வாய்மொழிக் கதையாகத் தொடங்கி, ஓலைச்சுவடிகளையும் அச்சு நூல்களையும் கடந்து, இன்று தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகம் வரை பயணித்திருக்கும் மகத்தான காவியம் ராமாயணம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும் அழியாமல் நிற்கும் இக்காப்பியம், மனித வாழ்வின் அறநெறி, உறவுகளின் மேன்மை மற்றும் உயர்ந்த பண்புகளைத் தலைமுறைகள் தோறும் எடுத்துரைத்து வருகிறது.
உலகின் பல மொழிகளில் பல்வேறு வடிவங்களில் ராமாயணம் மறுபடைப்பாக உருவாகியுள்ளது. தமிழில் அதற்கு நிலையான காவிய வடிவத்தை அளித்தவர் கம்பன். வால்மீகி ராமாயணத்தின் சாரத்தைத் தமிழரின் மொழிநயம், பண்பாடு, கற்பனை வளம் ஆகியவற்றோடு இணைத்து அவர் படைத்த ‘கம்பராமாயணம்’, தமிழ் இலக்கியத்தின் உச்சப் படைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
கம்பனுக்குப் பிறகும் ராமாயணம் தமிழில் பல வடிவங்களில் தொடர்ந்து மறுபடைப்பாக வெளிவந்துள்ளது. அந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியாக, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கவிஞர் வாலி, ‘அவதாரபுருஷன்’ என்ற நூலின் மூலம் ராமாயணத்தை நவீன கவிதை நடையில் புதிய தலைமுறைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் கம்பனையும், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாலியையும் ஒரே வாசிப்பில் சந்திக்கச் செய்வதே முனைவர் மா. அய்யாத்துரை எழுதிய ‘கம்பனும் கவிஞர் வாலியும்’ என்ற நூலின் தனிச்சிறப்பு. கம்பனை ஆய்வுப் பொருளாகக் கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், இரு கவிஞர்களின் சொல்லாட்சி, கற்பனை மற்றும் கவிதை நடைகளை நுணுக்கமாக ஒப்பிட்டு ஆராய்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, பத்து நூற்றாண்டுகளின் இடைவெளியில் ஒரே காவியம் எவ்வாறு இரண்டு பெரும் கவிஞர்களின் படைப்பாற்றலில் புதிய வடிவங்களைப் பெற்றுள்ளது என்பதே இந்த நூலின் மிகப்பெரிய சிறப்பாகும். மொழி காலத்தோடு மாறியிருந்தாலும், கவிதையின் உயிரும் உணர்வும் எவ்வாறு தொடர்கின்றன என்பதை ஆசிரியர் மேற்கொண்டுள்ள ஒப்பீடுகள் தெளிவாக உணர்த்துகின்றன.
அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த சில ஒப்பீடுகளை இக்கட்டுரையின் வழியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதுமையின் முதல் அறிகுறி
அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து களைப்படைந்த தசரதன், முதுமை தன்னை நெருங்கிவிட்டதை உணர்கிறான்; இனி ஆட்சிப் பொறுப்பை இராமனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறான்.
அவனியைக் காத்த மன்னன் ஒருநாள் கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்க்கிறான். அப்போது, பின்னாளில் உலகிற்கு எண்ணற்ற துன்பங்களை விளைவிக்கப்போகும் இராவணனைப் போலவே, தன் காதோரத்தின் ஓரத்தில் ஒரு நரைமுடி தோன்றி (வளைந்து) இருப்பதைக் கண்டு அதிர்கிறான்.
இதனை 12-ஆம் நூற்றாண்டின் கம்பன் இவ்வாறு பாடுகிறார்:
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்குஓர் நரையதுஆய் அணுகிற்றாம் என
பாங்கில் வந்திடு நரைபடிமக் கண்ணாடி
ஆங்கு அதில்கண்டனன் அவனிக் காவலன்.
(அயோத்தியா காண்டம் – மந்திரப் படலம்)
இதே காட்சியை, 21-ஆம் நூற்றாண்டில் வாலி தனது 'அவதார புருஷன்' நூலில் புதுக்கவிதை நடையில் இவ்வாறு எழுதுகிறார்:
நிலைக் கண்ணாடி முன்னின்று
தலை ஒழுங்குபடுத்தினான் தசரதன்.
காதோரம் நரைமுடியொன்று
கண்ணில் பட்டது –
அதாவது முதுமை தன் முதல் விதையை நட்டது.
மரணம் அனுப்பும் முதல் கடிதம்தான் முதுமை.
அந்தக் கடிதம் வந்ததைக் காட்டிவிட்டது வெண்முடி.
இனியும் எதற்கு என் வெண்முடிமேல் பொன்முடி?
ஒரே காட்சி, ஒரே உணர்வு. ஆனால், வெளிப்பாட்டில் காலத்தின் மாற்றம் தெளிவாகப் புலப்படுகிறது.
