நான் உண்மையை சொல்வேன். கேள்வி கேட்பேன். எனக்கென்ன பயம் என்ற வசனங்கள் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடு.

சமீபமாக இந்த வசனங்களை யாரிடமும் இருந்து கேட்க முடியவில்லை. பத்திரிகைகள் கூட அடங்கிவிடுகிறது அதிகாரத்தின் முன்பு, நாம் ஏன் என்ற எண்ணம் பலருக்கு.

இதில் எழுத்தாளர்கள் படுகொலை வேறு. யாருக்கு தான் கருத்து சொல்ல தோன்றும். ஏன் எனக்கும் இந்த கசப்பான அனுபவம், அயோக்கியத்தில் களேபரத்திற்காக எனக்கு பல ஆர்.எஸ்.எஸ் நண்பர்களிடம் இருந்து கொஞ்சம் கண்மூடித்தனமான விமர்சனங்கள் வந்திருந்தது.

சொல்வதை அஞ்சாமல் சொல், எழுதுவதை அஞ்சாமல் எழுது என்றுபோய் சொல்வதை முதலாளிகளுக்கு ஆதரவாக சொல், எழுதுவதை அவர்களுக்கு சாதகமாக எழுது என மாறிவிட்டது. தகவல் என்பது ஆயிரம் அணுஉலைகளை விட ஆபத்தானது. தகவலை பரப்புபவை ஒரு அரசுக்கு சமம் ஒரு வேளை அனைவராலும் படிக்கப்பட்டால். அப்பேற்பட்ட தகவல் சொல்லும் அமைப்புகள் மீது பதிக்கப்படும் தடைகள் சிலகாலம் வேண்டுமானால் பாதுகாப்பு வழங்கலாம். ஆனால் அதிகமாக கட்டுப்படுத்தபடுபவை ஒரு நாள் நிச்சயம் அதிக பலத்துடன் கட்டுப்பாடுகளை மீறும். அதுபோல தகவல் நிறுவனங்கள் நினைத்தால் அரசை கூட கலைக்கலாம். யாரை வேண்டுமானாலும் கலங்கப்படுத்தலாம்.

கருத்து சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப்படுவதாகவே தோன்றுகிறது சில காலமாக. மோடி ஆட்சியமைத்த உடன் நாடெங்கும் உள்ள செய்திதாள்கள் மோடியின் சொல்பேச்சுகேட்டு செயல்படும் பொம்மை போல ஆகிவிட்டது. சுதந்திர இந்தியாவில் மாவோ கருத்துகளை பரப்ப உரிமையில்லை. இங்கு பகுத்தறிவுடன் மதங்களை பற்றி கேள்வி கேட்க உரிமையில்லை. அரசை குற்றவாளியாக்கும் எதையும் மக்களிடம் சொல்ல உரிமையில்லை, அண்டை நாடு பற்றிய குறைகளை சொல்லவும் உரிமையில்லை. நீதிமன்றங்களால் கூட கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நிலையில் திருப்பிவிடப்படுகிறது.

ஒரு சவால், மும்பைக்கு சென்று உங்களால் பால் தாக்கரேவையோ, ராஜ் தாக்கரே பற்றி விமர்சித்துவிட்டு சேதாரம் இல்லாமல் திரும்பமுடியுமா. . ? பதில் என்னவோ முடியாது தான். அங்கு நிலைமை வேறு. இது தான் இந்தியாவின் கருத்து சுதந்திரம். ஐ. நா அவையில் கூட ஊமைகளாக தான் எப்போதுமே இருந்துவருகிறோம்.

எங்கு பத்திரிக்கைகள் தடுக்கப்படுகிறதோ அங்கு சுதந்திரம் இழக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு கருத்து சுதந்திரத்தை பரிபூரணமாக வழங்கியுள்ளது. நமக்கு மோடி மட்டுமில்லாமல் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மதத்தையும், எந்த சாதியையும் பிறர் மனது புண்படாதவகையில் முழுஉரிமை உண்டு.

ஆனால் இங்கு நிலைவேறு. நாம் மோடியையோ, நம் முதல்வரை பற்றி கருத்து கூறினால் உடனே அவர்களின் அடிவருடிகளால் பிரச்சினை ஏற்படுத்தபடுவதும் வழக்கமே. சட்டமோ வேடிக்கை பார்த்துகொண்டு தான் இருக்கும். அதிகாரம் சட்டத்தை விட வலியது. யார் தான் எதிர்ப்பார் அதிகாரத்தை. எதிர்த்தால் தீவிரவாதிபட்டம் வழங்கி சிறையில் அடைப்பதும் இங்கேதான்.

எந்த ஒரு அரசும், தம் அரசை பற்றி நல்ல அபிமானத்தை மக்களிடையே ஏற்படுத்த முதலில் நாடுவது செய்திதாள்களை தான். பழைய சோவியத் ரஷ்யாவில் தகவலை பரப்புவது ஒரு ராஜதந்திரகலையாக போற்றி வழக்கப்பட்டது. அங்கு உள்ள உளவு அமைப்பான KGBயில் தகவல் பரப்புதலுககென்றே Department of Active Measures என்ற ஒரு பிரிவு இயங்கி சர்வதேச அளவில் செயல்பட்டு வந்தது.

