இந்நூல் மொத்தம் 164 பக்கங்களிலான சிறுநூல். புது தில்லியிலுள்ள பாலாஜி இண்டர்நேசனல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. நூலின் ஆசிரியர் முனைவர் ச. சீனிவாசன், நூல் வெளியிடப்பட்ட ஆண்டு ஆகஸ்ட் 2021, நூலின் விலை ரூ. 200/-.

s seenivasan book1) இனவரைவியல் : வரலாறும் வரையறைகளும் 2) ஆதித் தமிழர் அருந்ததியர் வரலாறு 3) இந்திய விடுதலைப் போரில் அருந்ததியர் 4) தமிழ்ச் சமூகத்தில் ஒண்டிவீரர்கள் 5) அறியப்படாத அருந்ததியர் குலசாமிகள் 6) தீப்பாய்ந்த அம்மன் – வீரமங்கை குயிலி ஆகிய தரமான ஆறு இயல்களைப் பொருளடக்கமாகக் கொண்டு இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்நூலுக்குத் தமிழகத்திலுள்ள கல்லூரி முதல்வர் ஒருவர் அணிந்துரையும், இரு தமிழ்ப் பேராசிரியர்கள் வாழ்த்துரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். இந்நூல் மேலோட்டமாக வாசித்துவிட்டு அப்படியே கடந்து செல்லக்கூடியதாக இல்லை, மாறாகக் கவனத்துடன் படிப்பதற்கு உரிய நூலாக உள்ளது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிய புரிதலைத் தருகிறது.

அணிந்துரை வழங்கிய அருட்தந்தை முனைவர் பேசில் சேவியர்அவர்கள் இந்த நூலை வெகுவாகப் பாராட்டியுள்ளது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஆசிரியர் எழுதிய தலித் ஆராய்ச்சி நூல்களையும் குறிப்பிட்டுச் செறிவான வாழ்த்துரை வழங்கியுள்ளார். அருட்தந்தையாரின் பெருந்தன்மை பாராட்டுக்குரியது. ஒண்டிவீரன் பற்றி எழுதும்போது ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்றுச் செய்திகளை ஆசிரியர் “கட்டுடைப்பு” செய்திருக்கிறார் என்று எழுதுகிறார் பேசில் சேவியர் . தமிழில் புதிய கலைச்சொற்களைப் (கட்டுடைப்பு, மறுகட்டமைப்பு, இனவரைவியல்) புழக்கத்திற்குக் கொண்டுவந்து இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்திருக்கும் நூலாசிரியரின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது.

இந்நூலின் பதிப்பாசிரியர் ‘சமூகத்தில் எதெல்லாம் தவறாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதோ அதெல்லாம் ஒருபோதும் முற்ற முடிவாக நிர்மாணிக்கப் பட்டதன்று, அதெல்லாம் மீண்டும் மறு நிர்மாணம் செய்யப்பட்டே ஆகவேண்டும்’ – என்ற அண்ணல் அம்பேத்கரின் மறுகட்டமைப்புச் சிந்தனையை மேற்கோள் காட்டி பதிப்புரையைத் தொடங்குகிறார். உண்மையிலேயே எழுச்சி மிகுந்த உரையாகவே இதனைப் பார்க்கிறேன். ஆசிரியர் முனைவர் சீனிவாசன் அவர்களின் ‘30 ஆண்டு கால எழுத்துப் பணிக்கான அங்கீகாரம் தமிழ்நாடு அரசின் இந்தப் பரிசு” என்று கூறி எல்லோரையும் மகிழ்வித்துள்ளார் பதிப்பாசிரியர் அருள் காளிதாஸ். அடித்தள மக்கள் குறித்த நூலை அடையாளம் கண்டு வெளியிடும் பதிப்பகத்தாரின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

மிகவும் காத்திரமான வாழ்த்துரை வழி இந்நூலின் தரம், நூலாசிரியரின் புலமை மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. காந்திகிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஒ. முத்தையா அவர்களின் வாழ்த்துரையில் ‘One Man Army’ என்று ஒண்டி வீரனையும், ‘One Women Army’ என்று குயிலியையும் குறிப்பிட்டு, அவர்கள் சாதாரண இனப் போராளிகள் அல்ல, இந்திய விடுதலைக்காக இன்னுயிர் நீத்த சுதேசிப் போராளிகள் என்று பதிவு செய்துள்ளார். இந்த வரலாற்று உண்மையை இளைய தலைமுறையினர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ‘தமிழக அருந்ததியர் குறித்து அறிந்துகொள்ள இந்நூல் ஒரு கையேடாக விளங்கும்’ என்று தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவ. விவேகானந்தன் அங்கீகரித்துள்ளார்.

