தமிழில் அறிவியலின் கற்பனைத் தன்மைகள் பழம்பெரும் இலக்கியங்களில் குறியீடுகளாகக் காணப்பட்டாலும், தனித்த இலக்கிய வகையாக நவீனக் காலத்தில் வலுவடைந்தது. குறிப்பாக, சுஜாதாவின் படைப்புகள் அறிவியல் புனைவுகளை மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்தின. எனினும், பெரும்பாலான தமிழ் அறிவியல் புனைகதைகள் தொழில்நுட்ப வியப்பை மையப்படுத்திச் சமூகம், அரசியல் சார்ந்த பரிமாணங்களைப் பின் தள்ளியுள்ளன. இச்சூழலில் தமிழ்மகன் எழுதியுள்ள ‘அமில தேவதைகள்’ என்னும் கதை தொழில்நுட்ப நவீனத்துவம் மற்றும் ஆணாதிக்க அதிகாரம் இணையும் போது பெண்ணின் உடல், மனம் எவ்வாறு அரசியலாக்கப்பட்டுக் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
அமில தேவதைகள் கதைக்கரு
நவீன அறிவியலின் பேராசையும் ஆணாதிக்கச் சுரண்டலும் இணைந்து பெண்களின் உடல் அடையாளத்தை எவ்வாறு சிதைக்கின்றன என்பதே இக்கதையின் மையக்கருவாகும். தன் காதலனின் சுயநலத்தால் கருக்கலைப்பு செய்யத் துணியும் ஆஷா, இறுதியில் இரக்கமற்ற மருத்துவரின் எதிர்மறையான ஆராய்ச்சிக்கு இரையாகிறாள். மரணத்தை வெல்லும் முயற்சியில் பெண்களின் மூளையையும் நினைவுகளையும் வெறும் ஆராய்ச்சிப் பொருளாகக் கருதிச் சிதைக்கும் மருத்துவர் சந்திரசேகரின் செயல், இயற்கையின் விதிகளுக்கு முரணான வன்முறையாகும். இவ்வாறு இயற்கையின் சுழற்சியை மாற்றத் துடிக்கும் நவீன அறிவியலின் ஆதிக்கமும் பெண்களின் உடல் அரசியலையும் மருத்துவ ஆராய்ச்சியின் மூலப்பொருட்களாக மாற்றப்படுவதும் இக்கதையில் கூறப்படுகின்றன.
வெவ்வேறானதும் நடக்கக் கூடியதுமான எதிர்கால உலகத்தைப் பற்றிப் பகுத்தறிவோடு ஆராய்வதாக அறிவியல் புனைகதைகளை, “அறிவியல் புனைகதைகள் கனவுகளோ, கற்பனைகளோ மட்டுமில்லை. கூர்ந்து கவனித்தால், எதிர்காலத்தில் இப்படியும் நடக்கக்கூடும் என்ற தீர்க்க தரிசனம் இருக்கும்”1 என்று நா.இரத்தினக்குமார் கூறுகிறார்.
கதைக்களம் மற்றும் சூழல்
கதையின் தொடக்கமே மருத்துவமனை சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட ஒரு தனித்தீவு போலச் செயல்படுவதைக் காட்டுகிறது. ஆஷா என்ற இளம் பெண் அந்தச் சாலையில் நடக்கும் போது உணரும் தனிமை மற்றும் இயல்புக்கு மீறிய சூழல் பெண்கள் பொது வெளியில் உணரும் பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.
இக்கதையில் மருத்துவமனையின் தோற்றம் என்பது, “ஐந்து நட்சத்திர ஓட்டல் வரவேற்பறை தோரணையில்”2 நவீன மருத்துவத்தின் வணிகமயமாக்களை இங்கு உணர்த்துகிறது. எங்கு மருத்துவம் வணிகம் ஆகிறதோ அங்கு நெறிமுறைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. குறிப்பாக, பெண்களின் உடல் லாபம் ஈட்டும் ஒரு பொருளாக மாறுகிறது. கண்ணாடிச் சுவர்கள், அமைதியான சூழல், வாசனை இவை அனைத்தும் ஒரு மயக்க நிலையை உருவாக்கி உள்ளே நடக்கும் குற்றங்களை மறைக்கும் திரையாகச் செயல்படுகின்றன.
ஆஷா என்ற கதைமாந்தர் அறிமுகப்படுத்தப்படும் இடம் முக்கியமானது. அவள் இருபத்துநான்கு வயது நிரம்பியவள்; படித்துக் கொண்டிருப்பவள் என்று கதையில் குறிப்பிடப்படுகிறது. அவள் மருத்துவமனைக்குள் நுழையும்போது நடக்கும் விசாரணை அவளின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது.
