கவிதைகள், புனைகதைகள் மட்டுமே இலக்கியப் படைப்புகள் இல்லை. அவைகளுக்கும் அப்பால் கட்டுரைகள் என்ற வகையில் மிகப்பலவான படைப்பு இலக்கியங்கள் உள்ளன. ஏனோ தெரியவில்லை தமிழில் எழுதப்படும் கட்டுரை இலக்கியங்களுக்குப் படைப்பிலக்கிய அந்தஸ்து கிடைப்பதில்லை. நான் இங்கே குறிப்பிட விரும்புது கட்டுரை இலக்கியங்களை, இலக்கியக் கட்டுரைகளை இல்லை. இலக்கியக் கட்டுரைகள் திறனாய்வு, ஆராய்ச்சி முதலான வகைப்பாட்டில் அடங்கும். ஆனால் கட்டுரை இலக்கியங்கள் படைப்பிலக்கியத் தகுதியைப் பெறத்தக்க இலக்கிய வகைமை ஆகும். உலக இலக்கியங்களில் ஆகச்சிறந்த கட்டுரை இலக்கிய கர்த்தாக்கள் பலர் உள்ளனர். தமிழில் அத்தகைய படைப்பாளிகள் கொஞ்சம் அரிது. தமிழர்களின் நீண்ட நெடிய கவிதை மரபுகளே அதற்குக் காரணமாயிருக்கலாம்.

கட்டுரை இலக்கியம், உரைநடை இலக்கிய வடிவங்களில் தனித்தன்மை மிக்கது. ஒரு பொருள் பற்றிச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை என்பர். ‘விவாதித்து விவரிப்பதே’ கட்டுரையின் பண்பு என்பார் கா.சிவத்தம்பி. இந்த விளக்கங்கள் எல்லாம் செய்திக் கட்டுரைகளுக்குப் பொருந்தும். கட்டுரைகளில் படைப்பிலக்கியத் தகுதியைப் பெறுவதும் தனித்தன்மை மிக்க இலக்கியமாக மதிக்கத்தக்கதுமான கட்டுரைகள் தன்னுணர்ச்சிக் கட்டுரைகளே. ஆங்கிலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் மிகுதி. ESSAYS என்று குறிப்பிடத்தக்க இலக்கியங்கள் இவைகளே. தமிழில் இவ்வகைக் கட்டுரை இலக்கியங்கள் அதிகமில்லை. அல்லது இலக்கியத் தகுதி பெறுகிற அளவிற்குக் கட்டுரைகள் அதிகம் எழுதப்படவில்லை என்று குறிப்பிடலாம். அண்மைக் காலமாகத்தான் தமிழிலும் இவ்வகைக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அதிலும் குறிப்பாக வலைப்பதிவுகள், முகநூல் முதலான சமூக ஊடகங்களின் வழியாகப் பலரும் ESSAYS என்று ஆங்கில இலக்கிய உலகம் குறிப்பிடும் தன்னுணர்ச்சிக் கட்டுரைகள் பலவற்றைத் தொடர்ந்து எழுதிவருகின்றனர். தோழர் ராசி.அழகப்பனின் 'சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்' என்ற இத்தொகுப்பு தன்னுணர்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பாக கட்டுரை இலக்கியமாக வெளிவருவது தனிச் சிறப்பிற்குரியதாகும்.

