நடை பயிற்சி தடைபட்டுப் போகிறது. எழுந்த வேளைக்குச் சென்று விட்டிருக்க லாம்தான். சற்று சுணங்கிப் போகிறது மனது. சிறியதான வேலை ஒன்றை காரணம் காண்பித்து!

பெரிதாக ஒன்றுமில்லைதான். பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிறுவனத்தின் சேமிப்புத் திட்டம் பற்றி கை பேசியிலேயே இவனுக்குத் தெரிந்த தொழில் நுட்ப அறிவு கொண்டு ஒரு விளம்பரம் தயாரிக்க வேண்டும்.time 700நேற்றிரவு தூங்கச் செல்லும் முன்பே பின்னிரவு வரை செய்து முடித்திருந்த விளம்பர வேலை இவனுக்குச் சற்று திருப்தி அளிக்கவில்லை.

அசதியில் தூங்கி விடுகிறான். நாளை அதிகாலையாய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்கிற நினைப்பில்!

சேவல் கூவி விட்டிருந்தது. இல்லையென்றாலும் கூட அதை மெதுவாக அழைத்து காதருகே சென்று சொன்னால் கூவிவிடும். விடியலை கைபிடித்தழைத்தவாறே!

சுவர் கடிகாரத்தின் புதுமை வடிவம் இப்பொழுதும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறதுதான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு மேலான அதன் உழைப்பில் எந்த வித சலிப்பும் இல்லாத ஓட்டம் தொடர்கிறது.

ஒரே ஒரு தடவை மட்டும் வாட்ச் கடை பாயிடம் கொண்டு போய் விட்டு வந்தான். அவர் சின்னதாய் ஒரு பொருள் மாட்டிவிட்டு "கொஞ்சம் பத்தரமா வச்சிக்கங்க, விரும்பி வாங்குன மாடல் போலத் தெரியுது" என்றார்.

நான்கைந்து கடைகள் ஏறி எதுவும் திருப்திப்படாது மறுநாள் பரிசுப் பொருட்கள் விற்கிற கடையொன்றில் வாங்கி வந்தது.

வாங்கி வந்து மாட்டிய அன்று வீட்டின் தோற்றமே பொலிவு பெற்றதாய் சொல்லிக் கொண்டிருந்தான் மனைவியிடம்!

இதென்னது. கடிகாரம் மாதிரி இல்லாம இது ஒரு மாதிரியாவுல்ல இருக்கு. என்றாள் மனைவி அதன் புதுமையான வடிவமைப்பைப் பார்த்து!

நாலேகால் ஆகிறது மணி. தூக்கம் கலைந்து எழுந்தவன் லைட்டைப் போட்ட பொழுது. निश्चலனம் தாங்கி நிற்கிறது வீடு.

தூங்கிக் கொண்டிருக்கிறாள் மனைவி. ஆழ்ந்த தூக்கம் போலும்.

நீண்டு போன ஆண்டுகளின் பாடு அவளை அயர்வாக்கியிருந்தது. அந்த அயர்விலும் கூடிப் போன மூப்பிலும் நிச்சலனமற்ற தூக்கத்திலும் சற்று அழகுபட்டுத் தான் தெரிகிறாள்.

பிள்ளைகளற்ற வீடு. விதிக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளடங்கி சின்னவன் ஒரு ஊரிலும், பெரியவன் வேறோர் ஊரிலுமாய் வேலையையும் பிழைப்பையும் நிர்ணயித்துக் கொண்ட பிறகு தனித்து விடப்பட்ட சிறு பிள்ளைகளாகிப் போயினர் இருவரும்!

பணி ஓய்வு பெறும் முன்பாய் என்றாவதோ, தேவையை ஒட்டியோ அவள் பேசுகிற சமயங்களில் அழைப்பொலி எழுப்புகிற கைபேசியையும் அதில் ஒளிர்கிற அவளது பெயரையும் சிறிது நேரம் பார்த்தவாறே இருந்து விட்டு பேசாமல் வைத்து விடுவான்.

பின்பாய் எப்பொழுதாவது தோணுகிற பொழுது பேசுவான்.

