சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு அஞ்சி, தாய்த் தமிழகம் நோக்கி ஏதிலியராய் வரும் தமிழீழ மக்கள், தமிழ்நாட்டில் துன்பங்களுக்கு ஆளாகும் கொடுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த 06.03.2016 அன்று மதுரை மாவட்டம், மதுரை - திருமங்கலம் அருகிலுள்ள உச்சப்பட்டி தமிழீழ ஏதிலியர் முகாமில், அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த சென்றபோது, இரவீந்திரன் என்ற ஏதிலி தனது மகன் மதுரை அரசு மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் தகவலைக் கூறியும் கூட, அதை ஏற்க மறுத்த வருவாய்த்துறை அதிகாரி துரைப்பாண்டி என்பவரின் வன் பேச்சால் மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்டார்.

தம் சாவுக்குப் பிறகாவது, தமிழீழ ஏதிலியரை மனிதராக நடத்துங்கள் என இரவீந்திரன் இறுதியாகச் சொல்லிச் சென்றது, தமிழ்நாட்டில் தமிழீழ ஏதிலிகள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்த வேதனையின் வெளிப்பாடாக அமைந்தது.

supendran refugeeஇந்நிலையில், கடந்த 23.02.2016 அன்று, கும்மிடிப்பூண்டி தமிழீழ ஏதிலியர் முகாமைச் சேர்ந்த சுபேந்திரன் என்ற கூலி வேலைக்குச் செல்லும் ஏதிலியை, விசாரணை என்ற பெயரில் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்கள் கண்மூடித்தனமாக கொலைவெறியுடன் தாக்கி, அவரது இரண்டு கால்களையும் உடைத்து - நடக்க முடியாமல் செய்துள்ளனர். இனி அவர் நடக்க முடியுமா என்பதும் ஐயத்திற்கிடமாக உள்ளது.

கால்கள் உடைந்து நொறுங்கியதால், சுபேந்திரனின் அற்ப வருமானமும் தடைபட்டுப் போனதால், அவரது மனைவி தர்சினியும் பள்ளி செல்லும் இரண்டு பிள்ளைகளும் வறுமையில் வாடி வருகின்றனர். மேலும், அம்முகாமின் தலைவர் கண்ணன் மீதும் கொடுந்தாக்குதல் நடத்தப்பட்டு, அவரை காவல்நிலையத்தில் சட்டியுடன் உட்கார வைத்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடும்படியும், பொய் வழக்குப் போடுவோம், அரசை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரனையும் அவர் துணைவியாரையும் மிரட்டி வருகின்றனர்.  சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுபேந்திரன் மாடியிலிருந்து குதித்ததால் கால்கள் உடைந்ததாகக் கதைகட்ட காவல்துறையும் உளவுத்துறையும் மெனக்கெடுகின்றன.

தொடர்ந்து அம்முகாமில் பலரும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் போராடி அவர்களைப் பிணை எடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. இதை எதிர்க்க யாரும் எண்ணியும் பார்க்க முடியாத அளவிற்கு, காவல்துறையினரால் மிரட்டப்படுகின்றனர். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு இடமாற்றம் செய்துவிடுவோம், குறிப்பாக சிறப்பு முகாமில் அடைத்துவிடுவோம் என்றெல்லாம் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மிரட்டுவது, அம்மக்களை அச்சத்திலேயே வாழ வைக்கிறது.

நேற்று(17.03.2016) காலை 11 மணியளவில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிற்கு, திரு. சுபேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். இரண்டு கால்களும் உடைபட்டு நிற்கவோ – நடக்கவோ முடியாத திரு. சுபேந்திரனை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் வாகனத்திலிருந்து செய்தியாளர் அரங்கத்திற்குத் தூக்கி வந்தனர். ஊடகத்தினர் முன்னிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அவர்கள் கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தமிழக மக்கள் முன்னணி வழக்கறிஞர் கோ. பாவேந்தன்,திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் தி.க. மண்டலச் செயலாளர் தோழர் கரு. அண்ணாமலை, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், தமிழர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், தோழர் இரா. இளங்குமரன், சென்னை தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பேரியக்க தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், தோழர்கள் பாலசுப்பிரமணி, வடிவேலன், சீவானந்தம் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

refugee press meet

செய்தியாளர் சந்திப்பில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்பட்டன:

  • கும்மிடிப்பூண்டி முகாமில் இருக்கும் தமிழீழ ஏதிலியர் சுபேந்திரன் அவர்களைத் தாக்கிக் கால்களை உடைத்து, முகாமின் தலைவர் கண்ணன் அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் டெல்லிபாபுவைக் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்,
  • மதுரை அருகே உச்சப்பட்டி முகாமின் தமிழீழ ஏதிலி இரவீந்திரனைத் தற்கொலைக்குத் தூண்டிய வருவாய்த் துறை அதிகாரி மீது குற்ற வழக்குப் பதிந்து கைது செய் வேண்டும்,
  • தமிழீழ ஏதிலியரை நடைமுறையில் குற்றப்பரம்பரையாக நடத்துவதை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் கைவிட வேண்டும், அவர்களின் மனித உரிமைகளுக்கும் கண்ணியத்துத்துக்கும் தக்க மதிப்பளித்து நடத்த வேண்டும்,
  • தமிழ்நாட்டு தமிழீழ ஏதிலியர் முகாம்கள் மீதான வருவாய்த் துறை, உளவுத் துறை ‘கியூ’ பிரிவுக் காவல்துறைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டும்,
  • தமிழீழ ஏதிலியருக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்,
  • இந்திய அரசு திபெத் உள்ளிட்ட பிறநாட்டு ஏதிலியரை ஒப்புநோக்கின் தமிழீழ ஏதிலிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதைக் கைவிட வேண்டும்,
  • தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறை முகாம்களாக இயங்கி வரும் தமிழீழ ஏதிலியர்  சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும்,
  • ஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த அமைப்பையும் முகாம்களுக்குள் சென்று தமிழீழ ஏதிலிகளுக்கு உதவக் கூடாது என்று இப்போது   நடைமுறையிலிருக்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும், தமிழீழ ஏதிலியருக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதற்குள்ள தடையை நீக்க வேண்டும்,
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை, தன்னுரிமை, கருத்துரிமை, அமைப்பாகத் திரளும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் ஏதிலியருக்கும் உறுதி செய்ய வேண்டும்,
  • கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழீழ ஏதிலியருக்கு உரிய பங்கு கிடைக்கச் செய்ய வேண்டும்,
  • ஏதிலியர் தொடர்பான சர்வதேச பொதுப்புரிதல் ஒப்பந்தம்-1951 (International Convention on the Status of Refugees)மற்றும், 1967 ஆம் ஆண்டின் அகதிகள் நிலை குறித்த செயல்முறை (Protocol on the Status of Refugees- 1967)ஆகியவற்றில், இந்திய அரசு கையெழுத்திட வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, காவல்துறை தலைமை இயக்குநரிடம்(டி.ஜி.பி.), கும்மிடிப்பூண்டி காவல் நிலைய ஆய்வாளர் தில்லிபாபு உள்ளிட்டோர் மீது, திரு. சுபேந்திரனின் துணைவியார் தர்சினி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஐ.ஜி.யிடம் இது குறித்து விசாரிக்கச் சொல்வதாக காவல்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

Pin It