அமெரிக்காவில் NSA, CIA போன்ற உளவு அமைப்புகள் தீவிரவாதிகளை விட தகவல் பரப்புபவைகளை கண்டு அஞ்சியே அவற்றை மிகவும் கவனமாக கையாண்டுவருகிறது. அவர்களால் குடைசாய்க்கப்பட்ட அரசாங்கங்கள் யாவும் CIAவின் உளவியல் போர்முறைக்கு முதலில் பலியாக்கப்பட்டு பின் கொரில்லா போர்முறையால் விழ்த்தப்பட்டதே வரலாறு.

விக்கிலீக்ஸ், கிரிப்டோம் போன்ற வலைதளங்கள் அரசாங்க ரகசியங்களை வெளியிட்டபோது அதை எதிர்த்து கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஜுலியன் அசாஞ்சேவை கொலை செய்ய திட்டமிட்ட வரலாறும் அமெரிக்காவுடையது. இப்படி உலகமெங்கும் அடக்கப்படும் கருத்து சுதந்திரம் எரிமலையாக வெடித்ததே வரலாறு. அந்த நிலை இந்தியாவில் ஏற்ப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விகுறியாகிவிடும் அபாயம். முறைபடுத்திய தகவல் பாதுகாப்பு உடைய அமெரிக்காவாலே சமாளிக்க முடியாத போது இந்தியா ?

இந்தியாவில் மதம், சாதி, இனம், மொழி என கருத்து சுதந்திரத்தை தடுக்கும் தடைகற்கள் ஏராளம். ஒருவேளை யாரும் மதத்தை பற்றி பற்றி கருத்து வெளியிடவில்லை எனில் இன்று எப்படி பல புதிய மதக்கோட்பாடுகள் வந்திருக்கும். பொதுவுடமை, மாவோயிசம், மார்க்கிசியம் என யாவும் கட்டுப்படுத்த கட்டுபடுத்த வளருபவை. நீங்கள் இன்று அல்லது ஒரு வருடத்துக்கு மாவோ கருத்துகள் பரவுவதை தடுக்கலாம் ஆனால் மாறும் அரசாங்கள், மாறாத, இறக்காத கொள்கைகளை வீழ்த்தமுடிவதில்லை.

உங்கள் சிந்தனைக்கு, நீங்கள் ஒவ்வொரு முறையும் கடும்முயற்சி எடுத்து மாவோயிஸ்டுகளை கைது செய்தாலும் மீண்டும் மீண்டும் அந்த சித்தாந்தம் பரவுவது உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா மாவோயிசத்தை? இந்துத்துவாதிகள் ரயிலை எரித்தால் தவறில்லை, ஆனால் மாவோயிசவாதிகள் ரயிலை கொளுத்தினால் தவறா? இந்துத்துவாதிகள் பிற மதத்தினரை கொல்லும்படி துண்டுபிரசுரம் விநியோகம் செய்தால் தவறில்லை ஆனால் மாவோயிசவாதிகள் காலகாலமாக தீமையை மட்டும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஏகாதிபத்தியத்தியத்துக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகம் செய்தால் தவறா?

வடகிழக்கு இந்தியா முழுவதும் பொதுவுடமைவாதம் வளர்ந்து வந்த போது அதை தடுக்க பொதுவுடமை எதிர்ப்பு கருத்துகளை பாடபுத்தகத்தை சேர்த்து போதிக்க அரசாணை பிறப்பித்தது எவ்வளவு கேவலமான செய்கை?

உங்கள் ஒரு மாவோயிஸ்டையோ கொல்ல முடியலாம், ஆனால் ஒருபோதும் வீழ்த்தமுடியாது மாவோவின் வார்த்தைகளையும் கொரில்லா போர்யுக்தியையும்.

மாறும் அரசாங்கத்தால் இறவாத, மாறாத கொள்கைகளை ஒருபோதும் வீழ்த்தமுடியாது. எங்கு ஒரு கொள்கை அதிகமாக கட்டுப்படுத்த படுகிறதோ அங்கு அது கட்டுப்பாடுகளை மீறி வெளிப்படுவது இயல்பு.

நீங்கள் மாவோயிசத்தை தடை செய்தால் இந்துத்துவத்தையும் தடை செய்யுங்கள். அதுவே சமநீதி. கருத்து சுதந்திரம், கருத்துக்கு சொந்தக்காரர்க்கு பாதுகாப்பு .

அரசியல் சாக்கடையல்ல; அது நம் பார்வையை பொறுத்தே. என்றென்றும் நேதாஜி மற்றும் மாவோ வழியில் பயணப்படுவோம் முதலாளித்துவத்தை சாய்க்க... !

- நேதாஜிதாசன்

Pin It