கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அராஜகம் எல்லை மீறிப் போயுள்ளன. சென்ற 15.03.2016 அன்று சுபேந்திரன் என்ற ஈழத் தமிழர் சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையிலான காவலர்களால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரண்டு கால்களும் உடைக்கப்பட்டுள்ளன.

இன்று வரை அவரால் கால்களை இயக்க முடியவில்லை. தொடர்ந்தும் அந்தக் கால்கள் இயங்குமா எனபது சந்தேகமே. அந்தக் குடும்பம் அன்றாட வாழ்க்கைக்கு வழியின்றித் தவிக்கிறது. இந்நிலையில் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமிடும்படியும், பொய் வழக்குப் போடுவோம், அரசை எதிர்த்து உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் உளவுத் துறையும் காவல்துறையும் சுபேந்திரனையும் அவர் துணைவியாரையும் மிரட்டி வருகின்றனர்.

சுற்றியும் காவலர்கள் சூழ்ந்து அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர். சுபேந்திரன் மாடியிலிருந்து குதித்ததால் கால்கள் உடைந்ததாகக் கதைகட்ட காவல்துறையும் உளவுத்துறையும் மெனக்கெடுகின்றன.

முகாமின் தலைவர் கண்ணன் அவர்களையும் அதே காவலர்கள் கண்மூடித்தனமாக அடித்து ஜட்டியோடு உட்கார வைத்துள்ளனர். அம்முகாமில் பலரும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் ஆதரவாளர்கள் போராடி அவர்களைப் பிணை எடுப்பதும் தொடர்கதையாகி உள்ளது. இடமாற்றம் செய்துவிடுவோம் குறிப்பாக சிறப்பு முகாமில் அடைத்துவிடுவோம் எனபது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் பொதுவான மிரட்டலாகும்.

இதுதான் ஈழத் தமிழர்களை உண்மையிலேயே அச்சம் மிகுந்த சூழலில் வாழவைத்து விடுகிறது. இலங்கைத் தமிழர் முகாம்களில் முழுமையான சனநாயகம் இல்லை. இந்நிலை தொடருமானால் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதாக அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைத்து குரல் கொடுத்துள்ளன. 17.3.2016 அன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாதிக்கப்பட்ட சுபேந்திரன், முகாம்தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கினர்.

சந்திப்பின்போது கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, த.பெ.தி.க. மண்டலச் செயலாளர் அண்ணாமலை, இளந்தமிழர் இயக்கத் தோழர் செந்தில், வழக்குரைஞர் பாவேந்தன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உடனிருந்தனர்.