையில் ஆரம்பித்து மறுநாள் காலைக்குள் ஒரு பகுதி நிலச்சுவான்தார்கள் அனைவரையும் அழித்து விட வேண்டும்’ என்பார். கபிஸ்தலம் மூப்பனாரில் தொடங்கி பூண்டி வாண்டையார் வரை இருபதுக்கும் மேற்பட்ட நிலச்சுவான்தார்கள் பெயரையும் ஒரே இரவில் அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதற்கான திட்டத்தையும் சொல்வார் அவர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பின்பு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு தீக்குச்சியாகக் கிழித்து, ‘பூண்டி வாண்டையார் அவுட், மூப்பனார் அவுட். எல்லோரையும் குளோஸ் பண்ணிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரை திரும்பவும் வீட்டிற்கே கொண்டுபோய் விட்டுவிட்டோம். நன்றாகப் படிக்கும் மாணவர் என்பதால் கல்லூரி நிர்வாகமும் அவரை சேர்த்துக் கொண்டது. அவர் படிப்பு முடிந்ததும் அவரது குடும்பம் அவரை வேறு மாநிலத்திற்கு அனுப்பி விட்டது. உண்மை நிலைக்குப் பொருத்தமில்லாத, புறச்சூழலை உள்வாங்காத கொள்கைகளால் இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்ட தோழர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
இதுபோன்ற நிலையை நீங்கள் இயக்கத் தலைமையிடம் எடுத்துச் சொல்லவில்லையா?
இயக்கத் தலைமையெல்லாம் எதுவும் கிடையாது. சீனாவில் எப்படி மாசேதுங் தலைமையை யாரும் கேள்வி கேட்காமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முழக்கம் எழுப்பப்பட்டதோ, அதேபோல் சாரு மஜூம்தாரின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருகட்டத்தில் முழக்கம் கூட எழுப்பப்பட்டது. சாரு மஜூம்தார் ஒரு சர்வாதிகாரியாகத் தான் செயல்பட்டார். மிகச் சாதாரண காரணங்களுக்காக இயக்கத்தில் பலரை அவர் வெளியேற்றினார். தொழிற்சங்கமே கூடாது என்றார். ‘வர்க்க எதிரியின் இரத்தத்தில் கை நனைப்பவனே உண்மையான கம்யூனிஸ்டு’, ‘பத்து அழித்தொழிப்புக்களை மேற்கொண்டவன் இந்த உலகத்தில் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை’ என எந்நேரமும் அழித்தொழிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார் அவர்.
உங்கள் கைதுக்குக் காரணமான அழித்தொழிப்பு பற்றி கூற முடியுமா?
சோளகர் கொலை முயற்சிக்குப் பிறகு, சிலநாட்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டோம். பிறகு இரண்டாவது அழித்தொழிப்புக்குத் திட்டமிட்டோம். அப்போது தோழர் ஏ.எம்.கே.வும் இன்னும் சில தோழர்களும் தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளில் அழித்தொழிப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டோம். எனக்கு அப்போது பத்தொன்பது வயது. என்னுடன் வேலை செய்தவர்கள் இருபத்தெட்டு, முப்பது வயதுடையவர்களாக இருந்தார்கள்.
அடுத்த அழித்தொழிப்பாக திருவாரூர் முத்து தங்கப்பாவைத் தேர்வு செய்தோம். அவர் யூனியன் சேர்மேனாக இருந்து அந்தத் தேர்தலில் தோற்றுப் போயிருந்தார். ஜாதி ஆதிக்கம் உடையவர். சொந்த சாதி ஆட்களைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பை சம்பாதித்திருந்தார். காவல்நிலையத்தில் கூட அவர் சொல்வதைத் தான் கேட்கும் நிலை இருந்தது.
அவரைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். அருகில் நெருங்க முடியாத அளவுக்கு சுற்றிலும் ஆட்களுடனே வலம் வந்து கொண்டிருந்தார். தொடர்ந்து கண்காணித்தபோது விடியற்காலையில் குளக்கரைக்கு தனியாக வருவார் என்பதை அறிந்தோம்.
தோழர் லெனின் தலைமையில் நாங்கள் அங்கே அவருக்காக காத்திருந்தோம். வெகுநேரம் கழித்து வந்த அவர் எங்களைப் பார்த்ததும், ‘யாருடா, திருட்டுப் பயல்களா?’ என்று கேட்டவாறே எங்களை நெருங்கினார். நாங்கள் மெதுவாக நகர ஆரம்பித்ததும், ஓடப்போகிறோம் என நினைத்த அவர் சுற்றி வயல்களில் வேலை செய்தவர்களை சத்தம்போட்டு அழைத்தார். தூரத்தில் ஆட்கள் ஓடிவர, அவரும் கீழே கிடந்த கற்களை எடுத்து எங்களை நோக்கி வீச ஆரம்பித்தார். உடனடியாக கையில் இருந்த அரிவாளால் தோழர் லெனின் அவரை வெட்ட, மீதமுள்ள நான்கு பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினோம்.
ஓடிவந்த அந்த கிராமத்து ஆட்களில் ஒருவர் எங்களில் ஒருவரைப் பிடித்துவிட, தோழரை மீட்பதற்காக அவரது கழுத்திலும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினோம். அந்த ஊரின் அமைப்பு தெரிந்தவர்கள் தப்பித்து விட, நான் மாட்டிக் கொண்டேன். அந்த ஊர் மக்களுக்கு நான் நக்சலைட் என்றோ, நடந்தது அழித்தொழிப்பு என்றோ சொன்னால் எதுவும் புரியாது, நம்பவும் மாட்டார்கள். அந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் அப்பு செட்டியார் தான் ஆள்வைத்து கொலை செய்து விட்டதாக அவர்கள் நம்பினார்கள்.
