35 ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க், நியூ செர்சி, ஹாரிஸ்பர்க், டெலவர் பகுதித் தமிழ்ச்சங்கம் ஆகிய சங்கங்களுடன் இலங்கைத் தமிழ்ச்சங்கமும் இணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைத் துவங்கினர். துவங்கிய காலத்திலிருந்து தமிழீழத்தில் பேரவையின் நிகழ்வொன்றை நடத்த வேண்டுமென்பது பலரது கனவு. 2009-ம் ஆண்டு தமிழினப் படுகொலைக்கு பின்பாவது ஒரு விழா நடத்த வேண்டும் என்று ஏங்கியவர்களில் நானும் ஒருவன். 2006-2008 காலங்களில் நான் தலைமைப் பணியை பொறுப்பேற்ற நாள் முதல் நான் கண்ட கனவு 2024 சனவரி 19-ம் நாள் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் சிறப்பு மிக்க கைலாசபதி அரங்கத்தில் நிறைவேறியது.

போருக்குப்பின் 15 ஆண்டுகள் ஏதும் செய்ய இயலவில்லை என்பது என் போன்றோர் அனைவரின் நெஞ்சத்தையும் உறுத்திவந்தது உண்மைதான். இப்போது, முனைவர் பாலா சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் முதன் முறையாக பேரவையின் தொழில் முனைவோர் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. பேரவையுடன் யாழ் IT Hub மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்தது மேலும் சிறப்பு. யாழ் பல்கலையின் 50-வது ஆண்டு இது. 50 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை விடாமல் தொடர்ந்து மாணவர்களுக்கு அருந்தொண்டாற்றி வருகிறது இப்பல்கலைக்கழகம். பெருமை வாய்ந்த இப்பல்கலையுடன் இணைந்து இவ்விழாவை நடத்தியது பேரவையின் பல சாதனைகளில் ஒரு பொன்மகுடம். இதற்கு நாம் பேரவையின் செயற்குழு, FiTEN குழு, யாழ் IT Hub, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினரை நெஞ்சார வாழ்த்தி, பாராட்டி நன்றி நவில்வது நம் தலையாய கடமை. பேரவையின் FiTEN 3-வது தொழில் முனைவோர் மாநாடு இது.FiTEN yarl summit 2024இம்மாநாடு போரினாலும் அதற்குபின்பும் சொல்லொண்ணா துன்பம் அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களின் மனதிற்கு ஒத்தடம் கொடுத்து, அவர்களின் வலிக்கு மருந்தளித்து, நம்பிக்கையையும், ஊக்கத்தினையும் தந்தது என்பது மிகையல்ல, உண்மை. அமெரிக்கா, கனடா, இலண்டன், தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து தமிழர்கள் பலர் வந்து சிறப்பு செய்தது மட்டுமல்லாமல் தமிழ் மண்ணிற்காக தம் இன்னுயிரையும் அர்ப்பணித்த மாவீரர்களுக்கும், அங்கு அடக்குமுறைக்குள் வாழும் மக்களுக்கும் இம்மாநாடு நல்லதொரு நம்பிக்கையைத் தந்துள்ளது என்று மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கூறியது மனதை நெகிழச் செய்தது.

நாதசுரம், தவில் இசையுடன், குத்துவிளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் இம்மாநாட்டைத் துவக்கி வைத்து தலைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள் உரையாற்றியபோது, இன்றைய பேரவைக் கூட்டம் ஒரு நிகழ்வு மட்டுமல்ல; இது தமிழர் ஒருமைப்பாட்டின் கொண்டாட்டம் - மனங்களையும் இதயங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் நமது அன்புக்குரிய தமிழ்ச் சமூகத்தின், குறிப்பாக வடக்கு- கிழக்கு பிராந்தியத்தின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும் சீரிய முயற்சி" என்று கூறி அனைவரது எண்ணங்களையும் பிரதிபலித்தார். தொடர்ந்து முன்னாள் தலைவர் திரு. க. தில்லைக்குமரன் ஆகிய நான் பேரவையின் ஈழத்தமிழர்களுடனான உறவை குறித்து விரிவாக உரையாற்றுகையில் ஈழத்தமிழர்களுக்கும், ஈழச்சிக்கலுக்கும் பேரவை 2009 முதல் ‘உலகத் தமிழர் நேரம்’ நிகழ்ச்சியின் மூலம் செய்து வரும் பணிகளைச் சுட்டிக்காட்டினேன்.