எழுத்தாளர் ராசி.அழகப்பன் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் தொடக்கத்தில் ஊடகத்துறை, எழுத்துத்துறை இரண்டிலும் சமகாலத்தில் காலடி பதித்தவர். வட தமிழகத்தின் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ராயம்பேட்டை என்னும் சிற்றூரில் எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் பயின்ற காரணத்தாலும் எழுத்து, ஊடகம், இலக்கியம் முதலான துறைகளின் மீதான நாட்டத்தாலும் சென்னையிலேயே தங்கிவிட முடிவுசெய்து பெரும் போராட்ட வாழ்க்கையை எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையிலும் எழுத்துத் துறையிலும் திரைப்படத் துறையிலும் சாதித்துக் காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் ஆவார். பதினைந்து வயதில் தமது கவிதைப் பயணத்தைத் தொடங்கிய ராசி.அழகப்பன் தற்போது பதினைந்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்களைப் படைத்தளித்துள்ளார். சிறுகதைத் துறையிலும் ஆழமாகக் கால் பதித்துள்ள இவர். பல்வேறு அமைப்புகள் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வென்று பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். தினமலர் நிருபராக ஊடகத்துறையில் நுழைந்த நூலாசிரியர் பின்னர் தாய் வார இதழின் துணை ஆசிரியர், நடிகர் கமலஹாசன் நடத்திய மய்யம் இதழின் ஆசிரியர் எனப் படிப்படியாக ஊடகத்துறையிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.

ராசி.அழகப்பன் அவர்களின் திரைப்பயணமும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் தொடங்கி மைக்கேல் மதன காமராசன், குணா, மகளிர் மட்டும், தேவர் மகன், விருமாண்டி எனத் தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களுக்குத் உதவி இயக்குநராகப் பணியாற்றி யுள்ளார். மாஸ்டர் தேவராஜ், குகன், வண்ணத்துப் பூச்சி முதலான திரைப்படங் களையும் இயக்கியுள்ளார். அவற்றுள் வண்ணத்துப் பூச்சி என்ற திரைப்படம் தமிழக அரசின் விருதினைப் பெற்றுச் சாதனை புரிந்தது.

எழுத்தாளர் ராசி.அழகப்பன் தற்போது தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராக இலக்கிய மேடைகளிலும், முற்போக்கு அமைப்புகளின் அரங்குகளிலும் பங்காற்றிவருகிறார். பேச்சுக்கலை, எழுத்துத்துறை, ஊடகத்துறை, திரைப்படத்துறை எனப் பல்துறை வித்தகராக வலம்வருவது அவரின் தனிச்சிறப்பு. “தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" (குறள்-619) என்ற திருக்குறளை மெய்ப்பித்து வருபவராக அழகப்பன் திகழ்கிறார்.

'சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்' என்ற இந்நூலில் இருபத்தாறு கட்டுரைகள் உள்ளன.. நீதிபதி சந்துரு தொடங்கி, திரைப்பட இயக்குநர் அரசியல் செயற்பாட்டாளர் அமீர் வரையிலான இருபத்தாறு சக மனிதர்களின் ஆளுமை குறித்த உரைச் சித்திரங்களைக் கொண்டதாக இந்நூல் அமைக்கப் பட்டுள்ளது. நூலில் இடம் பெற்றுள்ள இருபத்தாறு கட்டுரைகளும் இரண்டு தளங்களில் இயங்குகின்றன. மேலே நம் கண்ணுக்குத் தெற்றெனப் புலப்படும் தளத்தில் இருபத்தாறு ஆளுமைகளின் அறிமுகமும் அவர்களின் உயர்ந்த பண்புகளும் நூலாசிரியர் அழகப்பனுக்கும் அவர்களுக்குமான தோழமையும் விரித்துரைக்கப் படுகின்றன. நூலின் இரண்டாவது தளம் ஆழ்தளம், அத்தளத்தில் மேலே விவரித்த ஆளுமைகள் குறித்த விவரணைகளின் ஊடாக ராசி.அழகப்பன் தம்முடைய வாழ்க்கைப் பதிவுகளை ஊடுபாவாக நெசவு செய்துள்ளார். அந்த ஆழ்தளம் நூலாசிரியரின் தன்வரலாறு போல் அமைந்துள்ளது. இந்தச் செய்நேர்த்தி அலாதியானது. நூலாசிரியர் தம்முடைய வாழ்க்கைக் கதையைச் சொல்லாமல் சொல்லும் அழகு வாசகர்களை வெகுவாக ஈர்க்கக்கூடியது. தம்முடைய வாழ்க்கையில் தாம் எதிர்கொண்ட, பழகிய, நேசித்த, உதவிய, துணைநின்ற நண்பர்கள், உறவினர்கள், நீதிபதி, ஆசிரியர், பேராசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், திரைப்பட நடிகர், ஓவியர், சமூகச் செயற்பாட்டாளர், இலக்கியவாதி, இதழாசிரியர் முதலான இருபத்தாறு நபர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு அந்தச் சிகர மனிதர்களின் வாழ்வியலையும் அவர்கள் பின்பற்றிய வாழ்வியல் விழுமியங்களையும் நமக்குச் சுவைபட எடுத்துரைக் கின்றார் ராசி.அழகப்பன்.

