நேர்காணல்
நக்சலைட் பாதைதான் சரி என்று முடிவெடுத்தேன்: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்
நக்சலைட் வாழ்க்கை, தமிழ்த் தேசிய செயல்பாடுகள், மனித உரிமைப் போராட்டங்கள் என பொது வாழ்க்கையில் முழுமையாகத் தன்னைக் கரைத்துக் கொண்டவர் தோழர் தியாகு. ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு தமிழ் அறிவுலக்குக்கு இவர் அளித்த மிகப் பெரிய கொடை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை நிறுவி, மிகுந்த சிரமத்திற்கிடையில் விடாது தொடர்ந்து நடத்தி வருகிறார். ‘சமூகநீதி தமிழ் தேசம்’ இதழின் ஆசிரியர். மூன்று அமர்வுகளாக அவருடன் நடத்திய நேர்காணலிருந்து...
|
உங்களுடைய குடும்ப பின்னணி பற்றி கூறுங்கள்
என்னுடைய பூர்வீகம் சந்திரசேகரபுரம் அருகில் உள்ள நல்லம்பூர் என்கிற சிறிய கிராமம். என்னுடைய தாத்தா காலத்திலேயே அங்கிருந்து பிழைப்பு தேடி திருவாரூர் வந்து விட்டார்கள். அதனால் நான் பிறந்தது படித்தது எல்லாமே திருவாரூரில் தான். என்னுடைய அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்ததும் என்னுடைய அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் எட்டு பிள்ளைகள்.
என்னுடைய அப்பா திருவாரூரில் ஆசிரியராக பணியாற்றினார். அதே பள்ளியில் தான் நானும் படித்தேன். கல்லூரிப் படிப்பு கும்பகோணத்தில் தொடர்ந்தது.
இதில் அரசியல் ஈடுபாடு எப்போது, எப்படி ஏற்பட்டது?
அப்போது திருவாரூர் கீழே வீதியிலே நிறைய பொதுக்கூட்டங்கள் நடக்கும். பத்து வயதிலேயே அதை மிக ஆர்வமாக கேட்பேன். என் அப்பா தான் அழைத்துச் செல்வார். பெரியார், அண்ணா, காமராஜர், ஜீவானந்தம், கலைஞர் போன்ற எல்லாத் தலைவர்களும் அங்கு பேசுவார்கள். ஒப்பீட்டளவில் அங்கு கம்யூனிஸ்டு கூட்டங்கள் குறைவாகத் தான் நடக்கும். 62 தேர்தல் நடைபெறும் போது என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவு அப்போது இருந்தது.
62 இந்திய-சீன எல்லைப் போரின்போது சிறையில் இருந்து வெளியே வந்த அண்ணாத்துரை அதுகுறித்து திருவாரூர் தேரடி பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்தப் பேச்சு எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாமும் இதேபோல் பேச வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் மீது எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் ‘படிக்காத மேதை’, ‘கல்வித்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்’ என்ற வகையில் காமராஜரின் மீது எனக்கு தனி மரியாதை இருந்தது.
திருவாரூரில் அப்போது ஏராளமான படிப்பகங்கள் இருந்தன. தி.மு.க. ஒரு படிப்பகம் ஆரம்பித்தால் மறுநாளே அதன் பக்கத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு படிப்பகம் ஆரம்பிக்கும் அளவுக்கு படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. தி.மு.க. சார்பில் முரசொலி, நம்நாடு, திராவிடநாடு, காஞ்சி என ஏராளமான பத்திரிகைகள் கிடைக்கும். கண்ணதாசன் தென்றல், திரை நடத்திக் கொண்டிருந்தார். காங்கிரசில் நவசக்தி வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு என்ற பத்திரிகை, மா.பொ.சி.நடத்திய செங்கோல் பத்திரிகை என ஏராளமான பத்திரிகைகள் படிப்பகங்களில் படிக்கக் கிடைக்கும். இவற்றை விடாமல் வாசிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது.
என்னுடைய பள்ளிப்படிப்பு முடியும்போது என்னுடைய வயது மிகக் குறைவாக இருந்தது. 14 வயதில் பதினோராம் வகுப்பு முடித்திருந்தேன். அதனால் உடனடியாக கல்லூரியில் சேர முடியவில்லை. எனவே 65 ம் வருடம் முழுவதும் படிப்பு எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் வலுவாக நடைபெற்றுக் கொண்டிருந்த ஆண்டு அது. திருவாரூரில் அப்போது கல்லூரி எதுவும் இல்லாததாலும், வேறு சில காரணங்களாலும் அப்பா தன்னுடைய வேலையை வலங்கைமானுக்கு மாற்றினார். நாங்கள் வலங்கைமானுக்கு குடிபெயர்ந்தோம். அந்த ஓராண்டில் தான் என் வாழ்க்கையின் பாதை திசைமாறியது.