‘தன்னுடைய சொந்த சரித்திரத்தை அறியாதவன் எந்த சரித்திரத்தையும் அறிந்துகொள்ள மாட்டான்’ என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிக் குறைந்தபட்சம் அவரவர் சார்ந்த சொந்த சமூகத்தின் வரலாற்றுச் சிறப்புக்களையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற சமூகக் கடமையை வலியுறுத்துகிறார் நூலாசிரியர். ‘அருந்ததியர்கள் வந்தேறிகள்’ என்ற வாதத்தை மறுக்கும் ஆதாரங்களை முன்னிறுத்தியும், அருந்ததியர்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அடிமைத் தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நூலாசிரியர் முன்னுரை விரிகிறது. நூலின் சாராம்சத்தையும் நூல் உருவாக்கப் பின்னணியையும் நூலாக்கப் பயணமாக சுவராசியமாக விவரித்துள்ளார் நூலாசிரியர்.  

இனி நூலில் பொதிந்துள்ள பொதுவான கருத்துக்களைப் பார்க்கலாம். நம் நாடு 200 வருடங்களுக்கும் மேலாக ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. அதற்கு முன்னால் 400 ஆண்டுகளுக்கும் மேல் சுல்தான்கள், ராஜபுத்திரர்கள், முகலாயர்கள், மராத்தியர்கள் எனப் பல அரச வம்சத்தினர் இந்தியாவை ஆட்சி செய்தனர். பிற்காலத்தில் மன்னர்கள், குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் என எண்ணிலடங்காதவர்கள் இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்தனர். நம்மில் பலபேர் இதை மறந்து விடுகிறோம்.

நம்மை பொறுத்தவரை தென்னிந்தியா, வடஇந்தியா என்று பிரிக்கப்பட்டு அதன் வரலாற்று நிகழ்வுகளை நூலாக, கல்வெட்டாக செப்பேடுகளாக, சொல் வழக்காக வரலாற்று ஆசிரியர்கள் எழுதி உள்ளனர். இதனை எழுதப்பட்ட வரலாறு (Written History) என்று சொல்வார்கள். இதை வேறு பரிமாணத்தில் ஒருங்கிணைந்த சென்னை பெருமாகாணத்தில் (Madras Presidency) தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று மூன்று மொழி பேசும் அருந்ததியர்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர் என்று பல்வேறு ஆதாரங்களுடன் மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். எனவே சூழ்நிலை காரணமாகத் தெலுங்கு மொழி, கன்னட மொழி, தமிழ்மொழி பேசிய தமிழர்கள் காலமாற்றத்தால் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். எழுதப்பட்ட வரலாறுகளின் நம்பகத்தன்மையை மறுதலித்து வாய்மொழி வரலாறுகள் வழி மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுத்துள்ளார்.

‘இனவரைவியல்’ என்ற வார்த்தையின் அர்த்தம் இனம் + வரலாறு + ஆராய்ச்சி என்று நினைக்கிறேன். இனவரைவியல் என்ற பதம் எனக்குப் புதுசு என்றாலும் இந்நூலைப் படித்த பிறகு அது ‘மனித இனம் குறித்த முழுமையான அறிவியல்’ என்பதை அறிந்துகொண்டேன். அந்த அடிப்படையில் என்னைப் பொறுத்தவரை தமிழகத்தின் ஆதி குடிகளான அருந்ததியர் இனம் குறித்த ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி என்றே எண்ணுகிறேன். நூலின் நெறித்துணை நூற்பட்டியல் இதை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நூல்கள், ஆங்கில நூல்கள் என ஏராளமான நூல்ககளைப் பார்வையிட்டு இந்தப் புத்தகத்தை எழுதி உள்ளார் நூலாசிரியர்.

