வாழ்வில் மறக்க முடியாதன என்று சொல்லிக் கொள்ளும்படியான நிகழ்ச்சிகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. நிகழ்ச்சிகள் அனைத்தையும் நினைவுகூர முடியவில்லை என்றாலும் அவற்றின் விளைவுகள் தரும் இன்பங்களிலிருந்தோ துன்பங்களிலிருந்தோ விடுபட முடியாத, அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உருப் பெறாமல் உள்ளிருந்து அழுத்தும் தருணங்கள் மனிதருக்கு ஏற்படக் கூடும்.

Ilango Bookஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் தொடக்கத்தில் தாகூர் அரசினர் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் தொடங்கி எண்பதுகளின் தொடக்கத்தில் முதுகலைத் தமிழ் முடித்து வெளிவரும்வரை உள்ள ஆண்டுகள் என்னை வருத்தவும் மகிழ்த்தவும் செய்து வரும் ஆண்டுகள் ஆகும். இப்பருவத்து நினைவுகளுள் என்னை மகிழ்த்தும் பருவம் முதுகலை ஆண்டுகள் ஆகும். அந்தக் காலமே நான் கல்லூரி வாழ்க்கையின் பயனை அனுபவித்த காலமாகும். ஒரு சிற்றிலக்கிய இதழ்க் குழு ஆசிரியர்களுள் ஒருவனாகவும் பேராசிரிய நண்பர்களைப் பெற்றவனாகவும் மாணவ மாண்பின் மகத்துவத்தை உணர்த்திய ஆண்டுகள் அவை! இந்த உயர்வுக்குக் காரணமாக அமைந்தவர் நண்பர் நா.இளங்கோ ஆவார்

படிக்கும்போது நேரத்தைத் திட்டமிடல், படித்து முடித்துக் கலந்துரையாடல் மூலம் படித்தவற்றை நினைவு கூரல் என்றிவ்வாறு கற்றலனுபவத்தை எளிய சுகானுபவமாக நெறிப்படுத்திக் காண்பித்தவர் அவர். வகுப்பு வேளையில் பேராசிரியர்களிடம் பாடம் பற்றிய நுணுக்கமான ஐயங்களை வினவி வகுப்பு நேரத்தைச் சுவையானதாய் ஆக்குவார் இளங்கோ. சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஃபில். படித்துக் கொண்டிருந்தபோது சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத் துறையில் (ANNEX) குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த வேளையில் , அத்துறை ஆய்வு மாணவ-மாணவியரின் கருத்தரங்க நேரத்தில் நுணுக்கமான வினாக்களை எழுப்பி அம்மாணவர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கிற இளங்கோவின் அறிவுக் கூர்மையை அக்காலத்தில் நேரில் பார்த்திருக்கிறேன். “முதற்குறள் ஓர் ஆய்வு“ என்னும் தலைப்பில் தம் எம்.ஃபில். ஆய்வை மேற்கொண்டு சிறந்த ஆய்வு நுட்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்

நண்பர் நா.இளங்கோவின் அறிவு நுட்பத்தை மீண்டும் இந்நூல் வாயிலாகக் காண்கிறேன். கவிதை நூல்கள், ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல்கள், தம் துறை சாராததாயினும் ஆர்வம் காரணமாக, தமிழரின் தொல்கலைச் சிறப்பை உலகுக்குணர்த்த வேண்டும் என்னும் உயரிய நோக்கம் காரணமாகத் தமிழகத்தின் சில பழங்கோயில்கள், குகை ஓவியங்கள் போன்றவற்றை ஆய்ந்து வெளியிட்டிருக்கும் தொல்லியல் வரலாற்று ஆய்வுநூல்கள் என்று பல்வகை நூல்களின் ஆசிரியராகத் திகழும், எப்பொருள் யார் கூறக் கேட்டாலும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண முயலும் பேராசிரியர் முனைவர் நா. இளங்கோ அவர்களின் 'உள்ளதன் நுணுக்கம் செம்மொழி இலக்கிய ஆய்வுகள்; என்னும் இந்நூலில் உள்ள கட்டுரைகள் அவருடைய நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்துவனவாய் விளங்குகின்றன.

'தொல்காப்பியக் கவிதையியல் நோக்கில் பண்ணத்தி' என்னும் முதற் கட்டுரையில் தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வடிவங்களுள் ஒன்றான பண்ணத்தி பற்றி ஆராய்கிறார்.

