உள்ளும் புறமும் அற்ற ஒரு சிந்தனை சதா பொதுவில் இருந்து தன்னை நகர்த்திக் கொண்டே இருப்பது தான் ஜி நாகராஜனின் மகத்தான மனிதன் பற்றிய ஆராய்ச்சி.

g nagarajans novel'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்று அவர் சொன்னதன் அர்த்தங்கள் தான் இந்த நாவலின் பெரும் வியப்பாக விரிந்து நிற்கிறது. "நாளை மற்றுமொரு நாளே" உண்மை தாங்கி இருக்கும் ஒரு நாளின் சம்பவங்கள்தான். ஒவ்வொரு நாளும் அப்படித்தான் அந்த சம்பவங்கள் இருக்கின்றன என்று கூட நாம் உருவகித்துக் கொள்ளலாம்.

கந்தனின் விடியலில் கதையின் நெடி சாராய வாசத்தோடு கிளம்புகிறது. பத்து வருடங்களுக்கு முன் பலான தொழில் செய்யும் மீனா மீது ஆசைப்பட்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து அவளை வாங்கி வந்து மனைவியாக சேர்த்துக் கொள்கிறான். அதன் பிறகு இரு குழந்தைகள். அதில் பெண் பிள்ளை ஒரு கட்டத்தில் செத்து விட... மகன் ஓடி விடுகிறான். அது பற்றிய துக்கமோ துயரமோ அவன் தொண்டையைத் தாண்டி ஒரு போதும் வருவதே இல்லை. எல்லாம் நிகழ்கிறது போல எதுவும் நிகழ்கிறது போல தான்... அவனது ஒவ்வொரு நாளும். இருளுமற்ற வெளிச்சமுமற்ற கந்தனின் வாழ்க்கை அன்றன்றைக்கானது.

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் நாவல் முழுக்க. வேதாந்தம் கூட பகடியாக தான்... இங்கே உலவுகிறது.

காதல் காமம் சோறு சாராயம் வஞ்சம் சாவு பட்டினி உடல் உடை குடிசை எல்லாமே பொதுவில் போட்டு பொதுவில் எடுக்கும் சமாச்சாரம் தான். இங்கே ஒளிவு மறைவென்பதே இல்லை. குடிசைக்குள் காலையில் தன் மனைவி மீனாவோடு கலவி கொள்வதில் கந்தனின் வாழ்வின் தீட்சண்யத்தை நாம் விளங்குகிறோம். கலவிக்கு தலையணையின் ஒத்தாசை வேண்டுமா என்று பேச்சினூடாக கேட்கும் கந்தன் விளிம்பு நிலை வித்தகன் என்று தான் சொல்ல வேண்டும். அவன் அவனுக்கே சாட்சியாக இருக்கிறான். அவன் அந்த ஒதுக்குபுற குடிசை வாழ் பகுதியிலும் ஊரறிந்த மனிதனான வலம் வருகிறான். அவன் தன் வாழ்வில் நடக்க இருக்கும் எல்லாவற்றையுமே மிக நிதானமாக நடத்துபவனாக இருக்கிறான்.

எழுதும் காலத்தையொட்டி வாழ்வும்... படிக்கும் காலத்தையொட்டிய வாழ்வும் மிக அனாயசமாக இணையும் புள்ளிகள் தான் நாகராஜனின் எழுத்துக்கள். நாம் எல்லாரும் சமூகத்தின் முகப்பு வாசலில் கும்மியடித்துக் கொண்டிருக்க.... நாகராஜன்... புழக்கடை பக்கம் சென்று ஆராய்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு நாள் தான் என்பதன் ஆக்கத்தை... அடிப்படையை சமரசமே இல்லாமல் அப்படி அப்படியே படம் பிடிக்கிறார். கந்தன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகின் புழக்கடை பக்கத்தின் சாட்சி. நாளையைப் பற்றி....நாளை மறுநாளைப் பற்றி அதற்கும் அடுத்த நாள் பற்றி... இன்றே தெரிந்து கொள்ளும் சூட்சுமத்தை அறவே கை கழுவுகிறார்.

