book reviw3நூல் அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டின் ஆப்பிரிக்கத் திரைப்படத்தின் தந்தை என்று போற்றப்படுகிற உஸ்மான் சாம்பேன்(னு) ஒரு சிறந்த நாவலாசிரியரும்கூட. அவருடைய பன்னிரெண்டு சிறுகதைகள் தொல்குடித் தழும்புகள் (Tribal Scars) என்ற தொகுப்பாக ஃபிரெஞ்ச் மொழியில் வந்தது.

சாம்பேன் செனகால் நாட்டவர். அந்நாடு ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்ததால் அந்நாட்டவர் இலக்கியம் ஃபிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்டது. சுதந்தர செனகாலின் முதல் அதிபரான செங்கார் சிறந்த கவிஞர். கறுப்பர்களுக்குக் கண்ணியமான இடம் வேண்டும் என்று பாடுபட்டவர். பொதுவுடைமைச் சிந்தாந்தத்தில் ஊறிப்போயிருந்த சாம்பேன் பலகருத்துகளில் அவரோடு மாறுபட்டிருந்தார்.

தொன்மைக்காலம் தொட்டே பல தொல்சமயங்கள் இயங்கிவந்த நிலையில் இஸ்லாம் செனகாலுக்கு 14ஆம் நூற்றாண்டில் வந்தது. சாம்பேன் தனது மூதாதையரின் செரர் மதச்சடங்குகளில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் மதரசாவில் தனது படிப்பைத் தொடங்கினார். அதிகம் படிக்கவில்லை. கூலிவேலை பார்த்தார்.

நாட்டின் தலைநகர் டாகருக்குச் சென்றார். பிறகு கள்ளத்தனமாக, பல ஃபிரெஞ்ச் காலனியரைப்போலவே ஃபிரான்ஸ் வந்தார். அங்கும் கூலி வேலைதான். மார்சேயில் துறைமுகத்தில் வேலைசெய்தார். அவருடைய முதல் நாவலான கறுப்புத் துறைமுகம் (1956) அவருடைய இந்த அனுபவங்களைப் பிரதிபலிக்கும்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் ‘ஃபிரான்சிலிருந்து கடிதங்கள்’ கதையில் வெளிப்படும். அவர் தொழிலாளியாக இருந்த போது தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தால் கவரப்பட்டார். ஊழலுக்கு எதிராகக் கொடி பிடித்தவர் சாம்பேன். டக்காரிலுள்ள தொழிற்சங்கம் ஒன்றின் ஊழலை அவரது ‘சமூகம்’ வெளிப்படுத்துகிறது.

பலதார மணமுறை தொல்குடியிலும் உண்டு, இஸ்லாமும் அதை ஆதரித்தது. இதனால் பெண்கள் அடிமைப்பண்டங்களாகவும் போகப்பொருளாகவும் செனகால் சமுதாயத்தில் நடத்தப்பட்டார்கள். இந்த அவலத்தைத் தனது கதைகளில் கொண்டுவருகிறார் சாம்பேன்.

பிலாலின் நான்காவது மனைவியின் உடலின்ப ஆசை கட்டுமீறுவது பலதார மணத்தின் ஒரு பக்கவிளைவுதான். ‘அவளது மூன்று நாட்கள்’ கதையில் தனது கணவன் முஸ்தாபா தன்னிடம் வந்து தங்கவேண்டிய மூன்று நாட்களூக்காக ஏங்கித் தவிக்கும் நூம்பேயின் துயரம் யார் மனத்தையும் உருக்கும்.

ஃபிரான்சில் அடிமை வேலைகளுக்கு ஆப்பிரிக்கர்கள் பயன்படுவதை நன்றாகவே சித்தரிக்கிறார் ஆசிரியர். வாக்களிக்கப்பட்ட பூமிக்கு வரும் ஜுனா மூன்றாண்டுகள் படும் உடல் வேதனைகள் அவளது தற்கொலையோடு முடிகின்றன. ஆனால் ஏற்கனவே சொல்லப்பட்ட பாரிசிலிருந்து கடிதங்கள் கதையில் நூம்ஃபே ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு ஃபிரான்ஸ் வருகிறாள்.

ஒரு இளம்பெண்ணின் மனப்போராட்டங்கள் மென்மையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அரோனாவுடனான அவளுடைய உறவு எத்தகையது? கணவன் இறந்தபிறகு அவள் ஃபிரான்சை விட்டே போய்விடுகிறாள். கணவனது மரணத்துக்குப் பிறகு கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவளது நாட்டுப் பழக்கவழக்கங்கள் இங்கே என்னவாயின?

பன்னிரெண்டு கதைகளிலும் முத்தாய்ப்பாக விளங்குவது தலைப்புக் கதையான கடைசிக் கதை. அடிமை வியாபாரத்தைப் பற்றிய கதையாக மட்டும் இருந்தால் அதில் புதுமை இல்லை. உடலில் தழும்பு இருந்தால் வெள்ளையர்கள் கறுப்பரை அடிமையாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதுகூட அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

அடிமைகளாகத் தங்கள் இனத்தோரையே பிடித்துச் செல்வோரின் கொடூரம் பல கதைகளில் கேட்டிருப்போம். ஆனால் ஆமூ கடத்திச்செல்லப்பட்ட தனது மகள் அயமை விடுவித்துத் தனது வீட்டிற்குக் கூட்டிச் செல்லும் சாகசம் அவ்வளவு பெரிதாகப் படவில்லை.

ஆனால் மீண்டும் அடிமை வியாபாரிகள் இவர்களைப் பிடிக்க வந்தபோது ஆமூ தனது மகளின் உடலில் தனது கோடரியால் பாளம் பாளமாகக் கீரியதுதான் மிகப்பெரிய செயலாக, மிகப் பெரிய தியாகமாகத் தோன்றுகிறது. மகளின் தழும்புகள் அவளைக் காப்பாற்றிவிட்டன.

இதனை கதை சொல்லி விவரித்து இதுதான் சில இனக்குழுக்களில் குழந்தைகள் தழும்புகளோடு பிறப்பதற்குக் காரணம் என்று விளக்குகிறார். அந்த விளக்கத்தை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால் அவ்வின மக்களின் பாடுகளை வரலாறு பேசுகிறது.

ஆப்பிரிக்க இனத்தின் கண்ணீர் ஜூனாவின் புலம்பலில் கரைகிறது.
ஆப்பிரிக்கத் தாயின் உருவே
விலைக்குக் கொடுக்கப்பட்ட உன்
உடலின் மேல் நின்று ஒப்பாரி வைக்கிறோம்
நீ எங்கள் தாய் ஜுனா.

கதைகள் அனைத்துமே சிறப்பு. கலப்பை பதிப்பகம் அழகுற வெளியிட்டிருக்கும் இந்நூலை மொழிபெயர்ப்பாளர் லிங்கராஜா வெங்கடேஷ் ஆங்கில மூலத்திற்கு இணையாகத் தமிழில் தந்திருக்கிறார். மிகச் சிறந்த மொழிப் பெயர்ப்பு. The False Prophet ஐ போலி இறைத் தூதர் என்று மொழிபெயர்த்திருக்கலாம். The Tribal Scars க்குத் துணைத் தலைப்பு The Voltaque. அதற்கு மேல் வோல்டாவிலிருந்து வந்தவர் என்று பொருள்.

தொல்குடித் தழும்புகள்
கலப்பை பதிப்பகம்
160 பக்கங்கள் விலை ரு 180

- ச.வின்சென்ட்

Pin It