‘மன்னர்களின் வரலாற்றைப் படிப்பதைவிட அடித்தள மக்களின் வாழ்வியலை படித்தால்தான் அவர்கள் வாழ்ந்த உண்மை நிலை பற்றி அறிய முடியும்’ என்பது இப்புத்தகத்திலிருந்து படித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் பதிவு எல்லா சமூகத்தினருக்கும், எல்லா மொழி பேசுபவர்களுக்கும் பொருந்தும் திருக்குறளைப் போல.

எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட எழுதப்படாத அருந்ததியர் வரலாற்றை வாய்மொழி வரலாறு, கல்வெட்டுக்கள், பட்டயங்கள் வழி ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார். அருந்ததியர்களுக்கெனத் தனித்த ஆன்மிக வரலாறு இருந்திருக்கிறது என்பதையும் இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மண்ணின் மைந்தர்கள் வசமிருந்த நிலங்களும், பாளையங்களும் கைமாறிய கதை காலத்தின் கோலமே. நாட்டார் கதைப்பாடல்கள் மூலம் அதை மீட்டெடுத்துத் தமிழ்ச் சமூகத்திற்கு அறியதந்துள்ளார் ஆசிரியர்.

தமிழ்ச் சமூகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒண்டிவீரர்கள், அவர்கள் மீதான உரிமை அரசியல் ஆகியவை ஒண்டிவீரனின் புகழை உச்சிக்குக் கொண்டு செல்கிறது. செயற்கையாக உரிமை கொண்டாடி ஆதாயம் தேடுபவர்களின் உள்நோக்க அரசியல் ஆபத்தானது.

தென்தமிழ் நாட்டில் ஆதிக்க சாதியினர் என்று அறியப்படும் தேவர் சமூகத்தினருக்கும் அருந்ததியர்களுக்குமிடையே உள்ள காழ்ப்புணர்ச்சி, சண்டை சச்சரவுகள் பன்நெடுங்காலம் இன்னும் தொடர்ந்து நீடிக்கிறது என்ற நிகழ்கால உண்மைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். அருந்ததியர்களின் அறியப்படாத குலசாமிகளின் துடியான சக்தியைக் கொலைக்கள வாக்குமூலங்களாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். எழுத்திலக்கியங்களில் இடம்பெறாத குலதெய்வங்களின் குரூரக் கொலைப் பின்னணி ஆணவக் கொலைக் கலாச்சாரத்தின் ஆரம்பப் புள்ளியாக அமைக்கிறது. கொலைகளில் கூட இத்தனை பிரிவுகளா?, அரசியல் கொலை, நிலத்தகராறு கொலை, குடிபோதைக் கொலை, காதல் திருமணக் கொலை, கள்ளக்காதல் கொலை எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

பீனிக்ஸ் பறவை போல் குயிலி தன் உடம்பி‌ல் தீயிட்டு ஆங்கிலேயர் ஆயுதக்கிடங்கைத் தீக்கிரையாக்கி அரசி வேலுநாச்சியார் போரில் வெல்லத் துணை செய்கிறாள் என்ற வரலாற்றுச் செய்தி (இதுவரை மறைக்கப்பட்ட) படிக்கும்போது கண்கள் பனிக்கின்றன, நெஞ்சம் நெகிழ்கின்றது. தீக்கிரையான தியாக தீபம் குயிலியைத் தீப்பாய்ந்த அம்மனாக, போராளியாக, வீரமங்கையாக அங்கீகரித்திருப்பது தலித் பெண்ணிய வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

சாதிகளின் முன்னேற்றம் பற்றிக் குறிப்பிடும் போது நாடார் சமூக வளர்ச்சி பற்றி விவரிக்கிறார். அவர்களைப்போல் அருந்ததியர்களும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற ஆதகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். அதே சமயம், தேவேந்திரகுல வேளாளர் என்னும் பள்ளர் சமூகத்தினர் எங்களுக்கு அரசு தரும் சலுகைகள் வேண்டாம், தங்களைப் பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டி அரசுக்குக் கோரிக்கை விடுத்து ஓரளவு வெற்றியும் கண்டுள்ளனர் என்பத அருந்ததியர் சமூகம் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இதனைச் சிந்தையில் இருத்திச் செயல்பட வேண்டும்.