கடவுள் எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு என பல்வேறு விஷயங்களில் எனக்குத் தெளிவு கிடைத்தது. அதே நேரத்தில் நிறைய கேள்விகளும் எழுந்தன. இதனால் நான் ஏதாவது கட்சியில் சேர்ந்து விடுவேனோ என்று பயந்து போன என் அப்பா இந்தியாவில் இருக்கிற எல்லாக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் எனக்காக விண்ணப்பித்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. அதனால் என்னை தட்டச்சுப் பயிற்சியில் சேர்த்து விட்டார். என்னுடைய பாதை திசைமாறி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தட்டச்சுப் பள்ளியில் இரண்டு மடங்கு காசு கொடுத்து அதிக நேரம் நான் அங்கு இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.
அந்த தட்டச்சுப் பயிற்சி பள்ளியை நடத்தி வந்த அமீர்ஜான் என்பவரோடு நட்பு ஏற்பட்டது. அவர் ஒரு உறுதியான சாதி, சமய மறுப்பாளர். என்னுடைய கேள்விகளை அவரோடு விவாதிக்க ஆரம்பித்தேன். அவர்தான் என்னை நாத்திகனாக மாற்றினார். வீட்டின் வெளியே ஒரு பந்தல் போட்டு அதில் பத்திரிகைகள் வாங்கிப் போடுவார். அதற்கு ‘நம்பிக்கை படிப்பகம்’ என்று பெயர் வைத்திருந்தார். இன்றைக்கும் இந்தப் பணியை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தட்டச்சு நிலையம் தவிர கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்தார். பலவித மருத்துவ முறைகளையும் கற்று ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ உதவிகளை செய்து வந்தார். சமகாலப் பிரச்சனைகள் குறித்து நிறைய துண்டறிக்கைகள் வெளியிடுவார். அவர் எனக்குள் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தினார். அதன் விளைவாக நடை, உடை, உணவு என எல்லா விஷயங்களிலும் அவரைப் போலவே மாறினேன்.
குத்தூசி குருசாமி போன்றவர்கள் பெரியாரிடமிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தார்கள். அதன் முதல் மாநாட்டில் விஜயவாடா கோரே போன்றவர்களும் கலந்து கொண்டார்கள். அமீர்ஜானோடு நானும் அதில் கலந்து கொண்டேன். அதில் லெனின், மார்க்ஸ் போன்றோரின் புத்தகங்கள் இருபத்தைந்து பைசாவிற்கு விற்கப்பட்டது. மார்க்சியத்தோடான முதல் அனுபவம் அப்படித்தான் ஏற்பட்டது. இந்தப் புத்தகங்கள் குறித்து பல இரவுகள் நானும், அமீர்ஜானும் விவாதித்திருக்கிறோம்.
அப்போதுதான் நமக்கான அரசியல் எது என்கிற கேள்வி ஏற்பட்டது. அமீர்ஜான் கம்யூனிசம் தான் சரி என்றார். முழுவதும் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுவது அவர்கள் மட்டும் தான் என்பார். ஆனாலும் சி.பி.ஐ. மீது அவருக்கு வெறுப்பு இருந்தது. காங்கிரசின் வால்போல் அவர்கள் செயல்படுவதாகக் குறைகூறுவார்.
ஆனால் நீங்கள் காங்கிரசில் இணைந்து நீங்கள் பணியாற்றினீர்கள் அல்லவா?
67 தேர்தல் நெருங்கும் நேரம். அமீர்ஜான் பணிமாற்றம் காரணமாக வேறு ஊருக்கு சென்று விட்டார். வேறு பல காங்கிரஸ் நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரசாரை விட, காங்கிரசை பெரியார் அதிகமாக ஆதரித்து பேசிக் கொண்டிருந்தார். என்னுடைய நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் முதலில் காங்கிரசை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசினேன். தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களில் பேச அழைப்பு வந்தது. 67 தேர்தல் தோல்விக்குப் பிறகு தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு என்ற அமைப்பை காமராஜர் ஆரம்பித்தார். தஞ்சை ராமமூர்த்தி தலைவராகவும், வாழப்பாடி ராமமூர்த்தி பொருளாளராகவும் இருந்தனர்.
அதன் முதல் மாநாட்டில் பேசுவதற்காகத் தான் நான் முதன்முதலாக சென்னை வந்தேன். தமிழ்வாணன், கண்ணதாசன், ஜெயகாந்தன், காமராஜர் போன்ற பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது எனக்கென்று தனியாக மொழிக்கொள்கை எதுவும் கிடையாது. ‘இந்தியாவிற்கு இந்தி, தமிழ்நாட்டிற்கு தமிழ், உலகத்திற்கு ஆங்கிலம் என்கிற மும்மொழிக்கொள்கை தான் சரி. அதைத்தாண்டி மொழிப்பற்று என்பது போலியானது’ என்கிற அமீர்ஜானின் கருத்தை நான் அந்த மாநாட்டில் பேசினேன்.
மொழியின் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் தோற்று விட்டதாக கருதப்பட்ட நேரமது. எங்களுக்கு மொழிப்பற்று இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில், ‘மொழி என்பது விழி அல்ல, காலில் கிடக்கும் செருப்பு போன்றது. வீட்டிற்குப் போனதும் கழட்டி விடலாம். தேவைப்பட்ட இடத்தில் தேவைப்பட்ட நேரத்தில் மாட்டிக் கொள்ளலாம்’ என நான் பேச, மேடையில் இருந்த காமராஜர் உட்பட அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்.
