ரஷ்ய நாவல்களைப் படிப்பதும் அதைச் சிலாகிப்பதும் எப்பொழுதுமே ஈர்ப்பை ஏற்படுத்துகிற விஷயம்தான்!
மனம் பூத்து வேர்விட்டிருக்கிற துணையுடன் அத்துவானத்தில் கை கோர்த்துச் செல்கிற சுகமது!
அப்படி ஒன்றுக்கு மனதைப் பறிகொடுக்கச் செய்துவிட்டதுதான் அண்மையில் படித்த 'ஜமீலா'!
ஸ்தெப்பி புல்வெளி, பனிப்படர்வு, பிர்ச் மரக்காடுகள், குளிர் என்பதைத் தாண்டி நாவலின் எண்பதுக்கும் மேற்பட்ட பக்கங்கள் முழுவதும் ஜமீலா, ஜமீலா, ஜமீலாதான்!
ஊரிலுள்ள அனைத்துக் குடும்பங்களின் ஆண் மக்களைப் போலவே போருக்குச் சென்றுவிட்ட ஆண்களைக் கொண்ட, மரவேலை செய்யும் குடும்பத்து மருமகளாக அறிமுகமாகிறாள் ஜமீலா. அவள் மிகவும் துடுக்குத்தனமாகவும், காரிய சாத்தியமுள்ளவளாகவும், தேவையற்று வம்பளப்பவரிடம் வாயாடும் பெண்ணாகவும், கைதேர்ந்த உழைப்பாளியாகவும், குடும்பத்திற்கு இசைந்த மருமகளாகவும் இயல்பாக உற்றிருக்கிறாள்!
போர்முனைக்குச் சென்றுவிட்ட கணவனைப் பிரிந்திருந்த ஜமீலா, தன் கொழுந்தனை "கிச்சினே பாலா" (குஞ்சுப்பையன்) என்றும், கொழுந்தன் ஜமீலாவை "ஜேனே" (மதினி) என்றும் அழைத்து மகிழ்ந்து, தன் மாமியாருடன் குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிற நாட்களில், 'சின்ன வீடு' என்றழைக்கப்பட்ட பக்கத்து வீட்டுத் தலைவர் இறந்துவிடுகிறார்.
அந்தக் காலத்தில் தொன்றுதொட்டு இருந்த கிராமத்து வழக்கப்படியும், முன்னோரின் ஆத்மசாந்தியின் பொருட்டும், ஜமீலாவின் மாமனாரே அப்பெண்ணை மணம் முடித்துக்கொள்ள, இரண்டு குடும்பங்களும் ஒன்றாகி வாழ்கின்றன.
ஜமீலாவின் கொழுந்தன் சின்னப்பையனாக இருந்தபோதும், திறமை வாய்ந்த "ஜிகித்"தாகவும் (குதிரைக்காரன்) இருந்துள்ளான்!
தகப்பனைப் போலல்லாமல் துடிப்பான குடும்பஸ்தனாகவும், சாமர்த்தியமுள்ளவனாகவும் வர வேண்டும் என்பது அவன் ஆசை.
இந்நிலையில் போர்முனைக்கு ரயில் மூலம் தானிய மூட்டைகளைக் கொண்டு சேர்க்க வந்த கூட்டுப்பண்ணை வேலைக்குழுத் தலைவன், அனைவரையும் போல் ஜமீலாவை வேலைக்கு அழைப்பதை அவள் மாமியார் தடுக்கிறாள்.
இறுதியில், "போர்முனையில் இருக்கிற போர் வீரர்களின் வீட்டுப் பெண்கள் இப்பணிக்கு வந்தே ஆக வேண்டும்; ஊரில் ஆண்களே அற்ற நிலையிலும் போர் வீரர்களுக்கு உணவு வேண்டும்" என்கிற கூட்டுப்பண்ணைக் குழுவின் முடிவு அமலாகிறது.
அறுவடைத் தானியங்களை வண்டியிலேற்றி ரயிலடிக்குக் கொண்டு செல்கிற அறுவடைப் பணி நேரத்தில்தான் அவ்வூரில் வேரூன்றுகிறான் தானியார்!
மிகவும் அப்பாவியாய் 'தானுண்டு தன் வேலையுண்டு' என்றிருக்கிற தானியாரும், ஜமீலாவுடனும் ஜமீலாவின் "கிச்சினே பாலா"வுடனும் தானியங்களேற்றி ரயிலடிக்குச் செல்கிறான்.
தானிய மூட்டைகளை ரயிலில் ஏற்றுவது, ஏற்றிய மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவது எனக்கடின உடல் உழைப்பு கொண்ட அவனுள் குடிகொண்டிருந்த பாடகன், ஓர் குளிர்ப்பொழுதிரவில் வண்டியோட்டிச் செல்கிற தருணத்தில் வெளிப்படுகிறான்!
அந்தக் கணத்திலேயே வண்டியோட்டிச் செல்கிற தானியாரிடம் மையல்கொள்கிறாள் ஜமீலா. தன் வீட்டு "கிச்சினே பாலா", போர்முனையில் காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிற கணவனின் கடிதம், தன் குடும்பம், ஊர் இவையெல்லாம் அறிந்தும் அறியாமலும் அவள் என்ன செய்கிறாள் என்பதுதான் இந்நாவலின் முடிவும் கருவுமாகும்!
போர்முனைக்குச் சென்றுவிடுகிற ஆண்களுக்கு வாழ்க்கைப்படுகிற பெண்களின் அன்பும், நட்பும், காதலும், விரகதாபமும் மிக உயர் நாகரிகத்துடன் பேசப்பட்டிருக்கிற நாவல் "ஜமீலா"!
"தானியாரின் இசை கேட்கும்போதெல்லாம் ஏற்படும் இனந்தெரியா உள்ளக்கிளர்ச்சி மீண்டும் ஒரு முறை என்னை ஆட்கொண்டது. நான் விரும்புவது என்ன என்பது எனக்கு விளங்கிவிட்டது; இவர்களை ஓவியத்தில் தீட்ட வேண்டும் என்பதே என் விருப்பம்" என கிச்சினே பாலா (குஞ்சுப்பையன்) விரும்புவதுதான் அந்த நாகரிகம்!
படிக்கலாம் ஜமீலா!
நூல்: ஜமீலா
ஆசிரியர்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்
தமிழில்: பூ.சோமசுந்தரம்
- விமலன், விருதுநகர்