ராசி.அழகப்பன் பார்வையில் சிகரம் தொட்ட மனிதர்கள் யார்? யார்? என்பதற்கு அவர் தமது முன்னுரையில் தரும் விளக்கத்தினை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நாம் கற்றுக் கொள்ள, அல்லது நம் வாழ்க்கைக்கு வழிகாட்ட, துன்பங்கள் பகிர்ந்து கொண்டு மீண்டுஎழ, சக தோழமை, சக மனமாய் மாறி நெஞ்சில் அவரது பெயரை உச்சரிக்கும் போது எழும் சிலிர்ப்பை ஏற்படுத்து கிறவர் எவரோ.. அவரை நெகிழ்ந்து சிகரம் தொட்டவர் என நான் உணர்ந்து வெளிப்படுத்துகிறேன்.

நடைமுறை உலகில் உச்சரித்துப் பொருள் கொள்கிற சிகரங்களை நான் தவிர்த்து விட்டு, என் மனதின் உணர்வுகளில், உரிமையோடு உட்புகுந்து எண்ணங்களில் உயர்ந்து நிற்கிறவர்களை சிகரங்கள் என்று உலகிற்கு எடுத்து இயம்புகிறேன். (முன்னுரை, சந்திப்பில் கிடைத்த சிகரங்கள்)

இந்நூலில் ராசி.அழகப்பன் குறிப்பிடும் சிகரங்கள் என்போர் பிரபலங்களோ சாதனை யாளர்களோ அல்லர். அவருடைய வாழ்க்கைக்கு வழிகாட்டிய, தோழமை பாராட்டிய, இன்ப துன்பங்களில் பங்கேற்றுத் துணைநின்ற ஆளுமைகளையே சிகரங்கள் எனக் குறிப்பிடுகின்றார் என்பதை இந்த முன்னுரைப் பகுதியின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

இன்னாது அம்ம இவ்வுலகம்!
இனிய காண்க அதன்இயல் புணர்ந்தோரே! (புறம்- 164)

என்பார் சங்க இலக்கியப் புவலர் பக்குடுக்கை நன்கணியார். இந்த உலக வாழ்க்கை விசித்திரமானது. இன்பம் துன்பம் எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரமில்லை. துன்ப மயமான உலகத்தின் இயல்பினைப் புரிந்து கொண்டவர்கள் துன்பத்தை வென்று இன்பம் காண முடியும் என்பது நன்கணியாரின் துணிபு. ராசி.அழகப்பன் அவர்களின் வாழ்க்கையும் சற்றேறக்குறைய நமக்கு இதே செய்தியைத்தான் போதிக்கின்றது. அவருடைய இன்றைய வெற்றிக்குத் துணைபுரிந்த மனிதர்கள் பலரின் பலன் கருதா உதவிகளை நூலாசிரியர் இந்நூலின் பக்கங்கள் தோறும் நினைவு கூர்கின்றார்.