65 மொழிப்போர் காரணமாகத் தான் காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று கருதி, நாங்களும் மொழிப்பக்கம் தான் எனக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு அது. மாநாட்டில் என் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் என்னுடைய பேச்சு ரசிக்கப்பட்டது. அதன்பிறகு எங்கு மாநாடு நடந்தாலும் காமராஜர் முதலில் என்னைத்தான் பேசச் சொல்வார். அந்த அளவுக்கு அவர் என்னுடைய பேச்சுக்கு ரசிகராக இருந்தார்.
அதே போல் தான் மூப்பானாரும். என்னை பிரசங்கி என்றுதான் அழைப்பார். நான் அவரிடம் வேடிக்கையாக பலமுறை கேட்டதுண்டு, ‘நாங்க தான் தலைவரா இருப்போம். நீங்க பிரசங்கியா இருங்கன்னு சொல்றீங்க, அப்படித்தானே?’. எனக்கு அப்போதே காங்கிரஸ் மீது விமர்சனம் இருந்தது. இது ஒரு பணக்காரக்கட்சி, பெயருக்கு காமராஜரை பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றியது. ஆனாலும் வாழப்பாடி ராமமூர்த்தி மீது பெரிய மரியாதை இருந்தது.
காங்கிரசில் அவர் ஒருவர் தான் இடதுசாரி சிந்தனையோடு செயல்படுபவர். 67 தேர்தலில் பெரியார் காமராஜரை தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். விருதுநகரில் காமராஜர் தோற்றபோது காங்கிரசாரை விட அதிகம் அதிர்ச்சி அடைந்தது திராவிடர் கழகத்தினர் தான். தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு பெரியாரை திருச்சியில் சந்தித்த அண்ணா, ‘இந்த ஆட்சி உங்களுக்கு சமர்ப்பணம்’ என்று சொன்னவுடன் ‘இப்போது தான் திராவிட ஆட்சி மலர்ந்திருக்கிறது’ என்று அண்ணாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் பெரியார்.
பெரியாரின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்து திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டவர் தான் வாழப்பாடி ராமமூர்த்தி. அப்போது மாணவர்கள் அதிகம் காங்கிரசில் இணைந்து கொண்டிருந்தனர். அவர்கள் தொடர்ச்சியாக மேடைகளிலும் பேச வைக்கப்பட்டனர். தமிழ்வழிப் படிப்பு குறித்து நான் அதிகம் மேடைகளில் பேசிய காலகட்டம் அது. என்னுடைய இந்தப் பேச்சுக்களை காமராஜர் விரும்பிக் கேட்பார்.
காங்கிரசின் முக்கிய பிரமுகர் சீனிவாச சாஸ்திரியின் ஊர் வலங்கைமான் தான். நானும் வலங்கைமானைச் சார்ந்தவன் என்பதால் காமராஜர் என்னை சாஸ்திரி என்றுதான் அழைப்பார். காமராஜருக்கு தமிழகத்தில் உள்ள கிராமங்கள் குறித்து அவ்வளவு விவரங்கள் தெரியும். எந்த வழியில் போனால் சீக்கிரம் போக முடியும், எந்தெந்த கிராமத்தில் எந்த பேருந்து நிற்கும், எங்கு ரயில் போகும் போன்ற அனைத்து விவரங்களும் அவருக்குத் தெரியும். அவருடன் கடைசியாக கொள்ளிடக் கரையில் உள்ள நாயகனைப் பிரியாள் என்ற கிராமத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
என்னுடன் கல்லூரி மாணவர் சம்பத்தும் வந்திருந்தார். அன்று காமராஜர் வேறு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் முதலில் பேசிவிட்டு கிளம்புவதாகத் திட்டம். அவர் பேசி முடித்ததும் கூட்டத்தைப் பார்த்து, ‘எனக்குப் பிறகு கல்லூரி மாணவர்கள் பேசுவார்கள், அவர்கள் பேச்சைக் கேட்டபிறகு தான் நீங்கள் போக வேண்டும்’ என்று கூறிவிட்டு காரை நோக்கி சென்றார். அவருக்குப் பின்னாலேயே மொத்தக் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.
காமராஜருக்கு கோபம் வந்து விட்டது. வேகமாகத் திரும்பி மேடையேறி மைக்கை வாங்கியதும் கூட்டம் திரும்பி வந்தது. ‘போகக் கூடாதுன்னேன், எல்லாரும் போயிட்டீங்கன்னேன், இப்ப நான் பேச்சை கேட்கப் போறேன்னேன், நீங்க யாரும் கேட்கக் கூடாதுன்னேன்’ என்றபடி மேடையில் அமர்ந்து விட்டார். கூட்டமும் மௌனமாக அமர்ந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும்போதே காமராஜர் எழுந்து போனார். கூட்டம் கலையாமல் அப்படியே அமைதியாக கடைசிவரைக்கும் இருந்தது. அதுதான் நான் அவரை சந்தித்த கடைசிக் கூட்டம்.
நீங்கள் கம்யூனிச பாதைக்குத் திரும்பியது எப்படி?