மிகவும் முக்கியமான பதிவாக அருந்ததியர்கள் எல்லோலாரும் அடிமைத் தொழிலாளிகளாக, கூலி வேலைக்காரர்களாக, செருப்புத் தைப்பவர்களாக, மலமள்ளிகளாக இல்லை. அவர்கள் பாளையக்காரர், படைத்தளபதி, தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள், நிலவுடமையாளர்கள், விவசாயிகள், அரண்மனை ஊழியர்கள் எனப் பல்வேறு நிலைகளில் மதிப்பு மிக்கவர்களாக வாழ்ந்துள்ளனர் என்ற அரிய செய்தியை இந்நூலில் உறுதிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

இந்நூலில் வரும் ‘வடக்கத்தான் பூலித்தேவன்’ என்ற பெயர் தமிழில் வெளிவந்த ‘மண்டேலா’ (2021) திரைப்படத்தை நினைவூட்டுகிறது. இரு சாதிப்பிரிவினர் ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். ஒரு பிரிவினர் தெக்கூர் மக்கள் என்றும் மற்றொரு வடக்கூர் மக்கள் என்றும் காட்சிப்படுத்திக் கடைசியில் இரு பிரிவினரும் ஒன்றாக வாழ்கின்றனர் என்று நல்ல முடிவாக திரைப்படம் நகரும். இந்நூலில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ள வட்டார வழக்குமொழி போல் அந்தத் திரைப்படத்திலும் வட்டார வழக்கு வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

 ‘புது தில்லி பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகம் தனது கன்னி முயற்சியாக இந்நூலை வெளியிடுகிறது’ என்று நூலாசிரியர் முன்னுரையில் இயல்பாகக் குறிப்பிட்டுச் செல்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் சிவசங்கரி பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர், கன்னி எழுத்தாளர் என்று ஏன் பிரித்து பார்க்கிறீர்கள், எழுத்தாளர் என்று எழுதுங்கள் என்று பத்திரிக்கைத் துறை மற்றும் தொலைக்காட்சி நெறியாளர்களைக் கேட்டுக்கொண்டது இங்கு நினைவுகூரத் தோன்றுகிறது. நாம் ‘கன்னி முயற்சி’ என்று எழுதினால் பல வாசகர்கள் ஒரு கன்னியை மனதில் வைப்பார்களே தவிர முதல் முயற்சி என்று நினைக்க மாட்டார்கள். பாலியல் பாகுபாடு (Gender Bias) எங்கும் இருக்கக்கூடாது என்பதே என் நோக்கமும். மட்டுமன்றி, பாலியல் மயக்கம் ஏற்படாமல் எழுதுவது பல வகையிலும் நன்மை தரும்.

இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்தபிறகு தேடல் அதிகமாகி மீண்டும் மீண்டும் படித்து ஆசிரியரைப் பாராட்டத் தூண்டுகிறது. அவ்வளவு முயற்சி எடுத்துள்ளார் என்பதை நன்கு உணர முடிகிறது.

ஒட்டுமொத்தத்தில் தமிழக அருந்ததியர் சமூகம் குறித்த அறியப்படாத தரவுகளைக் கொண்ட ஆவணமாக இந்நூலைக் கருதலாம். தமிழகத்தின் ஆதிகுடிகள் அருந்ததியர்கள் என்பதை இந்தப் புத்தகத்தை படிக்கும் அனைவரும் உணர்வார்கள். கடின உழைப்பை முதலீடாக்கி உருவாக்கியுள்ள இந்நூலை 2021-ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளார் ஆசிரியர். அதற்குத் தமிழக அரசின் அங்கீகாரமும் கிடைத்திருப்பது உண்மையிலேயே பெருமைப்படத் தக்கதாகும்.

தமிழக அரசு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பரிந்துரைக்கப்பட்டு மாவட்ட மைய மற்றும் கிளை நூலகங்களில் இந்நூல் வாசகர்களின் பார்வைக்கும் வாசிப்புக்கும் ஏற்ற வகையில் இடம்பெறச் செய்தல் அவசியம். தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இந்த நூலை வாங்கிப் பார்வை நூலாக (Reference Book) வைத்து மாணவர்கள் படிக்க வழிவகை செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட நூலாசிரியரை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மகாகவி பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டில் (2021) தமிழ்மொழிக்கும், மரபுக்கும் ஒரு ஆபரணமாக, இந்த நூலைத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியமைக்காக நூலாசிரியருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் !.

- டாக்டர் எஸ். மனோகரன், நிறுவனர் – தாளாளர், ஸ்ரீரங்கம் அறக்கட்டளை, சென்னை

Pin It