“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்பார் மகாகவி பாரதி. திருவள்ளுவர் திருக்குறளைத் தமிழ்மொழியில் படைத்திருந்தாலும் அந்நூலுள் பேசப்படும் விழுமியங்கள் உலகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுமையான நிலையில் அமைந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே மகாகவி வள்ளுவனாரைத் தமிழ்நாடு தம்மிடத்திலேயே போற்றிப் பாதுகாத்து தமக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாடாமல் உலகத்திற்கு வழங்கி அதனால் பெரும்புகழை ஈட்டிக் கொண்டது எனப் பாராட்டி உரைத்தார்.
திருக்குறளின் பொதுமைப் பண்பின் காரணமாகவே பல்வேறு சமயத்தினரும் பல்வேறு கொள்கை சார்ந்தவர்களும் இது எம்முடைய நூல் என்று சொந்தம் கொண்டாடி மகிழ்கின்றனர். கடந்த இருபது நூற்றாண்டுகளில் தமிழிலக்கிய இலக்கண நூல்கள் எவையும் பெறாத தொடர்ச்சியான வாசிப்பு வரலாற்றையும் பயன்பாட்டு வரலாற்றினையும் திருக்குறள் பெற்றுள்ளது. சிலப்பதிகாரம், மணிமேகலை தொடங்கித் தமிழின் அனைத்துக் காப்பியங்களும் திருக்குறளின் கருத்துக்களை வழிமொழிந்து உரைத்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கின் அற இலக்கியங்கள் தொடங்கித் தமிழின் அனைத்து நீதிநூல்களும் திருக்குறளை உள்வாங்கிச் செரித்தே நீதிநெறிகளை வழங்கியுள்ளன. இடைக்காலத்தில் தோன்றிய தமிழின் உரையாசிரியர்களும் திருக்குறளைப் போற்றிப் புரக்கத் தவறவில்லை. ஆக, திருக்குறளின் தொடர்ச்சியான வாசிப்பு மரபுக்குச் சாட்சியங்களாகத் தமிழின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இலக்கியங்கள் வரை திகழ்கின்றன என்பதில் ஐயமில்லை.
வேதநெறி தானென்பார் வேத வாணர்
விறன் மிகுந்த திருச்சைவர் ஆகமத்தின்
போதநெறி தானென்பார் அருகர் புத்தர்
பூம்பிடக நூலென்பார் பொழுதும் ஓயாது
ஓதுநெறி தானென்பார் விவில்ய நூலார்
உயரொழுக்க விதியென்பார் உலக வாணர்
யாதுநெறி தானெனினும் அஃதே யாக
இசைத்தனரால் வள்ளுவம் முப்பா னூலே
இப்பாடலில் சீர்காழி சிவ.கண்ணுசாமி ஐயா பல்வேறு தத்துவ நிலையினரும் திருக்குறளுக்குச் சொந்தம் கொண்டாடும் வல்லடி வழக்கினை வைத்தே திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கின்றார்.
ஓர் இலக்கியம் எழுதப்பட்ட காலத்தில் பொதுவாக அதற்கு உரை எழுத வேண்டிய தேவை இருந்திருக்காது. நூலாசிரியனுக்கும் வாசகனுக்குமான கால இடைவெளி அதிகமாக அதிகமாக அந்த இலக்கியத்திற்கு உரை தேவைப்படுகின்றது. அதற்குக் காரணம் காலந்தோறும் சொற்களின் வழக்கு மாறுகின்றது சில சமயங்களில் சொற்களின் பொருளே மாற்றமடைகின்றன. இவ்வாறான சூமலில் வாசகன் மூல நூலின் பொருளை உணர்ந்துகொள்ள உரைகள் தேவைப்படுகின்றன. இது பொதுவான நியதி. ஆனால் திருக்குறளுக்குக் காலந்தோறும் மிகப்பலவான உரைகள் தோன்றியதற்குக் ஏழு சீர்களில் அமைந்த அதன் சுருங்கிய வடிவமும் செறிவான சொற் கட்டமைப்புமே காரணம் எனலாம். மேலும் தமிழ்ச் சமூகத்தில் காலந்தோறும் ஏற்பட்ட சமூக, அரசியல், சமய மாற்றங்களும் உரைகள் பல்கிப் பெருகக் காரணங்களாய் அமைந்தன.