 
என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டும் நான் பேசாமல் நின்று கொண்டிருந்தேன். என்னை முத்துதங்கப்பா இறந்து கிடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று அவர் தலைமீது என் தலையை வைத்து வெட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி என்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அங்கு யாதவராஜ் என்ற விசாரணை அதிகாரியிடம், நான் யார் என்பதையும் எங்கள் நோக்கத்தையும் கூறினேன்.
கொலை நடந்த இடத்தில் ‘உனக்கு ஏன் மரணதண்டனை’ என்று கொலைக்கான காரணத்தை சுவரில் எழுதியிருந்தோம். கூடவே கொடி, மாவோ சிலை ஆகியவற்றை விட்டு வைத்திருந்தோம். கொலையை முடித்த பிறகு அங்கு நின்று முழக்கங்கள் எழுப்பி விட்டுத்தான் தப்பி ஓடினோம். இதையெல்லாம் அதிகாரியிடம் கூறினேன். அவர் அதையெல்லாம் கைப்பற்றி வந்தார். அவருக்கு இந்தக் கொலைக்கான காரணங்கள் புரிந்து விட்டது. அவர் நக்சலைட் பிரிவு போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அழித்தொழிப்பில் ஈடுபட்ட இன்னும் இரண்டு தோழர்களை இரண்டு நாட்களில் கைது செய்தார்கள். கீழ்க்கோர்ட்டில் ஆயுள்தண்டனையும், மறுவிசாரணையின்போது நாகை நீதிமன்றத்தில் எனக்கு மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது.
எங்களது அழித்தொழிப்பின் நோக்கம் ‘ஒரு பகுதியில் அழித்தொழிப்பு நடைபெற்றால் அங்கு மக்களிடையே மனமாற்றம் ஏற்படும், நிலச்சுவான்தார்கள் பயந்து ஓடிவிடுவார்கள், அங்கு நிலச்சீர்திருத்தம் நடைபெறும், அந்த இடத்தை புரட்சிக்கான அடித்தளமாக மாற்றிவிடலாம்’ என்பது தான். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. முத்து தங்கப்பா கொலையைப் பொறுத்தவரை அந்தப் பகுதியில் அது கடுமையான சாதிப்பிரச்சனையாகத் தான் பார்க்கப்பட்டது.
அவர் கொலை நடந்த அன்று தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள். எங்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது அவரது சாதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஆனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதில் இந்த சம்பவம் கொஞ்சம் தைரியத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் அது மட்டுமே எங்கள் நோக்கமாக இருக்கவில்லை.
சிறை வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது?
இந்திய நாட்டின் சட்டப்படி அரசியல் கைதி என்ற வகைப்பிரிவே கிடையாது. தாக்குதல் என்றல்ல, அரசியல் காரணங்களுக்காக ஓர் உண்ணாவிரதம் மேற்கொண்டால் கூட அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு தான் பதிவு செய்யப்படும். மறியல் செய்தால் ‘அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தார்’ என்று தான் வழக்குப் பதிவு செய்யப்படும்.
எங்களை நக்சலைட் விசாரணைக் கைதி என்று சொல்லி தனியாக அடைத்து வைத்து விட்டார்கள். சாதாரண கைதிகளாக இருந்தால் அவர்களுக்கு சில சுதந்திரங்கள் இருக்கும். அரசியல் கைதி என்றால் படிக்க, எழுத, நண்பர்களைச் சந்திக்க என்று சில வசதிகள் இருக்க வேண்டும். அதனால் எங்களை அரசியல் கைதியாக நடத்த வேண்டும் என்று போராடினோம். ‘புத்தகங்கள் படிக்க, வெளியிலிருந்து வரும் புத்தகங்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இருபத்து நான்கு மணிநேரமும் கொட்டடியில் பூட்டியே வைக்கக்கூடாது. நாங்கள் இருந்த சிறையில் கழிப்பறை வெளியே கிடையாது. கொட்டடிக்குள் ஒரு மண்சட்டியை கொடுப்பார்கள். உள்ளேயே துணி துவைத்து, குளித்து உள்ளேயே இருக்க வேண்டும். எனவே வெளியே கழிப்பறை கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வைத்துப் போராடினோம்.
Trotsky
போராட்டம் என்றால் உண்ணாவிரதம் தான். இந்தப் போராட்டங்கள் சிறையில் எங்களுக்கு ஒரு பெரிய மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தது. சென்னை சிறையில் நாங்கள் இருக்கும்போது அங்கே மிசா கைதிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறை அடக்குமுறைகளை மிசா கைதிகளால் தாங்கவும் முடியவில்லை, எங்கள் அளவுக்கு அதை எதிர்த்துப் போராடவும் முடியவில்லை.
மிசா காலத்தில் அரசியல் தலைவர், எம்.பி, எம்.எல்.ஏ. யாருக்கும் ஒரு மரியாதையும் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் நக்சலைட் என்றால் சிறையில் தனி மரியாதை இருந்தது. அவர்கள் தான் ‘அடித்தால் திருப்பி அடி’ என்ற முழக்கத்தை சிறைக்குள்ளேயே எழுப்பியவர்கள். கொண்ட கொள்கைக்காக கைதாகி, சிறைக்கு வந்திருந்ததால் நக்சலைட் கைதிகள் சிறைக்குள்ளும் தங்களது கொள்கை எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தோம். மிசா கைதிகளிடம் அந்தளவுக்கு கொள்கையும் கிடையாது; அதனால் போராட்டக் குணமும் கிடையாது.