திரைக்கதைகளில் வருவதைப்போல் சக மனிதர்கள் யாருமே தனிப்பட்ட வில்லன்களும் இல்லை. கதாநாயகர்களும் இல்லை. சந்தர்ப்பச் சூழ்நிலைகள்தாம் ஒருவனை கதாநாயகனாகவோ வில்லனாக இனம்காணச் செய்கின்றன. ஒருவருக்கு நாயகனாகத் தெரிபவர் மற்றொருவருக்கு வில்லனாகத் தெரிவார். பல சமயங்களில் நாமே அப்படித்தான். ராசி அழகப்பன் இந்தத் தொகுப்பில் அவர் எதிர்கொண்ட நாயகர்களை மட்டுமே நமக்கு அறிமுகம் செய்கிறார். அவர் எதிர்கொண்ட எதிர்நிலை நாயகர்கள் -வில்லன்களை நமக்கு அடையாளம் காட்டவில்லை. அவை வலிகள் நிறைந்த பக்கங்களாக இருக்கும். இத்தொகுப்பு சந்திப்பில் கிடைத்த சிகரங்களுக்கானது.

நூலாசிரியர் ராசி.அழகப்பனுக்குக் வாய்த்ததைப் போன்ற வாழ்க்கை அனுபவங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எத்தகைய பின்புலமும் இல்லாமல் சென்னை போன்ற தலைநகரில் வாழ்க்கையில் வெற்றிபெறப் போராடுவதென்பது எத்தகைய ஆயுதங்களும் இல்லாமல் போர்க்களம் புகுவதைப் போன்று சவாலானது. எளிமையான குடும்பத்தில் பிறந்து சிறுவயதிலேயே தாயை இழந்து தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த சிறுவன் ஒருவன் ஆசிரியர் வழிகாட்டுதலில் சென்னை வந்து படித்து வேலைதேடி, போராடிப் போராடி முன்னேறிய ராசி.அழகப்பனின் கதை வளரத்துடிக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகும். சற்றேறக் குறைய இதே காலக்கட்டத்தில் அதாவது எண்பதுகளின் தொடக்கத்தில் நானும் இந்தப் போர்க்களத்தில் ஆயுதங்கள் ஏதுமின்றிப் போராடியவன்தான். ஆனால் எனக்கு 1983ஆம் ஆண்டிலேயே பாதுகாப்பான அரசுப்பணி அதிலும் கல்லூரிப் பேராசிரியப் பணி கிடைத்ததனால் போர்க்களத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டுவிட்டேன். தங்குவதற்கு இடமும் அன்றாடப் பசிக்கு உணவும் நிரந்தரம் இல்லாத வாழ்க்கையின் வலியும் வேதனையும் எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பல கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன என்றாலும் நான் குறிப்பிட்டுப் பாராட்ட விரும்பும் ஒரு கட்டுரை “வெறும்கையை நம்பிய கலியுக நாயகி” என்ற தலைப்பிலானது. எழுத்தையே நம்பிப் பிழைக்க நினைத்த ஒரு இளைஞனுக்கு அதிலும் குறிப்பாகத் தங்குவதற்கு ஒரு இடம் இல்லை, நிலையான வருமானம் இல்லை இந்தச் சூழலில் அந்த இளைஞனை நம்பி யார் துணிந்து பெண் கொடுப்பார்கள் என்ற கேள்வியை முன்வைத்து ஒருவர் கொடுத்தார், அவர்தான் உண்ணாமலை என்னுடைய மாமியார் என்று நமக்கு அவரை அறிமுகம் செய்கின்றார் நூலாசிரியர். உண்மையில் நமக்கு வியப்பும் திகைப்பும், மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தருகிற கட்டுரை அது. அந்தக் கட்டுரை குறிப்பிடுகின்ற. உண்ணாமலை அம்மையாரை 1978ஆம் ஆண்டு தொடங்கி அவரின் மரணம் வரையிலும் நான் அறிவேன். ராசியின் துணைவியார் அன்புத் தங்கை செண்பகவடிவு மயிலம் தமிழ்க் கல்லூரியில் எனக்கு இளவலாக 1977இல் வந்து சேர்ந்தவர். திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எப்பொழுதாவது நாங்கள் செல்வதுண்டு. தாயினும் சாலப்பரிந்து உண்ணாமலை அம்மையார் காட்டிய பாசம் அலாதியானது.