"நாகராஜனின் உலகம் கடவுளற்ற உலகம்..." என்கிறார் அணிந்துரை வழங்கியிருக்கும் ஜே பி.சாணக்கியா. நாகராஜனின் உலகம் சாத்தான்களற்ற உலகமும் என்கிறேன்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கூற்று என்பது போல தான் கந்தனுக்கான மனோநிலை வாய்த்திருக்கிறது. அது தான் இயல்பெனவும் அவன் நம்புகிறான். மகன் ஓடி விட்டதற்கு காரணம் தேடுகையில்... இந்த உலகம் வெளிப்படையாகவே வைத்திருக்கும் ரகசியங்களை நாமும் அறிந்து கொள்கிறோம். லாட்ஜ்க்குள் சென்று நேற்றிரவு சரோசாவுக்கு பொய்யான வாக்குறுதி தந்தவனை மிரட்டி காசு வாங்கும் கந்தனின் செயலில்... தொடர்ந்து தேங்கிய விரக்தியின் வெளிப்பாடு இருக்கிறது. சமூகத்தின்பால் கொண்ட கோபத்தின் கசிவை உணர்கிறோம். பணம் உள்ளவனை ஏமாற்றுகையில்...தன் விளிம்பு நிலைக்குள் எதுவோ சமன் படுவதாக அவன் ஆழ்மனம் நம்புகிறது.

உடன் இருக்கும் முத்து கூட இது தப்புண்ணா என்கிறான். இது தப்புன்னா... நீ பண்றது கூட தப்பு தான் என்கிறான். தெரிந்தே செய்யும் தவறுகளின் வழியே அவர்களை அவர்களே பகடி செய்து தங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் ஒரு அந்த கால சமகால தத்துவத்தை அவர்கள் படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதன் ஒரு சோற்று பதம் தான் கந்தன். கம்யூனிஸ்ட் முத்துவின் பாத்திரம்... விமர்சனத்துக்கு உட்பட்டு சமகால பொதுவுடைமை சித்தாந்தத்தை பொதுவில் வைத்து பேவென பார்க்கிறது. சமகாலத்துக்கும் பொருந்தும் யதார்த்த சித்தாந்தங்களை முத்து மூலமாக பேசி விட்டது நாகராஜனின் புத்திசாலித்தனம்.

ஒரு சமயத்தில்....' இதெல்லாம் ஏன்...?' என்ற கேள்விக்கு... "ம்ம் கொழுப்பு தான்" என்கிறான் கந்தன். ஒரு குற்ற மனநிலை.. ஒரு வம்பு மனோபாவம். ஒன்னும் இல்லாதவன் தோளில்... சதா கசியும்...சமூக வெறுப்பின் துளிகள் அவைகள். "இந்த பணமே ஒரு மானங்கெட்ட விஷயம் தானே" என்றொரு வரி வருகிறது. பணம் படுத்திய பாட்டில் இருந்து தப்பித்த ஞான முறுக்கு என்று தான் தோன்றுகிறது. "எந்த திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயித்துல வந்து பொறந்தேன்" என்று கந்தன் பேசுகையில்... சட்டென்று மிக உயர்ந்த இடத்தில் மானுட தத்துவார்த்தம் தன்னை தானே கேள்வி கேட்டுக் கொள்வது போல உணர செய்தது.

தன் கணவனின் அனுமதியோடு தொழிலுக்கு செல்லும் மனைவி மீனா. தன் கணவனுக்கு தெரியாமல் தொழிலுக்கு வரும் பக்கத்து வீட்டு ராக்காயி. லாரியில் அடிபட்டதிலிருந்து பே பேவென உளறும் பின்னொரு பக்கத்துக்கு வீட்டு சிறுமி...என்று இவர்களின் சாக்கடையொட்டிய குடிசைகள்.. நிஜ சம்பவங்களால் ஒவ்வொரு நாளும் இந்த நகர சந்துகளின் கதைகாளாகிக் கொண்டேயிருக்கின்றன.

மானுட புனிதர்கள் என்று ஒன்றுமே இல்லை என்பதை ஆணித்தரமாக நாகராஜன் நம்புகிறார்.