சென்னை சிறை மிசா கைதிகளில் ஆற்காடு வீராசாமியும் ஒருவர். அவர் ஏற்கனவே நிறைய அடிகளை வாங்கியிருந்தார். அதேநேரத்தில் அவர் அடிக்குப் பயந்தவர். உபயத்துல்லா என்ற காவல்துறை அதிகாரி மேசையில் உட்கார்ந்திருப்பார். இவர் அவரது காலுக்குக் கீழே சென்று அமர்ந்து தன்னை அடிக்கக்கூடாது என்று கெஞ்சிக் கொண்டிருப்பார். அதற்குப் பதிலாக தனது வீட்டில் சென்று பணம் வாங்கிக்கொள்ளச் சொல்வார்.
அதே நேரத்தில் சிட்டிபாபு, முரசொலி மாறன், சி.பி.எம்.கட்சியைச் சேர்ந்த சிவாஜி போன்றோர் சிறை நிர்வாகத்தை எதிர்த்து தைரியமாகப் போராடினார்கள். இவர்களால் தான் சிறையில் பல மாற்றங்கள் வந்தது. ஸ்டாலினை முதலில் கடுமையாக அடித்ததோடு திருச்சி சிறைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி விட்டார்கள்.
சிறையில் நக்சலைட்களின் போராட்டம் எப்படி இருந்தது?
முதலில் எங்களது கோரிக்கைகளுக்காகப் போராடினோம். அடுத்தகட்டமாக சிறைக்குள் இருப்பவர்களோடு கலந்து அவர்களை இணைத்துக் கொண்டு ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.
அப்போது சிபிஎம் கட்சித் தோழர் ஏ.ஜி.கே. எங்களுடன் இருந்தார். அவர் எங்களுக்குப் பெரிய உந்துதலாக இருந்தார். அவர் சிறைக்குள் இருந்து கொண்டே காவலர்கள் இருபத்தைந்து பேரைத் திரட்டி அவர்களது கோரிக்கைகள் நிறைவேற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். சிறைப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு, விண்ணப்பங்களை அவர்தான் எழுதிக் கொடுப்பார். ‘எங்களை நாகை கிளைச் சிறைக்கு மாற்றும்போது அங்கிருந்து தப்பித்து விடுவது’ என்று நாங்கள் திட்டம் தீட்டியபோது, ஏ.ஜி.கே. தான் உள்ளேயிருந்து அனைத்து உதவிகளையும் செய்தார். ஆனால் திட்டம் தோல்வியில் தான் முடிந்தது.
‘சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமை சங்கம்’ என்ற சங்கத்தையும் தோழர் ஏ.ஜி.கே.தான் ஏற்படுத்தினார். உரிமைக்குரல் என்ற பத்திரிகை நடத்தினார். நானும் அதில் எழுதினேன். அவரது உந்துதலின் பேரில் எழுத்தறிவு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தினோம். எழுதப் படிக்கத் தெரியாத தூக்குத்தண்டனை கைதிகளுக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுத்தோம். அதே நேரத்தில் அரசியல் ரீதியாக அழித்தொழிப்பு, ஆயுதப் போராட்டம் என்கிற எங்களுடைய பழைய கருத்திலிருந்து விடுபட்டோம். எல்லாப் போராட்ட வடிவங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தது.
நீங்கள் ஒரு கொள்கையை நம்பி வீட்டைவிட்டு வெளியேறுகிறீர்கள். பல இழப்புகளுக்குப் பின் கைதாகி, தூக்குத் தண்டனையும் கிடைக்கிறது. அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கை தவறு என்று பட்டபோது எப்படி இருந்தது?
சிறையில் இருக்கும்போது வழக்கம்போல் மே நாள் கொண்டாடுவது, ஆகஸ்டு புரட்சி கொண்டாடுவது, அன்று எங்களுக்குள் கூட்டங்கள் நடத்துவது என்று ஏதாவது நடக்கும். அந்த நேரத்தில் அழித்தொழிப்பு மீதான நம்பிக்கை முழுவதுமாகப் போய்விட்டது. முதன்முதலில் ஏ.எம்.கே.வை சந்தித்தபோதே ‘அவர் அழித்தொழிப்பு தனிமனித பயங்கரவாதமாக மாறிவிடுமோ’ என்ற தன்னுடைய அச்சத்தைத் தெரிவித்திருந்தார்.
‘அழித்தொழிப்பில் மக்களுக்கு என்ன பங்கு’ என்பதுதான் எங்கள் முன் இருந்த பெரிய கேள்வியாக இருந்தது. மக்களின் பங்கு இல்லாத எந்தப் போராட்டமும் மக்களைத் திரட்ட உதவாது என்பதில் தீர்மானமாக இருந்தோம். “சீனத்தின் பாதை நமது பாதை, சீனத்தின் தலைவர் நமது தலைவர்” என்பது தான் அப்போது நாங்கள் நீதிமன்றத்தில் எழுப்பிய முழக்கம். சீனத்தின் பாதை எது என்பதை ஆராய்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வெகுஜனப் போராட்டம் தான் சரி என்பது சீனத்தின் கொள்கை. ‘நாங்கள் பார்லிமெண்டில் பங்கேற்கவில்லை என்று யாரும் எங்கள் மீது குறைசொல்ல முடியாது. ஏனெனில் இங்கு பார்லிமெண்டே கிடையாது’ என்று மாவோ சொல்கிறார். ‘நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இங்கு தேர்தலே நடைபெறவில்லை’ என்றும் அவர் சொல்கிறார். தொடர்ந்து சீன வரலாற்றைப் படிக்கும்போது வெகுஜனப் போராட்டத்திற்கு எப்படி அவர்கள் தயாராகிறார்கள், அமைதிப் போராட்டத்திற்கு வாய்ப்பிருந்தால் அதையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.