     பாட்டிடைக் கலந்த பொருள வாகி

    பாட்டின் இயல பண்ணத் திய்யே (செய்யுளியல் -173)

என்னும் ஓர் இலக்கண நூற்பாவை ஆராயத் தொடங்கிய நா.இளங்கோ, சமூகவியல் நோக்கில் கட்டுரையை முடித்திருக்கின்றார். இதன் மூலம் இச்சமூகத்தின்மீது தமக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியிக்கின்றார்; ஓர் இலக்கண நூற்பாவை இந்த நோக்கத்திலும் ஆராய முடியும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார்.

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்னும் ஏழு வடிவங்களையும் யாப்பின் வழியது என்றுரைத்த தொல்காப்பியர் தொடர்ந்து நான்கு நூற்பாக்களில் பண்ணத்தி என்னும் வடிவத்தை விளக்குகின்றார் என்று கட்டுரையைத் தொடங்கிய இளங்கோ இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் போன்ற பழைய உரையாசிரியர்களின் விளக்கங்களையும் தெ.பொ.மீ., கலாநிதி சு.கைலாசபதி, மு.வரதாசனார், ச.அகத்தியலிங்கம் போன்றோரின் விளக்கங்களையும் ஆராய்கின்றார்.

பாணர்களின் படைப்பாக்கமாக இருந்த பாடல் புலவர்களின் புலமைப் படைப்பாக்கமாக மாற்றம் பெற்ற நிலையைச் சொல்லும் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்றிலிருந்து பாணர்களின் பாட்டு எங்கே? அவர்களின் இலக்கியத்திற்கு என்ன பெயர்? என்னும் வினாக்களை எழுப்பிக் கொண்டு அவற்றிற்கு விடை காண முற்பட்டு,

புலவர்கள் படைப்பதே பாட்டு என்றாகிவிட்ட பிறகு வாய்மொழி மரபில் தோன்றிப் பாணர்களின் வழியாகப் பாடப்படும் இசைப்பாடல்களுக்கு உரிய இடத்தை வழங்கும் முயற்சிதான் பண்ணத்தி என்ற இலக்கியம் பாணர் இலக்கியத்தைப் பாட்டு அன்று என்று தவிர்த்துவிட இயலாது என்பதனால்தான் தொல்காப்பியர் பண்ணத்தியை வரையறுக்கின்றார்.

என்று விடை கண்டிருக்கின்றார்.

அடுத்து, 'தொல்குடி வாழ்க்கையும் விழுமியங்களும் (சங்க இலக்கியங்களை முன்வைத்து)' என்னும் கட்டுரையில் பாணர், பொருநர், விறலியர், கூத்தர் போன்ற கலைஞர்களுக்குச் குறுநிலத் தலைவர்கள் செய்து வந்த கொடை, கற்றறிந்த புலவர்களால் அற மதிப்பிழந்ததாக ஆக்கப்பட்ட நிலையை விளக்கி உள்ளார். இனக்குழுச் சமூக அமைப்பிலிருந்து மாறி, உடைமைச் சமூக அமைப்பு தோன்றியதனால் அறமதிப்பில் மாற்றம் ஏற்பட்டதாக நா.இளங்கோ கருதுகின்றார்.

வறுமையுற்றிருந்த பொருநனின் நீர்ப்பாசியன்ன பழைய ஆடையை நீக்கி, மலர் போன்ற புதிய ஆடையை அணியுமாறு செய்து அவன் பசியாற்றி, அவன் சுற்றத்தாரது வறுமை நிலையைப் போக்க நெற்குவியலையும் கொடுத்ததாக அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிப் பொருநன் கூற்றாக ஔவையார் இயற்றிய பாடல் (புறநானூறு பா.390), காட்டு வழியில் கண்ட பாணர் குடும்பத்தார்க்குத் தீயினில் சுட்ட ஊனை உண்ணக் கொடுத்ததோடு தனது மார்பில் அணிந்திருந்த முத்து வடங்களையுடைய ஆரத்தையும் முன்கைக்கணிந்த கடகத்தையும் கொடுத்து, பாணன் கேட்டும் தான் யாரென்பதையும் தெரிவிக்காமல் சென்ற கண்டீரக்கோ பெருநள்ளியைப் பற்றிப் பாணன் கூற்றாக வண்பரணர் இயற்றிய பாடல் (புறநானூறு பா.150) போன்றவற்றைச் சான்றுகளாகக் காட்டி வறுமை நோக்கிய ஈகையை விளக்கிய நா. இளங்கோ, பரணர் இயற்றிய பாடல் மூலம் (புறநானூறு பா. 141) மறுமை நோக்கிய ஈகையே அறமதிப்பு மிக்கதாகக் கருதிய உடைமைச் சமுதாயக் கருத்தியலைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

