வரலாறு எண்ணற்ற போராட்டங்களையும், தலைவர்களையும் அறிந்து வைத்துள்ளது. அது காலத்திற்கேற்ப தன் உற்பத்தி பெருமாலையிலிருந்து அவ்வப்பொழுது அதிசயங்களை நிகழ்த்தும். இவ்வுலகில் எவ்வளவு பெரிய அதிசயமாக இருப்பினும் அது அனைவருக்கும் வியப்பளிப்பதில்லை. வியப்புத் தன்னுடைய பெரும் விருப்பத்தைச் சார்ந்தே அமையும். தமிழை உயிராக எண்ணிப் போற்றும் தமிழர்களுக்கும், இயக்கங்களுக்கும் 'பாவலரேறு பெருஞ்சித்திரனார்' என்றுமே ஒரு வியப்புதான்.

Pavalareru Perunchchiththiranaarஇந்தியா ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து மீள மக்கள் போராடினர். அன்று விடுதலைப் பற்றிய கனவும் தேசியம் பற்றிய புரிதலும் ஓரளவிற்குச் சரியாக இருந்தது. விடுதலைக்குப் பின், ‘தேசியம்’ என்கிற கருத்து சிதறுண்டு, தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் உருப்பெற்றது. அன்று ஆண்ட மைய அரசு இந்தியைக் கொண்டு தம்முடைய வல்லாதிக்கத்தை நிறுவ முயன்றது. அவ்வாறான சூழலில் தேசியத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்டவர்கள், தங்கள் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை நன்குணர்ந்தனர். தமிழ்த் தேசியம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழுக்கான முக்கியத்துவம் குறையத் தொடங்கியதைத் மொழி உணர்வாளர்கள் நன்குணர்ந்தனர். அதன் பயனாகத்தான் மொழிக்கான போராட்டக் களங்கள் தமிழகத்தில் உரு கொண்டன.

மொழிக்கான முன்னெடுப்பின் தேவையை உணர்ந்த பாரதிதாசனுக்கு, திராவிட இயக்கமும் அது முன்வைக்கும் மொழி உணர்வையும் எடுத்தியம்ப வேண்டிய சூழல் உருவானது. உலகின் மூத்த மொழியான தமிழைப் பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை இந்தியைக் கொண்டு நிரப்ப முயலுகின்ற மைய அரசின் போக்குக்கு எதிரான களப்போராட்டமும் ஆங்காங்கே தொடங்கியது. தமிழர்களின் அடையாளங்களையும், தமிழின் பெருமையையும் ஏற்க மறுப்பதோடு, அன்று தொடங்கிய தமிழருக்கு எதிரான பேராட்டம் இன்றுவரையிலும் நீள்கிறது. இன்றைய நடுவண் அரசாங்கம் கீழடி அகழாய்வை ஆராய்ச்சி செய்ய மறுப்பதைப் போன்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை தமிழையும், தமிழகத்தையும் தங்களுக்கான போட்டியாகக் கருதி வருவதையும் கண்ணுற முடிகிறது.

வடவர்களின் இதுபோன்ற நோக்கங்களும், தமிழர்க்கெதிரான நிலைப்பாடுகளும் எண்ணங்களும்தான் தமிழ், தமிழர் என்ற உணர்வு மேலோங்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தமிழுக்கெதிரான நிலைப்பாட்டை ஆட்சியாளர்கள் எடுக்கும்போது அதனைப் பொறுத்துக்கொள்ளாமல் அவற்றுக்க எதிர்நிலையில் நின்று போராடியவர்கள் பலராவர். அந்தப் போராளிகளின் வரிசையில் தனித்து விளங்குபவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இம்மண்ணில் வாழ்ந்த 62 ஆண்டுகள் 91 நாள்களையும் தமிழ் மொழிக்காகவும் தமிழினத்திற்காகவும் செலவிட்டவர் என்பதை எழிலார்ந்த மொழி நடையில், மிக ஆழமான செய்திகளை உள்ளடக்கி, அவருடைய இலக்கியங்களை மிக நுட்பமான ஆய்வுப் பார்வையுடனும் திறனாய்வு நோக்குடனும், அணுகி எழுதியிருக்கும் நூலே பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்னும் நூலாகும். பாலவரேறுவின் இயல்புகளையும் போராட்டக் குணத்தையும் தமிழுக்கான பங்களிப்புகளையும் நம் கண்முன் நிறுத்துகிறார் இந்நூலாசிரியர் முனைவர் ஜே. ஜெகத்ரட்சகன். அவர் சரியான காலமறிந்து இந்நூலை எழுதியதைப் போன்று, அதை சாகித்திய அகாதெமி நிறுவனமும் இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் மிகப் பொருத்தமான காலமறிந்து வெளியிட்டுள்ளது. பொதுவாக, போராளிகளை இச்சமூகம் அவர்களின் படைப்புகளையும், இலக்கிய ஆய்வுகளையும், மற்றெந்த அறிவுசார் நிலைகளிலும் அவர்களை எற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை. போராளிகளாகவே மட்டுமே நோக்குகின்ற அவலம் தொடர்கிறது. பாவலரேறுவையும் இத்தன்மையிலேயே இச்சமூகம் இன்றுவரையிலும் கருதுவது வெட்கத்திற்குரியது. இந்நூலாசிரியர் பாலரேறுவை, இதழாளர் - கவிஞர் - தனித்தமிழ் அறிஞர் - இலக்கியப் படைப்பாளி - பல்வேறு இலக்கிய முயற்சிகளின் ஊற்றுக்கண் - உரையாசிரியர் என்று பல்வேறுபட்ட களங்களில் நின்று ஆய்ந்து நேர்த்தியுடன் முன்வைக்கிறது.