அன்று ஜூலை 1 சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவன நாள். அன்று சிறைக்குள் எங்களுக்கிடையே பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்தது. சீனப்புரட்சிக்கும் இந்தியப் புரட்சிக்குமான வேறுபாட்டை நான் அறிக்கையாக முன்வைத்தேன். அதில் முக்கியமான வேறுபாடாக நான் குறிப்பிட்டது ‘சீனா ஒரே மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு. இந்தியா பலமொழிகளைப் பேசக்கூடிய ஒரு நாடு. அங்கு மொழி, புரட்சிக்கு ஒரு தடையாக இல்லை, இங்கு மொழி புரட்சிக்கு ஒரு தடையாக இருக்கிறது. இதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று பேசினேன்.
72ம் ஆண்டு என்று நினைக்கிறேன். சாரு மஜூம்தார் கைதாவதற்கு முன்பு பீகாரில் தலைமறைவாக இருந்து கொண்டு ஒரு பேட்டி கொடுத்தார். கேள்வியில், ‘சீனப்பாதைதான் உங்கள் பாதை என்றால் அங்கு நடந்தது போல் ஒரு நீண்ட பயணம் நடக்குமா?’ என்று கேட்கப்படுகிறது. சாரு பதிலில், “நிச்சயம் நடக்கும். ஆந்திராவில் இருந்து வங்கத்தின் முடிவு வரை இந்த நீண்ட பயணம் நடக்கும்” என்று சொல்கிறார். அப்போது ஆந்திராவிலும், வங்கத்திலும் பெரிய அளவில் அழித்தொழிப்பு நடந்து கொண்டு இருந்தது.
சிறை நண்பர்கள் இதுகுறித்து என்னிடம் கேட்டனர். ‘சீனாவின் நீண்ட பயணம் கேண்டண் தொடங்கி ஏனான் வரை நடைபெற்றது. அங்கு அனைவரும் சீனமொழி பேசுபவர்கள். இங்கு ஆந்திராவில் தெலுங்கு பேசும் மக்களோடு புறப்படும் நாம் ஆந்திர எல்லையைக் கடந்து மத்தியப்பிரதேசம் அல்லது ஒரிசாவிற்குள் நுழைந்ததுமே வேறு மொழி பேசும் மக்களை எதிர்கொள்ள வேண்டும். எனவே இங்கு நீண்ட பயணம் சாத்தியமில்லை’ என்று சொன்னேன்.
அப்போதிருந்த மனநிலைப்படி ‘இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கருத்தே இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது.
உங்களுடன் கைதான மற்ற தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்?
அப்போது நக்சலைட் கைதிகள் பலருக்கு ‘இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்’ என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது.
 
‘எழுபதுகளை புரட்சிகளின் பத்தாண்டுகளாக்குவோம்’ என்று சாரு மஜூம்தார் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது எண்பதுக்குள் புரட்சி வெற்றி பெற்று விடும் என்பதுதான் அதன் சாரம். அதை நாங்களும் நம்பினோம். 70ம் ஆண்டு இறுதியில் கைதாகி நான் சிறைக்கு வந்தேன். 71ல் புலவர் கலியபெருமாள் கைதாகி சிறைக்கு வந்தார். நீதிமன்றம் செல்வதைப் புறக்கணிப்பது, சிறையில் இருந்து தப்பிக்க முயல்வது போன்ற வேலைகளில் நாங்கள் ஈடுபடுவதை அவர் மிகவும் பாராட்டினார்.
அவர் சொல்வார், ‘இதுதான் சரி. ஏன்னா புரட்சி ரொம்ப சீக்கிரமா வந்துட்டிருக்கு. 80 எல்லாம் ஆகாது, 75ம் ஆண்டிற்குள் புரட்சி நடந்து முடிந்து விடும், அதான் சாரு சொல்லிட்டார்ல’ என்று சொல்வார்.
புலவரின் மனைவி அவரை சந்திக்க வருவார். அவர் சொல்வார், ‘நீங்க ஒரு நாலுபேர் இங்க, புள்ளைங்க நாலு பேர் வேலூர் ஜெயில்லே. இவ்வளவுபேருதான் சொல்லிட்டிருக்கீங்க. நாட்டுலே ஒரு புரட்சியும் காணோம்’ என்பார். புலவர் ‘அதெல்லாம் உனக்கு விளங்காது’ என்று சொல்லிவிடுவார். அந்தளவுக்கு, புரட்சி மீதான தவறான நம்பிக்கை எங்களிடம் இருந்தது.
அந்த நேரத்தில் தான் லெனினின் “புரட்சிகர வாய்ச்சொல்” என்ற புத்தகத்தைப் படித்தேன். அது என்னுள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற வெற்று நம்பிக்கைகளைத் தாக்கி எழுதப்பட்ட புத்தகம் அது. ரஷ்யாவில் ஏற்பட்ட போருக்குப் பின், மக்கள் அமைதியை விரும்பினார்கள். ஆனால் கெரன்ஸ்கி அரசு போரை தொடர்ந்து நடத்தியது. ‘உடனடியாக போரை நிறுத்த வேண்டும்’ என்று லெனின் விரும்பினார். அப்போது ரஷ்யாவின் சில பகுதிகளை ஜெர்மனி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதை போரின் மூலம் மீட்கும் வல்லமை ரஷ்யாவிடம் இல்லை.