அடுத்து, 'வீரயுக மனப்பதிவுகளும் மகட்பாற்காஞ்சியும்' என்னும் கட்டுரையில் பழந்தமிழகத்தின் முதுகுடி மன்னர்களுக்கும் புதிதாக மேலெழுந்து வந்த பேரரசு வேந்தர்களுக்குமான போராட்ட முரணை விளக்கியுள்ளார்.

குறுநிலத் தலைவர்கள் அந்தக் காலத்தில் வேந்தர்களைக் காட்டிலும் செல்வாக்குடைய அரசர்களாய் இருந்துள்ளனர், செல்வாக்குடன் முதுகுடி மன்னர்கள் வாழ்ந்த காலத்திலேயே வேந்தர்கள் தமது பேரரசை நிறுவத் தொடங்கி இருந்தார்கள். அவர்கள் நிலஎல்லைப் பெருக்க ஆசையால் முதுகுடி மன்னர்களின் வேளாண் ஊர்களைக் கவர முயன்றதன் அடையாளங்களைத்தான் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள் காட்டுகின்றன என்னும் பெ.மாதையன் அவர்களின் கூற்றுப்படி மகட்பாற் காஞ்சிப் பாடல்களை ஆராய முற்பட்ட நா.இளங்கோ, புலவர்கள் ஒரு திட்டமிட்ட வாய்பாட்டுத் தன்மையில் வேந்தனால் தொல்குடி ஊர் அழிக்கப்படும் என்ற தொனியிலேயே பாடல்களை யாத்துள்ளனர் என்று விளக்கியுள்ளார்.

வீரயுக மனப்பதிவுகளையும் தொல்குடி மதிப்பீடுகளையும் சித்திரிக்கும் மகட்பாற் காஞ்சிப் பாடல்கள், வம்ப வேந்தர்களின் அரச கட்டமைப்புக்குத் துணை புரியும் பாங்கில் பிரச்சாரம் செய்கின்றன என்று முடித்திருக்கும் நா.இளங்கோ அக்காலப் புலவர்களின் இரட்டை மனப்பான்மையைச் சூசகமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

சிலப்பதிகாரம் பற்றி இரண்டு கட்டுரைகள் சேர்த்துள்ளார் நா. இளங்கோ. அகப்பொருள் மரபுகளைச் சிலப்பதிகாரத்தோடு பொருத்தி எழுதிய 'சிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபும் மாற்றமும்; என்னும் ஒரு கட்டுரையும் கண்ணகி தெய்வத் தன்மையள் என்பதற்குக் கட்டியம் கூறும் விதமாக அமைந்த சாலினி வெறியாட்டு பற்றி, 'சிலப்பதிகாரத்தில் சாலினி கூற்று' என்னும் ஒரு கட்டுரையும் அவை.

'சிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபும் மாற்றமும்' என்னும் முதல் கட்டுரையில் இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தில் ஐந்திணை மரபுகளையும் பின்பற்றிக் காட்சிகளை அமைத்துள்ளார் என்பதையும் மரபுக்கு மாறுபட்டும் காட்சிகளைப் படைத்துள்ளார் என்பதையும் சுட்டியுள்ளார் நா. இளங்கோ.

கானல்வரியில் நெய்தல் நிலக் காட்சிகளையும் நாடுகாண் காதையில் மருத நிலக் காட்சிகளையும் வேட்டுவ வரியில் பாலை நிலக் காட்சிகளையும் ஆய்ச்சியர் குரவையில் முல்லை நிலக் காட்சிகளையும் குன்றக் குரவையில் குறிஞ்சி நிலக் காட்சிகளையும் தம காப்பியக் கட்டமைப்புக்குள் கொண்டு வருகிறார் இளங்கோ வடிகள். அகன் ஐந்திணை சார்ந்த இவ்விவரணைகள் சங்க இலக்கியத்தின நீட்சியாகத் தமிழ் அகப்பொருள் மரபுகளைத் தம் படைப்புக்குள் கொண்டு வர விரும்பும் படைப்பாளனின் முயற்சியாகவே தோன்றுகின்றன.