அருட்செல்வர் மா.அ.சுந்தரராஜன் ஐயாவின் 'வள்ளுவன் வழியில் நின்ற வாழ்வு' என்னும் இந்நூல் நூலாசிரியர் எட்டாவது படைப்பாகும். நூலாசிரியர் மா.அ.சுந்தரராஜன் அடிப்படையில் ஒரு தணிக்கையாளர். அதுமட்டுமன்றி வழக்கறிஞர், சமூக சேவகர், ஆன்மீக அறப்பணியாளர், இலக்கியவாதி, மேடைப் பேச்சாளர், நூலாசிரியர் முதலான பல்வேறு பரிமாணங்கள் அவருக்குண்டு. சமுதாயப் பணிகளுக்காகவும் இலக்கியப் பணிக்காகவும் இவர் பெற்றுள்ள விருதுகள் மிகப்பல. குறிப்பாக, இலக்கியக் கேசரி விருது, தமிழ்ச்செம்மல் விருது, கலைமாமணி விருது, பாரதி பணிச்செல்வர் விருது, தமிழ்ப்பணி சுடர்மணி விருது, முகவைக் கம்பன் விருது, வள்ளல் சடையப்பர் விருது, சாதனைச் சிகரம் விருது, சேதுநாட்டுச் செந்தமிழ் விருது முதலான விருதுகளைக் குறிப்பிடலாம். விருதுகள் ஒரு பக்கம் இருக்க மனிதநேயம் மிக்க மாண்பாளராகவும், பழகுதற்கினிய பண்பாளராகவும் இவர் உயர்ந்து நிற்பதே இவரின் தனிச்சிறப்பு.
காலங்கள் கடந்தாலும், திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் புதிய புதிய பரிமாணங்களோடு தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. கடலில், ஆழ்கடலில்தான் நன்முத்துகள் கிடைக்கும். அதைப்போலத் திருக்குறளையும் ஆழ்ந்து கற்றால்தான் படிக்கப் படிக்கக் குறளில் தெளிவும் ஆற்றலும் உண்டாகும். இதற்கு முன்பு வெளிவந்துள்ள அறிஞர்களின் திருக்குறள் உரைகளைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு ஆழமான அறிவு தேவைப்படுகிறது. ஆனால் இந்த அவசர உலகத்தில் எவரும் ஆழ்ந்து கற்க இப்பொழுதெல்லாம் முனைப்பு காட்டுவதில்லை. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டுதான் இந்நூலை நான் எழுத முற்பட்டேன். ஒவ்வொரு அதிகாரத்திலும் ஐந்து ஐந்து குறட்பாக்கள் எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தக் குறட்பாக்களுக்கு அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் படியான வகையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கமளித்துள்ளேன்.
