கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், 27.06.2010 அன்று காலை, வித்தாக விளங்கும் மொழி என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி :

ஒரு மொழிக்கு இத்தனை பெரிய மாநாடா, இத்தனை நாள் மாநாடா, மொழி வெறும் கருவிதானே என்று கருதுவோருக்குத் தக்க விடையாக இக்கருத்தரங்கின் தலைப்பு அமைந்துள்ளது. மொழி என்பது வெறும் கருவி அன்று. அது வித்தாக அதாவது விதையாக அமைந்து அம்மொழி பேசும் மக்களின் பண்பாட்டைக் கட்டமைக்கிறது. மொழியையும் பண்பாட்டையும் ஒருநாளும் பிரிக்க முடியாது.

subavee_340நம் தாய்மொழியான தமிழ்ச்செம்மொழி எத்தனை பண்பாட்டுக் கூறுகளை நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது என்று எண்ணிப் பார்க்கலாம். அறஞ்செய விரும்பு, தந்தை தாய்ப் பேண் போன்ற தனிமனிதப் பண்பாடுகளையும், செல்வத்துப் பயனே ஈதல், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக முதலான சமூகப் பண்பாடுகளையும், பாரடங்கலும் பசிப்பிணி அறவேண்டும், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற உலகப் பண்பாடுகளையும் நமக்கு வழங்கியுள்ள மொழி நம் தமிழ். எல்லாப் பண்பு அறங்களிலும் போற்றத்தக்கதும், தலையாயதும் சமத்துவப் பண்பாடுதான். அதனைத்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது வள்ளுவம். அந்த வள்ளுவத்தின் வாய்மொழியே இம்மாநாட்டின் மையக் கூற்றாய் ஆளப்பட்டுள்ளது.

உலகின் போராட்டங்கள் எல்லாம் சமத்துவத்திற்கான போராட்டங்களாகவே இருப்பதை நாம் அறிவோம். சாதி, மத, பால் அடிப்படையில் ஆதிக்கங்கள் எழும்போதெல்லாம் அதை உடைக்கும் போராட்டங்களும் எழுகின்றன. குறிப்பாகத் தாய்மொழி சிறுமைப்படுத்தப்படும்போது சினந்து எழுகின்றனர், அம்மொழிக்குரிய மக்கள். இதனை உலக வரலாறு முழுவதும் நமக்கு எடுத்துச் சொல்கிறது.

20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 1991 ஆம் ஆண்டில், எரித்திரியா என்னும் நாடு விடுதலை பெற்றது. அரைநூற்றாண்டுக்கும் மேலாக இத்தாலிக்கு அடிமைப்பட்டுப், பின்பு பத்தாண்டுகள் இங்கிலாந்தின் பிடியில் சிக்கி, 1952 இல் எத்தியோப்பியப் பெருந்தேசத்தின் 14 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது எரித்திரியா. அந்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எரித்திரிய விடுதலை முன்னணியும், எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியும் எப்போது எழுச்சி பெற்றன என்பதை நாம் பார்க்க வேண்டும். அந்த நாட்டில் இசுலாமிய மக்களும், கிறித்துவப் பழங்குடி மக்களும் சரிபாதியாக இருந்தனர். அவர்களின் தாய்மொழிகளான அரபு மொழியும், டிக்ரின்யா மொழியும் பள்ளிக் கூடங்களிலே பாட மொழியாகக் கூட இல்லாமல் தடைசெய்யப்பட்டன. அது மட்டு மல்லாமல், டிக்ரின்யா மொழியிலே எழுதப்பட்ட 54 ஆயிரம் நூல்கள், எத்தியோப்பிய ஆதிக்கவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அப்போதுதான் அந்த மக்களின் விடுதலை வேட்கை மேலும் கிளர்ந்தெழுந்தது. மொழிக்கு வைத்த நெருப்பு, விடுதலை நெருப்பாய் வீறுகொண்டு எழுந்தது.