அப்போது காங்கிரஸ் கட்சிக்குள் பல அணிகளாக மோதல் உருவானது. நான், வாழப்பாடி ராமமூர்த்தி, பசுபதி போன்றோர் சோஷலிஸ்ட் அணி. இதேபோல் பல அணிகள் உருவானது. எனக்கு அப்போதே கம்யூனிஸ்டு கட்சி நண்பர்களுடன் தொடர்பு இருந்தது. தஞ்சையில் ஒரு பகுதியில் குடிசைகள் தொடர்ச்சியாக எரிவது ஒரு பிரச்சனையாக இருந்தது. மதுரையில் இருந்து லட்சுமிகாந்தன் என்பவர் அந்தப் பகுதியில் ஒரு கூட்டத்தில் பேசினார். பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் சி.பி.எம். கட்சியினரால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஹோசிமின் வாழ்க என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த லட்சுமிகாந்தன் எங்கோ பிறந்த லெனினுக்கு இங்கென்ன வேலை, குடிசைகளை கொளுத்துவது சி.பி.எம்மின் வேலை என்று பேசினார்.
அந்தக் கூட்டத்தில் நான் கடைசியாகப் பேசினேன். ‘எங்கோ பிறந்த லட்சுமிகாந்தன் இங்கு வந்து பேசுகிறார். இங்கு பிறந்த நேரு ஸ்பெயின் உள்விவகாரத்தில் தலையிடுகிறார் போன்ற பல செய்திகளை கூறிவிட்டு இதுபோன்ற விஷயங்களில் சர்வதேச பார்வை வேண்டும். இப்படி குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களை வைத்து விட்டு சோஷலிசத்தை காண முடியாது. கம்யூனிஸ்டுகள் ஏழைகளின் குடிசைகளை கொளுத்துவதாக லட்சுமிகாந்தன் பேசினார். கம்யூனிஸ்டுகள் கொளுத்துவார்கள், பங்களாக்களை கொளுத்துவார்கள், தானியப்போர்களை கொளுத்துவார்கள். ஒருபோதும் ஏழைகளின் குடிசைகளை கொளுத்த மாட்டார்கள்’ என்று பேசினேன்.
கூட்டத்தில் என்னுடைய பேச்சுக்கு நல்ல கரவொலி. கட்சிக் கூட்டத்தை கம்யூனிஸ்டு கூட்டம் போல் நடத்துவதாக மூப்பனார் என்னிடம் குறிப்பிட்டார். மாணவர் காங்கிரஸ் சார்பில் மார்க்ஸ் பிறந்த நாள் கூட்டம் நடத்தினோம். இப்படி கட்சிக்குள் எனக்கு வேறு ஒரு முத்திரை சுலபத்தில் விழுந்தது.
அந்த நேரத்தில் தஞ்சையில் மூப்பனாரின் மாந்தோப்பில் ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. அதில் சி.சுப்பிரமணியம் பேசினார். உற்பத்திப் பெருக்கம் தான் சோஷலிசத்திற்கான வழி என்பதுதான் அதன் சாரம். நிலச்சீர்திருத்தம் தான் முதலில் செய்ய வேண்டியது என நான் அவரிடம் வாதிட்டேன். அவர் சோவியத் ரஷ்யாவை ஒப்பிட்டுப் பேசினார். சோவியத் ரஷ்யாவில் எல்லா சீர்திருத்தத்திற்கு முன்பும் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றதாக நான் குறிப்பிட்டேன். நம் ஊரிலும் நிலச்சீர்திருத்தம் இருக்கிறதே என சி.சுப்பிரமணியம் பேசினார். இப்படியாக விவாதம் நீண்டுகொண்டே போனது.
‘நில உச்சவரம்பு 30 ஏக்கர் தான் ஆனால் ஆயிரம் ஏக்கர் வைத்துள்ளவர்கள் நம் ஊரிலேயே நிறைய பேர் இருக்கிறார்கள் நீங்களெல்லாம் சட்டத்தை ஏய்ப்பவர்கள்’ என்று கடுமையாக வாதிட்டேன். நான்கு காரும், இரண்டு பங்களாவும் வைத்திருப்பவர்களும் நில உச்சவரம்பு சட்டத்தை மீறாதவர்கள் தானா என நான் கேட்டேன். (நான் குறிப்பிட்டது மூப்பனாரை, அவரும் அங்குதான் இருந்தார்.) கோபத்தில் சி.சுப்பிரமணியம் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
மறுநாள் அந்த பயிலரங்கமே இரண்டுபட்டது. ‘ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமா எது சோஷலிசத்திற்கான வழி’ என்ற தலைப்பில் பட்டிமன்றமே நடைபெற்றது. அந்த முகாமில் தான் காங்கிரசின் பத்து அம்சத்திட்டம் குறித்து ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டேன். என்னுடைய முதல் புத்தகம் அது. அன்று மாலை காமராஜர் பேசினார்.
