ஆசிய நாட்டுச் சிறுகதைகளை முன் வைத்து

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை உலக மக்களிடையே புலம் பெயர்தல் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கு தமிழினமும் விதிவிலக்கல்ல. போர் வன்முறையாலும், பொருள் தேடவும், வணிகம் தொடர்பாகவும், கூலித் தொழிலாளியாகவும் கடல் கடந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் உளவியல் சிக்கல்கள் ஆசிய நாட்டுச் சிறுகதைகளில் எங்ஙனம் பதிவாகியுள்ளது என்பதை விளக்குவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

புலம் பெயர்வு:

“புலம் பெயர்வு” என்பது ஒரே அரசியல் பூலோக எல்லையை விட்டுப் பெயர்ந்து சமூக பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கிறது.diasporaஉலகின் பல்வேறு இனமக்களும் தமது உள்நாட்டுப் போர் காரணமாகவும், தொழில் ரீதியான பிறவற்றாலும் தமக்குத் தஞ்சம் தரும் நாடுகளை நோக்கிப் புலம் பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் புலம் பெயர்ந்து புதிய நாடுகளில் தங்கள் வேர்களைப் பதிப்பவர்கள், புதிய நாட்டின் சமநிலை பண்பாடு, சட்டதிட்டங்களுடன் மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது.

போரினாலும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமது சொந்த நாட்டைப் பிரிந்து வந்த மன உளைச்சலோடு புதிய சூழலுக்கு தங்களைப் பழக்க வேண்டிய அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் உளவியல் சார்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்:

"புலம் பெயர் இலக்கியம்”, “புலம் பெயர்ந்தோர் இலக்கியம்” ஆகிய சொற்றொடர்கள் தமிழில் வழக்கத்தில் இருந்து வருகின்றன. ஆங்கிலத்தில் “புலம் பெயர் இலக்கியம்” என்பதனை "Diaspora literature” என்ற சொற்றொடரால் அழைப்பர்.

அரசியல் சமூகப் பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே புலம் பெயர்ந்தோர் இலக்கியம் (அ) புலம் பெயர் இலக்கியம் என்கிறோம்.

தமிழகத்துக்கு வெளியே “தமிழ்” சீருடனும் சிறப்புடனும் வாழக் காரணம் அங்குள்ள தமிழர்கள் பண்பட்ட தமிழைப் பாங்குடன் உயிருடலாகப் போற்றுகிறார்கள்.

அவை சிறுகதைகள், கவிதைகள், புதினம், கட்டுரை, விமர்சனங்கள் எனப் பல்வேறு வட்டங்களில் விரிவடைந்து வருகின்றன.

ஆசிய நாட்டுச் சிறுகதைகள்:

இந்திய மொழிகளில் தமிழ் இலங்கை மலேசியா, சிங்கப்பூர் என இன்னும் பல நாடுகளில் வாழும் ஆயிரக் கணக்கான குடிமக்களின் தாய்மொழியாக இருக்கிறது. அந்த நாடுகளில் தமிழ்படிப்பு இருக்கிறது. ஆகையால், அது இலக்கிய வட்டத்திலும் விரிவடைகிறது.

சொந்த நாட்டில் வாழ முடியாததென்று புலம் பெயர்ந்து செல்லுவதும், அன்னிய நாடுகளில் தொலைதூரத்தில் வாழும் வாழ்க்கையும் அதிகமாக அவர்களின் நவீன படைப்புகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.

ஒரு மனிதனுக்கு அகத்திலும், புறத்திலும் ஏற்படுகின்ற சொல்லொண்ணாத துயரம் அவன்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை எழுத்தில் தீவிரமான ஈடுபாட்டோடு இடம்பெறும் போது அது மனித குலம் முழுவதற்குமானதாகிறது.

ஃப்ராய்டின் ஆளுமைக் கோட்பாடு:

ஃப்ராய்டின் ஆளுமைக் கோட்பாடு நனவிலி அறுதிப்பாட்டியலை ஆதாரமாகக் (Unconscious determinism) கொண்டதாகும். நனவிலியே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்பது இவரின் கருத்து.

அதாவது குழந்தைப் பருவ அனுபவங்கள் மனித ஆளுமையில் பெரும் பங்கு வகிப்பதாகக் கூறுகிறார்.