என்று இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் நூலின் நோக்கத்தையும் அமைப்பையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
'வள்ளுவன் வழியில் நின்ற வாழ்வு' என்னும் இந்நூல் ஒரு திருக்குறள் உரை நூல் அன்று. தேர்ந்தெடுத்த குறளுக்கு உரிய சொற்பொருளையோ பொழிப்புரையையோ எழுதுவது நூலாசிரியரின் நோக்கமன்று. ஆனால் தேர்ந்தெடுத்த குறட்பாக்களின் வழியாகத் தமது சிந்தனைச் சிதறல்களை அவர் பதிவுசெய்ய விரும்புகிறார். அதற்கு ஒரு புணைபோல் குறட்பா அவருக்குப் பயன்படுகிறது. அவரது உரைப்போக்கினை நான்கு வகைகளில் நாம் வகைப்படுத்த முடியும்
- உற்றது உரைத்தல்
- விரித்து உரைத்தல்
- ஒத்தது உரைத்தல்
- வருவித்து உரைத்தல்
உற்றது உரைத்தல் என்பது தாம் எடுத்துக்கொண்ட குறளின் பொருளைக் கருத்துரை போல வழங்குவது. விரித்துரைத்தல் என்பது குறளின் பொருளைக் கருத்துரையாக மட்டும் வழங்காமல் விரிவுரை போல விவரித்துக் கூறுவது. ஒத்தது உரைத்தல் என்றால் எடுத்துக்கொண்ட குறளின் கருத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள், கதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை விவரித்துக் கூறி விளக்குவது. வருவித்து உரைத்தல் என்பது குறளில் பொருண்மையோடு நேரடித் தொடர்பில்லை என்றாலும் அதனை ஒட்டிய சிந்தனை என்ற நிலையில் சமூக அவலங்களை விளக்குவது, கருத்துரைப்பது, அறிவுறுத்துவது போன்ற நிலையில் சொல்லப்படும் விளக்கங்கள் இவ்வகையில் அடங்கும்.
இன்றைய காலக் கட்டத்திற்குப் பொருந்திய வகையில் வாழும் மனிதர்களுக்கு நெருக்கமாக திருக்குறளைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலைப் படைத்துள்ள மா.அ.சுந்தரராஜன் அவர்கள் பலவகையிலும் புதுமைப் படைப்பாக இதனை உருவாக்கியுள்ளார். இந்நூலின் தனித்தன்மைகளாகப் பினவருவனவற்றை நாம் பட்டியலிட முடியும்.
- சமகால வாழ்க்கைக்கு அணுக்கமாகத் திருக்குறளைக் கொண்டு வருதல்.
- அன்றாட மக்கள் பேச்சு வழக்குக்கு நெருக்கமான மொழிநடையைக் கையாண்டு விளக்கமளித்தல்.
- மாறுபாடுகளையும் முரண்பாடுகளையும் சமரசமின்றிப் பதிவுசெய்யும் முறைமை.
- சமூக, அரசியல் விமர்சனங்களைத் துணிச்சலோடு எடுத்துரைத்தல்.
- பழைய சிந்தனைகள் என்றாலும் தேவைப்படும் இடங்களில் அதனை வலியுறுத்தும் துணிச்சல்.
- மனித சமூகம் மேம்படவேண்டும் என்ற உண்மையான அக்கறையோடு கருத்துரைகளை வழங்குதல்
மணக்குடவர், பரிமேலழகர் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்கள் வரையிலுமான திருக்குறள் உரைகளை வாசிக்காமல் திருக்குறளுக்குப் புத்துரை வழங்க முற்படுவது சாத்தியமில்லை. நூலாசிரியரும் திருக்குறளை, அதன் உரைகளை ஆழ்ந்து வாசித்த பின்னரே இப்புத்துரையை வழங்க முற்பட்டுள்ளார் என்பதனை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.
