அந்தந்தக் காலம் தோறும்

அவரவர் மண்ணிற் கென்று

வந்திங்கு உதித்த நல்ல

வான்புகழ் அறிஞர் தம்முள்

செந்தமிழ் நிலத்தில் தோன்றி

செழுந்தமிழ்க் குறளைச் செய்ய

வந்தநம் வள்ளுவற் கீடு

வையத்தில் எவரு முண்டோ?

பாழ்செயும் மதங்க ளுக்காய்

பலர்பல செய்தார்; துன்பம்

சூழ்கிற நிலையைக் காட்டி

சூழ்ச்சிநூல் பலவும் செய்தார்;

ஊழ்வினை வந்த போதும்

உரமுடன் வாழச் சொல்லும்

வாழ்வியல் நூலை நன்றாய்

வகுத்தவன் வள்ளு வன்தான்!

பாழ்பல வந்தும் இன்னும்

பயின்றிடும் தமிழ்தா னென்றால்

வீழ்ந்திடா மேன்மை கண்டு

வியக்குமிவ் வைய மென்றால்

ஆழ்ந்துநாம் கற்கக் கற்க

அளவிலா தறிவோ மென்றால்

வாழ்ந்தநம் வள்ளு வன்தான்

வகுத்தமுப் பாலால் அன்றோ!

புறம்பல காட்டி நம்மின்

புத்தியை மழுங்கச் செய்து

முறம்முறம் கொட்டி வேளை

மூன்றுக்கும் முழுங்கச் செய்து

இறம்பொறம் இன்றி வாழும்

இல்லற மாந்தர் மீள

அறம்பொருள் இன்பந் தன்னை

அழகுற அவன்தான் சொன்னான்!

அவரவர் அவனை ஆய்ந்து

அவரவர் மதத்தா னென்று

துவர்பட உரைகள் செய்து

துணிந்துநூல் எழுது கின்றார்!

எவரெதை எழுதி னாலும்

என்னதான் உரைசெய் தாலும்

தவறிலா தஞ்சைப் பொம்மை

தனித்தநம் வள்ளு வன்தான்!

எழுதிடும் கோலை கையில்

எடுத்துதான் பிடித்த வாறு

பழுதுடை எழுத்தா ளர்கள்

படங்களைப் போட்டுக் கொண்டு

விழுதெனெ நூல்பல செய்து

விளம்பரம் தேடிக் கொள்வார்!

பழுதிலா ஒரேநூ லிஃதைப்

பாரினுக் கவன்செய் தானே!

பெயருக்கு முன்னே பெற்ற

விருதுகள் எதுவும் இல்லை

பெயருக்கு முனைவர் பட்டம்

பேசித்தான் முடிக்க வில்லை

பெயருக்கே பெருமை யென்றால்

பெரும்பெயர் வள்ளு வன்தான்!

வள்ளுவன் வாழும் மாந்த

வகைக்குநல் எடுத்துக் காட்டு!

வள்ளுவன் மண்ணில் வாழும்

வாழ்க்கையின் பொதுமைத் தேற்றம்!

வள்ளுவன் உலகிற் கெல்லாம்

வழிசொலும் ஆட்சி ஆசான்!

வள்ளுவன் வான்மண் வாழ்த்தி

வணங்கிடச் சுடரும் ஞானம்!

Pin It