அவருடைய உளப்பகுப்பாய்வும் உள் மருத்துவமும் தனிமனித உளவியலை ஆதாரமாகக் கொண்டவையாகும். ஒவ்வொரு மனிதனுடைய ஆளுமைக் கட்டமைப்பும் (Constitution of Personality) தனி மனித வரலாற்றை, அதிலும் குறிப்பாகக் குழந்தை பருவ அனுபவங்களைக் கொண்டு அமைகின்றது என்பதில் ஃப்ராய்ட் தெளிவாக இருந்தார். ஒருவரின் உள்ளம் எப்படி அமைகின்றதோ அதன்படியே அவரின் ஆளுமையும் அமைந்திருக்கும். இக்கருத்தை மூலமாகக் கொண்டு ஆளுமைக் கோட்பாட்டை ஃப்ராய்ட் விவரிக்கிறார்.

ஆசிய நாட்டுச் சிறுவதைகளில் புலம் பெயர்ந்த தமிழர்களின் சமூக வாழ்வியலில் ஃப்ராய்டின் ஆளுமை கோட்பாடு:

மனிதர்கள் பிற மனிதர்கள் நிறைந்த உலகில் பிறக்கிறார்கள். பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான தொடர்புகள், குழந்தையின் செயல்கள், ஆளுமை, நடத்தை, நம்பிக்கைகள் மற்றும் வளர்ச்சியை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க ஏராளமான வாய்ப்பை வழங்குகிறது. ஒரு நபரைப் பாதிக்கும் இந்தச் செயல்முறை சமூகத் தாக்கம் என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைப் பருவத்தில் இருந்து தொடங்கி அவர்கள் சமூகத்தில் முன் நிறுத்தப்படும் போது உளவியல் காரணிகள் பலவற்றால் மாறுபாடு அடைகிறது. புலம் பெயர் தமிழர்கள் அண்டை நாட்டில் வாழ முற்படும் போது, அவர்களது இளமைப் பருவத்தில் உண்டான உளவியல் மாற்றமும் பின்னர் வேற்று நாட்டில் வாழும் சூழல் உண்டாகும் போது ஏற்படும் உளவியல் மாற்றமும் சங்கமித்து அந்தந்த நாட்டு வாழ்வியல் முறைகளில் சிறுகதைகளாகப் பரிணமிக்கும் உளவியல் பொருத்தப்பாட்டை ப்ராய்டின் ஆளுமைக் கோட்பாட்டின் வழி காணலாம்.

இட் (Id) : (உணர்வால் உந்தப்படும் இயல்பு)

நனவிலி நிலையில் செயற்படும் சக்தியாகும். இது பிறப்பிலே உள்ள சக்தியாகும். இன்பம் அனுபவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு “இட்” செயற்படுவதாக இவர் குறிப்பிடுகிறார். “இட்” தான் விரும்பியவாறு செயற்படத் தொடங்குமாயின் அவனது சமூக விழுமியங்களை விட அதுமேல் நோக்கி நிற்கும் தன்மை கொண்டது. மேலும் நன்மை தீமை, நல்லது கெட்டது என்பவை கருதாது திருப்தி அடைதலையே நோக்கமாகக் கொண்டு செயற்படும். “இட்” நிலை பொதுவாக குழந்தைகளிடத்தில் காணப்படும். "இட்" மிருக உணர்விற்கு ஒப்பானதாக இருக்கும் என்கிறார் ஃப்ராய்டு.

“தோணி” என்னும் இலங்கைச் சிறுகதையில் கதைத் தலைவனுக்கு சிறுவயதில் தன் தந்தையுடன் கடலில் உலாவிய மகிழ்ச்சியும், அந்தத் தோணியும் நெஞ்சை விட்டு அகலாத கனவு போன்றது.

தன் தந்தை முதலாளிகளுக்கு மீன் பிடித்துக் கொடுத்து, வேண்டும் பணம் வாங்கிக் கொள்ளும் கடன்காரராகவே இறந்து விட, “தோணி” அவனுக்கு கனவுப் பொருளாகத் தான் இருக்கிறது.

"உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பம்தான், எப்போதாவது, காலம் மாறும் தோணியும் கைக்கு கிட்டும்” (அயலகத் தமிழ் இலக்கியம், தோணி, வ.அ. இராசரத்தினம், ப.எண்:31) என்கிற நம்பிக்கை தந்து கதை முடிகிறது.