இனி நூலாசிரியரின் குறள் விளக்கவுரைகள் சிலவற்றைப் பார்ப்போம். திருக்குறள் அறத்துப்பாலின் கடைசி அதிகாரம் ஊழ் என்பதாகும். ஊழ் என்பது வினைப்பயன் அதாவது உயிர்கள் முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்யும் நல்வினை, தீவினைகளுக்கு ஏற்றவகையில் நமக்கு விதிக்கப்பட்டது. இதனை பால், நியதி, முறை, தலையெழுத்து என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். திருவள்ளுவர் ஊழிற் பெருவலி யாவுள என்று ஊழினை வலியுறுத்துபவர் அதே சமயம் ஆள்வினையால் –முயற்சியால் ஊழையும் வெல்லலாம் என்று ஒருபக்கம் நம்பிக்கையையும் ஊட்டுவார். இனி, நூலாசிரியர் ஊழிற் பெருவலி யாவுள என்ற குறட்பாவுக்குத் தரும் விளக்கத்தைப் பார்ப்போம்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (குறள்-380)
விளக்கம்: ஒருவனுக்கு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்தும் அவனைப் பாதுகாக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்தாலும் அவன் உயிரை யாராலும் காப்பாற்ற முடியாது. குறித்த நேரத்தில் அவன் உயிர்போகும் என்று விதி எழுதியிருந்தால் அது நடந்தே தீரும். இதுதான் ஊழின் வலிமையாகும். பகீரதனின் வாரிசான பரீக்ஷித்து மகாராஜா அவர்களுக்கு நாகம் கடித்துச் சாவார் என்ற சாபம் இருந்ததால் அவர் உயிரைக் காக்க எவ்வளவோ பாதுகாப்பு கொடுத்தும் அவர் சாப்பிடும் மாம்பழத்தில் இருந்த பூநாகம் மூலமாக அவருக்கு மரணம் உண்டானது என்று படிக்கிறோம். இந்தக் கதையானது ஊழ்வினை வலுவானது, உலகில் ஊழைவிட சக்திவாய்ந்த வேறு ஆயுதம் இல்லை என்று கூறுவதாகும். ஆனால் இன்றைய காலத்தில் இந்த ஊழ்வினைத் தத்துவம் சமுதாய மேம்பாட்டிற்கு மற்றும் அதன் வளர்ச்சிக்கு உதவாது என்றுதான் இன்றைய அறிஞர்கள் வாதிடுகின்றனர். திருவள்ளுவர் இதனை அழுத்தமாகச் சொல்லியிருப்பதால் அவர் காலத்தில் ஊழ்வினைக் கோட்பாடு உயர்ந்து நின்றது என்பதற்கு இக்குறளே சாட்சியாகும். இந்தக் காலத்தில் ஊழ்வினைத் தத்துவத்தைக் கூறினோம் என்றால் மக்கள் மத்தியிலே தாழ்வு மனப்பானமையும் சோம்பேறித்தனமும் வளர்ந்துவிடும். ஊழ் என்பது மனிதகுல வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு அணை. அதை உடைத்தெறிந்து திறமைகளின் அடிப்படையிலேயே வளர்ச்சியைக் காண்பது உத்தமம்.
நூலாசிரியரின் இந்தக் குறள் விளக்கத்தினைக் காணும்போது அவரின் சமுதாய நோக்கமும் புத்தாக்கச் சிந்தனையும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். குறளின் நேரிய பொருளையும் கூறி அதற்கு ஏந்தான ஒரு இதிகாசக் கதைத் துணுக்கையும் கூறியதோடு நில்லாமல் திருவள்ளுவரின் நம்பிக்கை அதுவே ஆயினும் இன்றைய சூழலில் ஊழை நாம் வலியுறுத்த வேண்டாம் என்பதனையும் கூறுகின்றார்.
மற்றுமோர் சான்று, அறத்துப்ப்பாலில் இடம்பெற்றுள்ள பல குறட் பாக்களுக்கு விளக்கம் கூறிவரும் நூலாசிரியர் தேவைப்படும் சில அதிகாரங்களுக்கு மட்டும் அதிகாரத்திற்கான முன்னுரைபோல் சில பல செய்திகளைப் பதிவுசெய்கின்றார். அப்படிப்பட்ட அதிகார முன்னுரைகளில் துறவு என்ற அதிகாரத்திற்கு அவர் வரைந்துள்ள முன்னுரையின் ஒரு பகுதியை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
துறவு என்பது பற்றற்ற உணர்வு. அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற ஆசைகளை விட்டுவிட்டு ஆண்டவனின் திருவடியே சரணம் என்று கிடப்பது துறவு ஆகும். துறவில் இரண்டுவகை உண்டு. ஒன்று இல்லறத்திற்கு முன்பே உலக பந்தங்களை உதறிவிட்டு வெளியில் வந்துவிடுவது. அடுத்தது, இல்லறத்தில் இருந்துவிட்டு இல்லற தர்மத்தைத் துறந்துவிட்டுப் பேரின்பத்தை நாடித் துறவியாவது. துறவுக்கு நிலையாமை குறித்த விழிப்புணர்வு அவசியமானது. அதனால்தான் நிலையாமைக்குப் பின்னால் இந்தத் துறவு அதிகாரத்தை வைத்துள்ளார்.
இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றின் நிலையாமையை உணர்ந்து பிறவிப் பெருங்கடலைக் கடந்து பேரின்பம் அடைய துறவு ஒன்றே சிறந்த வழி ஆகும். இன்றைய காலத்தில் துறவு என்ற பெயரில் பல கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. துறவு கொண்டவனுக்கு உணவு, உடை, வாகன வசதிகள் போன்றவை ஆடம்பரமான முறையில் இருக்கின்றன. அந்தக் காலத்தில் துறவு மேற்கொண்டவர்கள் சிவிகையில் பயணித்தும் காலநடையாக நடந்தும் ஆன்மீகத்தைப் பரப்பினார்கள். துறவுத் தன்மைக்கு ஒரு மரியாதையும் மதிப்பும் இருந்துவந்தது. அன்று ஆன்ம சுகத்துக்காகத் துறவறம் மேற்கொண்டார்கள். இன்றே ஆடம்பர வாழ்க்கைக்காக துறவை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால், நம்மிடம் விழிப்புணர்வு இல்லை. அன்று ஆசைகளும் தேவைகளும் குறைவாக இருந்தன. ஆனால் இன்று ஆசைகளும் தேவைகளும் அளவுக்கதிகமாக உள்ளன. அதனால்தான் துறவிகள் என்ற போர்வையில் ஆண்களையும் பெண்களையும் சீரழித்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வள்ளுவர் காட்டிய துறவை மேற்கொண்டால் இறைவனின் திருவடியை அடைவோம்.
இந்த அதிகார விளக்கம் நமக்குச் சில உண்மைகளைத் தெளிவுபடுத்துகின்றன நூலாசிரியர் அறநெறிகளின் மீது காட்டும் ஈடுபாடும் சமூக அக்கறையும் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றது. அவரது அறச்சீற்றத்தின் நியாயத்தை நாமும் உணர்ந்து கொள்கிறோம். துறவின் மேன்மை உணர்த்தப்படுகிறது. போலித் துறவுகள் அம்பலப் படுத்தப் படுகின்றன.
ஈராயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க அறநூல் என்றாலும். காலத்தோடு பொருத்திப் பார்த்து வாசிக்க வேண்டியதன் தேவையை இந்நூல் மிகச் சிறப்பாக எடுத்துரைக் கின்றது. நாம் குறிப்பிட்ட இரண்டு பகுதிகளும் சான்றுகள்தாம். நூலின் அகத்தே இன்னும் மிகப்பல அரிய சிந்தனைகள் விரிவியுள்ளன. காலத்தோடு பொருந்திய வகையில் திருக்குறளை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்னும் நூலாசிரியர் மா.ஆ. சுந்தரராஜன் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
எல்லாப் பொருளும் இதன்பால் உள, இதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்
என்று திருக்குறளைச் சிறப்பித்தார் மதுரைத் தமிழ்நாகனார். காலந்தோறும் வாசிக்க வாசிக்கப் புதிய புதிய சிந்தனைகளை வாரி வழங்கிக் கொணடேயிருக்கும் திருக்குறளின் பெருமைக்கு இந்நூல் ஒரு புதிய அணிகலன். தமிழுலகம் ஏற்றுப் போற்ற வேண்டும் என்பதே எனது பெருவிருப்பு.
- முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி-8