பழ.கருப்பையாவின் வீட்டிற்குள் புகுந்து சிலர் நடத்தியுள்ள வன்முறைத் தாக்குதல் கண்டனத்திற்கு உரியதுதானே ?

-வெண்மணி, மேலூர்

ஆம். இதுபோன்ற வன்முறைகள் எப்போதும் கண்டனத்திற்கு உரியவைகளே. அதே நேரத்தில் பழ. கருப்பையாவின் ஜெயா தொலைக்காட்சி நேர்காணலும் மிகுந்த கண்டனத்திற்கு உரியதே ஆகும்.

20.06.2010 இரவு, ஜெயா தொலைக்காட்சியில், ரபிபெர்னார்ட் கேள்விகளுக்கு கருப்பையா எவ்வளவு அநாகரிகமாக விடை சொன்னார் எனபதை அவர் மட்டுமல்லாமல், ஊடகங்களும் கூட மூடி மறைக்கின்றன. எழுத்துச் சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரான வன்முறை என்பது போல ஜெயலலிதா, சோ முதலானவர்கள் பேட்டி அளித்துள்ளனர். ஜெயா டி.வி.யில் வலுவான வாதங்களை அடுக்கினார் பழ.கருப்பையா என்கிறது ஜுனியர் விகடன். அவரை ஒரு கருத்துரிமைப் போராளியாகக் காட்ட முயல்கிறது தினமணி.

அந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். தொடக்கத்தில் இருந்து கலைஞரை அவன், இவன் என்றும், வாடா, போடா என்றும் பேசிய அவர் இறுதியில் கூறிய தொடரை அப்படியே கீழே தருகின்றேன்.

“தமிழுக்கு நீ என்னடா மாநாடு நடத்துகின்றாய், மானங்கெட்டவனே”

இதுதான் கருத்துரிமையா? இப்படி அநாக ரிகமாகப் பேசுவதை எவரும் கண்டிக்கவில்லையே, ஏன்? இப்படியெல்லாம் பேசுவது கருப்பையாவுக்குப் புதிதன்று. பழைய நிகழ்ச்சி ஒன்றையும் இங்கே நான் நினைவு கூர விரும்புகின்றேன்.

1988, ஜனவரி இறுதியில் ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஊர்திப் பயணம் நடத்தப்பட்டது. அப்பயணத்தின் இறுதி நாளுக்கு முந்தைய இரவு, நாகர்கோயிலில் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட பெரிய பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய பழ.கருப்பையா, ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையில் மிக இழிவாகப் பேசினார். அதனால் கூட்டத்தில் சலசலப்பு. எதிர்க் குரல்கள். சிலர் மேடையை நோக்கி அவரைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். அவர் பேசி முடித்ததும், மேடைக்குப் பின்புறமாக அழைத்துச் சென்று ஒரு காரில் ஏற்றிப் பத்திரமாகக் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைத்த நிகழ்ச்சி இப்போதும் என் நினைவில் உள்ளது. அதற்குப் பின்பு மேடைக்கு வந்த, அப்போது அ.தி.மு.க.வில் இருந்த வலம்புரிஜான் செய்தி கேள்விப்பட்டுத் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

அன்று எந்த ஜெயலலிதாவைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகப் பேசினாரோ, அவரைத்தான் இப்போது அம்மா, அம்மா என்று சொல்லிப் புல்லரிக்கின்றார். இன்று எந்தக் கலைஞரைப் பற்றித் தரக்குறைவாகப் பேசுகின்றாரோ அவரைத்தான் தலைவரே, தலைவரே என்று சொல்லி அன்று பணிவு காட்டினார்.

இதுபோன்ற நேரங்களில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. வன்முறை எவ்வளவு கண்டிக்கத்தக்கதோ, அதே அளவுக்கு வன்முறையைத் தூண்டும் பேச்சு வன்முறையும் கண்டிக்கத்தக்கது. கருப்பையா வீட்டைத் தாக்கியவர்களும், மிக அநாகரிகமாக ஊடகங்களில் உரையாடும் கருப்பையா போன்றவர்களும் கண்டிப்பாய்த் தண்டிக்கப்பட வேண்டியவர்களே !

கருப்பையா பல தமிழ் இலக்கியங்களைப் படித்துள்ளதாகச் சொல்கிறார். ஆனால், யாகாவராயினும் நாகாக்க என்னும் திருக்குறளை மட்டும் படிக்கவில்லை என்று தெரிகிறது. நாவைக் காவாக்கால், சோகாப்பர் (அதாவது துன்பத்திற்கு ஆளாவர்) என்கிறார் வள்ளுவர். ஒரு வேளை, சோகாப்பர் என்பதை சோ காப்பார் என்று தவறுதலாகக் கருப்பையா படித்து வைத்திருக்கிறாரோ என்னவோ!

ஆங்கிலத்தில் சாடிசம் என்று ஒரு சொல் இருக்கிறதே அதற்கு என்ன பொருள்?

- மலர்க்கொடி, விருத்தாசலம்.

அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பதை சாடிசம் என்னும் சொல் குறிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிடுமோ, அந்தக் குடும்பங்கள் மகிழ்ச்சி அடைந்து விடுமோ என்று அஞ்சி நடுங்கி அதற்கு எதிராக அறிக்கை விடுகின்றவர்களும், வழக்குத் தொடுக்கின்றவர்களும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

ஸ்ரீரவிசங்கரைத் துப்பாக்கியில் சுட்ட நாடகம் பற்றி...?

த. பிரபாகரன், ஈரோடு

உங்கள் கேள்வியிலேயே விடை இருக்கிறது.

Pin It