மார்க்ஸ் பிறந்தார்!
இன்றைக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கும் முன்பாக (1818 ஆம் ஆண்டு) ஜெர்மனியின் டிரையர் நகரில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு கார்ல் என்று பெற்றோர் பெயர்சூட்டினர். அந்தக் குழந்தையின் குடும்பப் பெயர் மார்க்ஸ்.
மார்க்ஸ் தனது 50 ஆவது வயதில் (1867 ஆம் ஆண்டு) மூலதனம் என்ற மகத்தான நூலை எழுதியிருந்தார். அது உழைக்கும் மக்களின் பார்வையில் அரசியல் பொருளாதாரத்தை ஆய்வு செய்து முன்வைத்தது. அவரது காலத்திலேயே உழைக்கும் மக்களின் பாரிஸ் கம்யூன் (1871ஆம் ஆண்டு, மார்ச் 18 முதல் மே 28 வரை) உருவாகி வீழ்த்தப்பட்டது. அவர் இறந்த 34 ஆண்டுகளில் (1917) ரசியாவில் உழைக்கும் மக்களின் ஆட்சி உருவாக்கப்பட்டது. மார்க்சியம் உலக வரலாற்றை மாற்றும் ஆற்றலாக ஆனது. இன்றைக்கு மார்க்சியம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
எல்லோரையும் போல மனிதக் குழந்தையாகப் பிறந்த ஒருவர் மார்க்சியம் என்ற கருத்தியலையும், அறிவியல் சோசலிசம் என்ற அரசியலையும் வளர்த்தெடுத்த மாமேதையாக எப்படி வளர்ந்தார்?
“மனிதர்கள் வரலாற்றைப் படைக்கிறார்கள், ஆனால், தாம் விரும்பியபடி வரலாற்றைப் படைப்பதில்லை, தமது கடந்த காலத்திலிருந்து தமக்கு வழங்கப்பட்ட சூழ்நிலைகளுக்குள் வரலாற்றைப் படைக்கிறார்கள்” என்று எழுதினார் மார்க்ஸ்.(1)
மார்க்சுக்கு வழங்கப்பட்ட சூழ்நிலைகள் எவை? அவற்றுள் அவர் எத்தகைய வரலாற்றைப் படைத்தார்? அவரால் எதை மாற்ற முடிந்தது? எதை மாற்ற முடியாமல் போனது?
மார்க்ஸ் பிறந்த போது ஜெர்மனியின் அண்டை நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்சிலும் மூலதனமும் கூலி உழைப்பும் என்ற முறை வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது ஜெர்மனியிலும் அது பரவிக் கொண்டிருந்தது. (இன்றைக்கு அது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆலைத் தொழிலாளர்கள், ஐ.டி. தொழிலாளர்கள், கிக் தொழிலாளர்கள், ஏன் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் கூட கூலி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்).
1789ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம் மார்க்ஸ் பிறந்து வளர்ந்த ரைன் பகுதியில் வலுவாக இருந்தது. கல்வியிற் சிறந்த கார்ல் மார்க்ஸ் சமூகத்தில் நிலவும் சிக்கல்களைக் கூர்மையாகப் புரிந்துகொண்டார். ஏழைகளும் உழைப்பாளிகளும் சொத்துடைமையாளர்களால் ஏமாற்றப்படுவதைக் கடுமையாக விமர்சித்தார். சொத்துடைமையாளர்களின் அரசான ஜெர்மனியின் பிற்போக்கு அரசு அவரைத் துரத்தியது. சொந்த நாட்டில் குடியிருக்கக் கூட முடியாதபடி, நாட்டை ஆண்ட பிற்போக்கு சக்திகளால் விரட்டியடிக்கப்பட்டார். அவர் புகலிடம் தேடியது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை முழு வளர்ச்சியடைந்திருந்த இங்கிலாந்தில்.
தனது 30ஆவது வயதில் இங்கிலாந்தில் ஏதிலியாகக் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார் மார்க்ஸ். அதற்கு முன்னரே மாமேதை மார்க்ஸ் பிறந்து விட்டிருந்தார். மார்க்ஸ் என்ற ஆளுமை எவ்வாறு பிறந்தது? உலகைப் புரிந்து கொள்வதற்காக மட்டுமின்றி, அதை மாற்றியமைப்பதற்குமான தனது தத்துவத்தை அவர் எவ்வாறு வளர்த்தெடுத்தார்? உலகெங்கும் உழைக்கும் மக்களுக்கான அரசியலை அவர் எவ்வாறு முன்னெடுத்தார்? அவரது இலக்கியத் திறன்கள் எந்த உலைக்களத்தில் புடம் போடப்பட்டன?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் Рождение гения (Rozhdenie geniia) என்ற நூல் 1968ஆம் ஆண்டு ரசிய மொழியில் வெளியிடப்பட்டது. இதனை எழுதியவர் சோவியத் மார்க்சிய அறிஞர் ஹென்ரி வோல்கவ். இந்தத் தலைப்பின் பொருள் ஒரு மேதையின் பிறப்பு.
இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Birth of a Genius என்ற பெயரில் 1978ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1986ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மார்க்சிய அறிஞரும் மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் நா. தர்மராஜன் இந்த நூலுக்கு “மார்க்ஸ் பிறந்தார்” என்ற தனித்துவமான பெயரைக் கொடுத்துள்ளார். “இதை 'மேதையின் பிறப்பு' என்று மொழிபெயர்ப்பதுதானே சரி என்பது... வாதம். ஆனால், மார்க்சைப் பெருமைப்படுத்தும் வகையில் கவித்துவமாக ‘மார்க்ஸ் பிறந்தார்’ எனும் தலைப்பை நான் கொடுத்திருந்தேன். அதன் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்கியபோது, அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.” என்கிறார், அவர்.(2)
இந்நூலுக்கான துணைத் தலைப்பு கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு. இந்நூலில் நூலாசிரியரின் அறிமுகம்,11 இயல்கள், முடிவுரை உள்ளன.
முன்னுரையில், இந்த நூல் என்ன நோக்கத்தில் எழுதப்பட்டது என்று விளக்குகிறார் ஆசிரியர்:
“இளைஞரான மார்க்சின் தேடல்கள், சிந்தனைகள், உணர்ச்சிக் குமுறல்கள் என்ற உலகத்துக்குள், அவருடைய நெருப்பு போன்ற கருத்துகள் பரிணாம வளர்ச்சியடைந்த படைப்புத் தன்மை கொண்ட சோதனைச் சாலைக்குள் தன்னோடு வாசகரையும் அழைத்துச் செல்வதற்கு, இந்த உலகத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும்படி வாசகரை ஊக்குவிப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார். ஏனென்றால், ஒரு மேதையுடன் ஆன்மிக ரீதியில் கலந்துறவாடுவதற்கு அவருடைய தத்துவத் தேடல்களின் பாதையைப் பின்தொடர்வதைக் காட்டிலும் அதிக வளமான சாதனம் வேறில்லை.”
இளைஞரான ஒவ்வொரு வருக்கும் தேடல்களும் சிந்தனைகளும் உணர்ச்சிக் குமுறல்களும் உள்ளன. மாமேதை என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் தனது இளமைப் பருவத்தில் எத்தகைய மனப் போராட்டங்களையும் அரசியல் போராட்டங்களையும் கடந்து வந்தார் என்று கற்றுக் கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது.
இந்நூலின் 11 இயல்கள் மார்க்சின் பள்ளிப் பருவம் (இயல் 2), கல்லூரி வாழ்க்கை (இயல் 3), மதத்தை மறுத்தலும் முனைவர் பட்டமும் (இயல் 4,5), பத்திரிகைப் போராட்டங்கள் (இயல் 6), குடும்ப வாழ்க்கையும் அரசியல் போராட்டங்களும் (இயல் 7), தொழிலாளர்களுடனான தொடர்புகள் (இயல் 8), ஜென்னியின் பங்கு (இயல் 9), எங்கெல்சுடனான நட்பு (இயல் 10), மூலதனத்தின் தத்துவம் (இயல் 11) ஆகியவற்றை விவரிக்கின்றன.
கிரேக்கத் தத்துவத்தைப் பற்றிய ஆய்வு நூலை எழுதி முனைவர் பட்டம் பெற்றார், மார்க்ஸ். அவர் ஜெர்மனியில், பல்கலைக்கழகப் பேராசிரியராக பணியாற்ற இயலவில்லை. அவர் பத்திரிகையாளராகத் தமது பணி வாழ்வைத் தொடங்கினார். கொந்தளிப்பான அரசியல் சூழலில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் பெல்ஜியத்திலும் இங்கிலாந்திலும் தொழிலாளர்களுடன் தோழமை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். ஐரோப்பாவில் நிகழ்ந்த புரட்சிகர எழுச்சிகளில் ஊக்கத்துடன் பங்கேற்றார்.
இந்த உலகின் நெருக்கடிகளுக்கும் உழைப்பாளிகளின் துயரங்களுக்கும் முடிவு கட்டப் போவது தொழிலாளி வர்க்கம் என்ற முடிவுக்கு வந்த மார்க்ஸ் தொழிலாளர்களின் நிலையைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார்.
- அந்த ஆய்வுக்காக, சுதந்திரமான தத்துவ அறிஞர்கள் அனைவரையும் மார்க்ஸ் பயின்றார்.
கிரேக்க தத்துவ அறிஞர் தேலஸ் முதல் மார்க்சின் சமகால ஜெர்மன் தத்துவ அறிஞர்கள் ஃபாயர்பாஹ், மோஸஸ் ஹேஸ் வரை ஆய்வு செய்தார்.