வரவேற்பு அறையில் இருக்கும் செவிலியர், “24 வயசா? படிக்கிறியா? ஏன் திநகர்ல எந்த ஹாஸ்பிடலும் கிடைக்கலையா?”3 என்று கேட்கும் சூழலில் ஆஷா ஏதோ ஒன்றை மறைக்க வேண்டிய நோக்கத்திற்காக இங்கு வந்திருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது. சமூகம் பெண்களின் பாலியல் தீர்வுகள் அல்லது உடல்நிலைச் சார்ந்த சிக்கல்களை மறைமுகமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆஷாவின் மறைமுகத் தேவையே அவளை மருத்துவர் சந்திரசேகரின் வலையில் சிக்க வைக்கிறது. பெண்கள் தங்கள் உடலின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் முதல் புள்ளி சமூகம் அவர்கள் மீது திணிக்கும் அவமானம் ஆகும்.
அறிவியலால் உண்டாகும் ஆணாதிக்கம்
இக்கதையில் மருத்துவர் சந்திரசேகர் எனும் கதைமாந்தர் நவீன அறிவியலின் போர்வையில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கக் குறியீடாக விவரிக்கப்படுகிறார். சமூகத்தில் உள்ள பயனற்ற பெண்கள் என்று இவர் கூறும் கருத்தைப் பெண்ணினத்தின் மீதான ஆணாதிக்கச் சமூகத்தின் ஆழ்மனப் பார்வையை வெளிப்படுத்துகிறது. பயன்பாடு அல்லது தகுதி என்பதை ஒரு பெண்ணின் குடும்பப் பங்களிப்பை வைத்தே (திருமணம், குழந்தைப்பேறு) இந்தச் சமூகம் தீர்மானிக்கிறது. இந்த அளவுகோலுக்குள் பொருந்தாத பெண்கள் அறிவியல் ஆய்விற்கான மூலப்பொருட்களாக மாற்றப்படுவதைக் கதை விவரிக்கின்றது. சந்திரசேகரின் ஆராய்ச்சி என்பது எளிய பெண்களின் உயிரை அழிப்பதனால் அறிவார்ந்த ஆண்களான காந்தி, ஐன்ஸ்டீன் போன்றோரின் நினைவுகள் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார். 'அறிவு என்பது ஆணுக்குரியது, உடல் என்பது பெண்ணுக்குரியது' என்ற பழமைவாதக் கருத்தாக்கத்தின் நவீனமாக இக்கருத்து அமைந்துள்ளதை,
“பெண் உடலைப் பெண்ணிடம் இருந்து பிரிக்கும் சூழ்ச்சியை எதிர்ப்பது.”4 என்ற கருத்துடன் ஒத்துக் காணப்படுகின்றது. பெண்ணின் உடலை ஓர் உயிரியல் இயந்திரமாக மட்டுமே கருதும் இப்போக்கு அவர்களின் உணர்வுகள் மற்றும் தனிமனித அடையாளங்களை முற்றிலுமாக நிராகரிக்கிறது. மருத்துவ வரலாற்றில் கருத்தடைச் சோதனைகள் முதல் பல்வேறு மருந்தாய்வுகள் வரை பெண்களின் அனுமதி இன்றி அவர்களின் உடல் பரிசோதனைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட உண்மைகளைச் சந்திரசேகர் கதாபாத்திரம் நினைவூட்டுகிறது. இங்கு அறிவியல் என்பது மனிதக் குல மேம்பாட்டிற்கானது என்பதைத் தாண்டி ஆண்களின் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான ஒரு கருவியாகச் செயல்படுவதை இக்கதையின் வழிக் காண முடிகிறது.