‘கூட்டத்திலிருந்து சி.எஸ். அவமானப்பட்டு வெளியேறியிருக்கிறார். காலையில் இருந்து காங்கிரஸா, நக்சலைட்டா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. நக்சலைட் என்று சொல்பவரை ஆதரிப்பதற்கு இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர் என்ன தப்பா சொல்லிட்டாருன்னேன், ஆயுதப்போராட்டம் வேணுங்கிறாருன்னேன், வேற வழியில்லாட்டி அதுதான் சரின்னேன், வச்சிருக்கவன் குடுக்க மாட்டான்னேன், ஆயுதப் போராட்டம் நடத்தினா நான் முதல்ல ஆயுதம் எடுப்பேனேன்’ என்று பேசினார். அங்கு கரவொலி அடங்குவதற்கு வெகுநேரம் ஆனது.
காமராஜரிடம் உங்களைக் கவர்ந்த விஷயம் எது?
அவருடைய ஆளுமை தான். யாரையும் அடக்கி விடும் அவரைக் கண்டு கட்சியில் அனைவருக்குமே ஒரு பயம் உண்டு. ஒருமுறை காங்கிரஸ் கூட்டத்தில் கண்ணதாசன் பேசினார், ‘47-67 இந்த இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்து விட்டது என்று அண்ணா கேட்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தும் இருபது ஆண்டுகள் ஆகி விட்டன. அண்ணா ராணியம்மையை மணந்தும் இருபது ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை என்பதற்காக கணவரை மாற்றிவிடலாமா’ என்று பேசினார்.
மேடையில் இருந்த காமராஜருக்கு கடுமையான கோபம் வந்து விட்டது. கண்ணதாசனிடம் இருந்து மைக்கை வாங்கி, ‘இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னேன். பேசினதுக்கு உடனடியாக மன்னிப்புக் கேள், இல்லைன்னா இந்த இடத்தை விட்டு போயிடுன்னேன்’ எனக் கடுமையாக கோபித்துக் கொண்டார். கண்ணதாசன் அந்த இடத்திலேயே மன்னிப்பு கேட்டார்.
ஜெயகாந்தனுடைய பேச்சும் காங்கிரஸ்காரர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. குடித்து விட்டுத்தான் அவர் மேடையேறுவார். ஏறியதும் தாறுமாறாக பேசத் தொடங்குவார். ஒரு பொதுக்கூட்டத்தில் சம்பத் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய பேச்சை மேடையில் இருந்து காமராஜர் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது கூட்டத்திற்கு தாமதமாக ஜெயகாந்தனும், கண்ணதாசனும் வருகிறார்கள்.
வந்தவர்கள் மேடையின் பின்வழியாக மேடையில் ஏறினார்கள். கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பெரிய கூட்டம் அது. அவர்களைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது. காமராஜர் திரும்பிப் பார்த்தார். பயத்தில் கண்ணதாசனும், ஜெயகாந்தனும் ஒரே தாவில் மேடையில் இருந்து கீழே குதித்து விட்டனர். காமராஜர் கண்ணதாசனை அழைத்து, ‘ஏன் லேட்டு’ என்று கேட்டார்.
‘ரயில்வே கேட் பூட்டியிருந்தது, அதான்’ என்றார் அவர். ‘ரயில்வே கேட் பூட்ட முன்னாடி வந்திருக்கணும்னேன், இந்தக் கூட்டத்தில் நீங்க இரண்டு பேரும் பேச முடியாது திரும்பிப் போகலாம்னேன்’ என்றார். இதைக் கேட்ட கூட்டத்தினர் ‘கண்ணதாசனும், ஜெயகாந்தனும் பேச வேண்டும்’ என்று கூச்சலிட்டனர். மேடையில் இருந்து எழுந்த காமராஜர் சம்பத்திடம் இருந்து மைக்கை வாங்கி, ‘அவங்க இரண்டு பேரும் பேச மாட்டாங்கன்னேன், நான் பேசப்போறேன்னேன், கேட்கிறவங்க கேட்கலாம், மத்தவங்க எந்திரிச்சி போகலாம்னேன்’ என்று கர்ஜிக்க கூட்டம் அப்படியே அமைதியானது. ஜெயகாந்தன் பயத்தில் மேடைப்பக்கமே வரவில்லை.
காங்கிரசில் நான் கலந்து கொண்ட கடைசிக் கூட்டம் எடமேடையில் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற சோஷலிசக் கருத்தரங்கம் அது. பூண்டி வாண்டையார் தான் தலைமை வகித்தார். நான் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சோஷலிசக் கருத்தரங்கிற்கு பூண்டி வாண்டையார் வேண்டாம் என கோரிக்கை வைத்தேன். அது நிராகரிக்கப்பட்டது. ஊரில் பாதிக்கு மேல் நிலங்களை வைத்துக் கொண்டு மக்களை ஆட்டிப் படைத்து வந்த நிலச்சுவான்தார் அவர்.