கம்பன் செறிவும் செம்மையும் மிக்க காவிய மொழியில் அந்த உணர்வை வடிக்கிறார். வாலியோ அதே கருத்தை அன்றாட வாழ்வின் எளிய சொற்களாலும் புதுக்கவிதையின் இயல்பான ஓட்டத்தாலும் வாசகரின் மனதில் பதிய வைக்கிறார். "மரணம் அனுப்பும் முதல் கடிதம்தான் முதுமை" என்ற வாலியின் உருவகம், நவீன தமிழ்க் கவிதையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த வரிகளில் ஒன்றாகும்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் காவியத் தமிழிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதுக்கவிதைத் தமிழ்வரை மொழி எவ்வாறு பயணித்திருக்கிறது என்பதைக் காட்டும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஒப்பீடு அமைந்துள்ளது.
ஒரே சொல்லில் இரு பொருள்
இராவணனின் தங்கை சூர்ப்பணகையைக் கம்பனும் வாலியும் தத்தமது கவிதை நடையில் சிறப்பாக அறிமுகப்படுத்துகின்றனர். இந்த ஒப்பீடு, தமிழ்ச் சொற்களின் பொருள் வளத்தையும் கவிஞர்களின் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்துகிறது.
கம்பன், சூர்ப்பணகையின் அழகையும் வஞ்சக மனதையும் ஒரே நேரத்தில் சுட்டிக்காட்டுகிறார்:
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி,
அம் சொல் இளமஞ்ஞை என, அன்னம் என மின்னும்,
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
(ஆரண்ய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்)
இறுதி வரியில் வரும் "வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்" என்ற சொற்களில், சூர்ப்பணகையின் கவர்ச்சியும் அவளுடைய ஆபத்தான இயல்பும் ஒருசேர வெளிப்படுகின்றன.
அதே பாத்திரத்தை, வாலி மிக எளிமையான புதுக்கவிதை நடையில் அறிமுகப்படுத்துகிறார்:
இவளுக்கும் செம்மைக் குணங்களுக்கும்
சென்மப் பகை.
இவள் சுவாசிப்பது ஈமப்புகை.
சில சொற்களிலேயே சூர்ப்பணகையின் கொடிய குணத்தை வாலி தீவிரமாகப் பதிவு செய்கிறார். அதன்பின் இராமன், "நீ யார்?" என்று கேட்க, சூர்ப்பணகை தன்னை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறாள்:
கைலையைத் தன்கையில் எடுத்த
காவலன் இராவணன் கூடப்பிறந்தவள்.
காமம் உன்மேல் கொண்டதனாலே,
கண்ணா! உனக்கு நான் கூடப்பிறந்தவள்.
இங்கே "கூடப்பிறந்தவள்" என்ற சொல் இரு பொருளில் அமைந்திருப்பது வாலியின் கவித்திறனை வெளிப்படுத்துகிறது.
முதலில், அது இராவணனுடன் உடன்பிறந்த சகோதரி என்ற நேரடிப் பொருளைத் தருகிறது. அதே நேரத்தில், "உன்னோடு கூடிப் பிறக்க (இணைய) விரும்புகிறவள்" என்ற காதல் ஏக்கத்தையும் மறைமுகமாக உணர்த்துகிறது. ஒரே சொல்லுக்குள் இரு பொருள்களைப் பொதிந்து, சூர்ப்பணகையின் காம உணர்வையும் மொழி நயத்தையும் வாலி வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையில் பிறந்த காதல்
கம்பராமாயணத்தில் காலத்தைக் கடந்து இன்றும் வாசகர்களின் நினைவில் நிலைத்திருக்கும் வரிகளில் மிகவும் புகழ்பெற்ற ஒன்று: "அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்."
மிதிலையில் இராமனும் சீதையும் முதன்முதலாக ஒருவரை ஒருவர் காணும் அந்தக் கணத்தைக் கம்பன் அழியாத கவிதையாக வடித்துள்ளார். பின்னர் அசோக வனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதை, அந்த முதல் சந்திப்பை நினைவுகூருகிறாள். அந்த நினைவின் பின்னணியில் கம்பன் எழுதிய வரிகள்:
எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும், நிலைபெறாது; உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்.
(பாலகாண்டம் – மிதிலைக் காட்சிப் படலம்)
தமிழ்க் காதல் இலக்கியத்தில், ஒரு பார்வையின் ஆற்றலை இவ்வளவு சுருக்கமாகவும் செம்மையாகவும் பதிவு செய்த வரிகள் அரிது.
இதே உணர்வை, வாலி தனது ‘அவதார புருஷன்’ நூலில் சீதையின் நினைவலைகளாக இவ்வாறு வடிக்கிறார்:
நிலத்தில் வில்லேந்தி
நீலமேகம் நடக்கிறது – அது
மஞ்சள் நிலா இருக்கும்
மாடத்தைக் கடக்கிறது.