உண்ணாமலை அம்மையார் குறித்து ராசி குறிப்பிடும் சில பகுதிகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,

யோசித்துப் பாருங்கள் தங்குவதற்கு ஒரு அறைகூட இல்லாத ஒருவன் சொன்ன சொற்களை நம்பி தனது பெண்ணுக்குத் துணையாக இருக்க இவன் சரி என்று யார் துணிவார்கள். ஆனால் அவர்கள் துணிந்தார்கள்

எல்லோரும் நான் வாழத் தகுதியற்றவன் என்று சொல்லுகிறபோது அவர் மட்டும்தான் மௌனத்தால் புன்னகையால் நீங்கள் உங்கள் பணியைச் செய்யுங்கள். சொல் சோறு போடும் என நம்பினார். அது மட்டுமல்ல அவருடைய பெண்ணிடம் நீ அவரைச் சுதந்திரமாக இருக்க விடு என்று கேட்டுக் கொண்டார். அவ்வப்போது பார்க்க வருகிற சாக்கில் உப்பு, புளி, பருப்பு, அரிசி என்று கொடுத்துவிட்டு உயரட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்த பெருமாட்டி அவர்.

ஒரு காலக்கட்டத்தில் எங்களை யாரும் நம்ப முடியாத சூழலில் வசைபாட ஆரம்பித்தார்கள். அந்த சமயம் நான் அழுதுகொண்டே தி.நகர் கண்ணதாசன் இல்லத்திற்கு எதிரே இருக்கிற நடேசன் பூங்காவில் அமர்ந்துகொண்டு ஒரு சிறுகதை எழுதினேன். அதுதான் விருட்சம் என்கிற கதை. அந்தக் கதையை எழுதுகிறபோது கையில் என்னிடம் 20 ரூபாய்தான் இருந்தது. பத்து ரூபாய்க்கு வெள்ளைத்தாள் வாங்கிக் கொண்டு ஒரு டீயை அருந்திவிட்டு எழுதிமுடித்துவிட்டு இரவு 7 மணிக்கு மேல் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ஒரு பாக்சில் போட்டுவிட்டு வந்தேன். இரண்டு மூன்று மாதம் கழித்து அது முத்திரைக் கதையாக ஆனந்த விகடனில் வெளிவந்தது.

பரிசுத்தொகை 5,000 என்று..

நான் தேர்வுசெய்த பிள்ளை தவறாகப் போகமாட்டார். உயர்ந்து நிற்பார் நம்புங்கள். அதற்கான காலம் வரவேண்டும் அதுவரை நாம் அவரை வெறுப்பது சரியல்ல என்று சொன்னார். அந்தச் சொற்கள் இன்றுவரை என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

இத்தொகுப்பின் மற்றுமொரு ஆகச்சிறந்த கட்டுரையாக நான் குறிப்பிட விரும்புவது 'கே.ஹரிகிருட்டிணன் (எ) முகில்வண்ணன்' என்ற தலைப்பிலான கட்டுரையைத்தான். நூலாசிரியர் ராசியின் கருத்தியலை, அரசியலை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றிய மாமனிதர்தான் இந்த முகில்வண்ணன். ராசி.அழகப்பனின் பள்ளிக்கூட ஆசிரியர். கடந்த நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இவரைப்போன்ற பள்ளிக்கூட ஆசிரியர்கள்தாம் தமிழக அரசியலை வடிவமைத்தவர்கள். அவர்களின் வகுப்பறைகளில் இருந்துதான் திராவிட இயக்கமும் மார்க்சிய இயக்கங்களும் பரிணாமம் பெற்றன. தமிழக அரசியலில் அதிரடியான மாற்றங்களைக் கொண்டுவந்த இளைஞர் பட்டாளங்களை படைத் தளபதிகளை உருவாக்கித் தந்த பெருமை இத்தகைய ஆசிரியர்களையே சாரும். அப்படிப்பட்ட சமுதாயச் சிற்பிகளில் ஒருவர்தாம் இந்த ஹரிகிருட்டிணன் என்கிற முகில்வண்ணன்.