இக்கதையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் அந்நிய நாட்டில் (இலங்கை) முதலாளிகளுக்கு என்றுமே விசுவாசமாக இருப்பதும், மீன் பிடித்து கொடுத்து காசு வாங்கினாலும் தன் ஆழ்மனதில் சிறுவயதில் இருந்தே சொந்தமாக தோணி வாங்கி முதலாளியாக ஆக வேண்டும் என்ற உணர்வும், அந்த தீராத சிறு வயது ஆசையும் “இட்” என்ற உளக்கூறு கதைத் தலைவனிடத்தில் பிறப்பிலிருந்தே தோன்றி அவன் ஆளுமையோடு மேலாண்மை செழித்திட வழி கோலுகிறது.

“கற்சிலை” என்ற மலேசியச் சிறுகதையில் தலைப்பே கதை அறிய உதவுகிறது. கற்சிலைக்கு முதுமை ஏது, இளமை ஏது? என்றுமே அப்படியே இருக்கக் கூடியது. பார்த்திபனின் தாய் சமீபத்தில் தன் கணவனை இழந்தவள். அவன் இறந்த சில நாட்களிலேயே பூவுக்கும் பொட்டுக்கும் ஆசைப்பட்டு, தன் முன்னாள் கணவனோடு வாழ முற்படுகிறாள். தோளுக்கு மேல் வளர்ந்த மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு சமூகம் என்ன நினைக்கும் என்ற எண்ணமில்லாமல், பிள்ளைகளைக் கைவிட நினைத்த பார்த்திபனின் தாய்க்கு இருப்பது “இட்” என்ற உளக்கூறு. சமூக விழுமியங்களைப் பற்றிய எண்ணம் இல்லாமல் தான் விரும்பிய வண்ணம் செயல்படத் துடிக்கும் மனநிலையே மேலோங்கி நிற்கிறது.

“திரை கடலோடி தேடியதென்ன” என்ற இலங்கைச் சிறுகதையில் இலங்கையில் போர் நிமித்தம் காரணமாக தன் ஒரே மகனான ஆரூரனை வெளிநாட்டிற்கு அனுப்பி பணம் சேர்த்து வரக் கோரினால், அவனோ சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் தன் சந்தோஷத்திற்காக செலவிடுகிறான். இறுதியில் திருமணம் செய்து வைத்தாலாவது திருந்தி வாழ்வான் என எண்ணினால் தன் உடன் இருக்கும் ஆண் நண்பனையே திருமணம் செய்து வாழ்கிறான்.

அவனது பெற்றோரும் அவனது செயலைக் கண்டு வெளியே சொல்ல முடியாமல் வெட்கி தலை குனிந்து வாழ்வை நடத்துகின்றனர்.

இக்கதையில் தன்னுடைய சுய விருப்பம் ஒன்றே ஆரூரனின் இந்த செயலுக்கு காரணமாகிறது. தனித்தே வெளிநாடு சென்று வாழ்ந்தமையால் உடன் வாழும் பெற்றோரின் மன வருத்தம் பற்றிய கவலையில்லாமல் கலாச்சாரம் பேணாது நன்மை தீமை, நல்லது கெட்டது என்பவை கருதாது திருப்தி அடைதலையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் “இட்” நிலையைக் காண முடிகிறது. பொதுவாக குழந்தைகளிடத்தில் காணலாகும் இந்த உளக்கூறு வீட்டிற்கு ஒரு பிள்ளையாக வளர்க்கப்படும் குழந்தைகளிடத்திலும் காண முடிகிறது.

ஈகோ : Ego

"இட்” மற்றும் சூப்பர் “ஈகோ” இவை இரண்டும் நடைமுறைக்கு அப்பாற்பட்டவை. எனவே இவ்விரண்டிற்குமிடையே சமநிலை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு சக்தியாக “ஈகோ” செயல்படுவதாக ப்ராய்டு குறிப்பிடுகின்றார். "ஈகோ" யதார்த்த உலகில் “இட்” நிலையில் உண்டாகும் ஆசைகளை சமூக ரீதியாக பொருத்தமான வழிகளில் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது.

“நடப்பு” என்ற மலேசியச் சிறுகதையில் மலேசியாவின் கம்போங் நாட்டில் வசிக்கும் நல்லசாமி நடைப்போட்டியில் முதலாவதாக வந்து மலேசியாவிற்கு பெருமை வாங்கித் தருகிறார். அந்தப் புகழ் போதை அவரது மகனான குணசேகரனுக்கு போகும் இடமெல்லாம் பெருமை கொள்ளச் செய்கிறது. அவர் இருக்கக் கூடிய தமிழர் பகுதியை ஜப்பான் கம்பெனி ஒன்று வாங்கி அங்கு இருப்பவர்களை காலி செய்யும் படிக் கூற, குணசேகரனுக்கு அப்போது தான் புரிகிறது.