மேலும், புகார் நகரத்து விழாவில் கோவலனும் மாதவியும் பாடிய கானல்வரிப் பாடல்களும் கண்ணகி வான ஊர்தி ஏறிச் சென்றது கண்ட மலை நில மங்கையர் ஆடிப் பாடிய குன்றக் குரவைப் பாடல்களும் தனிநிலைப்பட்ட தூய அகத்துறைப் பாடல்களாம் என்று இளங்கோவடிகளின் சங்க அகப்பொருள் மரபுக்கியைந்த சான்றுகளைக் கூறிய கட்டுரை ஆசிரியர் நா.இளங்கோ அடுத்து காப்பிய ஆசிரியர் மரபிலிருந்து மாறுபட்டு அமைந்த பான்மையை விளக்கியுள்ளார்.

புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான உரிப்பொருளுக்குத் தொல்காப்பியர் பெரும்பொழுதாகக் கூதிர்காலத்தை வரையறுத்துள்ளார். அதையே சங்க இலக்கியங்களும் பின்பற்றி யுள்ளன. ஆயின் இளங்கோவடிகள் இளவேனிற்காலத்தை அமைத்துப் பாடியுள்ளார். இம்மாற்றம் கலித்தொகை, பரிபாடல்களிலேயே ஏற்பட்டு விட்டது என்ற ப.அருணாசலம் கூற்றையும் குறிப்பிட்டுள்ளார் நா.இளங்கோ. மேலும் இளங்கோவடிகள் காமம் என்பதைக் காமவேள் என்னும் அரசனாகக் குறிப்பிட்டுஇளவேனில், தென்றல், குயில், முதலானவற்றை அரசின் அங்கங்களாகச் சித்தரிக்கும் போக்கைத் தம் காப்பியம் முழுதிலும் பின்பற்றி யுள்ளார் என்றும் நா.இளங்கோ கூறியுள்ளார்

காதலை ஆட்சி, அதிகாரம் என்ற அரசு சார்ந்த மொழியில் விவரிப்பது, அதாவது அகம் சார்ந்த உள்ளடக்கத்தைப் புறம் சார்ந்த மொழியில் பேசுவதென்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது என்று கட்டுரையை முடித்துள்ளார் கட்டுரை ஆசிரியர்.

சிலப்பதிகாரம் பற்றிய இரண்டாம் கட்டுரையான 'சிலப்பதிகாரத்தில் சாலினி கூற்று' என்னும் கட்டுரை சிறப்பான கட்டுரையாக நான் கருதிய கட்டுரையாகும். இக்கட்டுரையின் தொடக்கம் என்னைக் கவர்ந்த ஒன்றாகும். தாம் எழுதும் கட்டுரையாக இருக்கட்டும் மற்றவர் நூலுக்கு எழுதும் அணிந்துரைக் கட்டுரையாக இருக்கட்டும். அக்கருத்து தொடர்பான சில செய்திகளைத் தொடக்கமாகக் கூறிக் கட்டுரையைத் தொடர்வது நா.இளங்கோவின் பாணி. அவ்வாறு இக்கட்டுரையில் தொடக்கமாகக் கூறிய கருத்தைக் கட்டுரை இறுதிவரை நூல் கோத்ததுபோல் இயைபுப்படுத்திச் செல்வதே இக்கட்டுரையின் சிறப்புக்கு நான் கூறும். காரணமாகும்.

சாலினி கூற்று சிலம்பின் வேட்டுவ வரியில் ஒரு திருப்புமுனையாக அமைந்த காட்சி ஆகும். வேடுவக் குலமகளாகிய சாலினி என்பவள் தெய்வம் ஏறப்பெற்று, எயினர்களின் ஆநிரை கவர்தல் வெற்றி பெற வேண்டுமாயின் கொற்றவைக்கு வழிபாட்டுக் கடன் முடிக்க வேண்டுமெனக் கூறுகிறாள். அதோடு நில்லாமல் வேடுவக் குலத்திற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத, சற்று தூரத்தில் கணவனுடன் இளைப்பாறியிருந்த கண்ணகியைப் பார்த்து,

     இவளோ கொங்கச் செல்வி குடமலை யாட்டி

    தென்தமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து

    ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய

    திருமா மணியென

உரைக்கின்றாள்.