பேசுவதற்கான என்முறை வந்ததும் நான் எழுந்து, ‘சில பேர் வீட்டில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் நேரு படமும் வைத்து நடுவிலே இரட்டைச் சவுக்கை வைத்திருக்கிறார்கள். (பூண்டி வாண்டையார் வீட்டில் தான் அது வைக்கப்பட்டிருக்கும். இரட்டைச் சவுக்கு என்பது பண்ணையடிமை முறையின் அடையாளம்) அந்த சவுக்குகள் யாருக்காக? இங்கே ஒரு பக்கம் பள்ளமாக இருக்கிறது. மறுபக்கம் மேடாக இருக்கிறது. பள்ளங்களை நிரப்ப வேண்டுமானால் மேடுகளை சரிக்க வேண்டும்’ என்று பூண்டி வாண்டையாரை குறிவைத்துத் தாக்கினேன். என்னுடைய அந்தப் பேச்சு அங்கிருந்த மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தோடு நான் மனதளவில் முழுமையாக காங்கிரசில் இருந்து வெளியேறி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து என்ன சி.பி.எம்மா, எம்.எல்லா என்பதில் தான் எனக்குக் குழப்பம் இருந்தது. நண்பர்களோடு தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றது. எம்.எல்லின் ஆயுதப் போராட்டங்களின் மீது எங்களுக்கு ஈர்ப்பு இருந்தது. சி.பி.எம். மக்களை திரட்டாமல் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்ற கருத்தை வைத்திருந்தது.
மனதளவில் இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர் காங்கிரஸ் தேர்தல் வந்தது. என்னை நிற்கச் சொல்லி நண்பர்கள் வற்புறுத்தினார்கள். சி.பி.எம். தோழர்களும், ‘நீங்க தேர்தல்ல நின்னு கலகம் பண்ணுங்க’ என்று கூறினார்கள். போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்திற்கு மூப்பனார் தலைமை வகித்தார்.
பட்டுக்கோட்டை ராஜேந்திரன், மூர்த்தி, நான் என மூன்று பேர் போட்டியிடுவதாக இருந்தோம். மூப்பனார் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். என்னிடம் பேசும்போது, ‘போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக பட்டுக்கோட்டை ராஜேந்திரன் தெரிவித்து விட்டார். கட்சியில் பெரும்பாலானவர்கள் மூர்த்தி வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே நீங்கள் விலகிக் கொண்டு நீங்களாகவே அவர் பெயரை முன்மொழிந்து விடுங்கள்’ என்று கூறினார். நானும் அப்படியே செய்தேன்.
நான் நக்சலைட் ஆதரவாளன் என்பதால் என்னை விலக வைப்பதற்காக மூப்பனார் நிறைய வேலை செய்திருக்கிறார் என்பது பின்னால் தான் தெரிந்தது. அத்தோடு காங்கிரசில் இருந்து முற்றிலுமாக விலகி வெளியே வந்து விட்டேன். அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வருடம் மொத்தமே நான் ஏழு நாட்கள் தான் வகுப்புக்கு சென்றிருந்தேன். எனவே என்னால் தேர்வு எழுத முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்வு எழுதுவதற்காக தினமும் கல்லூரிக்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறிவிட்டது.
இந்த நேரத்தில் நான் வலங்கைமானில் இருப்பது தி.மு.க. கட்சியினருக்குப் பிடிக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போன்ற பல திட்டங்களை அவர்கள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அவை தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படவில்லை. ‘அண்ணாத்துரை அண்ணாச்சி மூணு படி என்னாச்சி!’ போன்ற வாசகங்களை தட்டியில் எழுதி ஊர்ப்பொதுவிடத்தில் வைத்து விடுவேன். இது தி.மு.க. கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக அப்பாவை மன்னார்குடி தாண்டி ஒரு கிராமத்திற்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பம் இடம்பெயரவில்லை. அப்பா மன்னார்குடியில் தங்கி வேலை பார்த்து வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது. அப்பாவிற்குப் பயந்து தினமும் வீட்டிற்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா திங்கட்கிழமை காலை கிளம்பியதும் வெளியே புறப்படும் நான் அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதற்கு ஒரு மணிநேரம் முன்னாதாகத் தான் வீடு திரும்புவேன். அப்பாவிடமிருந்து அம்மா தொடர்ந்து என்னை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ராதா என்ற நண்பரின் அறிமுகம் ஏற்பட்டது. என்னுடைய பெரும்பாலான நேரங்கள் அவர் வீட்டில் தான் கழிந்தது. மாவோவின் அறிக்கைகளை மொழிபெயர்த்து துண்டறிக்கைகள் வெளியிடும் வேலையை அப்போது செய்தேன். Liberation பத்திரிகையில் சாரு மஜூம்தாரின் பேட்டி வந்தது. அதில் அவர், ‘மாணவர்கள் படிப்பை விட்டு குடும்பத்தைத் துறந்து கிராமங்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்பு தான் நம்முடைய ஒரே முழக்கம்’ என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியை படித்ததும் இதுதான் என்னுடைய வழி என்று நான் தீர்மானித்துக் கொண்டேன்.
அந்த நேரத்தில் உங்களுக்கு சி.பி.எம். கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததல்லவா?
67 தேர்தலில் தி.மு.க., சுதந்திரா கட்சிகளோடு சி.பி.எம். கூட்டணி வைத்திருந்தது. ராஜாஜியின் சுதந்திரா கட்சி மீது எனக்கு கடுமையான வெறுப்பு இருந்தது. அவர்களோடு கூட்டணி வைத்ததால் சி.பி.எம். மீதும் கடுமையான கோபம் இருந்தது. சி.பி.ஐ., இன்னொரு காங்கிரஸ் என்ற கருத்துதான் எனக்கு அப்போது இருந்தது. ‘உடனடியாக ஆயுதம் எடுத்து புரட்சிக்குத் தயாராக இருக்கும் எம்.எல்.தான் சரி’ என்று முடிவு செய்திருந்தேன்.