அந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ட்ராட்ஸ்கி தான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர். அவரிடம் ‘போரின் மூலம் ரஷ்யாவை இழந்தாலும் பரவாயில்லை, தொடர்ந்து போரை நடத்த வேண்டும்’ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. கட்சிக்குள் மூன்று பிரிவுகள் உருவானது. லெனினின் கருத்து கட்சிக்குள் சிறுபான்மையாகி விட்டது. சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஜெர்மனி என்ன மோசமான நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்றுக்கொண்டு போரை நிறுத்த வேண்டும் என்பதே லெனினின் கருத்தாக இருந்தது.
‘நம்முடைய நாட்டின் சில பகுதிகளை ஜெர்மனி தன்னோடு இணைத்துக் கொள்ளப் போகிறது, எனவே தொடர்ந்து போரிடுவோம். தோற்றாலும் பரவாயில்லை, அது புரட்சிக்கு உதவும். மேலும் ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கப் புரட்சி நடைபெறப் போகிறது. அந்தப் புரட்சி வெற்றி பெற்றால் ஜெர்மனி ரஷ்யாவின் பகுதிகளை தன்னோடு இணைத்துக் கொள்ளாது. அதன்பிறகு நமக்கும் அவர்களுக்கும் பகை இருக்காது. அந்தப் புரட்சி வெற்றி பெறும்வரை நாம் தொடர்ந்து போரிடுவது தான் சரி’ என்பது ட்ராட்ஸ்கியின் கருத்தாக இருந்தது.
மூன்றாவது தரப்பு, ‘இப்போது போரும் வேண்டாம், சமாதானப் பேச்சுவார்த்தையும் வேண்டாம், ஜெர்மனி புரட்சி விரைவில் வெற்றி பெறும், அதன்பின் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்’ என்றது. ஆனால் லெனின் இவை எல்லாவற்றையும் மறுத்தார். ‘போரினால் நிறைய இழந்து விட்டோம். எனவே எவ்வளவு அவமானம் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு உடனடியாக போரை நிறுத்த வேண்டும்’ என்றார். அதில் முக்கியமான கருத்தாக, ‘ஜெர்மானியப் புரட்சி எப்போது வெற்றி பெறும்?’ என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்குப் பதிலாக அவரே, ‘ஜெர்மனியில் மட்டுமல்ல உலகின் எல்லாப் பகுதிகளிலும் புரட்சி நடைபெறப் போகிறது, அது வெற்றிபெறப் போகிறது என்பதை நம்புவது வேறு. இந்த கோடைக்காலத்திற்குள் முடிந்து விடும், இந்த குளிர்காலத்திற்குள் நடந்து விடும் என்ற நம்புவது வேறு. இது வெறும் வாய்ச்சொல்’ என்று சொன்னார். அதன்பிறகு லெனினுக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகியது. அமைதி தான் சரி என்று பெரும்பாலானோர் ஒத்துக்கொண்டனர்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ட்ராட்ஸ்கி சென்றார். பேச்சுவார்த்தைக்கான உடை அணிந்து வரவில்லை என்று கூறி அவர் அங்கே அனுமதிக்கப்படவில்லை. லெனினும், ட்ராட்ஸ்கியும் புரட்சியாளர்கள். மேடை நாகரிகமோ, உடை நாகரிகமோ, சரியான அலங்காரமோ அறியாதவர்கள். அதனால் அங்கிருந்து அவர் லெனினுக்கு தந்தி கொடுத்தார். ‘குறிப்பிட்ட உடையில் தான் வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள். நான் என்ன செய்வது?’ என்று கேட்டிருந்தார். பதிலுக்கு லெனின், ‘ஒருவேளை கவுனில் வரச்சொன்னால் கவுன் அணிந்து கொண்டு போ. நமக்கு அமைதிதான் முக்கியம்’ என்று பதில் அனுப்பினார். நாட்டின் அமைதிக்காக அவமானகரமான அந்த ஒப்பந்தம் நஷ்ட ஈட்டோடு நிறைவேறியது.
‘புரட்சிக்கு நாள் குறிப்பது வெறும் வாய்ச்சொல்’ என்பதைப் படித்தவுடன் இந்தியாவில் புரட்சி 80க்குள் வரப்போகிறது என்ற வார்த்தைகளின் மீதே நம்பிக்கை போய்விட்டது. ருஷ்யப் புரட்சியை மற்ற தோழர்களும் படிக்க வேண்டும் என்பதற்காக என்னிடம் ஆங்கிலத்தில் இருந்த புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்தேன். புரட்சி குறித்த லெனினின் கருத்துக்கள் மிகப் புதியதாக இருந்தன. அதைப் படிக்கப் படிக்க நம் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். பெரிய தவறு நடந்து விட்டது புரிந்தது. ‘சீனத்தின் பாதை நமது பாதை’ என்பதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்பது புரிந்தது.
லெனின் மீண்டும் மீண்டும் ஒரு கருத்தை வலியுறுத்துவார், ‘எது புறநிலை உண்மைகளோ அதிலிருந்து தான் முடிவுகளுக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே முடிவு செய்த கருத்தை வைத்துக் கொண்டு பேசக்கூடாது’ என்று. என்னுடன் இருக்கும் தோழர்கள் ஏற்கனவே பல முடிவுகளை வைத்துக் கொண்டு நடக்கும் சம்பவங்களை அதில் பொருத்திப் பார்ப்பவர்களாக இருந்தார்கள். ‘இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் மீதே எனக்கு சந்தேகம் இருப்பதாக’ நான் கூறியபோது அவர்களுக்குக் கடுமையான கோபம் உண்டானது. எனவே நான் அவர்களுடன் விவாதிப்பதை நிறுத்தி விட்டு படிக்க ஆரம்பித்தேன்.