ஆங்கிலோ இந்தியன் ஐரீனுக்கும்... செட்டியாருக்கு இடையே சமரசம் செய்ய போகும் கந்தனின் தீர்ப்பு... அதிரடியானது. நொடியில் பிசகும் சலனத்தை வந்த இடத்தில் ஐயோவென நினைத்து சரி செய்து கொள்ளும் இடம் மானுட சபலத்துக்கு இடம் பொருள் இல்லை...என்பதை உணர்த்துகிறது. அன்றாட பிழைப்புக்கு உடலை விற்பவர்கள்.. பத்து ரூபாய்க்காக நிர்வாணமாக ஓடும் பந்தயகாரர்கள்... ஜேப்படி... திருட்டு... அடிதடி...சாராயத்துக்கும் சங்கதிக்கும் அடித்துக் கொள்பவர்கள் என்று அன்றன்றைக்கான வாழ்வுக்காக சிறு சிறு தவறுகளின் வழியே... தங்களை மீட்டெடுக்கும்... செய்தித்தாள்களில்... இத்துனூண்டு பெட்டி செய்தியாக நாம் பார்க்கும் இந்த மனிதர்களின் வாழ்க்கை சிறு சிறு அடுக்குகளின் வழியே மூச்சு முட்டும் தினங்களைக் கொண்டிருக்கிறது.

நாம் கண்டும் காணாமல் கடந்து போய் விடும் துணுக்கு செய்திகளுக்கு பின்னால் ஒரு கணக்கில் அடங்காத வாழ்வு முறை இருப்பதை நாகராஜன்.. கிட்ட நெருங்கி சென்று பார்த்து எழுதி இருக்கிறார். வாழ்ந்தும் கூட. துக்கத்தின் வழியே சந்தோசம் தேடும் எதிர்மறை மனிதர்களின் வெளிச்சம் கூட இருளாகவே இருப்பதை ஒளிவு மறைவின்றி எடுத்து பேசி இருக்கிறார். நிதர்சனங்களின் ஒரு நாள் தான் இந்த நாவல். வெளியே கிளம்பும் கந்தனின் அலைச்சலும்... பகலும்... குடியும்.... பசியும்... சிந்தையும்... சிதறலும்... சமூகமும்... சுமையும்... சக மனிதனின் ஆற்றாமையும்... போதாமையும்... அதன் மூலம் தனக்கான தேவையை பூர்த்தி செய்யும் பூதாகரமும்தான்... இந்த நாவல்.

கடவுளை அடைவதும் சாத்தானை அடைவதும் இங்கு ஒன்று தான். பாதைகளின் சுவாரஷ்யங்களுக்காக நாம் சொற்களை மாற்றிக் கொண்டு அலைவது தான்... இங்கே நடந்து கொண்டிருப்பது. அதையெல்லாம் தாண்டி.. புணர்ச்சி விதி பசியைப் போக்கும் என்பது அவர்களின் நான்காம் விதியாக கூட இருக்கலாம். கொழுத்தவனுக்கும் பசித்தவனுக்கும் இடையே பல கந்தன்களின் ஆதி வயிறு பொருமுகிறது.

ஆடைகளுக்குள்ளும் நிர்வாணமாக இருப்பவன் தான் மனிதன் என்ற நிஜத்தை போகிற போக்கில் செல்லும் நாகராஜன்... எதிரே நின்று எதிர் பற்றியே விவரிக்கிறார். கம்யூனிச சித்தாந்தம் தொடர்பான கேள்வி பதில்களை ஒரு கால் தேர்ந்த வழி போக்கனாய் நம்மிடையே விட்டு விடுவது உலகமறிந்த சாமர்த்தியம். நிறைய அறிந்தவன் தான் இந்த நாவலை எழுத முடியும். நிறைய உணர்ந்தவன் தான் இந்த நாவலை உள்ள வாங்க முடியும்.

"வாழ்க்கையை மொண்ணையாக புரிந்து கொள்ளும் நுனிப்புல் மேயும் மேதாவிகளுக்கு நாகராஜன் எப்போதுமே தேவைப்பட மாட்டார்" என்கிறார் ஜே பி சாணக்யா.