“அப்பாவின் புகழ் என்றுமே அவருக்கும் நாட்டுக்கும் தான், இயல்பு நிலை வாழ்க்கையில் எதுவும் மாற்றம் தரப் போவதில்லை” (அயலகத் தமிழ் இலக்கியம், நடப்பு, மா.சண்முக சிவா, ப.எண்:187) என்ற வரிகள் புலம் பெயர்ந்த நாட்டில் (மலேசியாவில்) பெரும்பான்மையோருக்கு (இஸ்லாமியர்களுக்கு) கிடைக்கக் கூடிய அங்கீகாரம், அங்கேயே பரம்பரையாய் வாழக் கூடிய தமிழர்களுக்கு கிடைப்பதில்லை.

"ஈகோ" என்ற உளக்கூறு "இட்" டில் இருந்து உருவானாலும் நிஜ உலகின் யதார்த்தத்தை, ஆசைகளை சமூக ரீதியான பொருத்தமான வழிகளில் அடைய முயற்சிக்கும் நல்லசாமியின் மகன் குணசேகரனுக்கு தன் தந்தையின் “புகழ்” என்றுமே தன்னுடையதல்ல. தான் படித்து உயர்ந்தால் மட்டுமே, இந்த அந்நிய சமூகத்தில் வாழ இயலும் என்ற மனநிலையும், ஆளுமைப் பிறழ்வு ஏற்பட்டு மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

“காத்திருப்பு” என்ற இலங்கைச் சிறுகதையில் சோமண்ணன் இலங்கை யாழ்பாணத்திலிருந்து தன் மனைவி இரண்டு குழந்தைகளை விட்டு பிரான்ஸ் நாட்டிற்கு புகலிடமாக வந்து வேலை செய்து வருபவர். தன் சொந்த நாட்டில் நடந்தேறும் போரும், தன் இன மக்களின் அவல நிலையும் அவரை மௌனத்தில் ஆழ்த்தி விடுகிறது. இதனால் உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றார்.

கொஞ்ச நாளிலேயே அவரது மனைவி, குழந்தைகளுக்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமை கிடைத்து அவர்களைக் காண கண்டும் அவரால் முழுமையாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை.

இக்கதையில் சோமண்ணன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் விடிவு கிடைத்தது போல் தன் இனத்திற்கான விடிவு என்றுமே தான் நினைத்தது போல நடவாது என்ற இயலாமையும் ஒன்று சேர்ந்து கிடைத்ததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் திருப்தியையும் உண்டாக்குகிறது.

“கலங்கிய குட்டைகள்” என்ற மலேசியச் சிறுகதையில் பாமாவும், சுகுணாவும் நெருங்கிய தோழிகள். பாமா ஒரு காப்பீட்டுறுதி அலுவலகத்தில் முகவராக சேர்ந்து இப்போது அத்துறை அதிகாரியாக உயர்ந்து நிற்கிறாள். சுகுணாவிற்கு பாமாவின் நடவடிக்கைகள் எதுவும் பிடிப்பதில்லை. அவள் அடுத்த ஆடவருடன் தன் வேலைநிமித்தம் சிரித்துப் பேசுவது ஒன்று மட்டும்தான் அவளது கண்ணை உறுத்துகிறது. ஆனால் குடும்பத் தலைவன் இறந்த பின்னர் அக்காப்பீட்டுத் தொகையை உரிய முறையில் சேர்த்து அதை ஒரு தொழிலாகவும், சேவையாகவும் பார்க்கும் பாமாவின் செயலால் சுகுணாவின் ஆளுமையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அவளும் அக்காப்பீட்டுறுதி நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் அளவிற்கு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் வேலைக்குச் செல்லும் போது பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். நிஜ உலகின் யதார்த்தம் அறிந்து, தன் வேலையைத் தீர்க்கமாக ஏற்று நடத்தும் பெண்கள். உறுதி வெளிப்படுகிறது. சுகுணாவின் ஆளுமைப் பிறழ்வும் நல்ல நிலைக்கு உந்திச் செல்ல வழிகோலும்.

சூப்பர் ஈகோ : Super Ego

மனசாட்சி போன்றது மத நம்பிக்கைகள் பெரியோர் ஆலோசனைகள், சமூக நியமங்கள் ஆகியவற்றால் கட்டியெழுப்பப்பட்டதாகும். "இட்" தானாகவே செயற்பட்டால் மிருகத்தை ஒத்ததாகவே செயற்பட முடியும். "சூப்பர் ஈகோ” சொல்வது போல் செயல்பட்டால் தியாகமும், நேர்மையும் உள்ள துறவி போல் செயற்பட முடியும். யதார்த்தமான கொள்கைகளை விட இலட்சியவாத தரநிலைக்கு பக்குவப்படுத்துகிறது.