கண்ணகி இதனைப் பொருட்படுத்தாமல், பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று கணவன் பின்னே ஒடுங்கித் தன்னை மறைத்துக் கொண்டாலும் கவுந்தி அடிகளும் கோவலனும் சாலினி கூற்றுப் பற்றி எதிர்வினை ஏதும் புரியவில்லை என்றாலும் காப்பியத்தின் தொடர்ச்சியில் சாலினி கூற்றுக்கான விளைவுகளை இயைபுப்படுத்திப் பேசி இருக்கிறார் நா.இளங்கோ.

அடைக்கலக் காதையில் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப் படுத்தும்போது,

     இன்துணை மகளிர்க் கின்றி யமையா

    கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது

    பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்

என்று கவுந்தி அடிகள் கூறியதற்கும்

கொலைக்களக் காதையில் சிலம்பு விற்கப் புறப்படுமுன் கோவலன் கண்ணகியின் நிலைக்கு வருந்திப் பின்னர்,

     நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்

    பேணிய கற்பும் பெருந்துணை யாக

என்று பெருமிதம் தோய்ந்த மதிப்போடு கண்ணகியைப் பாராட்டிக் கூறியதற்கும் சாலினி கூற்றின் விளைவே காரணம் என்று நா.இளங்கோ வரையறுத்துள்ளார்.

பின்னும் வழக்குரை காதையில் கையில் சிலம்புடன் நீதி கேட்டு அரசவை புகுந்த கண்ணகியின் கோலத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய வாயிற்காவலன் கூற்றில் கண்ணகி கொற்றவை, பிடாரி, காளி, துர்க்கை முதலான தெய்வங்களோடு ஒப்ப வைத்துச் சுட்டப்படுகிறாள். காப்பியக் கட்டமைப்பில் பத்தினித் தெய்வத்தைப் பரவுதல் என்ற இலக்கு நோக்கிய படைப்பாளனின் பயணத்தில் வெளிப்படும் படைப்பின் கூற்றே இந்த வாயிலோன் கூற்று என்பது நா.இளங்கோவின் கருத்து.

காப்பியத்தின் நுவல்பொருள்களுள் ஒன்றான உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்னும் மையப் பொருளை, சாலினி என்னும் பாத்திரப் படைப்பு மூலம் நிலைநிறுத்திய இளங்கோவடிகளின் காப்பியப் படைப்பை வியந்து கட்டுரையை முடித்துள்ள நா.இளங்கோவின் கட்டுரைத் திறன் அவருடைய சொற்பொழிவுத் திறன் போலவே பாராட்டிற்குரியது.

அடுத்துப் பேய்களைப் பற்றிய ஒரு கட்டுரை. காரைக்காலம்மையாரின் பேய்களையும் செயங்கொண்டாரின் பேய்களையும் ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ள, 'காரைக்கால் பேயும் கலிங்கத்துப் பேயும்' என்னும் கட்டுரை.

தமது கட்டுரையின் தொடக்கத்தில் பேய்களைப் பற்றிப் பண்பாட்டு மானிடவியல் பார்வையில் பழங்குடி இன வாழ்க்கைத் தொடர்ச்சியின் மிச்சச்சொச்ச மனப் பதிவுகளை விவரித்துள்ளார். அடுத்துப் பழங்கால இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்காலச் சிற்றிலக்கியங்கள் என்பன பேய், பேய்மகள் போன்றவற்றைப் புனைவியலாகப் பாடின என்று கூறியுள்ளார். பின்னர் மிக விரிந்த தளத்தில் நீட்சி பெற்றுப் பரணி என்பதோர் சிற்றிலக்கிய வகையாக வளர்ந்த வளர்ச்சிக்குக் காரைக்காலம்மையாரின் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் காரணமாக அமைந்ததை விளக்குவதே கட்டுரையின் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ளார்.

தேவாரம் பாடிய மூவருக்கும் மூத்தவர் காரைக்கால் அம்மையார்தான் என்றாலும் சைவ பக்தி இலக்கியத்தைத் தோற்றவித்தவர் இவர்தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்றாலும் , இவர் பாடிய நூல்கள் அனைத்துமே தமிழிலக்கிய வகையின்(பக்தி) முன்னோடி ஆக்கங்கள் என்னும் தனிச்சிறப்பிற்குரியன என்றாலும் அம்மையார் பாடிய பாடல்கள் திருமுறையில் பதினோராம் திருமுறையிலேதான் சேர்க்கப்பட்டுள்ளன என்னும் ஆதங்கத்தோடு கட்டுரையைத் தொடங்கி உள்ளார் கட்டுரை ஆசிரியர் நா.இளங்கோ.

பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் என்னும் புதிய சிற்றிலக்கிய வகையைத் தோற்றுவித்தவர் காரைக்கால் அம்மையார் ஆவார். அம்மையாரைப் பின்பற்றியே பதிகம் பாடும் மரபு தேவார மரபாகக் கொள்ளப்பட்டது. அம்மையாரின் பதிகமே முன்னோடிப் பதிகம் என்பதால் அதனை மூத்த திருப்பதிகம் என்று சிறப்பித்துக் கூறுவர்.

அம்மையார் இறைவனின் திருவாலங்காட்டு இறைவனின் திருநடனத்தினை வியந்து பாடுவதாகத் தமது மூத்த திருப்பதிகத்தினை அமைத்திருந்தாலும் கூத்தரங்காக உள்ள திருவாலங் காட்டினையும் அக்காட்டில் உறையும் பேய்மகளிரின் செயல்களையும் விவரிப்பதாகத் திருப்பதிக உள்ளடக்கத்தினை நீட்டித்துச் செல்கிறார்.

பிணங்கள் செறிந்துள்ள ஈமக்காட்டில் பறைபோன்ற கண்களை உருட்டி விழிக்கும் பேய்கள் மத்தளம் கொட்டவும் பூதங்கள் பாடவும் இறைவன் திருநடனம் புரிகின்றான். கொங்கைகள் சுருங்கி, நரம்புகள் வெளிப்பட்டு, ஆழமான கண்களையும் வெள்ளிய பற்களையும் குழிந்து ஆழ்ந்த வயிற்றையும் கொண்டு செம்பட்டையான தலைமயிருடன் கோரைப்பற்கள் நீண்டிருக்கும்படியான தோற்றத்தில் காணப்படும். பேய்மகளிர் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு தாய்ப் பாசத்துடன் குழந்தைக்குத் தாய்ப்பாலும் நிணமும் ஊட்டி, தங்களுக்கு ஒப்பனை செய்து கொண்டு மகிழ்ந்திருப்பதாகக் காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு இடுகாட்டுப் பேய்மகளிர் நிலையை வர்ணித்துள்ளார்

இக்கட்டுரையில் அடுத்து நா.இளங்கோ அம்மையார் தொடங்கி வைத்த பேய் குறித்த விவரணைகளின் தொடர்ச்சியாகப் பேய்மகள் என்ற புலனெறி வழக்கின் அடிப்டையில் பரணி என்பதோர் சிற்றிலக்கியம் உருவானது என்றுரைக்கிறார்.

பரணி சிற்றிலக்கியத்தின் முதல் நூலான கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் அம்மையார் பதிகத்தில் பாடிய தாய்ப் பேய், குட்டிப் பேய் வருணனையின் தொடர்ச்சிபோல் தாய்ப் பேயைக் காணாது அழும் குட்டிப் பேய்களையும் தன் குட்டிப் பேயைத் தேடிப் பிடித்து இடுப்பில் வைத்துப் பேணும் தாய்ப் பேயையும் வருணிக்கிறார். பேய்கள் நிணக் கூழைச் சமைத்துக் காளிக்குப் படையலிட்டு உண்பதாகவும் பரணி இலக்கியங்கள் பாடியுள்ளன.

பரணி ஆசிரியர்கள் கற்பனையில் உலவ விட்ட பேய்க் கூட்டங்கள் அனைத்திற்கும் அம்மையாரின் பேய்மகள் குறித்த புனைவுகளே கடைக்கால்கள் என்பதனை அம்மையாரின் பதிகத்தினையும் பரணி நூல்களையும் கற்றறிந்தோர் எளிதில் உணர்வர் என்று பேய்கள் குறித்த கட்டுரையைச் சுவையாக முடித்துள்ளார் நா.இளங்கோ.

அடுத்து நாட்டுப்புறவியலில் முனைவர்ப் பட்ட ஆய்வை மேற்கொண்ட நா.இளங்கோவின் நாட்டுப்புறப் பாடல்கள் தொடர்பான ஒரு கட்டுரை பற்றிக் கூறுவது நிறைவானதாய் இருக்குமென்று கருதுகின்றேன்.