மாநாட்டின் சிறப்பு விருந்தினராக திரு. ராஜ் ராஜ்ரட்ணம் அவர்கள் பங்கேற்று உணர்ச்சிமிக்க உரையாற்றியது இம்மாநாட்டின் சிறப்பு. அவர் பேசுகையில் விவசாயிகளுக்கு நிதியளித்து அவர்களுக்கு உதவுவதாகவும், அரிசி அரைக்கும் தொழிற்சாலை அமைத்து விவசாயிகளுக்கு அதிக இலாபம் ஈட்ட வழி வகுக்கவுள்ளதாகவும் கூறினார். திரு. ராஜ்ரட்ணம் அவர்களின் ‘சமனற்ற நீதி’ என்கிற புத்தக வெளியீடு மறுநாள் மற்றொரு விழாவில் நடைபெற்றது. மாநாட்டில் திரு. ராஜ் பேசும் போது அவரின் தமிழுணர்வு நன்கு தெரிந்தது. ஈழத்திற்குப் பல உதவிகளை அவர் செய்து வருகிறார், குறிப்பாக விவசாயத்துறையில் அவர் பல முன்னேற்பாடுகளை செய்யப் போவதாகக் கூறியது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து யாழ் பல்கலையின் துணைவேந்தர் சிறீசற்குணராஜா தமிழரின் அறிவுத்திறனையும், வாணிகத்திறமையையும், கடலோடும் வன்மையையும் விளக்கியது அனைவருக்கும் உத்வேகத்தை கொடுத்தது. தொடர்ந்து பல உரையாடல்கள், உரைகள், பட்டறைகளும் நடந்தது.

அறிஞர் கைலாசபதி உள்ளரங்கம் முழுதும் மாணவர்கள் மற்றும் தொழில் முனைவோர், பேராசிரியர்கள் போன்றோரினால் நிரம்பி வழிந்தது. University Business Linkage (UBL) அமைப்பை தலைமையேற்றி நடாத்திவரும் பேராசிரியர் ஈசுவர மோகன் அவர்கள் வடக்கின் நிலையை விரிவாக எடுத்துக்கூறி என்னென்ன தேவை என்பது குறித்து பேசினார். அவருடன் பேரவை இணைந்து பெரிய உதவிகளை செய்வது அம்மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பது உண்மை. யாழ் மண்ணில் Fiten- Yarl நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு அரும்பாடுபட்டு சாத்தியமாக்கிய ஷான் நந்தகுமார், பார்த்திபன் பரஞ்சோதி, சயந்தன் போன்றோர் என் நெஞ்சில் உயர்ந்து நிற்கின்றனர்.

பேரவைத் தலைவர் பாலா சுவாமிநாதன், பெருமதிப்பிற்குரிய ராஜ் ராஜரட்ணம், முன்னாள் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, தில்லைக்குமரனாகிய நான் ஆகியோர் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு எத்தடை வரினும் தளராது செய்துமுடிக்க திடசங்கற்பம் பூண்டு நிற்கிறோம்.

