prapanchan invitation

எழுத்தாளர்களைக் கொண்டாடுவது என்பது பண்பாட்டைப் போற்றுவதாகும். தமிழுக்குப் பெரும்பங்களிப்பு செய்த பிரஞ்சனுக்கு மரியாதைகள் செய்வது, அவரது படைப்புகளைப் பல்லாயிரம் பேரிடம் கொண்டு சேர்ப்பது, அவரது வாழ்வை ஆவணப்படுத்துவது தமிழ் சமூகம் தானே முன்வந்து செய்ய வேண்டிய கடமையாகும்.

            திரு.பிரபஞ்சன்  அவர்கள், தமிழ் மொழியில், மானுடம் மேலோங்கிய பேரன்பு கமழும் சுமார் 200 சிறுகதைகளைக் கடந்து இப்போதும் எழுதிக்கொண்டிருப்பவர்.  வரலாறு சார்ந்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்கிற புதிய கதவைத் திறந்து வைத்தவை அவருடைய மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய நாவல்கள். ஆண் பெண் உறவை, அதன் மேன்மையையும் சிக்கலையும் இருபதுக்கும் மேலான நாவல்களில் எழுதியவர். அரசியல், கலை, பண்பாட்டுத் துறை சார்ந்த 300-க்கும் மேலான கட்டுரைகள் மற்றும் இரண்டு நாடகங்களும் அவர் படைப்பின் அகலத்தையும் ஆழத்தையும் உணர்த்தும். 1947, ஏப்ரல் 27-ஆம் நாள் பிறந்த பிரபஞ்சன் 1961- ஆம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 2017- ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55-ம் ஆண்டைக் கடந்து தொடர்கிறது. பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன். பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

            எழுத்தாளர்கள், கலைஞர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும்.  ஒரு இனத்தின் பண்பாட்டுச் செழுமையைக் காப்பாற்றியும் வளர்த்தும் செழிப்படையச் செய்பவர்கள் அவர்களே ஆவார்கள். அந்தவகையில் பிரபஞ்சன் எழுத்துப் பணியைப் பாராட்ட அவரின் நண்பர்கள், வாசகர்கள் இணைந்து ‘எழுத்துலகில் பிரபஞ்சன்-55’ என்ற ஒரு நாள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இப்பாராட்டு விழா இம்மாதம் 29.04.2017 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியிலிருந்து மாலை 9:00 மணி வரை, சென்னை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யக் கலாச்சார மையத்தில் (சோழா ஓட்டல் பின்புறம்) நடைபெற இருக்கின்றன.

விழா மூன்று பரப்பில் நடைபெறுகிறது. காலை, முதல்  அமர்வாக பிரபஞ்சன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கம்.  பிற்பகல் பிரபஞ்சனின் இதிகாசப் பாத்திரங்கள், அவரின் படைப்புகளில் பெண்கள் போன்ற கருத்தரங்கோடு, பிரபஞ்சனின் சிறுகதையான “அப்பாவின் வேஷ்டி”  நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. அவரின் “கருணையினால்தான்”  சிறுகதையை மையமாக வைத்து இயக்குநர் வம்சி இயக்கிய “வலி” குறும்படம் திரையிடல், வாசகர்களுடன் கலந்துரையாடல் என  இரண்டாம் அமர்வு முடிகிறது.

மூன்றாம் அமர்வாக 2017- ஏப்ரல் வரைக்குமான பிரபஞ்சன் எழுதிய சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு மூன்று தொகுதிகள் மற்றும் “பிரபஞ்சன் இராமாயணம்” நூல் வெளியீடு.  வாசர்கள் சார்பாக ரூ.10-லட்சம் நிதியளிப்பு நிகழ்ச்சி, பராட்டுவிழா உரைகளுடன் மாலை நிகழ்சிகள் முடிவுபெறுகிறது.

நிகழ்வில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய தூதர் திரு.செர்கேய்.எல்.கோத்தேவ்,  புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, ஆர்.நல்லக்கண்ணு, திரைக்கலைஞர் சிவகுமார்,  இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் ராம் , எழுத்தாளர்கள் பாரதி கிருஷ்ணகுமார், திலகவதி, இமயம், தமையந்தி, ச.தமிழ்செல்வன், அழகியபெரியவன்,  டி.ஐ.அரவிந்தன், எஸ்.கே.பி.கருணா, பரமேஷ்வரி, கே.வி.ஷைலஜா, கே.வி.ஜெயஸ்ரீ, சந்திரா, முருகேசப் பாண்டியன், மனுஷி,  பேராசிரியர் ராமகுருநாதன்  ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

விழாவை  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் பவாசெல்லதுரை,  பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

தமிழின் மகத்தான எழுத்தாளரை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம்  வாருங்கள். எழுத்துலகில் பிரபஞ்சன் 55 நிகழ்விற்காக உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.