1973 அக்டோபர் 1 சீனப்புரட்சி நாளன்று ‘கட்சிக்கு மறுப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினேன். அதில், கட்சியின் அடிப்படையை ஆராய வேண்டும் என்று விவாதித்திருந்தேன். ‘இப்போது எம்.எல். கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை ஆராய்கிறபோது அஸ்திவாரம் இல்லாத கட்டிடமாக அது எழுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பு எவ்வளவு அழகாக, ஈர்ப்புடையதாக, தியாகங்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருந்தாலும் அது உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று எழுதியிருந்தேன்.
Mao
தோழர்கள் கொதித்துப் போனார்கள். அவர்களிடம் மீண்டும் நான் தெளிவாக ‘நீங்கள் கோபப்படுவதில் எந்த அர்த்தமுமில்லை. இது சுக்குநூறாக உடையத்தான் போகிறது. ஒரு அமைப்பாகக் கூட இது நீடிக்காது. ஏனெனில் இதன் அடிப்படையே தவறு’ என்று கூறினேன். இதைக் கேட்டதும் அடுத்த செல்லில் இருந்த தோழர் குருமூர்த்தி கதறி அழுதார். இன்னுமொரு தோழர், சுவரில் இருந்த இரத்தக்கறைகளைப் பார்த்து, ‘போன வருடம் இதே இடத்தில் தானே போராட்டம் நடத்தி, இரத்தம் வருமளவுக்கு போலிசிடம் அடிபட்டு துன்பப்பட்டோம். எதற்காக இத்தனை துயரங்களையும் தாங்கினோமோ அதுவே தவறா?’ என்று திக்கித்திணறி பேசினவர் கலங்கி நின்று விட்டார். அவரால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவருக்கு நான் அலெக்ஸாண்டரை பற்றிக் கூறினேன். லெனினின் சகோதரர் அலெக்ஸாண்டர் ஜார் மன்னரைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். இது லெனினை மிகவும் பாதித்தது. இந்த நிகழ்ச்சி லெனினின் வாழ்க்கை வரலாறு நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. லெனின் வீட்டிற்கு வருகிறார். பக்கத்து வீட்டில் அவரிடம் ஒரு செய்தித்தாளை காண்பிக்கிறார்கள். அதில் ‘Alexander Hanged’ என்று இருக்கிறது. அடுத்த நொடி லெனின் சொல்வார், ‘இதற்கான விலையை அவர்கள் எனக்கு செலுத்தியே ஆகவேண்டும்’ என்று.
அலெக்ஸாண்டர் தான் லெனினுக்கு புரட்சிப் பாதையை காண்பித்தவர். ஆனாலும் அண்ணனின் பாதையை லெனின் நிராகரித்தார். விலை பெறுவதற்காக ஜார் மன்னரையோ, நீதிபதியையோ, அதிகாரிகளையோ தேடிச்சென்று கொலை செய்யவில்லை. மாறாக மன்னராட்சியை ஒழிப்பதற்காக ரஷ்ய மக்களைத் தான் திரட்டினார். எது நடைமுறைக்கு சரியான தத்துவமோ அதை எடுத்துக்கொண்டார்.
அதே போல் மாவோவின் மேற்கோளையும் உதாரணமாகக் காட்டினேன். ‘தனிமனிதனா அமைப்பா என்று வரும்போது அமைப்பு தான் முக்கியம். அமைப்பா, அரசியலா என்று வரும்போது அரசியல் தான் சரி. கடந்த காலத்தில் தனிமனிதனா அமைப்பா என்ற கேள்வி வந்தபோது அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து சிறையில் இருக்கிறோம். இப்போது அமைப்பா, அரசியலா என்ற கேள்வி நம்முன் நிற்கிறது. அமைப்பு என்பதே அரசியலுக்காகத்தான். அரசியல் தவறாகப் போனபிறகு அமைப்பை தூக்கிப் பிடிக்க முடியாது’ என்று சொன்னேன்.
‘ஒரு சரியான விஷயத்திற்காக தூக்கில் தொங்கப்போகிறோம் என்ற திருப்தியில் தூக்குக்கயிற்றின் அடியில் நிற்கும்போது தான் செய்தது தவறு என்று தெரிந்தால் எப்படி தாங்கிக் கொள்வது’ என்று கேட்டார் தோழர். உண்மையில் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கணம் எனக்கும் ஜீரணிக்க முடியாததாகவே இருந்தது. ‘தூக்கில் போனாலும் பரவாயில்லை, இனியுள்ள தலைமுறைக்கு நாம் வந்த பாதை தவறு என்பதை சொல்லிவிட்டுத் தான் சாக வேண்டும்’ என்று கூறினேன்.
சிறையில் இருக்கும்போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது?
சிறைக்குச் செல்லும் வரை மார்க்ஸ், லெனினின் எழுத்துக்களை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மஜூம்தாரின் எழுத்துக்கள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது லெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லா புத்தகங்களையும் தேடிப்படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மார்க்சின் கூலி, உழைப்பு போன்ற சிறுசிறு புத்தகங்களைப் படிக்கும்போது தான் இதற்கெல்லாம் அடிப்படை மார்க்சின் ‘மூலதனம்’ என்பது தெரிந்தது. என்னுடைய மாமா தான் மூலதனம் புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனுப்பினார்.