நூலாசிரியர் தன்னுடைய கவனத்தை எங்கும் சிதைக்காமல் கொண்ட கொள்கையிலும் எடுத்த முடிவிலும் உறுதியாக இருந்துள்ளதை நூல் முழுதிலும் அறியமுடிகிறது. இந்நூலை மேம்போக்காகவும், நுனிப்புல்லை மேய்வதைப் போன்றும் படிக்கும் எண்ணம் தோன்றவில்லை. மாறாக வரிக்கு வரி அடிக்குறிப்பிட்டுப் படிக்கத் தோன்றுகிறது. நூலின் எல்லாவிடங்களிலும் ஆச்சரியமும் பிரமிப்பும் கலந்து அரிய தகவல்கள் கிடைக்கின்றன.

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வெற்றிப் பெற்று அரியணை ஏறிய திராவிட முன்னேற்றக் கழகம், பின்னாளில் தன்னுடைய கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டது. அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வில் உண்மையில்லையோ? என்று தோன்றுகிறது. பாவலரேறு உள்ளிட்டவர்களின் தலைமையில் 1975 ஆம் ஆண்டு ‘தமுக விடுதலை மாநாடு’ மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறவிருந்தது. அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவருடைய தலைமையிலிருந்த அரசாங்கம் தமிழக விடுதலை மாநாட்டிற்கு தடைவித்தது. அதன் காரணமாக முன்னணி இயக்கத்தினர் 22 பேர்களை சிறைப்படுத்தப்படுகிறார்கள். அரசாங்கம் தமிழக விடுதலை மாநாடு நடத்துவதை கைவிடுவதாக எழுதிக்கொடுத்தால் விடுதலைச் செய்வதாகக் கூறியது. அதற்குப் பெருஞ்சித்திரனார், அப்படி ஒரு விடுதலை தனக்கு வேண்டாமென்று கூறியதால் 56 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இலங்கையில் தமிழர்களக்கு எதிராக அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு எதிராக அறம் பாடியமை அவருடைய தழிழாற்றலின் வெளிப்பாடாகவே கருதத்தோன்றுகிறது.

‘இட்ட சாபம் முட்டுக என்று ‘அறம்’ பாடிய போது, அதேபோன்று பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலைச் செய்யப்படுகிறார். அதற்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைக் கைது செய்து விசாரித்தனர். அதற்கு அவர் தமிழில் அறம் பாடிய வரலாறும், தமிழ் மொழியின் வாய்மையையும் கூறி விடுதலை அடைந்தார். இப்படி நூலின் அனைத்து இடங்களிலும் பல்வேறு செய்திகள் மையம் கொண்டுள்ளன. பாவலரேறு தமிழின் உயர்வைப் பகைவர்களும் புருவம் உயர்த்திப் பார்க்கும் அளவிற்கு எடுத்தியம்பியுள்ளார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரின் ஆரியக் கலப்பையும், வடமொழித் திணிப்பையும் எதிர்க்கும் தன்மையில் பாவாணர் திருக்குறளுக்குத் தனித்தமிழ் நடையில் உரை எழுதிவெளியிட்டார். அதற்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் என்றும் எண்ணாமல், பெரும்பாலான இடங்களில் பரிமேலழகரைப் பின் தொடரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டும் பரிமேலழகரின் உரையில் காணலாகும் ஆரியச் சார்புக்கருத்துகளைக் கண்டித்தெழுதினாலே போதும் என்கிற அளவில் தம் மனத்தில் பட்டதை வெளிப்படுத்தும் இயல்பையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.      

பாவலரேறு, திருக்குறளுக்கு எழுத நினைத்த மெய்ப்பொருளுரை ஐயாயிரம் பக்கங்களைக் கொண்டதாகவும், ஐம்பதாயிரம் குறிப்புகளும் நூற்சான்றுகளும் தாங்கியும் ஐந்தாண்டு இது தொடர்பான ஆய்வும், பின் ஐந்தாண்டுகள் நூலாக்கம் என மொத்தம் பத்தாண்டுகள் இதற்கெனத் திட்டமிட்டார் பாவலரேறு(ப.37) அனால் பாவலரேறுவின் எதிர்பாராத இறப்பு அதற்குத் தடையாயிற்று. பாவலரேறுவின் இழப்பை இந்நூல் அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்நூல். அவரின் இழப்பின் அடர்த்தியை முற்றுப்பெறாத திருக்குறள் மெய்ப்பொருளுரை மேலும் கூட்டுகிறது. தமிழக அரசாங்கம் கொண்டுவந்த எழுத்துச் சீர்திருத்ததைக் காட்டிலும் கலப்புத் தமிழே நடைமுறைப் பயன்பாட்டில் இருக்கையில் தமிழைக் காப்பாற்றும் வகையிலான மொழிச் சீர்திருத்தமே முதலில் தேவை என்று அன்றைய தமிழக முதலமைச்சர் பங்கேற்றே மாநாட்டிலே தன்னுடைய திடமான கருத்தையும் ஆணித்தரமாக வலியுறுத்தியவர். ஆட்சியாளர்களுக்கு வளைந்து செல்லும் போக்கு, தாம் கொண்ட கொள்கையில் இம்மியளவும் பிசகாத இயல்பு, மொழிக்கெதிரான போக்கை எதிர்க்கும் துணிச்சல் எனப் பாவலரேறுவின் பன்முக தன்மையை இந்நூலில் அறியமுடிகிறது.