உரையாடல் மற்றும் காட்சிகளின் அரசியல்
ஆஷா செவிலியரிடம் கெஞ்சும் காட்சி, பெண்களின் மருத்துவத் தேவைகள் சமூகக் குற்றமாகப் பார்க்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. கருக்கலைப்பிற்காக அவள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வந்திருக்கிறாள் என்பதை உறுதிபடுத்திய பிறகு சமூகத்தின் பார்வையில் அவள் ஒழுக்கத்தை மீறியவளாகப் பார்க்கப்படுகிறாள். இந்தத் தனிமை என்பது மருத்துவர் சந்திரசேகர் போன்ற கழுகுப் பார்வை கொண்டவர்களுக்கு எளிதாக இரையாக்குகிறது. பெண்கள் எப்போது தங்கள் சிக்கல்களைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்களோ, அப்போது சமூகம் அவர்களைத் தனிமைப்படுத்துகிறது. அவர்கள் மீதான வன்முறையும் சாத்தியமாகிறது. ஆஷா மயங்கி விழும்போது, “ராஸ்கல் என்று முணகினாள்”5 இந்தச் சொல் அவளது எதிர்ப்பின் குரலாக வெளிப்படுகிறது. அவள் தன்னைச் சுற்றி உள்ள அதிகார அமைப்பையும் மருத்துவத்துறையின் போர்வையில் ஒளிந்திருக்கும் வன்முறையையும் அடையாளம் காண்கிறாள். ஆனால் அந்த எதிர்ப்புக் குரல் ஊசி மருந்தால் அடக்கப்படுகிறது. அவளைப் பைத்தியம் அல்லது மயங்கிய நிலையில் இருப்பவள் என்று முத்திரை குத்தி அவளது சாட்சியம் அழிக்கப்படுகிறது.
“அந்த ரூம்ல யாரும் இல்ல மேடம்”6 என்று கூறுவது, ஆஷாவின் இருப்பையே மறுப்பதாகும் பெண்களின் இருப்பு பொய்யானது என்று கட்டமைக்கப்படுவது பெண்ணிய வரலாற்றின் ஒரு தொடர்நிகழ்வாகும். கிறித்தவ அடையாளத்தைக் கொண்ட மேரியின் உடலில் இந்து அடையாளத்தைக் கொண்ட மகாலட்சுமியின் நினைவுகள் திணிக்கப்படுகின்றன. மருத்துவர் சந்திரசேகர் இதைக் குறிப்பிடும்போது மேரியின் மூளையில் இருந்த தகவல்களை அழித்து விட்டு மகாலட்சுமியின் தகவல்களை ஏற்றிய போது சிக்கல் ஏற்பட்டது என்கிறார். அதாவது, மேரியின் மனதில் இருந்த மத நம்பிக்கைகளுக்கும் மகாலட்சுமியின் பழக்கவழக்கங்களுக்கும் இடையே ஒரு மோதல் நடக்கிறது. இது பெண்ணின் அடையாளத்தை வன்முறையாக மாற்றும் செயலாகும். நவீன அறிவியல் பெண்ணின் மனநிலை, சமூகம், கலாசாரம் சார்ந்த நிலையை அழிக்கின்றது.
தீவிரவாதப் பெண்ணியம்
தீவிரவாதப் பெண்ணியம் என்பது பெண்ணியத்தின் ஒரு முக்கியமான பிரிவாகும். பெண்களின் ஒடுக்குமுறை சமூகத்தின் மேலோட்டமான சட்டம், கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகளில் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையாக உள்ள ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பிலேயே வேரூன்றி உள்ளது எனக் கருதும் பெண்ணியக் கோட்பாடாகும். பெண்களின் உடல், இனப்பெருக்கம், பாலியல், பொருளாதாரம் போன்ற நிலைகளில் ஆணாதிக்கம் எவ்வாறு அதிகாரம் செலுத்துகிறது என்பது தீவிரவாதப் பெண்ணியத்தை மையமாகக் கொண்டு ஆராயப்படுகிறது. இதன் கொள்கைகளாக ஆணாதிக்க நிறுவனங்கள், பெண்களின் உடல் மீதான கட்டுப்பாடு, பெண்கள் போகப் பொருளாக்கப்படுதல், பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த நிலையில் தீவிரவாதப் பெண்ணியம் ஆராயப்படுகின்றது. 1960-களில் தொடங்கிப் பெண்ணியத்திற்கும் அதன் அமைப்பிற்கும் புது விளக்கங்களை அளித்தது. தீவிரவாதப் பெண்ணியக் கோட்பாட்டில் அணுகும்போது அதன் வேராக இருப்பது பெண்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர் என்பதாகும். அவர்களது கருத்துப்படி பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த ஒடுக்குதல் பொருளாதார அடிப்படையிலமைந்த ஒடுக்குதலை விடச் சமூகத்தின் தன்மைகளை அதிக அளவில் பாதிக்கின்றது என்பதாகும். தமிழ்ச் சூழலில் தீவிரவாதப் பெண்ணியத்தின் முன்னோடியாகப் பெரியாரைக் கருதலாம். மேலை நாடுகளில் தீவிரவாதப் பெண்ணியம் (Radical feminism) உருவாவதற்கு முன்பே அவர் ஆணாதிக்கத்தின் வேர்களாகக் கருதிய திருமணம், கருத்தரிப்பு, கற்பு சார்ந்த சிலவற்றைக் கடுமையாக எடுத்துக் கூறினார். இக்கதையைத் தீவிரவாதப் பெண்ணியக் கோட்பாட்டை வைத்து அணுகும் போது அறிவியல் நடுநிலையானது என்ற நம்பிக்கை மறுக்கப்படுகின்றது. பெண்களின் உடல் தங்களின் அனுமதி இன்றியே நேரடியாக மருத்துவ அறிவியல் ஆய்வுக்கான பொருளாக மாற்றப்படுகிறது. மருத்துவரின் ஆய்வில் பெண்களின் உடல் மனித அடையாளத்தை இழந்து பயனற்ற உயிரியல் பொருளாக இருப்பதை இக்கதையில் காண முடிகின்றது. இது தீவிரவாதப் பெண்ணியத்தில், பெண்கள் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகின்றார்கள் என்ற கருத்துடன் நேரடியாக ஒத்துச் செல்கின்றது.
தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஆஷா தனது கருவைக் கலைக்கத் துணியும் சூழலில் அவள் ஒரு குற்றவாளியைப் போலத் தலைமறைவாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தைச் சமூகம் உருவாக்கியுள்ளது. சுரேஷ் தனது முன்னேற்றத்திற்காக ஆஷாவின் கருவைக் கலைக்கச் சொல்வது, பெண்ணின் உடலை தனது தேவைக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு விளைவுகள் ஏற்படும் போது அவளைத் தனியே தவிக்க விடுவது தீவிரவாதப் பெண்ணியம் சுட்டும் ஆணாதிக்கச் சுரண்டல் ஆகும். பெண்களின் உடல் என்பது ஆண்களின் விருப்பத்திற்காகவும் சமூகக் கட்டமைப்பிற்காகவும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி இங்கு விளக்கப்படுகிறது.
“தாழ்த்தப்பட்ட பொண்ணான மேரி பிராமின் பொண்ணு மகாலட்சுமியா மாறி இருக்கிறதால்”7 இக்கருத்து, மேரி என்ற செவிலியரின் நினைவுகளை மூளையில் இருந்து அழித்துவிட்டு அதில் மகாலட்சுமி என்ற பெண்ணின் நினைவுகளை ஏற்றுவது ஒரு பெண்ணின் தனித்துவமான அடையாளத்தைச் சிதைக்கும் செயலாகும். பெண்களின் மண்டை ஓட்டை உடைத்துத் தண்டுவடத்தோடு கூடிய மூளைகளைச் சிப்களில் அடைத்து வைத்திருப்பது பெண்களை வெறும் உயிரியல் இயந்திரமாக மாற்றுவது ஆணாதிக்கச் சிந்தனையின் உச்சமாகும். இது, “One is not born, but rather becomes a woman” (பெண் என்பவன் பிறப்பவள் அல்ல; உருவாக்கப்படுபவள்)8
என்று கூறப்படுகிறது. பெண் இனத்திற்கான கற்பிதங்கள் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் இழந்து உருவாக்கப்படுகிறவள் பெண் என்ற கருத்து முழுவதுமாக ஒத்துக் காணப்படுகின்றன. திருமணத்திற்கு முன் கர்ப்பமான ஆஷா போன்ற பெண்கள் அல்லது மேரி போன்ற எளிய செவிலியர்கள் சமூகத்தில் கைவிடப்பட்டவர்களாகக் கருதப்படுபவர்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்ற நிலை இன்று வரைக்கும் நடைமுறையில் இருக்கின்றது. இது தீவிரவாதப் பெண்ணியத்தின் முக்கிய வாதமான பெண்களை வெறும் பொருளாக வகைப்படுத்துதல் என்பதன் நேரடி வெளிப்பாடாகும்.
சூழலியப் பெண்ணியம்
இலக்கியத்திற்கும் இயற்கைக்குமான உறவுகள் குறித்த உரையாடல்கள் நீண்டகாலமாக இருந்து வந்தாலும், இயற்கை - இலக்கியம் - பெண் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு குறித்த சொல்லாடல்கள் இரண்டாயிரத்துக்குப் பிறகு தீவிரமடைந்தன. இயற்கையை மனிதர்கள் தன் வயப்படுத்தியதால் சூழலியல்(Ecology) என்ற பார்வை தோன்றியது. மனிதர்களின் அகம், புறம் சார்ந்து இருக்கக் கூடிய செய்திகளை இயற்கையோடு பொருத்திப் பார்த்து அதனை விமர்சிப்பதனால் சூழலியத் திறனாய்வு(Eco-Criticism) நடைமுறையில் வந்தது. பெண்களும் இயற்கையும் ஒரே மாதிரியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களின் விடுதலையும் இயற்கையின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதால் குழலியப் பெண்ணியம்(Eco Feminism) என்ற சொல் தோன்றி, பிறகு கோட்பாடாக வலுப்பெற்றது. இச்சொல் தி போனே(D eaubonne) என்பவரால் 1974-இல் அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, இந்தச் சொற்றொடர் மே ஃபிரான் சாய்ஸ் டி பார்னால்(Fran Chais de Parnaul) என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1980-களில் வளரத் தொடங்கியது.
