therkil irundhu oru suriyanகல்லூரி விழாவுக்கு இலக்கியம் பேச வந்த கருணாநிதிக்கு அரசியல் பேசக்கூடாது என்று உத்தரவு போடுகிறார்கள். தேர்தல் நேரம். காங்கிரஸ் அப்பொழுது அதிமுகவுடன் கூட்டணி. நிகழ்ச்சி நிறைவு பெறும்போது, அடுத்து உங்களுக்கு உணவு காத்திருக்கிறது. “கை”யைக் கழுவி விட்டு, “இலை”யை தூக்கிப் போடுங்கள் என்கிறார். "நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் இருப்பதாக தெரிகிறதே?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது "ஆம்.. அங்குதான் சிக்கல் என்னும் கிராமம் இருக்கிறது" என்று நகைச்சுவையாகப் பேசுகிறார்.

கருணாநிதியின் தலையை சீவினால் பரிசு என வடநாட்டில் இருந்து குரல் ஒலித்த போது என் தலையை நானே சீவுனது இல்லை என்று நக்கலாகச் சொன்னாராம். ஹாக்கிப் போட்டிக்கு பரிசளிக்க வந்த கருணாநிதி, “தலை” கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் 'தலை' கேட்பது வன்முறை அல்லவா?” என்றாராம். "பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா?" என்று கேட்ட போது “மாவீரனுக்கு மரணமே கிடையாது” என்றார். கருணாநிதியின் நகைச்சுவை உணர்வைப் பட்டியலிட்டால் அனுமான் வால் போல நீண்டு கொண்டே போகும்.

சிறந்த பேச்சாளர்களில் பெரும்பாலானோர் சிறந்த தலைவர்களாக உருவானதில்லை. வலம்புரி ஜான், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத், வைகோ என பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் சிறந்த பேச்சாளராகவும், பெருந்தலைவராகவும் உருவாகி தமிழகத்தை ஆட்டிப் படைத்தது கருணாநிதி மட்டும்தான். தள்ளாத வயதிலும், நா குழறும் நிலையிலும், தன் பதவியை யாருக்கும் விட்டுத் தர அவர் தயாராக இல்லை. ஒரு மனிதனைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் இத்தனை விஷயங்கள் இருப்பதே அவன் எத்தகைய வாழ்வை வாழ்ந்திருக்கிறான் என்பதை நிரூபிக்கிறது.

உழைப்பும், அபார ஞாபக சக்தி , அசாத்திய திறமை, மிகச் சிறந்த நிர்வாகி. தர்மசங்கடமான கேள்விக்கு நகைச்சுவையாக பதில் கூறுவது. கருணாநிதிக்கு நிகர் அவரே.! தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற தலைவர்கள் காலம் செல்லச் செல்ல கடுமையாக வெறுக்கப்படுவது நிகழும். கருணாநிதி ஒன்றும் விதிவிலக்கல்ல. தனிப்பட்ட அரசியல் விரும்பாத எனக்கு சண்முகநாதன், இமயம் போன்றவர்களின் கட்டுரைகள் நெஞ்சை நெகிழ செய்துவிட்டது.

சுயமரியாதைத் திருமணம், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், இந்திக்கு இடமில்லை, இடஒதுக்கீடு, தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்றும் உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, பசியிலிருந்து மக்களை விடுவித்தது இப்படி தி.மு.கவின் சாதனைகளை இந்த புத்தகத்தில் தொகுத்து இருக்கிறார்கள். திராவிடக் கட்சிகளில் ஊழல் உண்டு. சாதி பார்த்து தான் வேட்பாளர் நிறுத்துவார்கள். வாரிசு அரசியல், ஊழல், ஈழப்போர் என விமர்சனங்களை ஆங்காங்கே தூவிவிட்டு இருக்கிறார்கள்.

கருணாநிதியை ஒருவர் ஏற்க மறுக்கலாம், அவரின் அரசியலோடு முரண்பாடலாம். அவரின் கருத்துகள் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்படுத்தலாம். அதிகாரத்தில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட முறைகளில் இன்றுவரை ஆத்திரம் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழகத்தின் நலனுக்கும் ஆற்றிய பணிகளின் பட்டியல் மிகப் பெரிது. தமிழகம் கண்ட தலைவர்களில், சாதியைக் கடந்து நின்ற தலைவர்களின் பட்டியல் குறைவு. கருணாநிதி அப்படிப்பட்ட சாதிகளைக் கடந்த ஒரு தலைவன், காவியத் தலைவன்.

புத்தகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன்
வெளியீடு: இந்து தமிழ் திசை
விலை: 300 ரூபாய்

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It