இந்த மாநாட்டின் நோக்கங்கள்

- தமிழ் நாட்டிற்கும் ஈழத்திற்குமுள்ள பண்பாட்டு, மொழித் தொடர்பு நாம் நன்கறிவோம். பேரவை 35 ஆண்டுகளாக உலகெங்கும் வாழும் தமிழர்களை நாடு, மதம், சாதி, அரசியல் சார்பற்று இணைத்து வந்துள்ளது. ஈழத்தமிழர்கள் தமக்கு உடை எடுப்பது சென்னையிலும், காஞ்சியிலும்தான். ஈழம் சைவம் வளர்த்த மண், அம்மக்கள் போகாத தமிழ்நாட்டு கோவில்களே இல்லை. பேரவை ஈழத்தமிழர்களை பண்பாடு, மொழி ரீதியாக அரவணைத்து வந்தாலும், பொருளாதார ரீதியாக ஈழமும் தமிழ்நாடும் சற்று விலகியே இருந்துவருகின்றன. தாய்த்தமிழ்நாட்டையும், தமிழீழத்தையும் தொழில் முறையாக இணைப்பது இம்மாநாட்டின் முதன்மைக் குறிக்கோள். அதை இந்த மாநாடு சாதித்துள்ளது என்றே கூறவேண்டும். தமிழ்நாட்டு தொழிலதிபர்கள் ஈழத்தில் தமது அலுவலகத்தின் கிளைகளைத் துவங்கி ஈழத்தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது எப்படி என்று இம்மாநாடு விவாதித்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்த சில தொழிலதிபர்கள் அது குறித்து விரிவாக பேசினர். நாம் அவ்விவாதத்தை தொடர வேண்டும்.

- உணவுப் பொருட்கள் பதப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணியிலுள்ளது. ஈழத்து உணவு வகைகள் தமிழ்நாட்டில் பலருக்கு தெரிவதில்லை. மேலும் தமிழ்நாட்டு உணவு உற்பத்தி நிபுணர்கள் ஈழத்தில் அந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஒரு பட்டறை நடந்தது.

இம்மாநாட்டின் மற்றொரு சிறப்பு, முனைவர் பாலா சுவாமிநாதன், முன்னாள் தலைவர் திரு. கால்டுவெல் வேள்நம்பி, சென்னையில் வாழும் தொழிலதிபர் திரு. ரவி சுந்தரம் ஆகிய மூவரும் இணைந்து 300,000 வெள்ளிகள் வடகிழக்கு பகுதிகளில் அமெரிக்கத் தமிழர் நிதி (American Tamil Fund) அமைப்பின் மூலமாக சிறுதொழில்களில் முதலீடு செய்வோம் என்று அறிவித்தது மாநாட்டிற்கு வந்த அனைவரையும் நெகிழச்செய்தது. இந்த பெரும் முயற்சியை முன்னெடுக்கும் திரு. கால்டுவெல் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுவது நமது கடமை. அன்றிரவு நடந்த இரவு உணவு விருந்தில் இம்முயற்சியை திரு. கால்டுவெல்‌ மற்றும் முனைவர் பாலா வந்திருந்த சிலரிடம் விவரித்துக் கூறியவுடன், ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஈழத்தமிழ்த் தொழிலதிபர் ஒருவர் உடனேயே சிறிதும் தயக்கமின்றி நானும் அம்முயற்சியில் பங்கேற்பேன் என்று தானும் 300,000 வெள்ளிகள் நிதியளிப்பதாக உறுதியளித்தது அனைவரையும் வியப்பிலும், மகிழ்ச்சிக் கடலிலும் ஆழ்த்தியது. நல்லவர்கள் உள்ளவரை நல்லது தொடர்ந்து நடந்தேறும் என்பது வட அமெரிக்காவைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அந்நல்லுள்ளத்தின் மூலம் தமிழர்கள் அனைவர்க்கும் ஓர் எடுத்துக்காட்டு. இந்த நிதி அமெரிக்கத் தமிழர் நிதி (American Tamil Fund) மூலம் முதலீடு செய்யப்படும்.