நீலமேகம் நிமிர்ந்து பார்க்க,
குளிர்நிலா குனிந்து பார்க்கிறது...
இராமனை நீலமேகமாகவும், சீதையை நிலவாகவும் உருவகப்படுத்தும் வாலியின் கற்பனை எளிமையானதாயினும் மனதை நெகிழச் செய்கிறது. கம்பன், கண்கள் சந்திக்கும் அந்த ஒரு கணத்தில் காதலின் பிறப்பைச் செதுக்குகிறார். வாலியோ, அதே காதலை இயற்கை உருவகங்களின் வழியாக மென்மையாக மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.
போரிலும் மனிதநேயம்
எதிரியிடத்திலும் மனிதநேயத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உயர்ந்த அறநெறியைக் கம்பன் மிக அழகாகப் பதிவு செய்யும் இடம் இது.
மாபெரும் வீரனான இராவணன், அறத்திற்கு மாறான செயல்களால் இறுதியில் போர்க்களத்தில் அனைத்தையும் இழந்து நிற்கிறான். ஆயுதங்களும், தேரும், மகுடமும் இழந்த அவன் தலைகுனிந்து, கால்விரல்களால் மண்ணைக் கிளறியபடி நிற்கும் அந்தக் காட்சையைக் கம்பன் உருக்கமாக வர்ணிக்கிறார். அப்போது இராமன் கூறும் வரிகள்:
ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; இன்று போய் போர்க்கு
நாளை வா' என நல்கினான் – நாகு இளங் கமுகின்
வானை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.
(யுத்த காண்டம் - முதற்போர் புரி படலம்)
போர்க்களத்தில் நிராயுதபாணியாக நிற்கும் எதிரியை வெல்வது வீரமல்ல; அவனுக்கு மீண்டும் போரிடும் வாய்ப்பளிப்பதே உண்மையான வீரத்தின் அடையாளம் என்பதை இந்த வரிகள் உணர்த்துகின்றன.
இந்தக் காட்சியை, ‘அவதார புருஷன்’ நூலில் வாலியும் புதுக்கவிதை நடையில் உயிரோட்டமாகப் பதிவு செய்கிறார்:
ஈழக் காவலனின் கைவில்லை முறித்தான்.
பத்துக் கிரீடங்களைப் பறித்தான்.
வீணைக் கொடியை ஒடித்தான்.
வெண்கொற்றக் குடையைப் பொடித்தான்.
சமருக்கு வந்தவனின் மமதையை மாய்த்தான்.
இலங்கைப் பட்டணத்தின் புரவலன் –
ஓர் இரவலனாகி,
ஒன்றுமே தோன்றாது ஒரு விநாடி
இதயம் நின்றுபோய் நின்றான்.
எம்பிரான் அவனை
"இன்று போய், நாளை வா" என்றான்.
கம்பன் காவியத்தின் செறிவான மொழியில் இராமனின் அறத்தை உயர்த்திக் காட்டுகிறார். வாலியோ அதே உணர்வை நவீன தமிழின் எளிமையிலும் வேகத்திலும் வாசகரின் மனதில் பதிய வைக்கிறார்.
முடிவுரை
"இன்று போய், நாளை வா" என்பது ஒரு போர்க்கள உரையாடல் மட்டுமல்ல; தமிழர் பண்பாட்டின் அறக் குரலும் கூட. எதிரி என்றாலும், அவன் நிராயுதபாணியாக நிற்கும் நிலையில் அவனைக் கொல்வது வீரமல்ல; அதற்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யாமல் அறநெறியை நிலைநிறுத்துவதே உண்மையான வெற்றி என்பதை இரு கவிஞர்களும் ஒரே சிந்தனையில் வெளிப்படுத்துகின்றனர்.
கம்பன் ராமாயணத்தைக் காவியத் தமிழின் உச்சமாக உயர்த்தினார். வாலி, அதே காவியத்தை நவீன தமிழின் எளிமையான கவிதை நடையில் இன்றைய தலைமுறைக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தார். பத்து நூற்றாண்டுகளின் இடைவெளி மொழியை மாற்றியிருக்கலாம்; ஆனால், கவிதையின் உயிரையும், மனிதநேயத்தையும், அறத்தின் அழகையும் மாற்றவில்லை.
அதனால்தான் கம்பனிலிருந்து வாலி வரை நீளும் இந்தப் பயணம், ஒரு காவியத்தின் பயணம் மட்டுமல்ல; தமிழ்மொழியின் தொடர்ச்சியான கவிதைப்பயணமும் ஆகும்.
நூல்: கம்பனும் கவிஞர் வாலியும்
நூல் ஆசிரியர்: முனைவர் மா. அய்யாத்துரை
பதிப்பகம்: பென்டகன் பப்ளிகேஷன்ஸ்
பக்கங்கள்: 110
விலை: ₹130
தொடர்புக்கு: 9443773520
- அ.தமிழ்ச்செல்வன்