கீழவெண்மணி கொடுமை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமான ஆதிக்க கும்பலை உடனடியாக கொல்ல வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்கு அழித்தொழிப்பு தான் சரி என்று அந்தப் பாதையை தேர்ந்தெடுத்தேன்.
எம்.எல். கட்சியில் எப்படி இணைந்தீர்கள்?
எனக்கோ, ராதாவுக்கோ எம்.எல். கட்சியுடன் நேரடியாக தொடர்பு இல்லை. முதலில் புதிய உலகம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது என முடிவெடுத்தோம். என்னை ஆசிரியராகக் கொண்டு பத்திரிகை தொடங்கலாம் என முடிவெடுத்து விண்ணப்பம் அனுப்பினோம். அதே நேரத்தில் ‘எனக்கு இயக்கத்தோடு நேரடியாக தொடர்பு வேண்டும்’ என்று திருச்சியிலுள்ள அனந்தரங்கன் என்ற தோழரிடம் பேசினோம்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் தோழர்கள் அனந்தரங்கனும், ஏ.எம்.கேவும் எங்களை சந்திக்க வந்தனர். வந்தவுடனேயே ஏ.எம்.கே. அழித்தொழிப்பு குறித்து வகுப்பெடுக்க ஆரம்பித்தார். மறுநாளும் எங்களுடனே தங்கினார். எங்களின் அடுத்த வேலை பற்றி கேட்டபோது, பத்திரிகை ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறினோம். ஏ.எம்.கே. உடனே கோபமாகி, ‘நாடே பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. புரட்சி வந்து கதவைத் தட்டும் நேரத்தில் பத்திரிகை நடத்தப் போகிறீர்களா, அப்படியானால் புரட்சிக்கான தயாரிப்பையே இனி தான் தொடங்கப் போகிறீர்களா?’ என்று கேட்டார்.
‘அதெல்லாம் சரிப்படாது. உடனடியாக கிராமத்திற்கு செல்லுங்கள்’ என்று கூறி ஒரு முகவரியையும் கொடுத்தார். நான் உடனடியாக கிளம்பியாக வேண்டும். ‘கடைசியாக ஒருமுறை வீட்டிற்குப் போய்விட்டு வந்து விடுகிறேன்’ எனக் கூறினேன். ராதாவும் அவரது மனைவியும் என்னை கிண்டலாகப் பார்த்தார்கள். காரணம் அன்று வெள்ளிக்கிழமை. அப்பா ஊரிலிருந்து வந்திருப்பார். ராதாவின் மனைவி அவரிடம், ‘இவரை நம்பி அழித்தொழிப்பு பண்ணப் போறீங்க, இப்ப இவர் வீட்டுக்குப் போவார் அப்பாவை பார்த்ததும் கசாப்புக்கடை ஆடு மாதிரி நிப்பார், புரட்சியெல்லாம் மறந்து போயிடும்’ என்று கிண்டலாகக் கூறினார்.
‘இல்லை நான் உடனடியாக வந்துவிடுவேன். அழித்தொழிப்பு தான் சரி’ என்று உறுதியாகக் கூறினேன். ‘அப்பா வந்ததும் தேடுவார் அதனால தான் வீட்டுக்குப் போகத் துடிக்கிறீங்க, உண்மையிலேயே அப்பா மேல பயம் இல்லைன்னா இன்னிக்கு வீட்டுக்குப் போகாதீங்க’ என்று ராதா கூற அன்றும் மறுநாள் சனிக்கிழமையும் நான் வீட்டுக்குச் செல்லவில்லை. அப்போது கல்லூரியில் தேர்வு வேறு நடந்து கொண்டிருந்தது. நான் ஒரே ஒரு தேர்வு எழுதியிருந்தேன். அதிலும் பேப்பரை வாங்கி முழுவதும் மாவோவின் மேற்கோள்களை எழுதிக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன்.
சனி, ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை காலையில் வீட்டிற்குக் கிளம்பினேன். அம்மா பதட்டமாக இருந்தார். ‘நீ ஏதோ மாவோ கட்சியில் இருக்கிறியாமே, அப்பாவுக்குத் தெரிஞ்சுப் போச்சு, உன்னுடைய பீரோவை உடைச்சிப் பார்த்துட்டார்’ என்று கூறினார். நான் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து ஊரிலுள்ள என் அக்கா வீட்டிற்குப் போய் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தேன். அப்பாவிடம் மாட்டிக்கொள்ளாமல் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி என்னுடைய பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும் அப்பா வந்து விட்டார்.
என்னுடைய கையை உறுதியாகப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு போனார். ‘உன்னுடையது எந்தக் கட்சி, உன்னுடைய தலைவர் யார்’ எனக் கேட்டார். ‘இருப்பது காங்கிரஸ் கட்சி, தலைவர் காமராஜர்’ என்றேன். ‘பொய் சொல்லாதே, உன்னுடைய தலைவர் மாசேதுங். மதுரை முத்து உள்ளூர் ரவுடி, மாசேதுங் வெளியூர் ரவுடி. உன் கட்சியோட பெயரென்ன’ என்று கேட்டார். ‘மார்க்சிய லெனினிய கட்சி’ என்றேன்.