“அணி” என்ற இலங்கைச் சிறுகதையில் விக்டர் என்ற தமிழ்க் குடிமகன் தந்தை தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்ற மடமையை மாற்ற நினைத்தவன். இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி வாகை சூடிய போராளி இதைப் பொறுக்காத சிங்களத்தவர், “அம்பட்டனும் (முடி திருத்துபவன்) தேர்தலுக்கு நிற்கிறான்” (அயலகத் தமிழ் இலக்கியம், அணி, எஸ். பொன்னுத்துரை, ப.எண்:57) என்ற சாதிப் பகையைத் தூண்டி விட இரத்தம் என்றுமே சிவப்புதான். ஒரே வர்க்க ஒற்றுமையை சாதியின் பெயரைச் சொல்லி சிதைத்து விட எண்ணும் பிற்போக்கு வாதிகளுக்காக கடைசிவரை தன் எண்ணத்தில் இருந்து மாறாது உயிர் விட்டான்.

தமிழர்களைப் பிரித்து எறிய முயற்சிக்கும் ஒன்று சாதி. சிறுவயதில் இருந்தே ஆழ் மனதில் புதையுண்ட அடக்குமுறை, அதிகாரம், “சூப்பர் ஈகோ” எனும் உளக்கூற்றின் வாயிலாக இலட்சியவாத தரநிலைக்கு விக்டரை கொண்டு சென்று போராட்டம் மேற்கொள்ள தூண்டி இருக்கிறது.

“கனியாத காய்கள்” என்ற மலேசியா சிறுகதையில் முகுந்தன் தன் இளம் வயதில் கண்மணியை நேசித்து கைவிட்டவன், காலம் இருவரையும் சேர்த்து சந்திக்க வாய்ப்பளித்தது. கண்மணி ஒரு சிறந்த ஆசிரியையாகவும், சமூகத்தில் யாவரும் மதிக்கும் சமூக சேவகியாகவும் உயர்ந்திருக்கிறாள்.

சிறுவயதில் உண்டான ஆசையால், வாழ்வை நாசம் செய்து கொள்ளும் பலருக்கு மத்தியில் கண்மணி தனக்குப் பிடித்தது கிடைக்காமல் போனாலும் கிடைத்ததைக் கொண்டு வாழ்வை சிறப்பாக்கி மேலோங்கச் செய்த கண்மணி இலட்சியவாத தரநிலைகளின் அடிப்படையில் முகுந்தனின் பார்வையில் உயர்ந்து நிற்கிறாள்.

முடிவுரை:

ஆசிய நாடுகளான இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளின் சிறுகதையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் சமூக வாழ்வியலை ஆராயும் உளக் கூற்றின் பங்கு எண்ணிலடங்காதது.

உளவியல் அறிஞர் ஃப்ராய்டின் ஆளுமைக் கோட்பாட்டில் காணலாகும். இட், ஈகோ, சூப்பர் ஈகோ எனும் மூன்று நிலைகள் குழந்தைப் பருவம் தொடங்கி அவர்கள் சமூகத்தில் முன் நிறுத்தப்படும் போது உளவியல் காரணிகள் பலவற்றால் மாறுபாடு அடைகிறது. அங்ஙனம் புலம் பெயர்த்து அண்டை மாநாட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்படும் தமிழ்மக்கள் விரும்பியதை அடைய எண்ணும் "இட்" என்ற நிலையும், "ஈகோ" என்ற சமநிலை மனப்பக்குவமும், "சூப்பர் ஈகோ" என்கிற இலட்சியவாத தர நிலைக்குக் கொண்டு செல்லப்படும் மூன்று ஆளுமை நிலைகளும் அந்நாட்டு சிறுகதைப் பதிவுகளில் எங்ஙனம் பொருந்தியுள்ளது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறியமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்

1.           அயலகத் தமிழ் இலக்கியம் சா. கந்தசாமி

2.           ய.சிறுகதைத் தொகுப்பு சு.கமலா (பினாங்கு மலேசியா).

கட்டுரையாளர்கள்:

1.           ஞா. விஜயலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர்.

2.           முனைவர் பா.தமிழரசி, உதவிப் பேராசிரியர், ஆய்வு நெறியாளர், தமிழ்த்துறை, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (த), சிவகாசி

Pin It