சிறையில் இருந்த தோழர் லெனினும், ஏ.ஜி.கே.வும் நான் மூலதனத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அதன்படி 75ல் அந்த வேலையை ஆரம்பித்தேன். 76 நடுவில் மூலதனத்தின் முதல் பகுதியை மொழிபெயர்த்து முடித்து விட்டேன். 77ல் என்னை மதுரை சிறைக்கு மாற்றினார்கள். அங்கிருந்து மொழிபெயர்த்த பகுதிகளை தோழர் பாலசுப்பிரமணியத்துக்கு அனுப்பினேன். அவர் என்.சி.பி.ஹெச்சிடம் ஒப்படைத்தார். அவர்கள் கிருஷ்ணையாவிடம் கொடுத்து கருத்து கேட்டார்கள். அவர் நல்ல மொழிபெயர்ப்பாளர். சோவியத்தில் 12 வருடங்கள் தங்கி இருந்து பல புத்தகங்களை மொழிபெயர்த்தவர். பல மூலதன மொழிபெயர்ப்புகளை நிராகரித்தவர். ஆனால் அவர் என்னுடைய புத்தகத்தை வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பை மாஸ்கோவிற்கு அனுப்பினார்கள். அவர்கள் மூன்று பகுதிகளையும் சேர்த்து வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்கள். 79 கடைசியில் மீதமுள்ள இரண்டு தொகுதிகளையும் மொழிபெயர்த்துத் தருமாறு தோழர் பாலசுப்பிரமணியம் என்னிடம் கேட்டார். அப்போது நான் சென்னை சிறையில் இருந்தேன். 80 ஜனவரி இறுதியில் தொடங்கி ஏப்ரல் 22 ம் தேதி இரண்டாம் பகுதியை மொழிபெயர்த்தேன். தினமும் இவ்வளவு நேரம் என திட்டமிட்டு இந்த வேலையைச் செய்தேன். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து மறுநாள் இரவு இரண்டு மணிவரை கூட எழுதியிருக்கிறேன்.
மே 1ம் தேதி மூன்றாம் தொகுதியை ஆரம்பித்து நவம்பர் 7ம் தேதி மொழிபெயர்த்து முடித்தேன். என்னுடைய புத்தகங்களோடு கலந்து அதை வெளியே அனுப்பினேன். அதன்பிறகு அடுத்தடுத்த வருடங்களில் திருச்சி, கடலூர் என பலச் சிறைகளுக்கு மாற்றப்பட்டேன். அந்த நேரத்தில் என்னுடைய மொழிபெயர்ப்பு மாஸ்கோவில் அச்சாகிக் கொண்டிருந்தது. அச்சகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தமிழ் தெரியாததால் ஒவ்வொரு எழுத்தையும் பெரிதாக வடிவமைத்து வைத்துக்கொண்டு உருவத்தைப் பார்த்து ஒவ்வொரு எழுத்தாக அச்சேற்றிக் கொண்டிருந்தார்களாம்.
அந்த நேரத்தில் சோவியத் வீழ்ந்தது. இதில் என்னுடைய மொழிபெயர்ப்பும் காணாமல் போனது. ஆனால் என்.சி.பி.ஹெச்சிடம் அதனுடைய தட்டச்சு வடிவம் இருந்தது. அதை அவர்கள் ஒரு காப்பி ரைட்டரிடம் கொடுக்க அவர் அதை தப்பும் தவறுமாக திருத்தி வைத்திருந்தார். அதை மீண்டும் திருத்தி வடிவமைப்பதற்காக, ‘மூன்று வருடங்கள் தொடர்ந்து மாஸ்கோவில் தங்கியிருக்க மொழிபெயர்ப்பாளரை அனுப்ப முடியுமா’ என்று மாஸ்கோவில் இருந்து கேட்டார்கள். நான் அப்போது சிறையில் இருக்கிறேன். விடுமுறையில் இரண்டு மூன்று நாட்கள் தான் வெளியில் வந்து போக முடியும். இதற்கு முன்னரே என்னுடைய தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டதைக் குறிப்பிட வேண்டும்.
எனவே புத்தக வடிவமைப்பை சென்னையிலே செய்யலாம் என முடிவெடுத்து நான் சென்னை சிறைக்கு மாற்றல் வாங்கி வந்தேன். சிறையில் இருந்து கொண்டே அதன் திருத்த வேலைகளில் ஈடுபட்டேன். 85 நவம்பர் கடைசியில் விடுதலையானேன். மொழிபெயர்ப்புக்குத் தேவைப்பட்டது இரண்டு ஆண்டுகள் தான். ஆனால் அதை திருத்தி அமைப்பதற்கு ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டது. அத்தனை உழைப்பையும் கொடுத்து எல்லா வேலைகளையும் முடித்த பிறகு புத்தகம் வெளிவர வேண்டாம் என என்.சி.பி.ஹெச்சில் முடிவெடுத்து விட்டார்கள்.
கலைஞர் ஆட்சிக்கு வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு நாகநாதன், ஜெமதக்னியின் மூலதன மொழிபெயர்ப்பைக் கொண்டு வர முயற்சி செய்தார். கலைஞரின் முன்னுரையோடு ஐந்து லட்ச ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டோடும் அது வெளிவந்தது. மிக அபத்தமான புத்தகம் அது.