‘முதல்ல மார்க்சிஸ்ட் கட்சி, அப்புறம் மார்க்சிய லெலினிய கட்சி, அடுத்து என்ன மார்க்சிய லெனினிய மாவோயிஸ்டா’ என்று கேட்டு விட்டு என்னுடைய தேர்வைப் பற்றி விசாரித்தார். எழுதியிருப்பதாகக் கூறினேன். அதை கல்லூரியில் வந்து விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு என்னுடைய கையை இறுக்கமாகப் பிடித்து கல்லூரியை நோக்கி இழுத்துக் கொண்டு போனார். பேருந்திலும் என்னுடைய பிடியை விடவேயில்லை. இவரிடம் இருந்து எப்படியாவது தப்பி ஓடிவிடுவது என்று முடிவு செய்தேன்.
பேருந்தில் இருந்து இறங்கியதும் இரண்டு சைக்கிள்களை வாடகைக்கு எடுத்தோம். நான் அப்பாவிடம், ‘என்னுடைய ரிக்கார்டு நோட் நண்பனிடம் இருக்கிறது, அதை வாங்கிட்டு வர்றேன், நீங்க பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருங்கள்’ என்று கூறிவிட்டு தப்பினேன். சைக்கிளில் நேரே ராதா வீட்டுக்கு போய், ‘ராதா வந்துட்டேன் பாருங்க’ என்றேன். அதன்பிறகு அப்பாவை பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் தான் பார்க்க முடிந்தது.
நக்சலைட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் எப்படி இருந்தது?
ராதா வீட்டிலிருந்து பெருமண்ணையூர் கிராமத்திற்குச் சென்று தோழர் மாணிக்கத்தை சந்தித்தேன். உடனடியாக வெண்மணி செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஊரிலுள்ள ஐந்தாறு இளைஞர்களைத் தயார் செய்து வெண்மணிக்கு அழைத்துச் சென்றேன். அதற்குள் நான் வயல்வேலைகளை கற்றுக் கொண்டேன். கிராம மக்களுடன் பழகுவதற்கு அது மிகவும் முக்கியமானது. வெண்மணி கொலைக்குக் காரணமான கோபாலகிருஷ்ண நாயுடுவின் வயலில் வேலை செய்தேன்.
ராமைய்யாவின் குடும்பத்தினரையும் சந்தித்தேன். இயக்கத் தலைமையும் எனக்கு ஆதரவாக இருந்தது. உங்களால் முடிந்தால் கோபாலகிருஷ்ணனை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். கீழ வெண்மணியில் இருந்து திரும்பி மாணிக்கத்தைச் சந்தித்து அவரிடம் நான் கீழவெண்மணிக்கு சென்று வந்த விவரத்தைக் கூறினேன். அவர் சுவாரசியமில்லாமல் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசியதில், அவர் அழித்தொழிப்பு தயாராக இல்லை என்பது புரிந்தது.
அதோடு, மாணிக்கம் ஊரிலுள்ள பெண்களிடம் ‘இவன் உங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் தீட்டுகிறான்’ என்று செய்தி பரப்பி விட்டார். என்னைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டவர்கள் என்னைக் கண்டதும் ஒதுங்கிப்போக ஆரம்பித்து விட்டார்கள். இவரை மீறி யாரும் வரப்போவதில்லை என்பது தெரிந்ததும் அவரது மகனை அழித்தொழிப்புக்குத் தயார் செய்தேன். இதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. கோபாலகிருஷ்ணனன வேறொரு குழு அழித்தொழித்தது.
கீழவெண்மணி கோபாலகிருஷ்ணனை கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே?
இல்லை. எம்.எல்.கட்சியை சேர்ந்தவர்கள் தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் ஒருபக்கம் இருப்பவர்கள் கம்யூனிஸ்டு கட்சிகளாகவும், எதிர்பக்கம் இருப்பவர்கள் திராவிடர் கழகத்தினராகவும்தான் பெரும்பாலும் இருப்பார்கள். இரண்டு அமைப்புகளுக்குமே அங்கு பெயர் பறையன் கட்சி என்பது தான்.
திராவிடர் கழகத்தினரும் இதே போன்று அழித்தொழிப்பு வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். திராவிட விவசாயத் தொழிலாளர் அமைப்பும் அந்த நேரத்தில் உதயமானது. அப்போது நாகைக்கு வந்த பெரியாரிடம் இதைப் பற்றி செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அவர் இதுபோன்ற காலித்தனங்களை நான் அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதனால் திராவிடர் கழகத்தில் இருந்து பல தோழர்கள் வெளியேறி எம்.எல்.கட்சியில் இணைந்தார்கள். தோழர் ஏ.ஜி.கேவும் 67 வரை திராவிடக் கட்சியில் இருந்தவர் தான்.
(தோழர் தியாகுவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள், சிறை வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான உரையாடல் அடுத்த பகுதியில்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|