மிக அர்த்தமுள்ள... உணர்வு சார்ந்த புரிதல். நானும் கூட வழி மொழிந்து கூட ஒன்று சேர்க்கிறேன். உங்களால்... என்னால் ஒருபோதும் நிகழ்த்தி காட்டவே முடியாத ஒரு வாழ்க்கை முறை அது. அது தான் கந்தன் நிகழ்த்துவது. நிகழ்த்துக் கலைக்கு சொந்தக்காரர் நாகராஜன் என்ற இந்த இருள் சூழ்ந்த பேருண்மை. மிக கவனமாக இந்த பொது சமூகம் ஒதுங்கி கடந்து விடும் பாதை இன்னமும் தூர் வாரப்படமாலே தான் இருக்கிறது. அங்கிருந்து எழும்பிய உள்ளது உள்ளபடியே உள்ள ஒரு சிவப்பு குரல் தான் இந்த நாவல். உள்ளது உள்ள படியே இருக்க.. உள்ளதை உள்ளபடியே வடிக்க உள்ளத்தின்பால் ஒரு உன்னதம் வேண்டும். அது நாகராஜன்-க்கு நிறைய இருக்கிறது.

கழிசடை என்றொரு சொல் உண்டு தானே. அதன் பொருளை நேருக்கு நேராய் சந்திக்கும் திராணி நாகராஜனுக்கு இருந்திருக்கிறது. துன்பியலின் அழகியலை அதன் இருட்டு நெடியோடே எடுத்து வைத்திருப்பது.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம்...ஆனாலும் அது தானே நிஜம். இன்னமும் நாம் நினைக்கும் நாகரீகம்... சமூக கட்டமைப்பு... ஒழுங்கு.. சட்ட திட்டம் என்று எதற்க்குள்ளும் வந்து விடாத ஒரு வாழ்கை முறை நம் நகரம் ஒதுக்கிய இருளுக்குள் நிரம்பி இருக்கிறது. அதன் துயர நெடியை சந்திக்க மாபெரும் தைரியம் வேண்டும்.

சாக்கடைக்கு மேலே இருக்கும் குடிசையில் வசிப்பவன் வாழ்வை எந்த கீதை அரங்கேற்றும். கொசுக்களின் மீது கும்மாளமிட்டு குடித்து சிரிக்கும் மனிதனை நாம் இலக்கியம் ஆக்க எப்படி துணிவோம். வயிற்றுக்காக உடலை விற்கும் பெண்களின்...ஒவ்வொரு நாளும் தேக சந்தில்தான் விடியும். மனிதர்களிடம் இருந்து மனிதர்கள் எப்போதும் விலகியே தான் இருக்கிறார்கள் என்பதை ஒதுங்கிய குரலில் இந்த நாவல் பதிவு செய்கிறது.

மானுட தத்துவ விசாரணையை செய்யாமல் செய்கிறது. உண்மையின் அருகாமையை மிக நுட்பமாக கேட்காமல் கேட்கிறது. நடுத்தர வர்க்கமோ... மேல் தட்டு வர்க்கமோ... உயர தர வர்க்கமோ.. முற்றிலுமாக கீழ் தட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இருப்பதை உரக்க கத்தி சொல்கிறது. மாறாக வாரி அணைப்பதும்... ஏழ்மைக்கு இறங்குவதும் எல்லாமே ஒரு வட்டத்தின் மீது கட்டப்படும் வசதியான கட்டடமே தவிர ஒரு கழிசடைக்கு உங்கள் வீட்டில் ஒரு போதும் இடம் இல்லை. ஒரு வேசியை நீங்கள் திருமணம் செய்து கொள்ளவே முடியாது. ஆனால் பொது சமூகத்திடமிருந்து அவர்கள் ஒதுங்கி இருப்பதாலோ என்னவோ மேற்சொன்னதையெல்லாம் அவர்களால் செய்ய முடிகிறது. புணர்ச்சியை அடித்தளமாக கொண்டே இந்த வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாவல் மெல்லிய கோட்டில் முழங்கிக் கொண்டேயிருக்கிறது. அதிலிருந்து பிரம்மாண்டமாய் ஒரு யதார்த்தம் எழும்புவதை நாகராஜன் துணிந்து வெளியே பேசி விடுகிறார். அவரின் கதை சொல்லலில் ரகசியங்கள் இல்லை. மாறாக ரகசிய பதர்களின் வழியே ஒரு கதை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

கந்தன் உள்பட நாவலில் வரும் அனைவருக்குமே பெரும்பாலும்... 'இந்த' நாளில் வாழ்வது தான் பெரும் நோக்கமாக இருக்கிறது. பேச முடியாத துயரங்களை எல்லாம் வாழ்ந்து பார்த்து விடும் சுய கழிவிரத்தின் கூற்று கந்தனின் வழியே நிகழ்கிறது. அழுத்தம் கூடிய ஒரு வாழ்க்கை முறை இயல்பாக ஆகி விட்ட பொருளோடு தான் நாமும் சில சமயம் கந்தனை வடிவமைக்கிறோம்.

