periyar with baby 500கடலூரில் திருவாளர் ஈ.வெ.இராமசாமி

சகோதரர்களே! சகோதரிகளே!! மணமக்களே!!! புதிய முறையான திருமணம் இப்பகுதிக்கு இது புதியது. பூசைமேடு கோவிந்தசாமி திருமணம் முன் நடைபெற்றது. அதன்பின் இன்று இங்கு வந்திருக்கிறோம். தலைவர் முனிசிபல் கவுன்சிலர் புதிய முறையில் திருமணம் நடைபெறுமென்று கூறியபடி சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? நான் இங்கு வந்ததும் உறவினர், தோழர் முதலியவர்களின் அதிர்ப்தி ஏற்பட்டதாகக் கேள்விப் பட்டேன். அதன் காரணம் பகுத்தறிவில்லாமையே. மதம், புராணம், பழக்கம், வழக்கம், மோக்ஷம், நரகம் கற்பிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிர்ப்தியும், பயமும், நடுக்கமும் தான் தோன்றும். நன்கு யோசித்து திரு.பெருமாள் அவர்கள் போல் துணிவுடன் செய்தால்தான் வரும்கால உலகிற்கு பயன் தரும்.

இதுபோன்ற திருமணங்கள் பலவிடங்களில் நடந்து கொண்டு வருகிறது. சிலவிடங்களில் விளம்பரத்திற்காக சிறிது ஆர்பாட்டத்துடன் சுயமரியாதை இயக்கத்து திருமணம் நடைபெறுகின்றது. நான் கூறுவது சிலருக்கு வியப்பாகத் தோன்றினாலும் தோன்றலாம். உங்கள் அறிவுப்படி கொள்ளவும் தள்ளவும் உரிமை உங்கட்கு உண்டு. பழமை, புதுமை என்ற பாகுபாடின்றி பகுத்தறிந்து முடிவுப்படி செய்யுங்கள். திருமணம் என்பது ஒரு பெண்ணும் ஒரு ஆணும் வாழ்க்கைக்கு அடிகோலும் ஆரம்ப நாளே திருமணம் என்பதாகும். பல சடங்குகளுக்கும் விழாக்களுக்கும் தத்துவார்த்தம் வேறாக யிருக்கலாம். ஆண் பெண் கூடி வாழ இச்சைக்காக, சந்தோஷத்திற்காக ஒன்றுகூடும் ஜதை சேர்தலே திருமணமாகும்.

திருமணம் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் நேரில் சம்மதம் பெற்று இருவரும் இன்பத்தோடு ஒன்றுபடுதலே எல்லா நாட்டாராலும் கையாளப்படுவதாகும். நம் நாட்டிலோ தாய் தகப்பன்மார்களின் வியாபாரமாக “ஜதை” சேர்க்கப்பட்டு முடிவு கூறப்படுகிறது. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழ்வது “தெய்வீக”மென்பதாகவும் மறு உலகில் இடம் பெறுதற்கான காரியங்கட்கு இங்கு வாழ்வதாகவும், காலவினை, பொருத்தம், முடிச்சு, நமது கடமை, தேர்தல், முயற்சி என்ற காரணத்தையும் மறக்கின்றோம். ஜாதிக்கொவ்வொரு விதமாக பழக்கவழக்கமென்ற காரணத்தால் சடங்கு, பணக்கேடு, நேரக்கேடு, மக்கள் ஊக்கக்கேடு ஆகிய கஷ்டத்தோடு தான் திருமணம் நடத்துகிறோம். மாற்றமடைவதில் நாம் பெரியார்கட்கு பயந்து பழைமையையே குரங்குப் பிடியாகப் பிடித்து கொள்கிறோம்.