இந்த வலி நமக்கு ஏற்கனவே அறிமுகமான வலிதான். 1981 இல் யாழ்பாண நூலகத்தைக் கொளுத்தினார்களே, அன்றைக்கே அந்த வலியை, வேதனையை உலகத் தமிழினம் உணர்ந்து கொண்டது. 97 ஆயிரம் நூல்களும், அறிஞர் ஆனந்த குமாரசாமி பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடிகளும் அன்று எரிந்து சாம்பலாயின. அந்தச் சாம்பலின் மிச்சம் இன்றும் நம் கண்களில் தெரிகிறது. எரிக்கப் பட்டாலும், ஒடுக்கப்பட்டாலும் அந்த இனம் மீண்டும் எழும் என்பது அழிக்கமுடியாத வரலாற்று உண்மை. அந்த இனம் மட்டுமல்ல, ஒடுக்கப்படுகிற எந்த இனமும் மீண்டும் எழும் என்பது இயற்கையின் நியதி.

இப்போது சென்னைக் கோட்டூர்புரத்தில் எழுந்து கொண்டிருக்கிறதே எட்டுமாடி நூலகக் கட்டிடம், அதை என்னவென்று நினைக்கிறீர்கள்? எரிந்து போன யாழ்ப்பாண நூலகத்தைத்தான் நம் தலைவர் கலைஞர் கோட்டூர் புரத்தில் கோபுரமாய் எழுப்பிக் கொண்டிருக்கிறார்.

வங்கதேசத்திலே என்ன நடந்தது? 1947 வரையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேசம் எல்லாம் ஒரே நாடுதான். என்றாலும், நிலவழித் தொடர்ச்சியை மதம் ஏற்கவில்லை. இந்துக்களின் தேசம் வேறு, இசுலாமியரின் தேசம் வேறு என்று நாடு இரண்டாய்ப் பிரிந்தது. சரியாய்ச் சொன்னால், நிலவழித் தேசியத்தை அங்கு மத வழித் தேசியம் வென்றது. அந்த வெற்றி, கால்நூற்றாண்டைக் கூடக் கடக்கவில்லை. மதத்தால் அனைவரும் இசுலாமியர்கள் என்றாலும், உங்கள் மொழி உருது, எங்கள் மொழி வங்கம் என்று கூறி, முஜிபூர் ரகுமான் தலைமையில் எழுந்தனர் வங்கதேசத்து இளைஞர்கள். பங்களாதேசம் என்று ஒரு நாடு 1971 இல் உருவானது. இங்கே மதவழி தேசியத்தை மொழிவழி தேசியம் வென்றது. விடுதலை உணர்வுக்கு மொழியே வித்தாக விளங்கியது.

துருக்கி, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நான்கு நாடுகளில் வாழ்ந்தாலும், குர்திஷ் மொழி பேசும் மக்கள் தங்களைத் துருக்கியர் என்றோ, ஈரானியர் என்றோ கூறிக்கொள்வ தில்லை. குர்து மக்கள் என்றே உரத்துச் சொல்கின்றனர்.

இந்த எடுத்துக்காட்டுகள் எல்லாம், மொழி வெறும் கருவியன்று என்பதை நமக்கு விளக்குகின்றன. கருவிகள் உற்பத்தி செய்யப்படுபவை. குண்டூசி முதல் குத்தீட்டி வரை எல்லாக் கருவிகளையும் நாம் உருவாக்கி கொள்ளலாம். மொழியை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா? அது சமுதாயத்தின் விளை பொருள் இல்லையா?

அந்த முயற்சியும் கூட உலகில் சில முறை நடந்தது. பன்னாட்டு மொழி அறிஞர்கள் சேர்ந்து அமர்ந்து சில செயற்கை மொழிகளை உருவாக்க முயன்றனர். இன்டர் லிங்குவா என்று ஒரு மொழி, யுனிவர்சேல் என்று ஒரு மொழி உருவாக்கமெல்லாம் கருவிலேயே முடிவடைந்து விட்டது. ஆனாலும், 1887 இல் போலந்து நாட்டைச் சேர்ந்த ஜாமென் ஹாஃப் என்னும் அறிஞர் செய்த முயற்சி ஒரு வெற்றியைப் பெற்றது என்பதை மறுக்க முடியாது. மேலை நாட்டு மொழிகளிலிருந்தும், கீழை நாட்டு மொழிகளிலிருந்தும் பல வேர்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு மொழிகளின் வேற்றுமைகளைக் குழைத்துப் பூசி, இலக்கணச் செப்பத்துடன் எஸ்பெரன்டோ என்னும் செயற்கை மொழியை உருவாக்கினார். வியக்கத்தக்க வகையில் அந்த மொழியைச் சீனா உள்ளிட்ட பல நாடுகள், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டன. அம்மொழியில் 600க்கும் மேற்பட்ட நூல்கள் பத்தாண்டுகளுக்குள் வெளிவந்தன. இனிமேல் எஸ்பெரன் டோதான் உலக மொழி என்னும் மனநிறை வோடு ஜாமென் ஹாஃப் மரணமடைந்தார்.

