கொடுத்து வைத்த குட்டிப்பெண் - எலிசபெத் ஹொஜ்சன்
வெள்ளைத் தலைமயிர், வெள்ளைத்தோல் கொண்ட
கொடுத்துவைத்த குட்டிப்பெண்
நீ இலகுவாய்ச் சேரலாம்.
அதிவிசேட கவனிப்புகளுக்காய்
ஒர் குட்டி இளவரசி பிரிக்கப்படுகிறாள்
நீ எழுதப் படிக்கவும்
கொடிக்கு மரியாதை செலுத்தவும்
மேன்மை தங்கிய மாகாராணியாரைக் கனம் பண்ணவும்
நாங்கள் உனக்குக் கற்றுத் தருவோம்.
விரைவில் உன் குடும்பத்தை கம்பி வேலிகளுக்கு
அப்பாற் தெரியும் அக்கறுத்த மூஞ்சிகளை
நீ மறந்துவிடுவாய்
கறுப்புக் காட்டுமிராண்டி இனத்தை
வென்று வாகை சூடிய சமாதானம் பற்றி
நீ பள்ளிக்கூடத்தில் புதியதோர் வரலாறு படிப்பாய்.
உன் தாய்க்காக அழக்கூடாது.
நாங்கள் உன்னில் பொழிந்த அன்பிற்காக
பிரார்த்தனை செய். நன்றியோடு இரு
எத்தனை கொடுத்து வைத்த குட்டிப்பெண் நீ
கங்காரு - டான்சி ரோஸ் நபல்ஜாரி
சுனையிலிருந்து
நீர் மெல்லச் சலசலத்து ஓடுகிறது
மலைகளின் அடிவாரத்தை நோக்கி.
சிவந்த மலர்கள் வளரும்
வாசனையை முகர்ந்த வண்ணம்
கிளையொன்றில் கூடி அமர்ந்திருக்கின்றன பறவைகள்
துள்ளித் திரிந்ததில் களைப்புற்ற கங்காரு
ஓர் நிழலில் கால் நீட்டிச் சாய்ந்து கிடக்கிறது
நீரின் சலசலப்பைக் கவனித்தபடி.
தண்ணீர் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
மிகச் சந்தோஷமாயிருக்கிறது அது
குறிவைத்து ஈட்டி எறிய மனிதர் எவரும் அங்கில்லை.
ஏகாந்தத்தில்.
சிவந்த மலர்களின் மணத்தை மோந்து அனுபவித்து மிதந்து
களைப்பு மிக மேவ
அது நித்திரைக்குப் போகிறது மெல்ல.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அணங்கு - மார்ச் 2007
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
- விவரங்கள்
- ஆழியாள்
- பிரிவு: அணங்கு - மார்ச் 2007