பொள்ளாச்சியில் அதிமுக காலிகளின் துணையோடு நூற்றுக்கணக்கான பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைதான் இன்று தமிழகத்தில் அனைவரின் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இதே நிலை நாளை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்பில் இருக்கின்றார்கள். சாதிய சமூகத்தில் மிக இறுக்கமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பெண் சார்ந்த ஒழுக்க விழுமியங்கள் ஒரு கத்தியாய் அவர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டு இருக்கின்றது. ஒரு பெண்ணைப் பற்றிய எந்த ஒரு சிறு செய்தியும் கூட அவர்களின் அந்தரங்கத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இங்கு நோக்கப்படுகின்றது. அவர்களின் நடை, உடை, பேச்சு என அனைத்தின் மீதும் ஒரு கூர் நோக்கான பார்வையை ஆணாதிக்க மொழியில் சமூகம் கொண்டிருக்கின்றது. இதில் நேரும் எந்த ஒரு சிறு மீறலும் அவர்களின் ஒழுக்கத்தின் மதிப்பீடுகளை மறுவரையறை செய்ய வைத்துவிடும்.

pollachi rapistsஇந்த அச்சமே பெண்களை தங்களுடைய இயல்பு நிலையில் இருந்து பிறழ்ந்து வாழ நிர்பந்திக்கின்றது. தன்னுடைய இயல்பான உணர்வுகளைக் கூட அவர்கள் மிக மர்மமாக, மறைபொருளாக வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் இயல்பை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மறுக்கப்படும் அதே சமயம், ஆண்கள் தங்களின் சுயத்தை எந்தவிதத் தடையும் இன்றி வெளிப்படுத்த இந்த சமூகம் அதிகாரமும், அங்கீகாரமும் அளிக்கின்றது. இந்த மனநிலை பெரும்பாலும் மாறுவது கிடையாது. ஒரு பெண் எவ்வளவு பெரிய ஆளுமையாக மாறிய பிறகும் தான் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்பதையோ, இல்லை ஓர் ஆண் தான் பெண்களை ஒடுக்க எல்லாவித உரிமையும் பெற்றவன் என்பதையோ மாற்றிக் கொள்வதில்லை. அதிலும் காவல்துறை போன்ற அரச ஒடுக்கு முறைக் கருவிகளில் பணியாற்றும் ஆண்களைப் பற்றி நாம் சொல்லவே தேவையில்லை. பெண்களைப் பற்றி கலாச்சார காவலர்களின் அழுகி சீழ்பிடித்து நாற்றமெடுக்கும் கருத்தியலை தங்களுடைய அதிகாரத்தின் மூலம் செயல்படுத்துபவர்கள். அதிலும் குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பாக புகார் அளிக்கச் செல்லும் பெண்களுக்கே பாதுகாப்பற்ற நிலைதான் காவல் நிலையங்களில் நிலவுகின்றது. தமிழகத்தில் வாச்சாத்தி, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் இருளர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது, சிதம்பரம் பத்மினி வழக்கு வரை பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைதான் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் நிலவுகின்றது. சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தீவிரமான ஆணாதிக்க மனநிலை கெட்டி தட்டிப் போய் இருக்கின்றது. இயல்பாகவே ஆண் பெண் இருபாலருக்கும் இடையே முகிழ்ந்திருக்க வேண்டிய தோழமை உணர்வை சாதியும், மதமும் சிதைத்த‌து போக மீதி இருந்ததை உலகமயமாக்கலும் போர்னோவும் கொன்று போட்டிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் இருந்துதான் ஏன் பெண்கள் தங்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்து பொதுவெளியில் சொல்ல அஞ்சுகின்றார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

இவையெல்லாம் தெளிவாகவே புலப்படும் நிலைமைகள். ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழும் போதும் மீண்டும் மீண்டும் முற்போக்குவாதிகள் இதை நினைவூட்டியே வருகின்றார்கள். ஆனால் கடும் பிற்போக்குத்தனத்திற்கு தன்னை ஒப்பிவித்துக் கொண்ட சமூகம் அதைக் களைவதற்கு முன்கை எடுத்திருக்கின்றதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்று சொல்லிவிட முடியும். பெண்களை அச்சமற்றவர்களாக, வெளிப்படையாகப் பேசக் கூடியவர்களாக, பகுத்தறியும் திறனுடையவர்களாக வளர்ப்பதில் நாம் பெரிய அளவில் தோல்வி அடைந்திருக்கின்றோம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னமும் பெண்களை பழைய நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க கண்ணோட்டத்தில் வளர்ப்பதை நாம் பெருமையாக நினைக்கும் மனநிலையில்தான் இருக்கின்றோம். பெண்கள் பருவம் எய்திவிட்டால் அவர்களின் ஒட்டுமொத்த சுதந்திரமும் பறிக்கப்பட்டு, அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும், ஆண்களிடம் பேசக்கூடாது, வாய்விட்டு சிரிக்கக்கூடாது, வீட்டிற்கு வெளியே போகக்கூடாது, சமையல் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும், துணி துவைக்க கற்றுக் கொள்ள வேண்டும், சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும், பெரியவர்கள் முன் பவ்யமாக அடக்கத்துடன் இருக்க வேண்டும் என தொடர்ச்சியாக ஒரு நல்ல அடிமையாக எப்படி இருக்க வேண்டும் என பயிற்றுவிக்கின்றோம்.

ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த கெளரவமும் பெண் சார்ந்து கட்டியமைக்கப்பட்டுவிட்ட பிறகு ஒரு பெண் தன்னுடைய இயல்பான உரையாடலை ஒட்டுமொத்தமாக தவிர்த்துவிட்டு, ஒரு போலியான வாழ்க்கையில் தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. புற உலகின் மீதான தன்னுடைய அனைத்து கருத்துக்களும் ஏற்கெனவே சமூகம் கட்டமைத்து வைத்துள்ள வரம்பை தாண்டிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள அவர்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கின்றது. அப்படி மீறி கருத்துக்களை வெளியிட்டால் அவர்களின் தனிமனித ஒழுக்கம் பற்றி அவதூறு செய்யப்படும் வக்கிரமான சூழ்நிலையும் இருக்கின்றது. எப்படி இதைக் கடப்பது?

students protest against pollachi rapeபெண்களைப் பற்றிய மரபான பார்ப்பனியக் கருத்தியலைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு நாம் அவர்களுடன் தோழமையான உரையாடலை நிகழ்த்த வேண்டும். ஆண்கள் அனைவருமே வக்கிரமானவர்கள், காதலித்து நம்ப வைத்து ஏமாற்றி விடுபவர்கள் போன்ற கருத்துக்களை சொல்லி இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் ஆண் - பெண் உறவுகளை சீர்குலைப்போம்? பெண்களும், ஆண்களும் இயல்பாகப் பழகும் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்துவோம். திட்டமிட்டு ஓட்டு பொறுக்குவதற்காகவும், சமூகத்தில் சாதிய சனாதன தர்மத்தைக் கட்டி காப்பாற்றுவதற்காக‌வும் கலாச்சாரக் காவலர்களாக தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் மனிதகுல விரோதிகளின் வெறுப்பு பரப்புரைகளுக்கு பலியாகாமல் ஆண், பெண் தோழமையைக் கட்டி எழுப்புவோம்.

சாதி, மதம், உடல் சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் புனிதங்களை உடைத்தெறிந்து அதனை விமர்சனத்துக்கு உட்படுத்தும் மனநிலையை இருபாலரிடமும் உருவாக்குவோம். ஒரு ஆணோ, பெண்ணோ தன்னைப் பற்றிய எந்த ஒரு தகவலும் பேசுவதற்கோ, பகிர்ந்து கொள்வதற்கோ தகுதியற்றது என்று நினைக்கும் போக்கை மாற்றி, அனைத்தையும் பற்றி பேசும் ஒரு தோழமையை உருவாக்குவோம். அப்படி செய்வதன் மூலம் மட்டுமே பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மிக இயல்பாக தங்களுடைய பெற்றோர்களிடமோ, ஆண் நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தும் இரண்டு பெண்கள் மட்டுமே புகார் கொடுத்திருப்பது எந்த அளவிற்கு நம் சமூகம் பெண்களை அச்சுறுத்தி வைத்திருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது.

தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதிக்கு எதிராக போராடக் கூட திராணியற்றவர்களாய் அவர்களை மாற்றிவிட்டு, இப்போது அந்தப் பெண்கள் ஏன் புகார் கொடுக்க முன்வரவில்லை என்று சொல்லி, பழியை அந்தப் பெண்கள் மீதே தூக்கிப் போடுவது பாசிச வக்கிர மனநிலையாகும். அந்தப் பெண்கள் தங்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறையை சகித்துக் கொண்டு வாய்முடி மெளனியாய் இன்று இருப்பதற்கான குற்றத்தில் அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் என அனைவருக்கும் பங்குள்ளது. சாதியாலும், மதத்தாலும் கட்டியமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கீழ்த்தரமான ஆணாதிக்க சிந்தனைதான் இன்று பெண்களை இந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றது. பெண்பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம்கூட தங்கள் மீது சில பொறுக்கிகளால் ஏவப்படும் பாலியல் சீண்டல்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டிருப்பது எவ்வளவு பெரிய சமூக சீர்கேடு?

இந்த நிலையை நாம் தெரிந்தே ஊக்குவிக்கும் வரை பொள்ளாச்சி சம்பவங்கள் போன்றவை சமூகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும். பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்கள் பெண்களின் இந்த பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாக திரும்பத் திரும்ப பயன்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள். ஆணாதிக்க சிந்தனை என்பது ஆண்களிடம் மட்டுமல்ல அது ஆண்களைவிட பெண்களிடமே அதிகம் காணப்படுகின்றது. அதை கருத்தியல் ரீதியாக மாற்றியமைக்க நாம் போராட வேண்டி இருக்கின்றது. இன்று பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்திற்கு எதிராக பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். இவர்களில் யாருக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த சாதி என்று தெரியாது, ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண்களை தங்களில் ஒருவராக நினைத்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடுகின்றார்கள். இவர்களைப் பார்த்துதான் சில அயோக்கியர்கள் 'ஆண்கள் அனைவருமே மோசமானவர்கள்', 'நாடகக் காதல்' போன்ற வக்கிர சிந்தனைகளை விதைக்கின்றார்கள். பெற்றோர்களும், மாணவர்களும் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. இனிமேலாவது ஆண்களையும், பெண்களையும் இயல்பாகப் பழக விடுங்கள். இது போன்ற பாலியல் வக்கிரம் பிடித்த அயோக்கியர்களுக்கு அவர்களே பாடம் புகட்டுவார்கள்.

- செ.கார்கி

Pin It