subavee_490

உண்மை வேறுவிதமாக இருந்தது. தொடக்கத்தில் இலட்சக்கணக்கான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்மொழி, மெல்ல மெல்லத் தன் செல்வாக்கை இழந்தது. 1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நமக்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. எஸ்பெரன்டோ மொழி பேசுகின்றவர்களின் எண்ணிக்கை 200 முதல் 1000 வரை தான் என்பது அந்தச் செய்தி.

எஸ்பெரன்டோ மங்கி மறைவதற்கு என்ன காரணம் என்று, உலகத்தின் மொழியியல் வல்லுனர்கள் ஆராய்ந்து சலித்தனர். இறுதியில் அவர்கள் சொன்ன காரணம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அந்த செயற்கை மொழி எந்த ஒரு இனத்தின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் எதிரொலிக்கவில்லை என்பதனாலும், எந்த ஒரு பண்பாட்டையும் கட்டமைக்கவில்லை என்பதனாலும் அதன் சரிவை யாராலும் தடுக்க முடியவில்லை என்கின்றனர்.

பண்பாட்டைக் கட்டமைக்காத, பண்பாட்டின் விழுமியங்களுக்கு வித்தாக அமையாத எந்த ஒரு மொழியும் நிலைத்து வாழாது என்பதைத்தான் எஸ்பெரன்டோ நமக்கு எடுத்துச் சொல்கிறது.

என் உரையின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல, தனிமனிதர்களுக்கு, சமூகத்திற்கு, உலகத்திற்கு என்று பல்வேறு பண்பாட்டு அறங்களைக் கட்டமைத்திருக்கிற நம் தாய்மொழியான தமிழை, உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா? என் தமிழ் உறவுகளே, உங்கள் அனைவருக்கும் இம்மா நாட்டில் ஓர் அன்பான வேண்டுகோள். நேற்று வரை எப்படியோ போகட்டும். இன்றுமுதல் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திடுவோம் என்று உறுதி ஏற்போம். தமிழில் பேசுக, தமிழில் பெயரிடுக என்றெல்லாம் உரைப்பதற்கு முன், தமிழில் கையெழுத்திடுக என்று நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. தொல்காப்பியம் கூட எழுத்ததிகாரத்தில்தான் தொடங்குகிறது. எழுத்தில் தமிழாய், பிறகு சொல் தமிழாய், அதன்பின் நம் வாழ்வே தமிழாய் அமைத்துக்கொள்வோம். தமிழில் கையெழுத்திடுவதற்குச் செலவும் இல்லை சிரமும் இல்லை. இந்தச் செம்மொழி மாநாட்டில் பெற்ற வரவாய், ஏற்ற உணர்வாய்த் தமிழில் கையெழுத்திடுங்கள் தமிழர்களே.

“தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை. தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை” என்னும் அறிஞர் முத்துச்சிவனாரின் பொன்மொழியை முன்னிறுத்தி விடைபெறுகிறேன்.

- சுப.வீரபாண்டியன்

----

பாராட்டி மகிழ்கின்றோம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மதிப்பமை துணைவேந்தர் திருவாசகம், தமிழினம் போற்றி வரவேற்கத்தக்க ஓர் ஆணையை வெளியிட்டுள்ளார். 05.07.2010 முதல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள், நிர்வாகத் துறையினர், மாணவர்கள் அனைவரும் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும், தமிழில் கையெழுத்திடப்பட்ட கோப்புகளை மட்டுமே தான் பார்வையிடுவேன் என்றும் அவ்வாணையில் கூறியுள்ளார். துணைவேந்தரின் இச்செயல், மிகுந்த வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியதாகும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும், கல்விநிலையங்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக அவ்வாணையை நாம் மதிக்கிறோம்.

Pin It