நீண்ட நெடிய களைப்பும் துயரமும் நாவலை படித்து முடிக்கையில் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. அதுதான் நாவலின் வெற்றி.

உண்மையை பக்குவமாக தருவது ஒரு வகை. உண்மையை உண்மையாகவே தருவது ஒரு நிலை. நாகராஜன் என்ற கலைஞன்... மிக உன்னதமான படைப்பாளியாக மிளிர்வது... தான் செய்வது இன்னதென்று தெரிந்தே செய்யும் கந்தனின் வழியே நிகழ்த்துவது தான்.

"அவமானப்படுதலில்....ஒரு சுகம் இருக்கிறது" என்று தாஸ்தாவ்ஸ்கி சொல்வார். அந்த கீழ்மையின் அழகியலைத்தான்... . அந்த துயரங்களின் அழகியலைத்தான் நாகராஜன் இங்கே படைப்பாக்கியிருக்கிறார். மெழுகுவர்த்தியின் அடியே இருக்கும் சிறு இருள் தான் இங்கே பலருக்கு வாழ்வு. அதைத்தான் எழுதி காட்டியிருக்கிறார். முதல் முறை படிக்கையில் மங்கிய வெளிச்சத்தில் எங்கோ நடப்பது போல தோன்றினாலும்... மறு வாசிப்பில் உள்ளிருக்கும் மகத்தானவைகள் விளங்க ஆரம்பிக்கும். முதல் முறை அவரின் சுருங்கிய முகம் தெரிய மறுமுறை அவரது பரந்த முதுகு தெரிகிறது.

முதுகெங்கும் உருண்டு திரியும் அழுக்குருண்டைகளின் அவஸ்தையைத்தான் வார்த்தெடுத்திருக்கிறார். அபார துணிச்சலின் வழியே அவர் கண்டடைந்திருக்கும் வாழ்வின் அடிப்படை வடிவம்.... நாம் எதையெல்லாம் நேர்த்தியில் சேர்க்காமல் இருக்கிறோமோ....அதில் இருந்து உருவாகிறது. எல்லாம் அறிந்த குடிகாரனின் தனித்த பிதற்றல் புரிய வேண்டியதில்லை. மீதமிருக்கும் சாராய தழும்பலில் கண்டுணரும் நிஜங்களை அசை போட்டாலே போதும்.

தன் வாழ்வு எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரும்... அதனால் தன் மனைவிக்கு வேறு ஒரு நல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்...என்று இறுதி பக்கங்களில் கந்தன் பேசுகையில்... நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாமல் படைப்பை எதிர்கொள்கிறோம். ஞானமடைதல் அல்லாதது குறித்த எந்த வருத்தமும் இல்லாத தனித்த போக்கின் சுவடுகளும் சேர்ந்தது தான் இந்த வாழ்வின் பாதை என்பதை உணர்கையில்... நாவல் முடிந்திருக்கிறது.

"வாழ்வின் அபத்தங்கள்... கீழ்மைகளின் உன்னதங்களை... அழகியலை அப்படியே எடுத்து வைத்திருப்பதில் மண்டோவிற்கு பிறகு நம்மால் மறக்க முடியாத கலைஞன் நாகராஜன்" என்கிறார் ஜே பி சாணக்யா.

மண்டோவும் நாகராஜனும் இணையும் புள்ளி ஒன்று இந்த நாவலில் எங்கோ மெழுகுவர்த்தியாய் எரிந்து கொண்டிருக்கிறது.

நூல் : நாளை மற்றுமொரு நாளே
ஆசிரியர் : ஜி நாகராஜன்
பதிப்பகம் : காலச்சுவடு

- கவிஜி

Pin It