‘தமிழ் இலக்கியத்தில் சூழலியப் பெண்ணியம்’(Eco feminism Discourse in Tamil) குறித்து ஆய்ந்தவர் பேராசிரியர் வனத்து அந்தோணி ஆவார்.இந்நூலில் இயற்கை மற்றும் பெண்ணியத்தை இணைத்துத் தமிழ் இலக்கியங்களில் நிலவும் சூழலியல் பார்வையைப் பகுப்பாய்வு செய்துள்ளார். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை சூழலியப் பெண்ணியத்தின் தாக்கம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
“இயற்கையும் பெண்ணும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்று. இரண்டையும் ஆண் அடிமைப்படுத்தியதால்தான் அனைத்து விளைவுகளும் ஏற்படுகின்றன. இயற்கையும் பெண்ணும் அடிப்படையில் ஆக்கசக்திகள் ஆண்கள் இரண்டையும் நசுக்கும் அழிக்கும் சக்திகள்”9
ஆஷாவின் கருவுறுதல் என்பது இயற்கையான சுழற்சி. ஆனால், சுரேஷ் தனது பொருளாதார முன்னேற்றத்திற்காக அந்த இயற்கை நிகழ்வைத் தடுத்து, அவளைக் கருக்கலைப்புச் செய்யத் தூண்டுவது இயற்கையின் வளங்களைச் சுரண்டிவிட்டுத் தூக்கி எறியும் முதலாளித்துவ மனப்பான்மைக்கு ஒப்பானது. நிலத்தைச் சுரண்டும் ஆணாதிக்கம், பெண்ணின் உடலையும் ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே (Commodity) கருதுகிறது.
தமிழ்மகன் இக்கதையின் மூலம் அறிவியல் புனைவு எனும் வகைமையைச் சமூக விமர்சனத்திற்கான ஒரு கூர்மையான ஆயுதமாக மாற்றியுள்ளார். இது பெண்ணிய இலக்கியப் பரப்பில் ஒரு தனித்துவமான பங்களிப்பாக அணுகப்பட்டுள்ளது.
சான்றெண் விளக்கங்கள்
1. மணவை முஸ்தபா, தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம், ப.13
2. தமிழ்மகன்,100 சிறுகதைகள், ப.760
3. மேலது, ப.761
4. முனைவர் அரங்க மல்லிகா, பெண் மைய வாசிப்பும் அரசியலும், ப.7
5. மேலது, ப.763
6. மேலது, ப.763
7. மேலது, ப.775
8. Simone De Beauvoir,The Second Sex, Pg.273
9. நா.இரத்தினக்குமார், திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும், ப.30
துணை நூல் பட்டியல்
1. அரங்க மல்லிகா, பெண்ணியக் கோட்பாடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை, பதிப்பு ஆண்டு, 2006
2. இரா பிரேமா, பெண்ணியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, பதிப்பு ஆண்டு, 1994
3. இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ், பெண்ணியக் கோட்பாடுகள், https://iniyavaikatral.in
4. நா.இரத்தினக்குமார், திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும், கயல்கவின் பதிப்பகம் சென்னை, முதல் பதிப்பு பன்னாட்டுத் தரப் புத்தக எண்: 978-93-85109-59-1
5. மா.பத்மப்பிரியா, சூழலியப் பெண்ணியத்திறனாய்வு, முத்துக் கமலம் இணையதளம், ஆய்வுக்கட்டுரை, 2020
6. பெண்களும் சூழலியலும் சில முக்கிய அடிப்படைக் கேள்விகளும் பதில்களும், https://www.hindutamil.in
7. Simone De Beauvoir,The Seconds Sex, Translated and Edited by H.M.Parshley, first publish in Great Britain, 1953
கட்டுரையாளர்கள்: வெ.ரேவதி, தமிழ்த்துறை, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி, தாம்பரம், சென்னை-600059.
& முனைவர் து. மேஷாக் (ஆய்வு நெறியாளர்) தமிழ்த்துறைத் தலைவர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி,தாம்பரம், சென்னை - 600059.