கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைந்து நடத்தும்

எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரித்து ஆர்ப்பாட்டம்

நாள்: 20 ஜனவரி 2015; காலை 10 மணி; இடம்: வள்ளுவர் கோட்டம் அருகில்

கருத்துரிமையைப் பாதுகாப்போம்! பெருமாள் முருகனுக்குத் துணை நிற்போம்!

தொடங்கி வைப்பவர்: தோழர் ஆர்.நல்லக்கண்ணு

பங்கேற்கும் தோழர்கள்:

பழ நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன், தொல். திருமாவளவன், விடுதலை ராஜேந்திரன், தியாகு, மணியரசன், பீமராவ் எம்.எல்.ஏ, அ.பாக்கியம், பியூசிஎல் சுரேஷ், திருமுருகன் காந்தி, ஆர்.ஆர்.சீனிவாசன், இளந்தமிழகம் சையது, எவிடென்ஸ் கதிர், நித்யானந்த் ஜெயராமன்

ஹிந்து ராம், வீ.அரசு, அ.மார்க்ஸ், வ.கீதா, ஓவியர் மருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பத்திரிக்கையாளர் ஞாநி, எடிட்டர் பி. லெனின், நக்கீரன் கோபால், குமரேசன், வெளி ரங்கராஜன், ப்ரசன்னா ராமசாமி, டி.எம்.கிருஷ்ணா, இயக்குநர் அம்ஷன்குமார், ஓவியர் சந்துரு, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், சிகரம் ச செந்தில்நாதன், ஃப்ரென்ட்லைன் ஆர்.விஜயசங்கர், கவிஞர் பரிணாமன், பேராசிரியர் லட்சுமணன், நாடகக்கலைஞர் பிரளயன், அலைகள் சிவம், பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன், பேரா.ஆ. இரா.வெங்கடாசலபதி, கவிஞர் குட்டி ரேவதி, கவிஞர் சல்மா, திரைக்கலைஞர் ரோகிணி, லிவிங் ஸ்மைல் வித்யா, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் ராம், எழுத்தாளர் சுபகுணராஜன் மற்றும் பல முக்கிய எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், கலைஞர்கள் கலந்துகொள்வர்

ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் எனும் நாவலுக்கு எதிராக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதி இந்துத்துவ அமைப்புகளும் சாதிய அமைப்புகளும் இணைந்து நடத்திய பொய்ப்பிரச்சாரம், மிரட்டல், கட்டப்பஞ்சாயத்தின் விளைவாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் அனைத்துப் புத்தகங்களையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன், இனி எழுதவே மாட்டேன், எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று அறிவித்திருக்கிறார்.

ஒரு எழுத்தாளனின் கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை, அவரை மிரட்டிய மதவெறி சாதிய அமைப்புகளை, அதற்கு துணைபோன காவல்துறையை, மாவட்டநிர்வாகத்தை தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் பதிப்பகத்தினரும் வாசகர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெருமாள் முருகன்:

எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கல்லூரி பேராசிரியர். நாமக்கல் பகுதியில் வசிப்பவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதியவர். ஏறுவெயில், நிழல்முற்றம், கூளமாதாரி, கங்கணம், பூக்குழி ஆகிய நாவல்களும் திருச்செங்கோடு, நீர்விளையாட்டு, பீக்கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் நிகழ் உறவு, கோமுகி நதிக்கரைக் கூழாங்கல், நீர் மிதக்கும் கண்கள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் பெருமாள் முருகனின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும். கொங்கு சிறுகதைகள், தலித் பற்றிய கொங்கு சிறுகதைகள் ஆகிய தொகுப்புகளையும் கொங்கு நாட்டு சொல்லகராதியையும் உருவாக்கியுள்ளார். அவரது படைப்புகள் ‘Current Show’ (நிழல் முற்றம்) ‘Seasons of the Palm’ (கூளமாதாரி) “One Part Woman” (மாதொருபாகன்) என்கிற தலைப்புகளில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு மிகுந்த கவனத்தையும் பெற்றவை.

மாதொருபாகன்:

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் எனும் நாவல் 2010ல் வெளியானது. திருச்செங்கோடு பகுதியில் 1930களில் வசித்த குழந்தையில்லாத ஒரு அன்பான தம்பதி எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புறக்கணிப்புகள், மன உளச்சல் ஆகியன பற்றியும் அந்த சிக்கலை பலர் போன்று அவர்களும் எப்படி திருவிழா எனும் ஒரு பண்பாட்டு வடிவத்தின் வழியாக எதிர்கொள்கின்றனர் என்பது பற்றியும் ஒரு இனவரைவியல் நாவலாக பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். இந்த நாவல் ஒரு பெண்ணியப் பிரதி என்றும், சாதி எதிர்ப்புப் பிரதி என்றும், ஒழுக்கவியல், கற்பு போன்ற பெண்ணடிமைக்கூறுகளை கேள்விக்கு உள்ளாக்குகிறதென்றும், இந்த நிலப்பரப்பில் நிலவி வந்த பண்பாட்டுக்கூறுகளையே இது வட்டார மொழியில் வெளிப்படுத்துகிறதென்றும் விமர்சகர்கள் பாராட்டும் அதே வேளையில் இந்த நாவல் எங்களை அவமானப்படுத்துகிறது, எங்கள் பெண்களை அவமானப்படுத்துகிறது என்று திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கூக்குரல் எழுப்பி நாவலில் இரண்டு பக்கங்களை மட்டும் பிரதி எடுத்து நாள் ஒன்றுக்கு ஐயாயிரம் என ஊரெங்கும் விநியோகம் செய்து சாதிக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை திசை திருப்பி ஒரு எழுத்தாளனின் படைப்பு வாழ்க்கையை ஒழித்துக் கட்டிவிட்டனர்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும்:

பெருமாள் முருகனுக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரங்கள், மிரட்டல்கள், தொலைபேசி வசவுகளுக்குப் பிறகு நாமக்கல் மாவட்ட காவல்துறை சாதிய அமைப்புகளுக்கே துணை போனது. மிரட்டப்பட்ட எழுத்தாளர் ஊரை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். காவல்துறை அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது. கடும் மன உளச்சலுக்குள்ளான எழுத்தாளர் மாதொருபாகன் நாவலில் இருந்து திருச்செங்கோடு என்கிற பெயரை எடுத்துவிடுகிறேன் என்று சொன்னார். நாவலுக்காக வருந்துகிறேன் என்று சொன்னார். ஆனாலும் சாதிய அமைப்புகள் கடை அடைப்பு நடத்தி தமது எதிர்ப்பைத் தொடர்ந்தன. சில மாதங்களாக நடந்த இந்த இழுபறிக்குப் பிறகு 12 ஜனவரி 2015 அன்று நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நடத்திய அமைதிப்பேச்சுவார்த்தை எனும் கட்டப்பஞ்சாயத்தில் பெருமாள் முருகனை அச்சுறுத்தி, மிரட்டி, வற்புறுத்தி தன் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்கிறேன் என்று எழுதி வாங்கியுள்ளனர். விரக்தியின் எல்லைக்குப் போன பெருமாள் முருகன், நான் இனிமேல் எழுதப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

சட்டமீறல்:

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 19 ஒவ்வொரு குடிமகளுக்கும் குடிமகனுக்கும் தனது கருத்தை வெளிப்படுத்தும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. அவனது உரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பெருமாள் முருகன் விஷயத்தில் அவர் தன் வசிக்கும் ஊரை விட்டே காவல்துறையால் வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார். இதுவும் ஒரு விதிமீறலே. ஒரு குடிமகனுக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமையை நமது சட்டம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட எழுத்தாளனுக்கு பாதுகாப்புக் கொடுக்காது அவரை அச்சுறுத்தும் மிரட்டும் சாதிய மதவாத சக்திகளுக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் துணை போயிருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.

பெருமாள் முருகன் பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு கருத்துரிமைக்குப் புறம்பான அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைபெற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் ஒரு சார்பாக நடந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலரையும் சம்பத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்யவேண்டும்.

தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் சுதந்திரமாக இயங்கிட முடியும் என்ற சூழலை தமிழக அரசு உருவாக்கவேண்டும்.
 

 செந்தில் மள்ளர், ம.மு.கண்ணன். து.குணசேகரன் ஆகியோரின் உரிமைக்காகவும் போராடுவோம்!

2013ஆம் ஆண்டு செந்தில் மள்ளர் என்பவர் எழுதிய "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற நூலை தமிழக அரசு தடை செய்யததோடு அவரின் மீது தேச-துரோக சட்டத்தின்கீழ் (124-ஏ) வழக்கையும் பதிவு செய்தது. அது மட்டுமில்லாமல் இதே சட்டத்தின் கீழ் அவரது மாமனாரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. சாதிகளுக்கிடையே பகைமையை மூட்டி ஒற்றுமையை குலைக்கும் தன்மையுடைய நூல் என்பதால் அதை தடை செய்வதாக அரசு அறிவித்தது. நூலில் கூறப்பட்ட கருத்துகள் எவ்வாறாயினும் அவற்றை விவாதிக்க, மறுக்க, அவற்றுக்கு பதிலுரைக்க தேவையான ஜனநாயக சூழலை பாதுகாப்பதற்கு பதில் ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அரசு நடந்து கொண்டதை அச்சமயம் பல மனிதவுரிமை செயல்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டி கண்டித்தனர்.

சென்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தி இந்துவில் வெளியான செய்தியின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வேறு எழுத்தாளர்களின் நூல்களுக்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அறிய முடிகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் "கருவாட்டு இரத்தம்" என்ற நூலை எழுதிய ம.மு. கண்ணனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது, அவரும் ஊரிலிருந்து விரட்டியடிக்கப்படுள்ளார். சென்ற ஜூலை மாதம் இதே மாவட்டத்தைச் சேர்ந்த து. குணசேகரன் என்பவர் எழுதிய "ஊரார் வரைந்த ஓவியம்" என்ற நூலில் உண்மைக்கு புறம்பான செய்திகள் உள்ளதாகக் கொள்ளப்பட்டு அவர் குடும்பத்துடன் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு வருகிறது.

பெருமாள் முருகனுக்கு நேர்ந்தது குறித்தும் கருத்துரிமைக்கு ஆதரவாகவும் நாம் செயல்பட்டு வரும் இவ்வேளையில் மேற்கூறப்பட்ட இந்த நிகழ்வுகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எழுத்தாளர் எத்தகைய கருத்துகளை தெரிவித்தாலும், அவர் எந்த சமுதாய பின்னணியை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது கருத்துரிமையை பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையதும் நமது சட்டங்களை அமுல்படுத்தும் காவல், நீதித்துறைகளுடையதும் ஆகும்.

ஒருங்கிணைப்புக்குழு:

ப்ரேமா ரேவதி, கவின் மலர், இரா.தெ.முத்து, மயிலை பாலு, சாம்ராஜ், கலை மு மணிமுடி,

பரிசல் சிவ செந்தில்நாதன் & அமுதன் ஆர்.பி.

தொலைபேசி: 9841155371; 9442549411; 9382853646; 8695279353; 9444271479; 9444247949

இமெயில்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It