தம்முடைய ஆசிரியர் முகில்வண்ணனை நூலாசிரியர் அறிமுகம் செய்யும் சில பகுதிகளை இங்கே பார்ப்போம்,

கட்டைவிரல் கேட்காத துரோணர்

இயேசுநாதரின் மலைப்பிரசங்கம்

முகமது நபியின் அராபத் பெருவெளிப் பேருரை

விவேகானந்தரின் சிகாகோ மேடைப்பேச்சு

இவையெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது வேட்டவலம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது வகுப்புகள் எல்லாம் முடிந்தபின்பு எளிய மாணவர்களை அழைத்து மார்க்சியத்தையும் மனிதத்தையும் சொல்லித்தந்த கே.ஹரிகிருட்டிணன் என்கிற முகில்வண்ணன் பேச்சுதான்.

ஆசிரியர் முகில்வண்ணன் குறித்து நூலாசிரியர் எழுதியுள்ள ஒவ்வொரு தொடரும் என்நெஞ்சில் ஆழமாகப் பதிந்து அந்தச் சிகரத்தின் உயர்ச்சி குறித்த பிரமிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. தமிழகக் கிராமப்புற மாணவர்கள் எல்லோருக்கும் இப்படிப்பட்ட நல்லாசிரியர்கள் கிடைத்திருந்தால் தமிழகம் என்றோ தலைநிமிர்ந்து பீடுநடைப் போட்டிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இப்படி நூலின் பக்கங்கள் தோறும் நம்மை வியப்பில் ஆழத்தும் சிகரங்களின் வரிசையைக் கண்டுகொண்டே செல்லலாம். நீதிபதி சந்துரு, நக்கீரன் இதழாசிரியர் கோபால், தமிழகத்தில் ஒரு மகாத்மா ஏ.ஆர்.பழனிச்சாமி, இயக்குநர் டி.ராஜேந்தர், கவிஞர் ஏர்வாடி இராதாக்கிருஷ்ணன் முதலான ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன். ஆனால் அணிந்துரை என்பது நூலின் சிறப்பினை அடையாளம் காட்டும் ஒரு பகுதியே தவிர நூலைச் சுருக்கித் தருகிற பகுதி இல்லை என்பதை நான் அறிவேன். அதனால்தான் எழுத நினைத்ததை எல்லாம் எழுதிவிடாமல் சில சான்றுகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். நூலின் உள்ளே நுழைந்தால் சிகரங்களின் வரிசையைக் கண்டு நீங்கள் வியப்படைவது திண்ணம்.

நிறைவாக நூலின் மொழிநடையைக் குறிப்பிட வேண்டும். ஊடகத் துறையைச் சேர்ந்தவர் என்பதனால் எழுத்திலே எளிமையும் இனிமையும் நிறைந்து பொதுமக்களும் விரும்பிப் படிக்கக்கூடிய இலகு தமிழில் நூல் அமைந்துள்ளது. அதேசமயத்தில் படைப்பாளிகளுக்கே உரிய ஆழ்ந்த நுணுக்கமான அவரின் எடுத்துரைப்பு படைப்புக்குக் கூடுதல் வலிமை சேர்க்கின்றது. வாசகர்களோடு நேரடியாகப் பேசவதைப் போலப் பல இடங்களில் நம்மை முன்னிலைப் படுத்தி உரையாடும் பாணியில் நூலினைப் படைத்துள்ள உத்தி வாசகர்களுக்கு நிச்சயம் இனிமை சேர்க்கும்.

தரமான நூல்களைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடும் தமிழுலகம் இந்நூலையும் வரவேற்றுக் கொண்டாடும் என நம்புகிறேன். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

முனைவர் நா.இளங்கோ

Pin It