ஆண் பெண்ணுரிமையைப் பற்றியோ வெனில் ஆண் இச்சைக்கும், வேலைக்கும், ஏவுதலுக்கும் என்றே பெண்கள் சேர்க்கப்படுகிறது. சொத்துரிமை சமஉரிமை பெண்கட்கு வழங்கப்படுவதில்லை. புதிய முறை என்பது ஒவ்வொருவரும் சிந்திக்கவும், ஆராயவும் வேண்டுவதுதான் இத்திருமணம் நிகழ்ச்சியாகும். இதுபற்றி மாலை பொதுக் கூட்டத்தில் விரிவாகப் பேசுவோம்.

இங்கு நடைபெறும் நடைமுறை நிகழ்ச்சிகள் பெரிதும் பெண்கட்கு பயமாகத் தோன்றலாம். காரணம் அடுப்பூதவும், வேலை செய்யவும் அடிமை என்று பழக்கியும் வந்ததோடு “கல்வி” அறிவு போதாக்குறைதான். செலவுசுருக்கம், நாள்குறை, வேலைகுறை, பெண்கள் உரிமை, மணமக்கள் சம்மதம், கடன்படல், பின் கடன் தீர்க்கப் பாடுபடல் ஆனால் இன்று நடக்கும் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு பேர் என்று கேட்கலாம். அது ஒரு சாட்சிக்காகத்தான். ஒரு கடை வைப்பவன் மற்ற கடைக்காரர்களை அழைப்பதும், புது பேரேடு போடுவதும், அவர்களது ஒப்பந்தத்தை எடுத்து ருஜுப்பிக்க பேசுவதும் சாட்சிக்காகத்தான். ஆகவே சாட்சி முறை அவசியம். நமக்கு ஆதாரம் சாட்சிதான். முகம்மதியர் ஒரு புத்தகத்தில் கையொப்பம், கிறிஸ்துவர்கள் கோவில் முன்பாக ஒப்பம், நாம் அதற்காகவே இங்கு சாட்சியாகவே கூடியிருக்கிறோம். சாட்சியில்லாததால் சமீபத்தில் ஒரு “கல்யாணம்” தள்ளுபடியாயிற்று. ஆதலால்தான் நாம் கூடி சாட்சியளிக்கின்றோம்.

பெண் அடிமைப் படுத்துதல் ஒப்பந்தத்தில் சம உரிமையுடன் திட்டம் காணல் வேண்டும். வீணாக பழைய சென்மப்பலன், தலைவிதி என்று கட்டாயப்படுத்தி வருவதால் பெண்கள் இனி கட்டுப்பட்டு வாழாது. நம்மில் ஒருவர் வியாபாரியிடம் முதல் கஷ்டப்பட்டு பாடுபட்டு பின் சுதந்திரம் பெற்று தனித்து வியாபாரியாகுவதை பார்க்கிறோம். புருஷன் தாசி வீட்டிற்கு போதல், கள் குடித்து அடித்தல் போன்ற காரணத்தால் கஷ்டப்படும் பெண்கட்கு விடுதலை வேண்டுவதாகும்.

நாங்கள் ஏன் இங்கு வந்தோம்? புரோகிதம் செய்ய வரவில்லை. ஆரம்பத்தில் பலருக்கு விளங்காததால் நாங்கள் வந்து இம்முறையை விளக்க வேண்டுமென்று திரு.பெருமாள் விரும்பியதற்காக வந்தோம். இன்னும் 10 வருஷங்களில் புருஷன் பெண்சாதி தேர்ந்தெடுப்பது கூட எவருக்கும் தெரியப் போவதில்லை. பிற எல்லா நாட்டு நாகரீகங்களைப் பற்றி மட்டும் நாம் கூற தேவையில்லை. அவரவர்கள் அறிவுப்படியே அறிவு வளர்ச்சிப்படியே இத் திருமணம் நடைபெறும். மற்றும் மாலை விரிவாகப் பேசுவோம்.

(குறிப்பு: 13.09.1931 ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற (கடலூர் திரு.பெருமாள் இல்லத் திருமணம்) திருமதி.இரங்கம்மாள் - திரு.விஜயன், திருமதி.பேபி அம்மாள் - திரு.வெங்கிடசாமி ஆகியோரின் (இரண்டு ஜோடி மணமக்கள்) திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 20.09.1931)