பேராசிரியர் நா.இளங்கோவிற்கு இயல்பாகவே நாட்டுப்புறவியலில் ஆர்வம் உண்டு. இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் மரபு மீறாமல் கட்டுப்பாட்டுடன் இயங்கிய மைலம் தமிழ்க் கல்லூரியில் பயின்றபோதே போசிரியர்களின் எதிர்ப்புகளையும் மீறி அக்கல்லூரியில் நாட்டுப்புறவியல் கருத்துகளைப் பரப்பி நிர்வாகத்தின் கோபத்திற்குத் தொடக்கத்தில் ஆளானார். அக்காலத்தில் பெர்சி மேக்வெல் என்னும் ஆங்கிலேயரால் தொகுக்கப்பட்டு, கி.வா.ஜகந்நாதனால் பதிப்பிக்கப்பட்டு, தஞ்சை சரசுவதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்ட 'மலையருவி' என்னும் நூலால் கவரப்பட்ட இவர் தமக்கு மலையருவி என்று புனைபெயர் சூட்டிக் கொண்டார். இத்தகைய ஆர்வமுடைய நா.இளங்கோ இந்நூலில் தொகுத்துள்ள கட்டுரைகளில் 'நாட்டுப்புற இலக்கியமும் திணைக் கோட்பாடும்' என்னும் கட்டுரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான கட்டுரை ஆகும்.

இக்கட்டுரையில் சங்க இலக்கிய அகத்திணைக் கோட்பாடுகளை நாட்டுப்புறக் காதல் பாடல்களோடு பொருத்தி ஆராய்ந்துள்ளார். முதலில் திணைக் கோட்பாட்டிற்கு அடிப்படைக் காரணத்தைக் கூறுகிறார். மனிதர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய நிலத்தின் வெளியாகிய இயற்கைச் சூழலே திணைக் கோட்பாட்டின் அடிப்படையாகும். அது இரண்டு அடுக்குகளை உடையது. முதலாவது நிலம் சார்ந்த தமிழர் வாழ்வியலின் பதிவுகள், இரண்டாவது புனைவியல் சார்ந்த இலக்கியக் கோட்பாடு. திணைக் கோட்பாடு முதல், கரு, உரி என்னும் மூன்று கூறுகளை உடையது. இவற்றுள் உரிப்பொருளே உயிர்நாடி. சங்கப் புலவர்கள் இவ்வுரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சி-புணர்தல், முல்லை-இருத்தல், மருதம்-ஊடல்-, நெய்தல்-இரங்கல், பாலை-பிரிதல் என்று புனைவியலாகப் பாக்கள் புனைந்தனர்.

இக்கட்டுரையில் அடுத்து நா.இளங்கோ, நா. வானமாமலை கூற்றுப்படி நாட்டுப்புறக் காதல் பாடல்களின் தோற்றத்தை விளக்குகின்றார். தொழிற் களங்களில் பணி புரியும் ஆண் பெண்களுக்கிடையே இயல்பாக எழும் காதல் உணர்ச்சி சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவற்றால் தடை செய்யப்படும்போது நிறைவேறாத காதலின் பக்கவாட்டுக் கால்வாயாக நாட்டுப்புறக் காதல்பாடல்கள் தோன்றுகின்றன.

மேலும் இக்கட்டுரையில் காதல், கற்பு என்பனவெல்லாம் ஆணாதிக்கச் சமுதாயமும் நிலவுடைமைச் சமுதாயமும் பெண்கள்மேல் இட்டுக் கட்டிய கற்பிதங்கள் என விளக்கியுள்ளார். நிறைவாக , சங்க அகப்பாடல்களோடு தமிழ் நாட்டுப்புறக் காதல் பாடல்கள் ஒத்தும் மாறுபட்டும் நிற்குமாற்றை நிறுவியுள்ளார்.

இவ்வாறாக இந்நூலில் சில சான்றுகளை நோக்கியவிடத்துக் கட்டுரை ஆசிரியர் நா. இளங்கோ எப்பொருளாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் கூர்நோக்கால் மிகநுட்பமாக முடிவுகளை நிறுவியுள்ளார் என்பது புலப்படலாயிற்று. ஆதலால் இந்நூலுக்கு 'உள்ளதன் நுணுக்கம்' என்னும் தலைப்பு பொருந்துவ தாயிற்று எனலாம்.

சின்ன.சேகர்

Pin It