அப்போதும் ‘செலவு அதிகமாகும்’ எனக் கூறி என்னுடைய புத்தகத்தை வெளியிட என்.சி.பி.ஹெச் யோசித்தது. ‘முன்வெளியீட்டு திட்ட அறிவிப்பு வெளியிடலாம்’ என்ற யோசனையைக் கூறினேன். அதன்படி பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டார்கள். நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகமும் வெளிவந்தது. எங்கள் புத்தக அளவிற்கு ஜெமதக்னியின் புத்தகம் விற்கவில்லை.
என்னுடைய மொழிபெயர்ப்பிலும் முதல் புத்தகம் மட்டும்தான் சரியாக வந்திருப்பதாகக் கருதுகிறேன். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் புரிந்து கொள்ள கடினமானவை. மார்க்ஸ் முதல் தொகுதிக்காக இருபத்தைந்து ஆண்டுகள் செலவிட்டார். இரண்டாம் தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளும், மூன்றாம் தொகுதிக்கு 9 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டார். முதல் தொகுதி ஒரு இலக்கியத் தரத்தோடு இருக்கும். இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் வெறும் ஆய்வுக்குறிப்புகளாக இருக்கும். இன்னமும் யாராவது தமிழில் அதை எளிமையாக மொழிபெயர்க்க முன்வந்தால் அவர்களுக்கு குறிப்புகள் தரத் தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இன்னொரு முறை மூலதனத்தை எளிமையாக மொழிபெயர்ப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.
சிறையில் இருந்து வெளி வந்தபிறகு சிபிஎம் கட்சியில் சேர்ந்தீர்கள். அதற்கு என்ன காரணம்?
‘சீனா போன்று ஒரே மொழி பேசக்கூடிய நாடாக இந்தியா இருந்தால், சிறந்த நிர்வாகத்தை கொடுக்கக்கூடிய அரசாக சி.பி.எம்.தான் இருக்க முடியும்’ என்ற நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறது. ஆனால் இந்தியா பலமொழிகளைப் பேசுகின்ற, பல சாதிகளைக் கொண்ட நாடாக இருப்பதால் தான் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. சாதி, மொழி இரண்டு பிரச்சனைகளும் இல்லாத இந்தியாவிற்கு அறிவியல் பூர்வமான வேலைத்திட்டம் என்பது சி.பி.எம்முடையது தான். ஆனால் அவை இரண்டும் இந்தியாவில் பிரச்சினைகளாக இருப்பதும், அவை குறித்து சி.பி.எம். கவனம் கொள்ளாமல் இருப்பதும்தான் இன்றளவுக்கும் அந்தக் கட்சிக்கு இருக்கும் பெரிய பலவீனம். நக்சலைட்களும் அப்படித்தான் இருந்தார்கள். சாதியை ஓர் உணர்ச்சி அடிப்படையில் தான் அணுகினோம்.
தேசிய இன சுயநிர்ணய உரிமையையும் தோழர்கள் பாலசுப்பிரமணியம், சுந்தரய்யா போன்றவர்கள் ஆதரித்தார்கள். ராமமூர்த்தி, ஈ.எம்.எஸ்.போன்றவர்கள் எதிர்த்தார்கள். இந்த ஒரு நிலைப்பாட்டைத் தவிர மற்ற கொள்கைகளில் எங்களுக்கு சி.பி.எம்.முடன் வேறுபாடு இருக்கவில்லை. எனவே சி.பி.எம்.மில் சேருவது என முடிவெடுத்தோம். 75ல் இதுகுறித்து பாலசுப்பிரமணியத்துக்கு கடிதம் எழுதினோம். அவர் எங்களை சிறையில் வந்து சந்தித்தார். அதிலிருந்து நாங்கள் சி.பி.எம். உறுப்பினர்கள் தான். சிறையிலிருந்து விடுதலையாகி, பின்பு கட்சியிலிருந்து நான் நீக்கப்படும் வரை சி.பி.எம். உறுப்பினராக இருந்தேன்.
(சி.பி.எம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள், தமிழ்த் தேசியத்திற்கான சாத்தியங்கள், தமிழ்த் தேசியவாதிகள் தனித்தனியாக செயல்படுவது, பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்கியது, ஜல்லிக்கட்டு தமிழரின் அடையாளமா உள்ளிட்ட கேள்விகளுக்கு தியாகுவின் பதில்கள் நிறைவுப் பகுதியாக - அடுத்த வாரம்)

நான் காங்கிரசில் இருந்தபோதே சி.பி.எம். செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியம் என்ற தோழருடன் நல்ல பழக்கம் இருந்தது. சிறையில் இருந்தபோது மீண்டும் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. எமர்ஜென்சி காலகட்டத்தின்போது சி.பி.எம்., “நாடு ஒரு சர்வாதிகார அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்திராகாந்தியின் நடவடிக்கைகள் பாசிசத் தன்மையுடையது” என்ற கருத்தை வெளியிட்டது. இது எங்களை ஈர்த்தது. சி.பி.ஐ. அடக்குமுறைக்கு ஆதரவாக இருந்தது. சி.பி.எம். தான் அதை உறுதியோடு எதிர்த்தது.

புரட்சி மற்றும் அதன் மீதான நம்பிக்கை என்பது புனிதமானது. அந்த நம்பிக்கையை என்றுமே மாற்றிக்கொள்ள முடியாது. அதில் உறுதியாக பிடிப்பு வைத்து விட்டேன். அந்தப் புரட்சிக்கு இதுதான் சரியான அமைப்பு என்பதிலும் அதே அளவு நம்பிக்கை வைத்தாகி விட்டது. இதில் ஏதோ தவறு என்கிறபோது சில வழிமுறைகளில் ஏற்பட்ட தவறு என்றுதான் இயல்பாகவே முதலில் தோன்றும்.