- பண்டைய எழுத்தாளர்கள் ஹெரடோடஸ் மற்றும் ப்ளுடார்க் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிஸோ மற்றும் தியேர் முடிய எல்லா வரலாற்றாசிரியர்களும் எழுதிய அடிப்படையான நூல்கள் அனைத்தையும் அவர் படித்தார்.
- அரசியல் துறையில், கிரேக்க அறிஞர் பிளாட்டோ முதல் சமகாலத்தில் லெரூ மற்றும் வைத்லிங் முதலிய சமூகக் கற்பனாவாதிகள் வரை அவர்கள் எழுதிய புத்தகங்களையும் படித்தார்.
- பொருளாதாரத் துறையில் ஆடம் ஸ்மித் முதல் பிரெடெரிக் எங்கெல்ஸ் முடிய முக்கியமான அரசியல் பொருளாதார நூல்கள் எல்லாவற்றையும் அவர் ஆராய்ந்தார்.
- இலக்கியச் செல்வத்தின் எல்லாத் துறைகளையும் - லுக்ரெத்சியஸ் காருசின் கவிதையிலிருந்து ஹென்ரிஹ் ஹேய்னெயின் கவிதை முடிய, எஷ்கிலசின் சோக நாடகங்களிலிருந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் முடிய, பிளாட்டோவின் உரையாடல்களிலிருந்து பல்ஸாக்கின் வசனம் முடிய - ஆழ்ந்து படித்தார்.
அது மட்டுமின்றி, இங்கிலாந்து அருங்காட்சியக நூலகத்தில் இருந்து சமகால நாடாளுமன்ற அறிக்கைகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் அறிக்கைகள், மருத்துவ அறிக்கைகள், நிதி நெருக்கடி பற்றிய விசாரணைக் குழு அறிக்கைகள், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைப் பற்றிய ஆவணப் பதிவுகள் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்தார். அவரது நோக்கம், வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயங்கு விதிகளை தொழிலாளி வர்க்கம் புரிந்து கொள்ளும் வகையில் முழுமையாக வகுத்து முன்வைப்பதே!
பல ஆண்டுகள் நீடித்த இந்த ஆய்வுகளின் விளைவுதான், மார்க்சியத்தின் இதயமாக அமைந்துள்ள மூலதனம் நூல். இந்நூல், உழைக்கும் தொழிலாளர்களுக்கும் அவர்களது உழைப்பில் இலாபம் ஈட்டும் முதலாளிகளுக்கும் இடையிலான உறவையும் முதலாளிகளுக்கு இடையிலான போட்டியும் மூலதனத்தைத் திரட்டலும் இட்டுச் செல்லும் நெருக்கடிகளையும் பற்றி விரிவான நுணுக்கமான புரிதலை வழங்குகிறது.
ஹென்ரி வோல்கவின் நூல் மூலதனத்தின் தத்துவம் என்ற தலைப்பில் மூலதனம் நூலின் உள்ளடக்கத்தையும் ஆய்வுமுறையையும் விவரிக்கிறது.
“மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகத்தில் வாழ்கிறது, தொடர்ந்து போராடுகிறது. அது அறிவியல் அறிஞர்கள், தத்துவ அறிஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரின் பணிகளிலும் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும் சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனித குலத்தினருக்குத் துன்பங்களையும் போர்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.” என்று முடிக்கிறார் ஹென்ரி வோல்கவ்.
மார்க்ஸ் என்ற இளைஞர் தன்னை உலக மக்களின் விடுதலைக்கான பணிக்கு எப்படி ஒப்படைத்துக் கொண்டார், அதற்கான திறன்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டார், அதற்காக எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பதை ஹென்ரி வோல்கவின் நூலில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். ஆங்கிலத்திலோ, தமிழிலோ படித்துப் பாருங்கள்.
1. கார்ல் மார்க்ஸ், லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர், 1852
2. நம் வரலாற்றிலிருந்து புரட்சிக்கான பாதையைச் சமைக்க வேண்டும்! - மொழிபெயர்ப்பாளர் நா. தர்மராஜன் நேர்காணல் (https://www.hindutamil.in/news/literature/98997-.html)
ஆங்கில நூல்: Birth of a Genius - The Development of the Personality and World Outlook of Karl Marx by Genrikh Volkov
Original edition : Progress Publishers, 1978
Current edition : Chinthan Books, 2024 Price: Rs.270/-
தமிழ் நூல்: மார்க்ஸ் பிறந்தார் - கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு - ஹென்ரி வோல்கவ்
மொழிபெயர்ப்பாளர் : நா. தர்மராஜன், எம்.ஏ.
மூலப் பதிப்பு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1986
இப்போதைய பதிப்பு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை / விலை: ரூ.220/-
- மா.சிவகுமார்