பொதுவாகவே அவள் அணிகிற காட்டன் புடவைக்கு இவனது லைக்குகள் நிறைந்து கிடைப்பதுண்டு.

அதுபற்றி ஏதாவது வாய் ஓயாது சொல்லிக் கொண்டிருப்பான்.

புடவையில் ஓடித்திரிகிற டிசைன் பற்றியும், அதில் அழகு காட்டித் தொங்குற குஞ்சங்கள் பற்றியும், பூத்துத் தொங்குற பூக்கள் பற்றியும் அப்பூக்கள் உதிராது பார்த்துக் கொள்கிற ஜாக்கிரதைத்தனம் பற்றியும் அவள் வெட்கித்து இவனது பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரைக்குமாய் பேசுவான்.

அவளும் பதிலுக்கு இவனை கேலி செய்தும் உடை நேர்த்தியை சுட்டிக் காட்டியும் முகத்தில் இடிப்பாள்.

ஆகா, இதற்காகவே பேசலாமோ,,,? தோன்றுவதுண்டு இவனுக்கு!

அழுந்த வாரியிருந்த தலையும் நெற்றிக்கிட்டிருந்த நேர்த்தியும் உச்சி வகிடு சுழியிடுகிற இடத்தில் இழுத்திருந்த செந்தூர்க்கமும் எப்பொழுதும் ஈர்த்ததுண்டுதான் இவனை!

என்ன பெரிதாய் தேவைப்பட்டு விடப் போகிறது அவர்களிருவருக்குமாய்?

கொஞ்சம் உணவு, கொஞ்சம் உடுப்பு, கொஞ்சம் பேச்சு கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம் கொஞ்சம் விரக்தி, கொஞ்சம் ஊடல், கொஞ்சம் அருகாமை என்கிற இத்தியாதி இத்தியாதி தவிர்த்தும், அது தாங்கி நகர்ந்து செல்கிற நாட்கள் தவிர்த்தும்..? அது இருக்கிறதுதான் தேவையான அளவிற்கு கையிருப்பில்!

என்னதான் இழுத்துப் பிடித்தாலும் தன் பிடிவாதம் காட்டி நகர்வு கொள்கிற நாட்களின் வரிசைக் கிரமத்தில் ஊர்கிற வாழ்க்கை!

எவ்வளவு நேரம்தான் கைகட்டி நின்றவாறே பார்த்துக் கொண்டும் நினைவுகளின் சுழலில் நீந்திக் கொண்டுமாய் இருக்க முடியும்? மனைவியின் அருகில் போய் அமர்ந்து கொள்கிறான்.

எவ்வளவு நேரமெனத் தெரியவில்லை. அரிச்சை தட்டியது போல் எழுந்தமர்ந்தவள் "எந்நேரம் புடிச்சி இப்பிடி வந்து ஒக்காந்துருக்கீங்க, கொஞ்சம் அப்பதையே எழுப்பீருக்கலாமுல்ல வாக்கிங் கெளம்பீருப்போமுல்ல," என்கிறாள்.

"இல்ல" என தான் நினைத்து வைத்திருந்த வேலையைச் சொல்கிறான்.

"சரி அப்பப்போயி. டீயாவது வாங்கீட்டு வாங்க" என்றாள்.

அவள் இப்படி கடையில் தேநீர் வாங்கி வரக் கேட்பது அபூர்வமே!

வேண்டாம் வீட்டில் போட்டுத் தருகிறேன் என்பாள்.

அவளைப் பொருத்தவரை அது வீண் செலவில் சேர்த்தி!

தேநீர் வாங்கி வர நினைத்த பொழுது பேவர்பிளாக் கல் பதிக்க தோண்டிப் போடப்பட்டிருந்த தெருவில் நேற்றுப் பெய்த மழை நீர் குளம் கட்டி நிற்கும் என்கிற ஞாபகம் வருகிறது.

பரவாயில்லை. கடந்து போய் விடலாம் நீந்தியாவது என்றெண்ணியவனாயும் மனைவியிடம் இருப்பதாய்ச் சொன்ன வேலையை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்த பொழுதுதான் நடைபயிற்சி சென்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

- விமலன், விருதுநகர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.