வெளிநாடுகளில் வாழும் நமக்கு ஈழ மண்ணில் என்ன நடக்கிறது என்று தெளிவாகத் தெரிவதில்லை. 3 நாட்கள் இங்கு நின்று அம்மக்களுடன் அளவளாவி அன்னார் படும் பாட்டை அவர்களே சொல்லும்போதுதான் 15 ஆண்டுகள் வீணடித்து விட்டோமே என்று நெஞ்சை நெருடியது. நாங்கள் பலருடன் கலந்துரையாடினோம். அர்ப்பணிப்பிற்கு இலக்கணம் எழுதிய கேணல் திலீபன் நினைவிடத்தைக் காணும் போது இம்மக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை நமக்கு உணர்த்தியது.

தந்தை செல்வா அவர்களின் நினைவிடம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், நல்லூர் கந்தசாமி ஆலயம் என்று பல இடங்களுக்குச் சென்றது அனைவரின் மனங்களை நிறைவுப்படுத்தியது. முன்னாள் பெண் போராளிகளை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தபோது அவர்களது தற்போதைய வாழ்க்கையை பற்றி கேட்டறிந்தோம். அவர்களின் சோகத்தை எழுத வார்த்தையில்லை.நெஞ்சு கனத்துப் போனது. தமிழ் மண்ணிற்காக, தமிழீழ மக்களுக்காக, தேனினும் இனிய தமிழ் மொழிக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த அவர்களின் அவலக்குரல் தொடர்ந்து என் செவியில் ஒலித்துக்கொண்டுள்ளது. அவர்களுக்கு ஏதேனும் நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும். சோகம் என்னவென்றால் எந்த மக்களுக்காக அவர்கள் தம் வாழ்வை அர்ப்பணித்தார்களோ அம்மக்கள் இந்த போராளிகளை சரிவர புரிந்துக் கொள்ளாமல் ஒதுக்கி வருவது நமக்கு பேரதிர்ச்சியை தந்தது. அவர்களுக்கு என்னால் முடிந்த ஆறுதல்களைக் கூறி அவர்களது வாழ்வாதாரத்தையும், பெருமையையும் காப்பதற்கு  உறுதிபூண்டு விடைபெற்றேன். அவர்களை விட்டு அகன்று நெடுந்தூரம் வந்துவிட்டாலும், அவர்களது வலியின் பாரத்தை இப்பொழுதும் சுமந்து கொண்டிருக்கிறேன்

எல்லாவற்றிற்கும் மேல் அடுத்த நாள் நான் நண்பர்கள் சிலருடன் நிராயுதபாணியான 1,50,000 தமிழர்கள் அநீயான முறையில் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால், நந்திகடல் பகுதிக்கு சென்று விதையாகி்யிருக்கும் அம்மக்களுக்கு வீரவணக்கம் செய்ததுதான் இந்த பயணத்தின் மிக முக்கிய விடயம். மாவீரர்கள், அப்பாவி மக்களின் உதிரம் சிந்திய அந்த மண்ணில் காலடி வைத்தபோது உடல் சிலிர்த்தது, கண்கள் பனித்தது. அம்மக்களின் அந்த இறுதி அலறல்கள் காதைப் பிளந்தது. முல்லைத்தீவு கடலும் அமைதி கொள்ள முடியாமல் அலையலையாய் ஆர்ப்பரித்தது. அங்கு தம் இன்னுயிரை ஈந்த தமிழர்களின் நினைவை நெஞ்சிலேந்தி இம்மக்களுக்கு நாம் நம் வாழ்வில் ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற உறுதியுடன் யாழ் நகரிலிருந்து பிரியா விடைபெற்றோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அருமையாக நடத்திய FiTEN-Yazh குழுவினருக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இனிவரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை ஈழத்திலும், மற்ற நாடுகளிலும் பேரவை நடத்தும் என்கிற நம்பிக்கை நமக்கு உள்ளது.

வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்.

- க.தில்லைக்குமரன், ஆலோசகர் - FiTEN யாழ்ப்பாணம், பேரவைத் தலைவர், 2006-2008

பேரவையின் தமிழ் விழா (2015) ஒருங்கிணைப்பாளர், சான் ஓசே, கலிபோர்னியா

Pin It