திராவிடக் கழகக் கூட்டங்களில் கடவுள் மறுப்பை முதன்மைப்படுத்துவதை விட்டுத் தமிழின நலன் நோக்கில் முழுமையாகப் பணியாற்றிட முன் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதுபோன்று தமிழர்களை ‘திராவிடர்’ என்று கூறுவது தவறு அவர்களை ‘தமிழர்’ என்றே குறிப்பிட வேண்டுமென்கிறார். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களையும் ஆதிதிராவிடன், அரிசன், தலித் என்று அழைப்பது மிகவும் தவறானது என்று வன்மையாகக் கண்டிப்பதோடு அவர்களை ‘பழந்தமிழர்’ என்றே அழைக்க வேண்டும் என்று தன்னுடைய மேலான கருத்துகளை அரசுக்கும் சமூகத்திற்கும் எடுத்தியம்பியுள்ளார்.

அன்றைய பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி இறந்தப் பின்பு, அவரது உடலெலும்புச் சாம்பலை (அஸ்தி) புனிதமாகக் கருதி மக்களின் வணக்கத்திற்கு கொண்டு செல்லும்போது வன்மையாகக் கண்டித்துள்ளார். அறிவியல் கருத்துக்கு ஒவ்வாத மூட நம்பிக்கையை மக்களின் மனங்களில் விதைப்பதை எதிர்த்து தடைச் செய்ய வேண்டுமென்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதற்காக நீதிமன்றத்தில் தானே நேர் நின்று வழக்காடினர். இந்நிகழ்விற்காகப் பல துன்பத்திற்கும், கொலை மிரட்டலுக்கும் ஆளானவர். ஆனாலும் அதைப் பற்றி எள்ளளவும் அச்சமடையவில்லை என்பது தனி. இப்படி பாவலரேறு வாழ்வும் போராட்டமும் தொடங்கி, தமிழீழமும் பாவலரேறும் என்றும் பத்து தலைப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 125 பக்கம் கொண்ட ஒரு நூலை எழுதுவதற்கு 44 நூல்களையும், நான்கு முனைவர் பட்டம் மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடுகளையும் பயன்படுத்தி - ஒரு கனிச்சாறாகவே நூலாசிரியர் தந்துள்ளார்.

மிகச் சரியான அர்த்தத்திலே தமிழைப் புரியவைத்துள்ள தமிழ்ச் சிந்தனையாளர் பாவலரேறு எங்கும், எதிலும், எப்பொழுதும் தமிழ், தமிழர், தமிழினம் என்ற உயர்ந்த சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் எண்ணம் கொண்டவர். தமிழ் விடுதலை இயக்கம், உலகத் தமிழ்க் கழகம், தமிழக விடுதலை மாநாடு என்று தன்னாலும், மற்றவர்களோடும் இணைந்துத் தொடங்கிய இயக்கங்களுக்கும் தமிழைப் பறைச்சாற்றும் விதத்திலும் தமிழிலே பெயர்ச்சூட்டியுள்ளார்.

சிறந்த தமிழ் அறிஞர், கவிஞர், கட்டுரையாளர், இதழாளர், உரையாசிரியர், படைப்பாளர் என்னும் அடையாளங்களோடு வாழ்ந்தவர். தமிழுக்காக தன்னை மட்டும் அல்ல, தன் குடும்பத்தினர் அனைவரையும் இந்திய அரசாங்கமும், தமிழக காவல் துறையும் சிறைபடுத்தியபோதும் அதனால் ஏற்பட்ட வலியும் வேதனையும் அதிகமாக இருந்தாலும் ஒருநாளும் அடங்கி ஒடுங்கியது கிடையாது. காலம் முழுவதும் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழுக்காக அர்ப்பணித்தவர் 11.06.1995 ஆம் ஆண்டு மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய தமிழ்ப் பணி என்றென்னைக்கும் நினைவுக்கூறும்.

காலமறிந்து பயிர் செய் என்பது முதுமொழி, அதுபோன்று சரியான காலத்திற்கேற்ப இந்நூலைப் படிக்கும்போது பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் அகமும் புறமும் பற்றி அறிந்து கொள்வதற்குத் துணையளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

- முனைவர் எ.பாவலன்

Pin It